அதிமுக அலுவலக சீல் வழக்கு: ஜூலை 18க்கு உத்தரவு தள்ளிவைப்பு
கடந்த ஜூலை 11ஆம் தேதி அஇஅதிமுகவின் தலைமை அலுவலக வளாகத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான மோதலைத் தொடர்ந்து அந்த அலுவலகத்திற்கு வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர்.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
நந்தினி வெள்ளைச்சாமி
இன்றைய நேரலை நிறைவு பெறுகிறது
வணக்கம், இன்றைய நேரலையை இத்துடன் நிறைவு செய்கிறோம். தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருந்தமைக்கு நன்றி.
இது வரையிலான இன்றைய முக்கிய நிகழ்வுகள்.
இலங்கையில் தமது ஆட்சி காலத்தில் அமல்படுத்தப்பட்ட அரசியலமைப்பின் 19வது திருத்த சட்டத்தை மீள அமல்படுத்துவதற்கு தேவையான உடனடி நடவடிக்கைகளை தான் மேற்கொண்டு வருவதாக பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் சர்ச்சைக்குரிய வகையில் இடம்பெற்ற ஒரு கேள்வி தொடர்பான தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது,
அதிமுக தலைமை அலுவலக சீல் நடவடிக்கை தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தொடர்ந்த வழக்கில் உத்தரவை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்திருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்.
இலங்கை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ ஆகியோர் நாட்டை விட்டு வெளியேற இடைக்கால தடை விதித்துள்ளது இலங்கை உச்ச நீதிமன்றம்.
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின் முன்னாள் மனைவி இவானா டிரம்ப் காலமானார்.
"நிலையான அரசாங்கம் அமைக்கப்படாவிட்டால், நாட்டின் அமைப்பு ஸ்தம்பித்துவிடும்" என, இலங்கை மத்திய வங்கி ஆளுநர் எச்சரித்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதி பதவியில் இருந்து விலகியதற்கான கடிதத்தை சிங்கப்பூரில் உள்ள இலங்கை தூதர் வழியாக சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளார் கோட்டாபய ராஜபக்ஷ என தெரிய வந்துள்ளது.
திரைப்பட இயக்குனரும் நடிகருமான பிரதாப் போத்தன் சென்னையில் காலமானார்.
லலித் மோதி, சுஷ்மிதாவின் டேட்டிங் படம் வைரல் - என்ன சொன்னார் முன்னாள் காதலர்?
தமிழ்நாடு ஆளுநர் இரண்டு நாள் பயணமாக டெல்லிக்கு ஜூலை 16இல் வருகை
பட மூலாதாரம், ㅤ
படக்குறிப்பு, ஆர்.என். ரவி, தமிழ்நாடு ஆளுநர்
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி இரண்டு நாட்கள் பயணமாக டெல்லிக்கு ஜூலை 16ஆம் தேதி காலையில் வரவுள்ளார்.
டெல்லியில் இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவராக இருக்கும் வெங்கய்ய நாயுடு ஆகியோரின் பதவிக்காலம் அடுத்தடுத்து நிறைவு பெறவுள்ளது.
குடியரசு தலைவர் தேர்தல் ஜூலை 18ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில், இருவரது பிரிவு உபசாக நிகழ்ச்சிக்கு டெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்ள வரும் தமிழ்நாடு ஆளுநர் ரவி, 17ஆம் தேதி மாலையில் சென்னைக்குத் திரும்ப திட்டமிட்டுள்ளார்.
ஜாதி பற்றிய கேள்வி: பூதாகரமாகும் சேலம் பெரியார் பல்கலைக்கழக தேர்வு சர்ச்சை - முழு விவரம்
கொழும்பு போராட்டத்தில் காயம் அடைந்த ராணுவத்தினரை மருத்துவமனையில் பார்வையிட்ட ரணில்
பட மூலாதாரம், SRI LANKA PM MEDIA
இலங்கை தலைநகர் கொழும்பில் இறு தினங்களுக்கு முன்பு பொதுமக்கள் நடத்திய போராட்டங்களின்போது தடுப்பு நடவடிக்கையின்போது காயம் அடைந்து ராணுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் இரு ராணுவத்தினரை பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (15) பார்வையிட்டார்.
அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்ட வழக்கு: உத்தரவை திங்கட்கிழைக்கு ஒத்திவைத்த உயர் நீதிமன்றம்
பட மூலாதாரம், ㅤ
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்ட விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தொடர்ந்த வழக்கில் உத்தரவை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்திருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்.
கடந்த ஜூலை 11ஆம் தேதி அஇஅதிமுகவின் தலைமை அலுவலக வளாகத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான மோதலைத் தொடர்ந்து அந்த அலுவலகத்திற்கு வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர்.
அந்த சீலை அகற்றி சாவியை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனக்கோரி ஓ. பன்னீர்செல்வம் தரப்பும் எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்பும் தனித்தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சதீஸ்குமார் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தபோது இரு தரப்பும் வாதிட்ட நிலையில், ஜூலை 11ஆம் தேதி காலையிலிருந்து என்ன நடந்தது என்பதை காலவரிசைப்படி அறிக்கை தாக்கல் செய்யுமாறும் சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களின் காட்சிகளைத் தாக்கல் செய்ய வேண்டுமென்றும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இதைத்தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையை இன்று பிற்பகல் 2.30 மணிக்கு வந்தபோது காவல்துறை சார்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்காமல் இருந்திருந்தால் அதிமுக தலைமை அலுவலக வளாகத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கும் என்றும் பாதுகாப்பை மீறி அதிமுகவினர் சென்றதால்தான் கலவரம் ஏற்பட்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அப்போது ஓ பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தங்கள் மீது தவறான கருத்தை காவல்துறை தரப்பு தெரிவிப்பதாகவும் இது தொடர்பாக ஆட்சேப மனுவைத் தாக்கல் செய்வதாகவும் வழக்கை திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
மேலும், பொதுக் குழு தொடர்பான மனுவை விசாரித்த நீதிபதி தங்களுக்கு எதிரான கருத்தைத் தெரிவித்திருக்கிறார் என்றும் பொதுக் குழுவிற்குத் தடை விதிக்க மறுத்து விட்டார் என்றும் அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடவிருப்பதாகவும் ஓ. பன்னீர்செல்வம் தரப்பு கூறியது.
ஜூலை 11ஆம் தேதி 200க்கும் மேற்பட்ட இ.பி.எஸ். ஆதரவாளர்கள் கட்சி அலுவலகத்தில் திரண்டிருந்ததாகவும் அவர்கள் கட்சி வாயிலில் அமர்ந்துகொண்டு உள்ளே விடாமல் தடுத்ததால்தான் தகராறு ஏற்பட்டது என்றும் ஓ. பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையிலும் பொருளாளர் என்ற முறையிலும் கட்சி அலுவலகத்தில் தனக்கு முழு அதிகாரம் உள்ளது என்றும் கட்சி அலுவலகம் யாருக்கு உரிமையானது என்பதை ஆர்டிஓ தீர்மானிக்க முடியாது என்றும் சிவில் நீதிமன்றம்தான் தீர்மானிக்க முடியும் என்றும் ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கட்சி அலுவலகத்தில் உரிமை இருப்பதாகச் சொல்லும் ஓ. பன்னீர்செல்வம் அத்துமீறி உள்ளே நுழைந்ததும் கட்சி ஆவணங்களை தூக்கிச் சென்றது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
தலைமைக் கழக செயலர் என்ற நிலையில், கட்சி அலுவலகத்தின் பொறுப்பு தங்கள் வசம் மட்டுமே இருப்பதாகவும் எடப்பாடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். அதே நேரம், ஓ. பன்னீர்செல்வம் ஆட்சேப மனுவைத் தாக்கல்செய்ய திங்கட்கிழமை வரை நீதிபதி அவகாசம் வழங்கியிருக்கிறார்.
சிறுமி கரு முட்டை விற்பனை: ஈரோடு, சேலத்தில் உள்ள தனியார் மருத்துவனை ஸ்கேன் மையங்களுக்கு சீல்
பட மூலாதாரம், ㅤ
சிறுமி கரு முட்டை விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் புகாருக்கு உள்ளான ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளின் ஸ்கேன் மையங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரத்தில் குற்றச்சாட்டுக்கு உள்ளான நான்கு மருத்துவமனைகளில் உள்ள ஸ்கேன் செண்டர்களையும் , மருத்துவமனைகளையும் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று சென்னையில் தெரிவித்திருந்தார் .
இந்த நிலையில் இன்று பிற்பகலில் ஈரோடு அரசு மருத்துவமனை இணை இயக்குநர் பிரேம குமாரி தலைமையிலான குழுவினர், ஈரோடு தனியார் மருத்துவமனையில் உள்ள ஸ்கேன் நிலையத்துக்கு சீல் வைத்தனர்.
இதே போல சேலம் தனியார் மருத்துவமனை ஸ்கேன் மையத்தையும் சீல் வைத்து மூட இணை இயக்குநர் நெடுமாறன் தலைமையிலான அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
BBC தமிழ் இணையதளத்தில் கடந்த சில நாட்களில் வெளியான, நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய செய்திகள்
கார்கி சினிமா விமர்சனம்: சாய் பல்லவி நடிப்பு எப்படி இருக்கிறது?
வந்துகொண்டிருக்கும் செய்தி, மஹிந்தா, பசில் நாட்டை விட்டு வெளியேற இடைக்கால தடை - இலங்கை உச்ச நீதிமன்றம்
இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, அவரது இளைய சகோதரரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ ஆகியோர் நீதிமன்ற அனுமதியின்றி ஜூலை 28ஆம் தேதி வரை நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் இன்று இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
பட மூலாதாரம், ㅤ
படக்குறிப்பு, கோப்புப்படம்
இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகல்: ஏற்கப்பட்டதாக சபாநாயகர் அறிவிப்பு
பட மூலாதாரம், GETTY IMAGES
சிங்கப்பூர் தப்பிச் சென்ற பிறகு அங்கிருந்து தமது ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் கோட்டாபய ராஜபக்ஷ. அவரது விலகல் கடிதத்தை ஏற்பதாக அறிவித்துள்ளார் இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன.
இதையடுத்து 'கோட்டா வீட்டுக்குப் போ' (கோட்டா கோ கம) என்ற முழக்கத்தோடு போராட்டம் நடத்திவந்தவர்கள் தற்போது வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பிரதாப் போத்தன்: இறக்கும் முன்பு மரணம் குறித்துப் பேசிவந்த 80களின் மென் நாயகன்
இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார்? அடுத்து என்ன நடக்கும்?
மதுரை பல்கலைக்கழக விழாவில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் - தெலங்கானா ஆளுநர் தமிழிசை தரும் விளக்கம்
படக்குறிப்பு, புதுச்சேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கலந்து கொண்டு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியை துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தொடங்கி வைத்தார்
மதுரை பல்கலைக்கழக விழாவில் இந்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டதை மாணவர்களுக்கு ஊக்கப்படுத்தும் நிகழ்வாக பார்க்க வேண்டுமே தவிர அதை அரசியலாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று தெலங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
மேலும், "பல்கலைக்கழகங்களை மேம்படுத்தவே ஆளுநர்களுக்கு வேந்தர் பதவி வழங்கப்படுகிறது. இதை விவாதப்பொருளாக்க எடுத்துக்கொள்ள வேண்டாம்," என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
நாடு முழுவதும் இன்று முதல் அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், புதுச்சேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கலந்து கொண்டு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியைத் தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்
கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பதால் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
புதுச்சேரியில் அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதே போன்று அவர்களுக்கான அனைத்து வசதிகளையும் அரசு ஏற்படுத்தித் தர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என்று அவர் கூறினார்.
ஆளுநர் என்ற பதவியும், வேந்தர் என்ற பதவியும் விவாதத்திற்கு உள்ளாகி வருகிறது. பல்கலைக்கழகத்தை மேம்படுத்தவே ஆளுநர்களுக்கு வேந்தர் பதவி வழங்கப்படுகிறது. இதை விவாதப்பொருளாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
தமிழ்நாட்டில் காமராஜர் பல்கலைக்கழக விழாவில் மத்திய அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டது மாணவர்களுக்கு ஊக்கத்தை தரும் நிகழ்வாகவே பார்க்க வேண்டும். அதை அரசியலாக எடுத்துக்கொள்ளக்கூடாது," என்றும் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேலும் சில நாட்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தல் - மருத்துவமனை நிர்வாகம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மேலும் சில நாட்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரு தினங்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு வழக்கமான பரிசோதனைகளே மேற்கொள்ளப்பட்டதாகவும் இன்றோ அல்லது நாளையோ அவர் வீடு திரும்புவார் என்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தெரிவித்தார்.
இந்நிலையில் தற்போது காவேரி மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், முதலமைச்சருக்கு மேலும் சில நாட்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், "கொரோனா தொற்று தொடர்பான அத்தியாவசிய பரிசோதனைகளுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனா சிகிச்சை வழிகாட்டு நெறிமுறைகளின்படி அவருக்கு மருத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அவர் தற்போது நலமுடன் இருக்கிறார். மேலும் சில நாட்கள் ஓய்வெடுக்க அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பதில் ஜனாதிபதி ஆனார் ரணில்: விரைவில் புதிய ஜனாதிபதி தேர்தல்
வந்துகொண்டிருக்கும் செய்தி, இலங்கையின் பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றார்
இலங்கையின் பதில் ஜனாதிபதியாக (Acting President) ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்றுக்கொண்டார்.
பிரதம நீதிபதி ஜயந்த ஜயசூர்ய முன்னிலையில் ரணில் விக்ரசிங்க, பதில் ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, நேற்றைய தினம் பதவி விலகியதை அடுத்து, அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை சபாநாயகர் மஹிந்த யாப்பா
அபேவர்தன இன்று அறிவித்தார்.
இந்த நிலையில், பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் பதவி பிரமானம் செய்துக்கொண்டுள்ளார்.
இலங்கை புதிய ஜனாதிபதி தேர்வுக்கான வாக்கெடுப்பு 20ம் தேதி
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி பதவியிலிருந்து விலகியுள்ள நிலையில், புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பை எதிர்வரும் 20ம் தேதி நடத்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தீர்மானித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போதே சபாநாயகர் இந்த அறிவிப்பை வெளியிட்டதாக நாடாளுமன்ற ஊடக பிரிவு அறிவித்துள்ளது.இதன்படி, நாடாளுமன்றத்தை நாளைய தினம் கூட்டுவதற்கு சபாநாயகர் தீர்மானித்துள்ளார்.19ம் தேதி புதிய ஜனாதிபதிக்கான வேட்பு மனுக்களை ஏற்றலும், 20ம் தேதி வாக்கெடுப்பை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.ஜனநாயக மரபுக்குள் இந்த நடவடிக்கைகளை எந்தவித தடையும் இன்றி உடனடியாக முன்னெடுப்பதற்கு அனைவரது ஒத்துழைப்புக்களையும் எதிர்பார்த்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் இன்றோ நாளையோ வீடு திரும்புவார் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
பட மூலாதாரம், MA. SUBRAMANIAN/ TWITTER
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அல்லது நாளை மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார் என, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை, எழும்பூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்பிரமணியன், "வரும் ஜூலை 24ஆம் தேதி 50,000 இடங்களில் தமிழ்நாட்டில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படவிருக்கிறது. முதல் தவணை, இரண்டாம் தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பூசியும் வழங்கப்படும். அனைத்துப் பிரிவினரும் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளலாம்.
முகாம்களில் மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றில்லை. 38 மாவட்டங்களிலும் 2,590 இடங்களில் அரசு கோவிட் தடுப்பூசி மையங்கள், அரசு மருத்துவமனைகள் என அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பூசி போடப்படுகின்றது. பொதுமக்கள் இதனை சரியாக பயன்படுத்திக்கொண்டு தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளலாம்.
பட மூலாதாரம், FACEBOOK/M.K.STALIN
முதலமைச்சர் நலமாக இருக்கிறார். வழக்கமான பரிசோதனைகள்தான் அவருக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளன. மருத்துவமனையிலிருந்து இன்றோ நாளையோ வீடு திரும்புவார்" என தெரிவித்தார்.
கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு - கேரளா எல்லைப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பேசிய அமைச்சர், "இரு மாநில எல்லையில் உள்ள 13 பகுதிகளில் எப்போதும் தொடர் கண்காணிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பன்னாட்டு விமான நிலையங்களில் கூடுதல் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அறிகுறிகளுடன் வருபவர்களை கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தியிருக்கிறோம்" என தெரிவித்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் உடல்நலம் விசாரித்த பிரதமர் நரேந்திர மோதி
பட மூலாதாரம், @MKSTALIN
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பிரதமர் மோதி உடல்நலம் விசாரித்தார்.
இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு முதலமைச்சரை இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி இன்று தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு உடல் நலம் விசாரித்தார்.
கொரோனா நோய்த்தொற்று காரணமாக மருத்துவமனையில் தங்கி முதலமைச்சர் சிகிச்சை பெற்றுவருகிறார். உடல் நலம் விசாரித்த பிரதமருக்கு நன்றி கூறிய முதலமைச்சர், அவரிடம் தான் நன்கு குணமடைந்து வருவதாகத் தெரிவித்தார்.
மேலும், சென்னையில் வரும் ஜூலை 28ஆம் தேதி தொடங்க உள்ள உலக செஸ் விளையாட்டுப் போட்டிக்கு அழைப்பு விடுக்க நேரில் வருவதாக இருந்ததை குறிப்பிட்டு தான் தற்போது மருத்துவ சிகிச்சை பெற்றுவருவதன் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோரை அனுப்பி வைப்பதாகவும் தொடக்க விழா நிகழ்ச்சியில் பிரதமர் அவசியம் கலந்துகொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.