இளையராஜா, பி.டி. உஷா மாநிலங்களவை நியமன உறுப்பினர்கள் ஆகிறார்கள் - பிரதமர் மோதி வாழ்த்து
இசைத்துறையில் தலைமுறைகளைக் கடந்து ஆற்றிய சேவைக்காக இளையராஜாவையும், விளையாட்டுத்துறையில் ஆற்றி வரும் சேவைக்காக முன்னாள் தடகள வீராங்கனை பி.டி. உஷாவையும் மாநிலங்களவை நியமன உறுப்பினராக நியமிக்க மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
ஜோ மகேஸ்வரன்
அழிகிறதா வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்? புதிய கல்குவாரிக்கு எதிர்ப்பு
அதிமுக: 'நமது அம்மா நாளிதழ்' பதிப்பாளர் சந்திரசேகர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நண்பரும் நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளருமான சந்திரசேகர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
கோயம்புத்தூர் மாவட்டம் வடவள்ளி உள்ளிட்ட 6 இடங்களில் சந்திரசேகருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
அதிமுக சட்டமன்ற கொறடா, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவர் வடவள்ளி சந்திரசேகர். நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளராகவும் அவர் உள்ளார்.
ஏற்கனவே இரண்டு முறை அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. தற்போது 3வது முறையாக கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூரில் உள்ள சந்திரசேகரின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்
அதிமுக பொதுக்குழுவிற்கு தடையில்லை - உச்சநீதிமன்றம்

படக்குறிப்பு, ஓபிஎஸ்-இபிஎஸ் வரும் 11ம் தேதி அதிமுக பொதுக்குழுவிற்கு தடையில்லை. தேவையெனில் உயர்நீதிமன்றத்தை நாட உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த மாதம் 23ம் தேதி நடைபெற்றது. இதற்கு முன்னதாக பொதுக்குழுவில் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட 23 தீர்மானங்கள் குறித்து மட்டுமே விவாதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளை உயர்நீதிமன்ற இரண்டு நீதிபதி அமர்வு தெரிவித்தது.
இதையடுத்து நடைபெற்ற பொதுக்குழுவில் உயர்நீதிமன்றத்தின் நிபந்தனைகளை பின்பற்றவில்லை என்று ஒ.பன்னீர்செல்வம் தரப்பு உயர்நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. வரும் 11ம் தேதி நடைபெறும் பொதுக்குழுவிற்கு தடை விதிக்க கோரியும் ஓபிஎஸ் தரப்பு நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது.
இதற்கிடையே, கடந்த 23ம் தேதி பொதுக்குழு குறித்த சென்னை உயர்நீதிமன்ற 2 நீதிபதிகள் அமர்வின் உத்தரவு எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, கிருஷ்ணா முராரி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, "கடந்த 23ம் தேதி பொதுக்குழு குறித்த உயர்நீதிமன்ற உத்தரவு குறித்த வழக்கில் மறு உத்தரவு வரும் வரை இதே தொடரவும். வரும் 11ம் தேதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்குழுவிற்கு தடையில்லை. தேவையெனில் உயர்நீதிமன்றத்தை நாடலாம்.'' என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர் சி.வி.சண்முகம்,''உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் எப்படி தலையிட முடியும் ? என்று கடந்த 23ம் தேதி உயர்நீதிமன்ற தீர்ப்பை நிறுத்தி வைத்துள்ளனர். அவமதிப்பு வழக்கை நிறுத்தி வைத்து, மற்ற மனுதாரர்கள் விளக்க அளிக்க 2 வாரம் அவகாசம் அளித்துள்ளனர். வரும் 11ம் தேதி நடைபெறும் பொதுக்குழு குறித்து எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.'' என்றார்.
இது குறித்து, ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர் ஆர்.வைத்திலிங்கம் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''கூட்டம் நடத்துவது குறித்து உயர்நீதிமன்றத்தை நாடலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனவே உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளோம். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நடப்போம்.'' என்றார்.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: 'அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' - வி.கே.சசிகலா

படக்குறிப்பு, வி.கே.சசிகலா கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வி.கே.சசிகலா வலியுறுத்தியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தொண்டர்களைச் சந்திக்கும் சுற்றுப்பயணத்தை வி.கே சசிகலா நேற்று(ஜூலை 5) மாலை மேற்கொண்டார்.
மரக்காணத்தில் பேசுகையில், அப்போது பேசிய அவர், ''அதிமுகவில் ஒரு சிலரின் சுயநலத்தால் வெற்றி சின்னமான இரட்டை இலை சின்னதில் போட்டியிட முடியாத சூழ்நிலைக்கு நமது கழக தொண்டர்கள் தள்ளப்பட்டு இருப்பது மிகவும் வேதனையை அளிப்பதாக'' கூறினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது கொடநாடு வழக்கு பற்றிப் பேசவேண்டிய நீங்கள் அமைதி காப்பது ஏன்? என்ற கேள்விக்கு, ''என்னைப்பொறுத்தவரை கொடநாடு வழக்காக இருந்தாலும் சரி அல்லது அம்மா (ஜெயலலிதா) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது நடந்த நிகழ்வுகள் எல்லாம் எனக்கு மட்டுமல்ல தமிழ்நாடு மக்களுக்கும் தெரியவேண்டும்.
யாரெல்லாம் சுயலாபத்திற்காக என்னென்ன பேசினார்கள் என்று தமிழக மக்கள் கேட்டு வைத்துள்ளனர். ஆகவே இதற்கெல்லாம் தீர்வு வரவேண்டும் என்பதே என்னுடைய ஆசையாக உள்ளது. அதுமட்டுமின்றி இந்த வழக்கு தொடர்பாக தற்போது இருக்கக்கூடிய திமுக அரசினுடைய விசாரணையானது காவல்துறை தரப்பிலிருந்து என்னிடம் இரண்டு நாட்கள் விசாரணை செய்தனர்.
அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு முறையாகப் பதிலளித்து இருக்கிறேன். அரசாங்கம் தான் இதற்கு விரைவு நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' என்றார்.
கொடநாடு கொலை வழக்கில் விசாரணையை ஆரம்பிக்கும்போது தலைமை பதவிக்காக அதைத் தடுக்க முயல்கின்றனரா? என்ற கேள்விக்கு,
''எனக்கு அதுபற்றி தெரியவில்லை. என்னைப்பொறுத்தவரை இப்போது இருக்கக்கூடிய முதலமைச்சர் தேர்தல் சமயத்தில் இரண்டு விஷயங்கள் பேசினார். அதில் ஒன்று கொடநாடு விஷயம்.
அவர் ஒவ்வொரு தெருவாகச் சென்று வாக்கு சேகரிப்பு செய்தபோது வந்தவுடன் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியிருந்தார். ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவரிடம் தான் கேட்கவேண்டும்.'' என்றார் சசிகலா.
இலங்கையில் மீண்டும் போராட்டம்: கண்ணீர்புகை பிரயோகம் - முன்னாள் எம்.பி உள்ளிட்டோர் கைது

பட மூலாதாரம், Hirunika
இலங்கை ஜனாதிபதி மாளிகை எதிரில் இன்று மீண்டும் போராட்டம் நடைபெற்றது. முன்னாள் எம்.பி ஹிருனிகா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியால் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ஷ விலகி, ரணில் விக்ரமசிங்க பிரதமராக பொறுப்பேற்றார். இதையடுத்து, சற்று குறைந்திருந்த போராட்டங்கள் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், தலைநகர் கொழும்புவில் ஜனாதிபதி மாளிகை முன்பாக முன்னாள் எம்.பி ஹிர்னிகா பிரேமச்சந்திரன் உள்ளிட்டோர் இன்று போராட்டம் நடத்தினர். ஹிருனிகா உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
தொடர்ந்து போராட்டக்காரர்கள் அங்கு திரண்டு, அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். கூட்டத்தைக் கலைக்க கண்ணீர் புகை குண்டு, நீர்த்தாரை பிரயோகம் செய்யப்பட்டது. இதனால், அப்பகுதியில் மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Hirunika
கோவை: லீனா மணிமேகலைக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
ஆவணப்பட இயக்குனர் லீனா மணிமேகலை கனடா டுரண்டோவில் நடைபெறும் நிகழ்வில் திரையிடப்பட இருக்கும் தன்னுடைய ஆவணப்படத்தின் போஸ்டரை சமீபத்தில் வெளியிட்டிருந்தார்.
அந்த போஸ்டர் காளியை அவமதிக்கும் விதத்தில் இருந்ததாக சர்ச்சை எழுந்தது. இதனைத் தொடர்ந்து லீனா மணிமேகலை மீது டெல்லி, உத்திரப் பிரதேசத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் லீனா மணிமேகலைக்கு கொலை மிரட்டல் விடுத்த கோவையைச் சேர்ந்த சரஸ்வதி என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சக்தி சேனா இந்து மக்கள் இயக்கம் என்கிற கட்சியின் நிறுவனத் தலைவராக இருந்து வருகிறார் சரஸ்வதி. லீனா மணிமேகலைக்கு கொலை மிரட்டல் விடுத்த காணொளியை தன்னுடைய முகநூல் கணக்கில் நேற்று பதிவிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து செல்வபுரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சரஸ்வதியை கைது செய்துள்ளனர்.
இலங்கையில் 25 அலுவலக நேர ரயில்கள் மட்டுமே இன்று இயங்கும்

பட மூலாதாரம், Getty Images
இலங்கையில் இன்று அலுவலக நேர ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, அலுவலக ரயில் சேவைகளில், இன்றைய தினம், 25 ரயில் சேவைகள் மாத்திரமே இடம்பெறும் என ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நிலவிவரும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, ரயில் பணியாளர்கள் உரிய முறையில் பணிக்கு திரும்ப முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதன்படி, தமக்கு எரிபொருளை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்குமாறு ரயில் பணியாளர்கள் கடந்த காலங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையில், ரயில் பணியாளர்களுக்கு எரிபொருள் வழங்கப்படாமையினால், பல்வேறு சந்தர்ப்பங்களில் பணிபுறக்கணிப்பையும் மேற்கொண்டிருந்தனர்.
இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்து, பொது பஸ் சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தன.இதையடுத்து, பயணிகள், தமது போக்குவரத்து தேவையை நிறைவு செய்துக்கொள்வதற்காக ரயில் சேவைகளை பயன்படுத்த ஆரம்பித்திருந்தனர்.
எனினும், ரயில் பணியாளர்களுக்கு சேவைக்கு வருகைத் தர எரிபொருள் இல்லாமை காரணமாக, ரயில் சேவைகளை உரிய வகையில் முன்னெடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்றைய தினம் குறைந்த அளவிலான ரயில் சேவைகளே இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, நாடு முழுவதும் 1000திற்கும் குறைவான தனியார் பஸ்களே இன்று சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், அரச பஸ்களும் குறிப்பிடத்தக்களவே சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
வணக்கம் நேயர்களே!
நான் ஜோ மகேஸ்வரன்.
பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன். தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.
குறிப்பாக இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள். உங்கள் பகுதியின் சுவாரசியமான செய்திகளைப் பற்றிஎங்கள் டிவிட்டர் கணக்கின் மூலம் தகவல் அளியுங்கள்.
நேற்றைய நேரலை பக்கத்திலிருந்து முக்கியமான செய்திகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்:
- யுக்ரேன்-ரஷ்யா போர் காரணமாக, எங்கள் பிரச்சனை இன்னும் மோசமாகிவிட்டது. உலகளாவிய நெருக்கடியால் இந்தியாவும் இந்தோனேசியாவும் பாதிக்கப்பட்டுள்ளன என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.
- அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள ஹைலாண்ட் பார்க் எனும் இடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற சுதந்திர தின அணிவகுப்பில் துப்பாக்கிதாரி ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டனர்.
- இந்திய குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் வேட்பு மனுத்தாக்கலுக்கு ஜுலை 19ஆம் தேதி கடைசி நாளாகும். ஆகஸ்ட் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். இதற்கான அறிவிக்கையை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.
- சிகாகோ துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
- எல்லை தாண்டி மீன் பிடித்ததாக மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. ஜெகதாப்பட்டினம் மீனவர்களிடம் டீசல், பெட்ரோலை பெற்றுக் கொண்டு திருப்பிய அனுப்பியுள்ளனர்.
- வரும் 11ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள அதிமுக பொதுக்குழுவிற்கு தடை விதிக்க கோரி ஓபிஎஸ் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
