நன்றி நேயர்களே...
இன்றைய நேரலை இத்துடன் நிறைவு பெறுகிறது. தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருந்தமைக்கு நன்றி.
இதுவரையிலான இன்றைய முக்கிய நிகழ்வுகள்:
- இலங்கை முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இன்று அதிகாலை துபாய் செல்வதற்காக விமான நிலையம் சென்ற நிலையில், அவருக்கு சேவைகள் வழங்கக்கூடாது என பிற பயணிகள் போராட்டம் நடத்தியதால், அவருக்கு சேவைகள் மறுக்கப்பட்டதாக இலங்கை விமான நிலைய அதிகாரி பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.
- சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அ.தி.மு.கவின் தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
- தன்னைக் கேட்காமல் அ.தி.மு.க. வங்கிக் கணக்கிலிருந்து எவ்வித வரவுசெலவுகளையும் மேற்கொள்ளக்கூடாது என்றும் கரூர் வைஸ்யா வங்கியின் மயிலாப்பூர் கிளை மேலாளருக்கு ஓ. பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
- லீனா மணிமேகலைக்கு எதிராக வாராகி என்பவர், தமிழ்நாடு உள்துறை செயலர், தாம்பரம் காவல் ஆணையர் மற்றும் சேலையூர் காவல் நிலையம் ஆகியவற்றில் புகார் அளித்துள்ளார்.
- தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டதாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- திங்கட்கிழமையன்று (ஜூலை 11) ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த கலவரம் தொடர்பாக மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
- கோயம்புத்தூரைச் சேர்ந்த தொழிலதிபர்கள் சந்திரசேகர், செய்யாதுரை தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனைகளில் கணக்கில் வராத 500 கோடி ரூபாய் கண்டறியப்பட்டுள்ளதாக, வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.