You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

காளி போஸ்டர் சர்ச்சை: கருத்து வைரலானதால் மஹுவா மொய்த்ரா விளக்கம்

வணங்கும் தெய்வத்தை 'இறைச்சி உண்ணும் தெய்வம் என்றும் மதுவை ஏற்றுக்கொள்ளும் தெய்வம்' என்று ஒவ்வொருவரும் கருதுவர். ஒரு ஊரில் காளிக்கு சாராயத்தை படைப்பார்கள். வேறு ஊரில் சிகரெட் படைப்பார்கள். அது அவரவர் வழிபடும் விதம். அது அவர்களுடைய சுதந்திரம் என்று பேசினார். அவரது கருத்து சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஜோ மகேஸ்வரன்

  1. இன்றைய நேரலை நிறைவு பெறுகிறது

    வணக்கம்.

    இன்றைய நேரலை நிறைவு பெறுகிறது. தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருந்தமைக்கு நன்றி.

    இது வரையிலான இன்றைய முக்கிய நிகழ்வுகள்.

    • யுக்ரேன்-ரஷ்யா போர் காரணமாக, எங்கள் பிரச்சனை இன்னும் மோசமாகிவிட்டது. உலகளாவிய நெருக்கடியால் இந்தியாவும் இந்தோனேசியாவும் பாதிக்கப்பட்டுள்ளன என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.
    • அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள ஹைலாண்ட் பார்க் எனும் இடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற சுதந்திர தின அணிவகுப்பில் துப்பாக்கிதாரி ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டனர்.
    • இந்திய குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் வேட்பு மனுத்தாக்கலுக்கு ஜுலை 19ஆம் தேதி கடைசி நாளாகும். ஆகஸ்ட் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். இதற்கான அறிவிக்கையை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.
    • சிகாகோ துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
    • எல்லை தாண்டி மீன் பிடித்ததாக மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. ஜெகதாப்பட்டினம் மீனவர்களிடம் டீசல், பெட்ரோலை பெற்றுக் கொண்டு திருப்பிய அனுப்பியுள்ளனர்.
    • வரும் 11ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள அதிமுக பொதுக்குழுவிற்கு தடை விதிக்க கோரி ஓபிஎஸ் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறிப்பாக, இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய பிபிசி தமிழ் இணைய தளம், முகநூல், ட்விட்டர், இண்ஸ்டாகிராம் பக்கங்களில் இணைந்திருங்கள்.

  2. 'எந்த படத்தையும், போஸ்டரையும் ஆதரிக்கவில்லை': 'காளி' பட சர்ச்சை பற்றிய கருத்துக்கு மஹுவா மொய்த்ரா விளக்கம்

    பிரபல தமிழ் எழுத்தாளரும் ஆவண பட இயக்குநருமான லீனா மணிமேகலையின் காளி பட போஸ்டர் தொடர்பாக தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் எழுப்பப்பட்ட கேள்விக்கு திரிணமூல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா பதிலளித்த கருத்து சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

    அந்த நிகழ்வில் பேசிய மஹுவா மொய்த்ரா தமது கருத்தாக என் பார்வையில் வணங்கும் தெய்வத்தை 'இறைச்சி உண்ணும் தெய்வம் என்றும் மதுவை ஏற்றுக்கொள்ளும் தெய்வம்' என்று ஒவ்வொருவரும் கருதுவர். ஒரு ஊரில் காளிக்கு சாராயத்தை படைப்பார்கள். வேறு ஊரில் சிகரெட் படைப்பார்கள். அது அவரவர் வழிபடும் விதம். அது அவர்களுடைய சுதந்திரம் என்று பேசினார்.

    இந்த நிலையில், அவரது கருத்து சர்ச்சை ஆனதையடுத்து, செவ்வாய்க்கிழமை மாலையில் மீண்டும் விளக்கம் அளித்துள்ளார் மஹுவா மொய்த்ரா.

    'எந்த படத்திற்கும் போஸ்டருக்கும் நான் ஆதரவளிக்கவில்லை அல்லது புகைத்தல் என்ற வார்த்தையை நான் பயன்படுத்தவில்லை. பொய் சொல்வது உங்களை சிறந்த இந்துக்களாக மாற்றாது. தாராபீத்தில் உள்ள எனது காளி கோயிலுக்கு வந்து பாருங்கள். அவருக்கு படையலுக்காக என்ன உணவும் பானமும் வழங்கப்படுகிறது என்பதை வந்து பாருங்கள் என்று மஹுவா தமது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

  3. இலங்கையில் இளைஞரைத் தாக்கிய ராணுவ அதிகாரி பணியிடை நீக்கம்

    இலங்கையில் எரிபொருள் நிரப்புவதற்காக காத்திருந்த இளைஞரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய ராணுவ அதிகாரியை, அனைத்து கடமைகளிலும் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

    இலங்கையில் குருநாகல் - யக்கஹபிட்டிய பகுதியில் எரிபொருள் நிரப்புவதற்காக காத்திருந்த மக்கள் மத்தியில் ஏற்பட்ட அமைதியின்மை ஒன்றின் போது, ராணுவத்தினரால் அழைத்து செல்லப்படும் ஒரு இளைஞனை, அங்கு கடமைகளில் ஈடுபட்டிருந்த உயர் ராணுவ அதிகாரி ஒருவர் தாக்கும் சம்பவம், சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டது.

    பாதணியுடன், குறித்த இளைஞன் மீது, ராணுவ அதிகாரி தாக்குதல் நடத்தி, கடுமையாக பேசும் வகையில் அந்த வீடியோ பகிரப்பட்டு வந்தது. இந்த சம்பவமானது, இலங்கை ராணுவம் தொடர்பில் பல்வேறு எதிர்மறை விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது.

    இதையடுத்தே, ராணுவ தளபதியினால் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு குழு நியமிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் குறித்த அதிகாரியும் பணி இடைநிறுத்த ராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் வியனகே தீர்மானித்துள்ளார்.

    இலங்கையில் ராணுவ அதிகாரி தொடர்பிலான ஆரம்ப கட்ட விசாரணை பரிந்துரைகள் கிடைக்கப் பெறும் வரை, அந்த அதிகாரியை அனைத்து கடமைகளிலும் இருந்து இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை ராணுவத்தின் போலீஸ் படையணியினால் இந்த விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன

  4. திருத்தணியில் முதியவர் தற்கொலை - நீதி கேட்டு மறியல் செய்த பழங்குடியினர்

  5. 'தமிழ்நாட்டை இரண்டாக பிரித்தால், திமுகவிற்கு 2 முதலமைச்சர்கள்' - டிகேஎஸ் இளங்கோவன்

    "தனிநாடு கேட்பது திமுகவின் கொள்கை அல்ல. தமிழ்நாட்டை இரண்டாக பிரித்தாலும் திமுகதான் 2 முதல்வர்களைப் பெறும்" என திமுக முன்னாள் எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

    திமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் அண்மையில் பேசுகையில், எங்களை தனிநாடு கேட்க விட்டு விடாதீர்கள். மாநில சுயாட்சி தாருங்கள்.'' என்று பிரதமர் மோதி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நோக்கி கூறியிருந்தார்

    இதற்கு பதில் தரும் வகையில், பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் கூறுகையில் "தனிநாடு வேண்டும் என்பது ஆ.ராசாவின் சொந்த கருத்து. என்னை பொறுத்தவரை தமிழ்நாட்டை பாண்டியநாடு பல்லவநாடு என இரண்டாக பிரிக்க வேண்டும்" என்றார்.

    இந்நிலையில், தனிநாடு கேட்பது திமுகவின் கொள்கை அல்ல. தமிழ்நாட்டை இரண்டாக பிரித்தாலும் திமுகதான் 2 முதல்வர்களைப் பெறும்" என திமுக முன்னாள் எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

  6. தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க என்ன அவசரம் ? - உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி

    தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்கள் மூலம் நிரப்புவது தொடர்பான அறிவிப்பிற்கு தடை கோரிய வழக்கில் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சங்கத்தின் தலைவர் ஷீலா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், "கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஏராளமானோர் அப்போதிருந்த வெயிட்டேஜ் முறையால் பணிக்கு தேர்வாகவில்லை. ஆனால் அவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள்.

    இந்நிலையில், தமிழ்நாடு அரசின் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு நிரப்ப திட்டமிட்டு, கடந்த 23ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    தற்காலிக ஆசிரியர்கள் தேர்வு தொடர்பாக முறைப்படுத்தப்பட்ட வழிமுறைகள் எதுவும் இல்லை. அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் அவர்களுக்கு தேவையான நபர்களை பணியில் நியமித்து கொள்ள வாய்ப்பு உள்ளது. இதனால் தகுதியற்றவர்கள் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்க படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

    இவற்றை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்கள் மூலம் நிரப்புவது தொடர்பான அறிவிப்பை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

    அரசு தரப்பில் தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு போடப்பட்ட இடைகால தடையை நீக்க கோரி, நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு முறையீடு செய்யப்பட்டது.

    இதையடுத்து, எந்த அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் நடைபெறுகிறது ? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அரசு தரப்பில், ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்தவர்கள், தகுதியான ஆசிரியர்களை நியமிக்கப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டது.

    'அப்படி என்றால் நிரந்தர ஆசிரியர்களை நியமிக்கலாமே?' என நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும் தற்காலிக ஆசிரியரை நியமிப்பதற்கு என்ன அவசரம் உள்ளது? எனக் கூறி வழக்கு பட்டியலிடப்பட்ட ஜூலை 8 ஆம் தேதியே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி தெரிவித்தார்.

  7. நூபுர் ஷர்மா: உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கருத்துக்கு எதிர்வினை - முன்னாள் நீதிபதிகள் உள்பட 117 பேர் கடிதம்

  8. இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு ஒ.பி.எஸ் கடிதம்

    இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

    காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 30ஆம் தேதி மீன்பிடிக்க சென்ற மயிலாடுதுறை மீனவர்கள் 7, காரைக்கால் மீனவர்கள் 5 பேர் என மொத்தம் 12பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக, பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து, இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

    மீனவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மீனவர்களையும் பறிமுதல் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

    இதே கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு நேற்று கடிதம் எழுதினார்.

  9. இலங்கை நாடாளுமன்ற அமர்வில் எதிர்கட்சிகள் முழக்கம் - சபையில் இருந்து கோட்டாபய வெளியேறினார்

    இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்று (05) நாடாளுமன்ற சபை அமர்வில் கலந்து கொண்டிருந்தபோது, அவருக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபைக்குள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இலங்கை நாடாளுமன்ற கூட்டம் இன்று நடைபெற்ற போது, 'கோட்டா கோ ஹோம்' (Gota go home) என கோஷமெழுப்பிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அவ்வாறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் தாங்கியிருந்தனர்.

    சபையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் தொடர்பில் உரையாற்றிக் கொண்டிருந்த போது, எதிரணியினர் இவ்வாறு ஜனாதிபதிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்தனர்.

    பிரதமரின் உரையை இடைமறித்து, ஜனாதிபதிக்கு எதிராக எதிர்க்கட்சியினர் தொடர்ச்சியாக கோஷமெழுப்பினர். இதனால் எழுந்த இந்த குழப்ப நிலைக்கு மத்தியில், நாடாளுமன்ற சபை அமர்விலிருந்து ஜனாதிபதி வெளியேறிச் சென்றார்.

    இதனையடுத்து, சபையை 10 நிமிடங்களுக்கு ஒத்தி வைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். இன்றைய சபை அமர்வில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் கலந்து கொண்டார்.

  10. 'யுக்ரேன் போரினால் இலங்கை பிரச்னை இன்னும் மோசமாகி விட்டது' - ரணில் விக்ரமசிங்கே

    யுக்ரேன்-ரஷ்யா போர் காரணமாக, எங்கள் பிரச்சனை இன்னும் மோசமாகிவிட்டது. உலகளாவிய நெருக்கடியால் இந்தியாவும் இந்தோனேசியாவும் பாதிக்கப்பட்டுள்ளன என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.

    இலங்கை நாடாளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உரையாற்றுகையில், '' இன்று நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் முதன்மையான பிரச்சினை எரிபொருள் நெருக்கடி. அதே சமயம், உணவு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எரிபொருள் மற்றும் உணவு விஷயத்தில், நம் நாடு ஒரு கட்டத்தில் இந்த நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. எரிபொருள் பற்றாக்குறையாக இருந்தது. உணவுப் பொருட்களின் விலை உயர்ந்தது.

    சமீபகால உலக நெருக்கடிகளால் இந்நிலை மேலும் தீவிரமடைந்து நாங்கள் அடுப்பில் விழுந்தோம். உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக, எங்கள் பிரச்சனை இன்னும் மோசமாகிவிட்டது. இப்போது நடந்திருப்பது நமது நெருக்கடியின் மேல் ஒரு சர்வதேச நெருக்கடியைச் சேர்த்ததுதான். இந்த நிலை நமக்கு மட்டும் அல்ல. இது மற்ற நாடுகளையும் பாதிக்கிறது. இந்த உலகளாவிய நெருக்கடியால் இந்தியாவும் இந்தோனேசியாவும் பாதிக்கப்பட்டுள்ளன.

    எனவே, அவர்கள் எங்களுக்கு வழங்கிய கடன் உதவியை இந்தியா மட்டுப்படுத்த வேண்டியுள்ளது. இந்த நிலை உலகம் முழுவதையும் சமமாக பாதிக்கிறது. இதனால், வளர்ந்த நாடுகளுக்கும், வளர்ச்சியடையாத நாடுகளுக்கும் இடையிலான இடைவெளி அதிகரிக்கும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    ஒரு நாட்டிற்குள்ளேயே மேல்தட்டு வர்க்கத்தினருக்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கும் இடையிலான இடைவெளி அதிகரிக்கலாம் என்றும் எச்சரிக்கிறார். உலகில் எந்த நாடும் இந்த உலக நெருக்கடியில் இருந்து தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள முடியாது. இதை நாம் அனைவரும் எதிர்கொள்ள வேண்டும்.

    வரும் 2025க்குள், முதன்மை பட்ஜெட்டில் உபரியை உருவாக்குவதே எங்கள் நோக்கம். பொருளாதார வளர்ச்சி விகிதத்தை நிலையான நிலைக்கு உயர்த்துவதே எங்கள் முயற்சி. 2026 ஆம் ஆண்டளவில் நிலையான பொருளாதார அடித்தளத்தை ஏற்படுத்துவதே எமது எதிர்பார்ப்பு.

    பொதுத்துறை நிறுவனங்கள் தொடர்ந்து நஷ்டத்தை சந்திக்கும் போது, ​​ஒட்டுமொத்த குடிமக்களும் பாதிக்கப்படுகின்றனர். வாழ்நாளில் இதுவரை விமானத்தில் பயணிக்காதவர்கள் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் இழப்பால் தவித்து வருகின்றனர்.

    வாழ்நாள் முழுவதும் எரிபொருளுக்கு பணம் கொடுத்த மக்கள் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் இழப்பினால் தவித்து வருகின்றனர். பல மணிநேரம், நாட்கள், நாட்கள் வரிசையில் காத்திருந்து எரிபொருளைப் பெற்றுக் கொண்டு, நிறுவனத்தின் நஷ்டத்தை ஈடுகட்ட எண்ணெய் நிறுவனத்திடம் இழப்பீடு செலுத்துகின்றனர்.

    வாழ்நாள் முழுவதும் பணம் கொடுத்து மின்சாரம் பெறும் மக்கள், தினமும் பல மணி நேரம் இருளில் அமர்ந்து மின் வாரியத்தை இழந்து தவிக்கின்றனர்.

    இடைக்கால வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் இந்த முன்னேற்றத்திற்கு தேவையான பின்னணியை தயார்படுத்துவோம் என நம்புகிறோம்.

  11. வண்டலூர் உயிரியல் பூங்காவில் இதுவரை 7 சிங்கங்கள் இறப்பு

    வண்டலுார் உயிரியல் பூங்காவில், மேலும் ஒரு சிங்கம் ஒன்று இன்று உயிரிழந்தது. சிங்கங்களின் இறப்பு எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

    தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டம், வண்டலுார் உயிரியல் பூங்காவில், 2,300க்கும் மேற்பட்ட பறவைகள் மற்றும் விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

    கடந்த 2000 ஜூன் 18ம் தேதி கள்ளக்குறிச்சியில் உள்ள, சிறிய உயிரியல் பூங்காவில் இருந்து மீட்கப்பட்டு, 'மணி’ என்கிற ஆண் சிங்கம் பராமரிக்கப்பட்டு வந்தது. 32 வயதான அந்த சிங்கம், கடந்த சில நாட்களாக, வயது முதிர்வு காரணமாக, நோய் வாய்ப்பட்டு சரிவர உணவு உட்கொள்ளாமல் இருந்தது. இன்று அந்த சிங்கம் உயிரிழந்தது.

    கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த ஆண்டு மே 21ம் தேதி சிவா, ஜூன் 3ம் தேதி நீலா, ஜூன் 16ல் பத்மநாபன், அக்.,10ல் கவிதா ஆகிய சிங்கங்கள் இறந்தன. இந்தாண்டு, ஜனவரி 15ம் தேதி விஷ்ணு, ஜூன் 27ல் மணி ஆகியவை இறந்துள்ளன.

    உயிரியல் பூங்காவில் 25 வயதுடைய விஜி எஙிற பெண் சிங்கம் வயது முதிர்வு காரணத்தால் மருத்துவ ரீதியாக சரி செய்ய இயலாத நிலை நீடித்தது. அதனால் சிங்கத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படவே தமிழ்நாடு,கால்நடை மருத்துவம் மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் குழுவால் சிங்கத்திற்கு மயக்க மருந்து செலுத்தப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் சிங்கம் உயிரிழந்தது.

    உயிரியல் பூங்காவில் இதுவரை 7 சிங்கங்கள் உயிரிழந்துள்ளன. தற்போது 09 சிங்கம் மட்டுமே உள்ளன.

  12. இந்திய குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கு அறிவிக்கை வெளியீடு - ஜுலை 19ஆம் தேதி வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள்

    இந்திய குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் வேட்பு மனுத்தாக்கலுக்கு ஜுலை 19ஆம் தேதி கடைசி நாளாகும். ஆகஸ்ட் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். இதற்கான அறிவிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.

    இந்திய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய்யா நாயுடுவின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து குடியரசுத் துணைத் தலைவரை தேர்தல் குறித்த அறிவிப்பை இரு வாரங்களுக்கு முன்பு தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதைத்தொடர்ந்து தேர்தலுக்கான அறிவிக்கை இன்று முறைப்படி வெளியிடப்பட்டது.

    அதன்படி, வரும் 19ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். ஜூலை 20ஆம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். ஜூலை 22ஆம் தேதி வேட்பு மனுவை திரும்ப பெற கடைசி நாளாகும். போட்டியிருந்தால், வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  13. 'தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும்' - பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் பேட்டி

    தமிழ்நாட்டை பாண்டியநாடு, பல்லவ நாடு என இரண்டாக பிரிக்க வேண்டும். அப்போது தான் நிர்வாக ரீதியாக தமிழ்நாட்டுக்கு அதிக திட்டங்களை பெற முடியும் என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாடு பாஜக சார்பில் இன்று மாநிலம் முழுவதும் திமுக அரசை கண்டித்து உண்ணாவிரத போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், நெல்லை சட்டமன்ற பாஜக உறுப்பினரும் பாஜக சட்டமன்ற கட்சி தலைவருமான நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    பின்னார் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''தனிநாடு வேண்டும் என்பது ஆ.ராசாவின் சொந்த கருத்து. என்னை பொறுத்தவரை தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும். ஆந்திராவில் தெலுங்கானா தனி மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் அங்கு கிடைத்துள்ளன.

    எனவே தமிழ்நாட்டை நிர்வாக ரீதியாக இரண்டாக பிரித்தால், அதிக திட்டங்களை பெற முடியும்.

    அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில் பாஜக தலையீடு எதுவும் இல்லை. அதிமுக விவகாரத்தில் பாஜக எப்பொழுதுமே நடுநிலையாக தான் செயல்படும்.'' என்று தெரிவித்தார்.

  14. இந்திய மீனவர்களின் பெட்ரோல், டீசலை எடுத்துக் கொண்ட இலங்கை கடற்படை

    எல்லை தாண்டி மீன் பிடித்ததாக மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 5 மீனவர்களை இலங்கை கடற்படை பிடித்துச் சென்றுள்ளது. ஆனால், ஜெகதாப்பட்டினம் மீனவர்களிடம் டீசல், பெட்ரோலை பெற்றுக் கொண்டு திருப்பிய அனுப்பியதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டிணம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து மணிகண்டன் என்பவரின் விசைப்படகில், மணிகண்டன் (42), பெரியசாமி, பாண்டி(35), மாரியப்பன் (47), சுரேஷ் ஆகிய 5 மீனவர்கள் நேற்று காலை மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர்.

    இவர்கள் நேற்று மாலை காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்து கொண்டிருந்து போது, அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 5 மீனவர்களையும் கைது செய்தது. படகையும் பறிமுதல் செய்து, காரைநகர் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர்.

    இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு பிடிபட்ட படகில் இருந்த டீசல், பெட்ரோலை பெற்று கொண்ட இலங்கை கடற்படை படகையும் மீனவர்களையும் திருப்பி அனுப்பி விட்டனர். இதனையடுத்து இன்று காலை மீனவர்கள் படகுடன் ஜெகதாபட்டிணம் மீன்பிடி துறைமுகத்திற்கு திரும்பினர்.

    அதேநேரத்தில், நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்து கொண்டிருந்த மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த விசைப்படகையும் அதிலிருந்த 5 மீனவர்களையும் பிடித்து வைத்துள்ளனர்.

    இவர்களை கைது செய்து கடற்படை முகாமிற்கு அழைத்து வருவதா? அல்லது திருப்பி அனுப்புவதா? என இலங்கை கடற்படை உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

  15. 'இலங்கையில் சிறுமிகள் கடத்தல்' - தமிழ்நாட்டில் தஞ்சமடைந்த பெண் பேட்டி

    இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியினால், யாழ்பாணம் மாவட்டத்தை சேர்ந்த மேலும் 8 பேர் தனுஷ்கோடி வந்துள்ளனர்.

    இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியினால் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளன. பொருட்களின் தட்டுபாடு காரணமாக இலங்கை தமிழர்கள் தனுஸ்கோடி கடல் வழியாக தமிழ்நாட்டில் தஞ்சமடைந்து வருகின்றனர்.

    இந்நிலையில், நேற்று இரவு யாழ்பாணம் மாவட்டம் வல்வெட்டித்துறையை சேர்ந்த சேர்ந்த சசிகலா, கதிர், கமலா ராணி உள்ளிட்ட 8 பேர் ஒரு பைபர் படகில் புறப்பட்டு, இன்று காலை சுமார் 5 மணி அளவில் தனுஷ்கோடி அடுத்த அரிச்சல்முனை கடற்கரையில் வந்திறங்கினர்.

    தகவலறிந்த ராமேஸ்வரம் மரைன் போலீசார் அவர்களை மீட்டு மண்டபம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். வல்வெட்டித்துறையை சேர்ந்த சசிகலா பிபிசி தமிழிடம் பேசுகையில்,

    “விலைவாசி ஒரு பக்கம் உயர்வு, மறுபக்கம் அத்தியாவசிய பொருட்களின் தட்டுபாடு அதிகரித்துள்ளது, 2 லிட்டர் மண்ணெய் வாங்க 4 நாட்கள் வரிசையில் நிற்கவேண்டியுள்ளது. தொடர் மின்வெட்டு, அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுபாடு உள்ளது.

    மேலும் சமீப காலமாக வடக்கு மாகாண பகுதியில் பள்ளிக்கு செல்லும் சிறுமிகள் கடத்தி, கொலை செய்யப்படுகிறார்கள். சிறுமிகளை கடத்தும் கும்பல் ஒன்று யாழ்பாணத்தில் உள்ளதாக தகவல் வெளியானதையடுத்து, பாதுகாப்பு தேடி இலங்கை பணம் ஒருவருக்கு தல 1 லட்சம் ரூபாய் கொடுத்து படகில் தமிழ்நாட்டிற்கு வந்ததாக” சசிகலா தெரிவித்தார்.

    கடந்த மார்ச் மாதம் 22ந்தேதி முதல் இன்று வரை இலங்கையில் இருந்து 103 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழ்நாடு வந்துள்ளனர்.

  16. அதிமுக பொதுக்குழுவிற்கு தடை கோரி - ஓபிஎஸ் உயர்நீதிமன்றத்தில் மனு

    வரும் 11ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள அதிமுக பொதுக்குழுவிற்கு தடை விதிக்க கோரி ஓபிஎஸ் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த சர்ச்சை எழுந்துள்ள நிலையில், எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் வரும் 11ம் தேதி பொதுக்குழு நடைபெறும் என்று அறிவித்துள்ளனர். ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் ஒப்புதல் இல்லாமல் பொதுக்குழு நடத்த முடியாது. எனவே 11ம் தேதி பொதுக்குழு நடைபெறாது என்று ஓபிஎஸ் தரப்பினர் தெரிவித்தனர்.

    இல்லை நிச்சயம் பொதுக்குழு நடைபெறும் என்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பு தெரிவித்து வருகிறது.

    இந்நிலையில், வரும் 11ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட பொதுக்குழுவிற்கு தடை விதிக்க கோரி ஓ பன்னீர்செல்வம் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இதை அவசர வழக்காக எடுத்துக்கொள்ளவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் ஓ பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில், துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன் மற்றும் வழக்குரைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.

  17. தொடர்ந்து இணைந்திருங்கள்

    வணக்கம்.

    நான் ஜோ மகேஸ்வரன். இது வரை நந்தினி வெள்ளைச்சாமி வழங்கி வந்த, நேரலைப் பக்கத்தை இனி நான் தொகுத்து வழங்குகிறேன். தொடர்ந்து இணைந்திருங்கள்.

    தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    குறிப்பாக, இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்

  18. உத்தர பிரதேசம்: இந்து தெய்வங்களின் புகைப்படங்கள் அடங்கிய செய்தித்தாளில் கோழி இறைச்சி விற்பனை செய்ததாக ஒருவர் கைது

    உத்தர பிரதேச மாநிலம் சம்பல் பகுதியில் இந்து தெய்வங்களின் புகைப்படங்கள் அடங்கிய செய்தித்தாளில் கோழி இறைச்சியை விற்பனை செய்ததாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    இச்சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 3) நிகழ்ந்ததாக பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. இந்து மத தெய்வங்களின் புகைப்படங்கள் அடங்கிய செய்தித்தாளில் கோழி இறைச்சியை விற்பனை செய்ததாக தலீப் ஹூசைன் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    சம்பவ இடத்திற்கு சென்ற போலீசாரை அந்நபர் கத்தியால் தாக்க முயன்றதாகவும் எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலீப் ஹூசைன் மீது ஐபிசி 153-ஏ, 295-ஏ மற்றும் 307-ன்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

  19. லீனா மணிமேகலை மீது டெல்லி மற்றும் உத்தர பிரதேசத்தில் வழக்குப்பதிவு

    'காளி' என்ற தமது ஆவணப் படத்தின் போஸ்டரில் இந்து மதக் கடவுளை லீனா மணிமேகலை அவமதித்து விட்டதாக டெல்லி மற்றும் உத்தர பிரதேசத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    லீனா மணிமேகலை இயக்கியுள்ள 'காளி' ஆவணப்படத்தின் போஸ்டரில், காளி போன்று வேடமணிந்த பெண் ஒருவர், வாயில் சிகரெட்டையும், கையில் எல்.ஜி.பி.டி கொடியையும் பிடித்துக்கொண்டிருப்பது போன்று இருந்தது.

    இந்நிலையில், உத்தர பிரதேசத்திலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. லக்னோவில் உள்ள ஹஸ்ரத்கஞ்ச் காவல் நிலையத்தில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உதவி ஆணையர் அகிலேஷ் சிங் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

    அதேபோன்று, டெல்லி காவல்துறையின் சிறப்பு ஐ.எஃப்.எஸ்.ஓ பிரிவும் அவர் மீது ஐபிசி 153 ஏ மற்றும் 295ஏ ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

  20. இலங்கையில் பட்டினியால் பிள்ளைகள் அழ நடுவீதியில் தேம்பியழுத தந்தை

    சாப்பாடு இல்லாமல், தன்னுடைய பிள்ளைகள் பால் கேட்டு அழுவதை பார்த்துக்கொண்டிருக்க முடியாது எனத் தெரிவித்து இரண்டு பிள்ளைகளின் தந்தையான 37 வயதானவர், ஹெம்மாத்தகம பிரதான நகரின் நடுவீதியில், தேம்பியழுதுகொண்டிருந்ததாக, 'தமிழ் மிரர்' இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

    பதாகையொன்றை வைத்து, அழுதுகொண்டிருந்த அவரை பார்த்த போலீசார், வர்த்தகர்கள் மற்றும் நகரத்தில் இருந்தவர்கள், அவருக்குத் தேவையான உணவுப் பொருட்களை வாங்கிக்கொடுத்ததாக, அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேசன் வேலைச் செய்யும் அவருக்கு 7 வயதில் மகளும் 13 வயதில் மகனும் இருக்கின்றனர். அவருடைய மனைவிக்கு வேலையில்லை. பொருளாதார நெருக்கடி காரணமாக சிமெண்ட் விலை அதிகரித்துள்ளது. இதனால், அவருக்கு முறையாக வேலைக்கிடைப்பதில்லை என அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

    "மேசன் சங்கமே பொறுமை காத்தது போதும், பொருட்களின் விலைக​ளை குறைத்து, ஏழ்மையானவர்களுக்கு நிவாரணம் கொடு" என்​றே அந்த பதாகைளில் எழுதப்பட்டிருந்தது.

    7 வயதான பெண் பிள்ளை, பால் கேட்டு அழுகிறது. பிள்ளைகளுக்கு பால் மட்டுமல்ல, தன்னுடைய குடும்பத்தில் சகலருக்கும் நாளாந்தம் மூன்று வேளையும் சாப்பிடுவதற்கு ஒன்றுமே இல்லை. எனக்கு வேலைக்கிடைப்பதில்லை என்பதால், பிள்ளைகளை வளர்க்கமுடியவில்லை" என தெரிவித்ததாக, அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    பிரதான வீதியில் அமர்ந்திருந்தவரின் அருகில் சென்று போலீசார் விசாரித்தனர். அதன்பின்னர், அங்கு குழுமியிருந்தவர்கள் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்தனர். கிடைத்த உதவிகளைக் கொண்டு, அந்நபருக்கு தேவையான பொருட்களை போலீசாரும், பொதுமக்களும், வர்த்தகர்களும் பெற்றுக்கொடுத்தனர்.

    அதன்பின்னர், பொருட்களை ஏற்றிக்கொண்டு அங்கிருந்து வீட்டுக்குச் செல்வதற்கும் வாகன உதவியும் செய்துகொடுக்கப்பட்டது.