You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

ரவீந்திரநாத் எம்.பி உள்பட 18 பேர் கட்சியில் இருந்து நீக்கம்: எடப்பாடி பழனிசாமி

ஏற்கெனவே ஓ. பன்னீர்செல்வம், ஜேசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம் உள்ளிட்டோர் கட்சியை விட்டு நீக்கப்படுவதாக எடப்பாடி கே. பழனிசாமி தரப்பு கூட்டிய பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால்,கட்சியின் ஒருங்கிணைப்பாளரான தனது ஒப்புதலின்றி நடந்த பொதுக்குழுவும் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் செல்லாது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறி வருகிறார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

நந்தினி வெள்ளைச்சாமி

  1. மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்று காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    கொரோனா அறிகுறிகள் இருந்ததால், நேற்று தன் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்ட மு.க.ஸ்டாலின் இன்று மருத்துவ பரிசோதனைகளுக்காகவும் கொரோனா அறிகுறிகள் தொடர்பான சிகிச்சைக்காகவும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என காவேரி மருத்துவமனை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  2. இலங்கை போராட்டம்: இளைஞர் ஒருவர் பலி

    இலங்கையில் போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு படைகளுக்கும் இடையில் புதன்கிழமை நடந்த மோதலில், காயமடைந்த 26 வயது இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.இந்தத் தகவலை காவல்துறை உறுதி செய்துள்ளது.

    இலங்கையில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  3. அரச கட்டடங்களை திரும்ப கையளிக்கும் இலங்கை மக்கள்

    "எங்களுக்கு எங்க நாட்டில் அமைதி முக்கியம்." கைப்பற்றிய அரசு கட்டடங்களை திரும்ப கொடுக்கும் இலங்கை போராட்டக்காரர்கள் சொல்வது என்ன?

    கீழ்க்கண்ட வீடியோவில் அறிந்து கொள்ளுங்கள்.

  4. இலங்கையில் கைப்பற்றிய அரசு கட்டடங்களில் இருந்து வெளியேற போராட்டக்காரர்கள் முடிவு

    இலங்கையில் கைப்பற்றப்பட்ட அரசு கட்டிடங்களை அரசாங்கத்திற்கு திருப்பி வழங்க போராட்டக்காரர்கள் தீர்மானித்துள்ளனர்.

    இலங்கையில் போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்ட ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, பிரதமர் இல்லம் மற்றும் பிரதமர் அலுவலகம் ஆகியவற்றை மீண்டும் அரசாங்கத்திடம் ஒப்படைக்க போராட்டக்காரர்கள் தீர்மானித்துள்ளனர்.

    கொழும்புவில் இன்று (ஜூலை 14) முற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டனர். எனினும், ஜனாதிபதி செயலகம் மற்றும் காலி முகத்திடல் அருகேயுள்ள பகுதிகளில் முன்னெடுக்கப்படும் போராட்டம் தொடரும் என அவர்கள் அறிவித்துள்ளனர். தம்மால் கைப்பற்றப்பட்ட இடங்களிலிருந்து அமைதியான முறையில் வெளியேற எதிர்பார்த்துள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

    ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமரின் அதிகாரபூர்வ இல்லம் ஆகியவற்றை போராட்டக்காரர்கள் கடந்த 9ம் தேதி தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என அவர்கள் அறிவித்துள்ளனர்.

    அத்துடன், பிரதமர் அலுவலகத்தை நேற்றைய தினம் போராட்டக்காரர்கள் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர். இந்த நிலையில், நேற்றிரவு நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியை கைப்பற்றுவதற்கு போராட்டக்காரர்கள் முயற்சித்த நிலையில், பாதுகாப்பு பிரிவினர் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

    இதில் பலர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான பின்னணியிலேயே போராட்டக்காரர்கள், இந்த தீர்மானத்தை எட்டியுள்ளனர். அமைதியான முறையில் நடத்தப்படும் போராட்டத்தை, தொடர்ந்தும் அமைதியாக முன்னெடுப்பதற்கு போராட்டக்காரர்கள் தீர்மானித்துள்ளதாக அறிய முடிகிறது.

  5. இலங்கையை நெருக்கமாக கவனித்து வருகிறேன் - ஐ.நா

    இலங்கையின் பொருளாதார, அரசியல் நெருக்கடியால் நாட்டில் பெரும் போராட்டம் நடந்து வரும் நிலையில், ஜனாதிபதி மாலத்தீவுக்கு சென்றுள்ளார். ஜூலை 13 ஆம் தேதி பதவி விலகுவதாக அறிவித்த ஜனாதிபதி, இன்றுவரை பதவி விலகல் கடிதத்தை அனுப்பவில்லை என்று சபாநாயகர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், ஐ. நா சபை தலைமைச் செயலாளர் ஆன்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார்.

    "இலங்கையின் நிலையை நான் கவனமாக அவதானித்து வருகிறேன். போராட்டக்காரர்களின் புகார்களும் இந்த பிரச்னைக்கான காரணங்களும் முறையாக தீர்க்கப்பட வேண்டும். அமைதியான ஜனநாயக முறையிலான மாற்றத்தை உருவாக்க முன்வரும்படி இலங்கையின் அனைத்துக்கட்சி தலைவர்களையும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

  6. யார் இந்த இலங்கையின் எம்.ஜி.ஆர்

    இலங்கையில் தொடர்ந்து வரும் மக்கள் போராட்டத்தில் எம்.ஜி.ஆர் பாடல்களைப் பாடி வருகிறார் இலங்கையின் எம்.ஜி.ஆர் என்று அறியப்படும் மாணிக்கம். யார் இந்த மாணிக்கம்? என்ன செய்கிறார்?

  7. அதிமுக அலுவலகம் 'சீல்' வழக்கு: இன்று விசாரணை

    அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைத்ததை அகற்றகோரி ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் தொடர்ந்த மனுவை இன்று விசாரிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.

    ஜூலை 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு நடைபெற்றபோது, சென்னை ராயபேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலத்தில் ஓபிஎஸ் தமக்கு ஆதரவான தொண்டர்களுடன் அலுவலகத்துக்குள் நுழைந்தார்.

    அப்போது இரு தரப்பினரிடையே கடும் மோதல் நிகழ்ந்தது. இதையடுத்து, வருவாய் கோட்டாட்சியர் அதிமுக அலுவலகத்தை பூட்டி சீல் வைத்தனர். இந்த சீலை நீக்ககோரி அதிமுக சார்பில் தாக்கல் செய்யப்பட மனு மீதான விசாரணை சென்னை உயர் நிதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது.

  8. இலங்கையில் போராட்டம் தொடரும்: ஆசிரியர் சங்கம்

    கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் பதவி விலகும் வரை நாடு தழுவிய ரீதியில் பாரிய போராட்டங்கள், முழு அடைப்பு நடத்துவது தொடர்பாக, தொடர் தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கலந்துரையாடப்பட்டு வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  9. உங்கள் கருத்து என்ன?

    இந்திய இளைஞர்கள் வேலை கொடுப்பவர்களாக இருக்க வேண்டும் என்று எல்.முருகன் பேசியுள்ளார். காமராசர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின்போது இதை பேசியுள்ளார் இந்திய இணையமைச்சர் எல்.முருகன். அவர் பேசியது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

    இந்த இணைப்பில் உங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம்.

  10. இலங்கை ஜனாதிபதி ராஜிநாமா கடிதம் வரவில்லை - சபாநாயகர்

    ஜூலை 13ஆம் தேதி தான் பதவி விலகுவதாக இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்திருந்த நிலையில் இன்று (ஜூலை 14) வரை பதவி விலகல் கடிதம் வரவில்லை என்று இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

  11. வணக்கம் நேயர்களே

    வணக்கம் நேயர்களே!

    நான் பிரசாந்த் முத்துராமன். பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன். தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    இன்றைய தினம் அதிமுகவின் பொதுக்குழு குறித்த விவரங்கள் மற்றும் இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.

    உங்கள் பகுதியின் சுவாரசியமான செய்திகளைப் பற்றிஎங்கள் டிவிட்டர் கணக்கின் மூலம் தகவல் அளியுங்கள்.