கைதான தமிழக மீனவர்களை இந்தியாவிடம் ஒப்படைகிறது இலங்கை கடற்படை

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கடந்த இரண்டு நாட்களில் 17 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஜோ மகேஸ்வரன்

  1. இலங்கை பொருளாதார நெருக்கடி: வெறிச்சோடி போன சாலைகள், எரிபொருளுக்கு மேலும் தட்டுப்பாடு

  2. அ.தி.மு.க. பொதுக் குழு விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - 7ம் தேதிக்கு ஒத்திவைப்பு

    அதிமுக பொதுக்குழு விவகாரம்

    அ.தி.மு.க. பொதுக் குழு தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வரும் ஏழாம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. ஜூலை 11ஆம் தேதி பொதுக் குழுவிற்கு தடை கோரும் வழக்கு தொடர்பாக தனி நீதிபதியைத்தான் அணுக வேண்டுமெனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.

    அ.தி.மு.கவின் பொதுக் குழுக் கூட்டம் கடந்த ஜூன் 23ஆம் தேதி நடக்குமென அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதற்கு முன்பாகவே, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்திற்கும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிச்சாமிக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. கட்சியில் தற்போது உள்ள இரட்டைத் தலைமை என்ற முறையை நீக்கிவிட்டு, ஒரே தலைமையாக தான் மட்டும் இருப்பது என்ற முயற்சியில் எடப்பாடி பழனிச்சாமி ஈடுபடுவார் என்று கருதிய ஓ. பன்னீர்செல்வம் தரப்பு, பொதுக் குழுவுக்குத் தடைகோரி சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியது.

    ஆனால், பொதுக் குழுவுக்குத் தடைவிதிக்க உயர் நீதிமன்றம் மறுத்த நிலையில் ஓ. பன்னீர்செல்வம் தரப்பு மேல் முறையீடு செய்தது. இதனை அன்று இரவே விசாரித்த இரு நீதிபதிகள் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு, பொதுக் குழுவில் ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட 23 தீர்மானங்களைத் தவிர வேறு தீர்மானங்களை நிறைவேற்றக்கூடாது என்று கூறியது.

    இதையடுத்து, கடந்த 23ஆம் தேதி நடந்த பொதுக் குழுவில் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக எடப்பாடி தரப்பு அறிவித்தது. மேலும், கட்சியின் நிரந்தர அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் தேர்வுசெய்யப்பட்டார். அந்த கூட்டத்தில் இருந்து ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர் பாதியிலேயே வெளியேறினர்.

    இந்நிலையில், உயர் நீதிமன்றத் தீர்ப்பை மீறி தீர்மானங்கள் ரத்து செய்யப்பட்டதும் அவைத் தலைவர் நியமிக்கப்பட்டதும் நீதிமன்ற அவமதிப்பாகும் எனக் கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றை ஓ. பன்னீர்செல்வம் தரப்பைச் சேர்ந்த சண்முகம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தல் மனுத் தாக்கல் செய்தார்.

    அந்த வழக்கு இன்று நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான ஓ.பி.எஸ். தரப்பு வழக்கறிஞர், தற்காலிக அவைத் தலைவரை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் இணைந்து நியமித்ததாகவும் அவைத் தலைவரை நிரந்தரமாக்கும் தீர்மானம் எதையும் தான் வழிமொழியவில்லை என்று கூறினார்.

    ஆனால், அவைத் தலைவர் நியமனத்தை ஓ. பன்னீர்செல்வம் ஒப்புக்கொண்டதாக எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்பு வாதிட்டது. அப்படி எந்தத் தீர்மானத்தையும் தான் ஏற்கவில்லை என்பதற்கு பொதுக் குழு வீடியோவே ஆதாரமாக உள்ளதாக ஓ. பன்னீர்செல்வம் தரப்பு கூறியது.

    மேலும், அவைத் தலைவர் நியமனமே செல்லாது என்பதால் வரும் 11ஆம் தேதி அவர் அழைப்பிவிடுத்திருக்கும் பொதுக் குழுவிற்கு தட விதிக்க வேண்டுமென்றும் பன்னீர்செல்வம் தரப்பில் வாதிடப்பட்டது.

    சுமார் ஒன்றரை மணி நேரம் விசாரணை நடந்த நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மட்டுமே விசாரிக்கப் போவதாகவும் ஜூலை 11ஆம் தேதி நடக்கவிருக்கும் பொதுக் குழுவுக்கு தடை கோரி தனி நீதிபதியைத்தான் அணுக வேண்டுமென்றும் ஜூன் 23ஆம் தேதி நடந்த பொதுக் குழு குறித்து மட்டுமே இந்த அமர்வு விசாரிக்குமென்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

    இதையடுத்து, இந்த வழக்கு ஜூலை 7ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

  3. "இலங்கையில் யாரும் உதவவில்லை" - 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் புதிய சாதனைப் படைத்த யுபுன் அபேகோ

  4. இலங்கை கடற்படையால் இந்திய மீனவர்கள் 12 பேர் கைது: விடுவிக்க கோரி தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்

    மீனவர்கள் கைது

    பட மூலாதாரம், Jaffna Fisheres Department

    படக்குறிப்பு, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்கள்

    காரைக்காலில் இருந்து சென்ற இந்திய மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அவர்களை உடனே விடுவிக்க கோரி தமிழ்நாடு முதலமைச்சர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    காரைக்கால் துறைமுகத்தில் இருந்து, கடந்த 30ஆம் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை நேற்று(ஜூலை 3) மாலை கைது செய்தது. . அவர்கள் சென்ற படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.

    படகில் இருந்த தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து, புதுச்சேரி மீன்வளத்துறை இயக்குனர் கவியரசரன் கூறுகையில்,

    "காரைக்கால் மாவட்ட மீன்பிடி படகு இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த மாதம் 30ஆம் தேதி காலை 10.45 மணியளவில் காரைக்காலை சேர்ந்த வைத்தியநாதன் என்பவருக்கு சொந்தமான IND-PY-PK-MM-895 என்ற பதிவு எண் கொண்ட மீன்பிடிப் படகில் காரைக்கால் , கீழசாகுடிமேடு, காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 12 பேர் கொண்ட குழுவினருடன் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.

    இவர்கள் நேற்று(ஜூலை 3) மாலை 5 மணியளவில் படகில் வந்த குழுவை இலங்கை கடற்படையினரால் பிடிக்கப்பட்டு படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன," என்று உறுதி செய்துள்ளார்.

    காரைக்காலில் துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட இந்த படகில் புதுச்சேரி காரைக்கால் பகுதியை சேர்ந்த 5 பேர், தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 7 பேர் என மொத்தம் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    இந்நிலையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும் அவர்களது படகுகளையும் தூதரகம் மூலம் உடனடியாக விடுவிக்க கோரி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தில். '12 அப்பாவி இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளது தமிழக மீனவர்களை அச்சுறுத்தும் வகையில் உள்ளது. மாநில கடலோர பகுதிகளில் பாதுகாப்பின்மையை ஏற்படுத்துவதாகவும் உள்ளது.

  5. திருப்பூர் மசூதி வழக்கு - போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

    திருப்பூர் மசூதி வழக்கு

    திருப்பூரில் உள்ள மசூதியை மூடுவது குறித்த வழக்கில், உயர்நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் மாவட்டம் வேலம்பாளைம் அருகே மகாலக்ஷ்மி நகரில் உள்ள மசூதி குறித்த குடியிருப்போர் சங்கத்தினரின் வழக்கில், மசூதியை மூட உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 30-ம் தேதி மாநகராட்சி அதிகாரிகள் காவல்துறையினருடன் மசூதிக்கு சீல் வைக்க சென்றனர். அப்போது மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். திருப்பூரில் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் வழக்கின் மேல்முறையீட்டில் தீர்ப்பு வரும் வரை சீல் வைப்பதை தள்ளி வைப்பதாக முடிவெடுத்தனர். இந்நிலையில், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில்,' மசூதி விவகாரத்தால் இஸ்லாமிய சமுதாயத்தை சார்ந்த மக்களிடம் பதற்றமான சூழ்நிலை உருவாகும்' எனத் தெரிவித்திருந்தார்.

    இந்த கடிதத்தை குறிப்பிட்ட், பாஜக திமுகவை விமர்சனம் செய்து வந்தது. இந்த விவகாரம் தொடர்பாக செல்வராஜ் இல்லத்தை முற்றுகையிடப் போவதாக இந்து அமைப்புகள் தெரிவித்தனர். இதையடுத்து அப்பகுதியில் திமுக தொண்டர்கள் திரண்டுள்ளனர்.

    அந்த பகுதிக்கு செல்லும் சாலைகளில் தடுப்பு வைத்து மூடப்பட்டுள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனால் திருப்பூரில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. மசூதியை மூடுவது குறித்த வழக்கின் மேல்முறையீட்டில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

  6. 'ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் மட்டுமேதான் அதிமுகவா?, உச்சநீதிமன்றம் வரை செல்வேன்' - முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் பேட்டி

    முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன்
    படக்குறிப்பு, முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன்

    ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் மட்டுமேதான் அதிமுகவா? இன்றைய தேதியில் அதிமுகவில் எவருக்கும் பொறுப்பில்லை. அனைவரும் தொண்டர்கள் தான் என்று முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ''எம்.ஜி.ஆர் காட்டிய வழியில் கழகத் தேர்தலை ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் சந்திக்க வேண்டும்.

    தொண்டர்கள் தேர்ந்தெடுக்கும் நபர் ஒற்றைத் தலைமையை ஏற்கட்டும். ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் மட்டுமேதான் அதிமுகவா? எம்.ஜி.ஆரின் உயில்படி தொண்டர்கள் மட்டுமே தலைவரை தேர்ந்தெடுக்க முடியும். அதிமுக தொண்டர்களின் கட்சி. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் உயிரோடிருந்தால், தற்போதைய அதிமுகவின் நிலையை கண்டு கண்ணீர் வடிப்பர்.

    இரட்டைத் தலைமை வேண்டுமென தீர்மானம் போட்டவர்களே, இப்போது ஒற்றைத் தலைமை வேண்டும் என்கின்றனர். எம்.ஜி.ஆர் எழுதிய உயில் நீதிபதி ஹரிபரந்தாமனிடம் உள்ளது. அதை வைத்து உச்சநீதிமன்றம் வரை செல்வேன். இன்றைய தேதியில் அதிமுகவில் எவருக்கும் பொறுப்பில்லை. அனைவரும் தொண்டர்கள் தான்'' என்றார் கு.ப.கிருஷ்ணன்.

  7. இலங்கை தடகள வீரர் தெற்காசிய சாதனை - 100மீ ஓட்டத்தில் படைத்தார்

    இலங்கை தடகள வீரர் சாதனை

    பட மூலாதாரம், YUPUN ABEYKOON'S/FACEBOOK

    இலங்கை தடகள வீரர் யுபுன் அபேகோன் 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் புதிய சாதனையொன்றை படைத்துள்ளார்.

    சுவிஸர்லாந்தில் நடைபெற்று வரும் போட்டியிலேயே, இந்த சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது. இலங்கை சாதனை மற்றும் தெற்காசிய சாதனை, யுபுன் அபேகோனினால் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

    தெற்காசிய வீரர் ஒருவர் 100 மீட்டர் ஓட்டப் போட்டியை, 10 செக்கன்களுக்கும் குறைவான காலத்தில் நிறைவு செய்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். போட்டியை நிறைவு செய்ததன் பின்னர், யுபுன் அபேகோன் தனது சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டு கருத்து தெரிவித்தார்.

    அதில், ''9.95 செக்கன்களின் நிறைவு செய்தேன். கூறியதை போன்று செய்து காட்டி விட்டேன். இலங்கை வரலாற்றை மாற்றி அமைத்தேன். தெற்காசியாவிலும் அதனை நான் செய்தேன். என்னுடன் இருந்தமைக்கு உங்களுக்கு நன்றி தெரிவிக்கின்றேன். பல தடவைகள் முயற்சி செய்தேன். இன்று அந்த சந்தர்ப்பம் கிடைத்தது. நன்றி.

    ஒன்றை கூறிக் கொள்ள வேண்டும். இதற்கான உரிமை எனக்கு உள்ளது. அத்துடன், எனது குழுவிற்கு உள்ளது. இலங்கையில் யாரும் இதற்காக உதவி செய்யவில்லை. எனது சாதனை நேரம் பலகையில் தென்படுவதை பார்வையிடுவதற்கு காத்திருந்த, எனக்கு வாழ்த்துக்களை தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன்" என யுபுன் அபேகோன் தெரிவித்துள்ளார்.

    இலங்கை தடகள வீரர் சாதனை

    பட மூலாதாரம், YUPUN ABEYKOON'S /FACEBOOK

    கொழும்பு புறநகர் பகுதியான நீர்கொழும்பு பகுதியில் 1994ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி யுபுன் அபேகோன் பிறந்துள்ளார். சிறு வயதிலிருந்து விளையாட்டில் ஆர்வம் காட்டிய யுபுன் அபேகோன், ராஞ்சியில் 2013ம் ஆண்டு நடைபெற்ற தெற்காசிய இளையோர் தடகள போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடியிருந்தார். அதனைத் தொடர்ந்து, சர்வதேச ரீதியில் நடைபெற்ற பல்வேறு தடகள போட்டிகளில் பல்வேறு பதக்கங்களை யுபுன் அபேகோன் வென்றெடுத்துள்ளார்.

  8. திருப்பத்தூரில் இருந்து ஆந்திராவிற்கு ரேஷன் அரிசி கடத்தல் - மடக்கிப் பிடித்த போலீசார்

    ஆந்திராவிற்கு கடத்தப்பட்ட ரேஷன் அரிசி

    பட மூலாதாரம், TN Police

    படக்குறிப்பு, ஆந்திராவிற்கு கடத்தப்பட்ட ரேஷன் அரிசி

    ஆந்திராவுக்கு கடத்தப்பட்ட 50 ஆயிரம் கிலோ ரேசன் அரிசியை தமிழ்நாடு காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

    திருப்பத்தூர் மாவட்ட வாணியம்பாடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் செல்லப்பாண்டி தலைமையில் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கேதாண்டிப்பட்டி அருகில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது, அந்த வழியாக ஆந்திரா பதிவு எண் கொண்ட லாரி ஒன்று அதிவேகமாக சென்றது. உடனே அந்த லாரியை மடக்கி பிடித்து போலீசார் சோதனை செய்தனர்.

    அதில், 50 கிலோ அளவிலான, 1000 மூட்டைகளில் 50, 000 கிலோ நியாய விலைக் (ரேஷன்) கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அரிசி கடத்தி சென்றது தெரிய வந்தது. லாரி ஓட்டுநர் சரவணன் என்பவரைக் கைது செய்து, ரேஷன் அரிசி, லாரியை பறிமுதல் செய்தனர்.

    விசாரணையில், திருப்பத்தூர், ராணிப்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் குறைந்த விலையில் ரேஷன் அரிசியை வாங்கிச் சென்று, ஆந்திராவில் அதிக விலைக்கு விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது.

  9. இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு: பள்ளிகள் மூடல், சாலைகள் வெறிச்சோடின

    இலங்கை எரிபொருள் தட்டுப்பாடு
    படக்குறிப்பு, வெறிச்சோடி கிடக்கும் இலங்கை சாலைகள்

    இலங்கையின் பொருளாதார நெருக்கடி தீவிர நிலையில் காணப்படுகின்ற சூழ்நிலையில், நாடு முழுவதும் உள்ள வீதிகள் பெருமளவில் வெறிச்சோடி காணப்படுகின்றன.

    இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, வாகனங்கள் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக இன்றும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக காத்திருக்கின்றன.

    சுகாதாரம், போக்குவரத்து, அத்தியாவசிய உணவு பொருள் விநியோகம், முப்படை உள்ளிட்ட சில அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளை விநியோகிக்க அரசாங்கம் கடந்த வாரம் தீர்மானித்திருந்தது.

    இதனால், இலங்கை பெட்றோலிய கூட்டுதாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அத்தியாவசிய தேவைகளை தவிர்ந்த, ஏனைய தேவைகளுக்கு எரிபொருள் விநியோகம் தற்போது இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனத்தினால் முழுமையாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

    எனினும், இலங்கையில் செயற்பட்டு வரும் இந்தியாவிற்கு சொந்தமான லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருள் விநியோகத்தை குறிப்பிட்டளவு மேற்கொண்டு வருவதை காண முடிகின்றது. இலங்கை எதிர்நோக்கியுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பொது போக்குவரத்து சேவைகளுக்கும் தற்போது பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

    பத்து சதவீதத்திற்கும் குறைவான பஸ்களே சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவிக்கின்றார். நாடு முழுவதும் சுமார் 1000 தனியார் பஸ்களே சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

    இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள போதிலும், அதன் சேவைகளும் உரிய வகையில் முன்னெடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

    எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எதிர்வரும் ஒரு வார காலத்திற்கு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று (04) முதல் எதிர்வரும் 08ம் தேதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

  10. கோயம்புத்தூரில் கடத்தப்பட்ட குழந்தையை 22 மணி நேரத்தில் மீட்ட காவல் துறையினர்

    காவல் துறை

    பட மூலாதாரம், Getty Images

    பிறந்து 4 நாட்கள் ஆன பச்சிளம் குழந்தையை, கடத்தப்பட்ட 22 மணி நேரத்தில் மீட்டு, பெற்றோரிடம் தமிழ்நாடு காவல்துறையினர் ஒப்படைத்தனர்.

    கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் திவ்யபாரதி - யூனிஸ் தம்பதிக்கு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கடந்த 29ம் தேதி தேதி பெண் குழந்தை பிறந்தது. நேற்று(03.07.2022) அதிகாலை சுமார் 05.00 மணிக்கு மருத்துவமனையில் இருந்து அவர்களது பச்சிளம் குழந்தை காணாமல் போனது.

    உடனே அவர்கள் அங்கிருந்த புறக்காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததன் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உடனடியாக சென்று விசாரணை நடதினார். துணை காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ், வால்பாறை துணை காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையில் 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

    மருத்துவமனையில் பராமரிப்பு வேலைகள் நடைபெறுவதால் அங்குள்ள சிசிடிவி கேமராக்கள் செயல்படாத நிலையில், காவல்துறையினர் மருத்துவமனைக்கு வெளியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து பொள்ளாச்சியில் இருந்து கோயம்புத்தூர் வரை உள்ள கிட்டத்தட்ட 150 சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    கோயம்புத்தூர் பேருந்து நிலையம், ரயில் நிலையங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில், குழந்தையை கடத்திச் சென்ற நபர்கள் அடையாளம் காணப்பட்டனர். உடனடியாக பாலக்காட்டிற்கு தனிப்படை காவல்துறையினர் விரைந்து சென்று குழந்தையை கடத்திய கேரள மாநிலம், குரங்கோடு, கொடுவாயூர் பகுதியைச் சேர்ந்த ஜெமினா (34) மற்றும் மற்றொரு நபர் ஆகிய இருவரையும் கைது செய்து செய்தனர்.

    பின்னர் ஜெமினா-வை விசாரணை செய்ததில், அவர் தன் கணவரிடம் இருந்து பிரிந்து தனது குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த நிலையில் மணிகண்டன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்ததாகவும், இந்நிலையில் மணிகண்டன் தனக்கும் வாரிசாக ஒரு குழந்தை வேண்டுமென்று கேட்டதன் பேரில் ஜெமினா தான் கர்ப்பமாக இருப்பது போல் போலியாக நடித்து வந்துள்ளார்.

    தனக்கு குழந்தை பிறந்துள்ளதாக மணிகண்டனிடம் பொய்யாக கூறியுள்ளார். பின்னர் மணிகண்டனிடம் பிறந்த குழந்தையை காட்ட வேண்டும் என்பதற்காக இந்தக் குழந்தையை கடத்திச் சென்றதாக விசாரணையில் தெரிய வந்தது. பின்னர் அவர்களிடமிருந்து குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. குழந்தையின் பெற்றோர்கள் கண்ணீர் மல்க காவல்துறையினருக்கு நன்றியை தெரிவித்தனர்.

    இந்த வழக்கில் 22 நேரத்திற்குள் குற்றவாளிகளை அடையாளம் கண்டு துரிதமாக செயல்பட்டு, குழந்தையை மீட்ட தனிப்படை காவல்துறையினரை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர், கோவை சரக காவல்துறை துணை தலைவர் டாக்டர். முத்துசாமி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் ஆகியோர் பாராட்டினார்கள்

  11. தொடர்ந்து இணைந்திருங்கள்

    வணக்கம்.

    நான் ஜோ மகேஸ்வரன். இது வரை நந்தினி வெள்ளைச்சாமி வழங்கி வந்த, நேரலைப் பக்கத்தை இனி நான் தொகுத்து வழங்குகிறேன். தொடர்ந்து இணைந்திருங்கள்.

    தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    குறிப்பாக, இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்

  12. மகாராஷ்டிரா: நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் ஏக்நாத் ஷிண்டே

    ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிர அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது. 164-99 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் ஏக்நாத் ஷிண்டே வெற்றி பெற்றார். அவர் வெற்றி பெறுவதற்கு 143 வாக்குகள் தேவையானதாக இருந்தது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  13. எடப்பாடி பழனிசாமியின் மனுவை ஜூலை 6ஆம் தேதி விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்

    எடப்பாடி பழனிசாமி

    பட மூலாதாரம், FACEBOOK

    அ.தி.மு.கவின் பொதுக் குழுவில் 23 தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்ற வேண்டுமென்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கை ஜூலை ஆறாம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

    அ.தி.மு.கவின் பொதுக்குழுக் கூட்டம் கடந்த ஜூன் 23ஆம் தேதி நடக்குமென அறிவிக்கப்பட்டிருந்தது. முன்னதாக கட்சியில் தற்போது உள்ள இரட்டைத் தலைமை என்ற முறையை நீக்கிவிட்டு, ஒரே தலைமையாக தான் மட்டும் இருப்பது என்ற முயற்சியில் ஈடுபடுவார் என்று கருதிய ஓ. பன்னீர்செல்வம் தரப்பு, பொதுக் குழுவுக்குத் தடைகோரி சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியது.

    ஆனால், பொதுக் குழுவுக்குத் தடைவிதிக்க உயர் நீதிமன்றம் மறுத்த நிலையில் ஓ. பன்னீர்செல்வம் தரப்பு மேல் முறையீடு செய்தது. இதனை அன்று இரவே விசாரித்த இரு நீதிபதிகள் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு, பொதுக் குழுவில் ஏற்கெனவே ஒப்புக்கொள்ளப்பட்ட 23 தீர்மானங்களைத் தவிர வேறு தீர்மானங்களை நிறைவேற்றக்கூடாது என்று கூறியது.

    இந்த நிலையில், 23ஆம் தேதி நடந்த பொதுக் குழுவில் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக எடப்பாடி தரப்பு அறிவித்தது. மேலும், கட்சியின் நிரந்தர அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் தேர்வுசெய்யப்பட்டார். ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர் பாதியிலேயே வெளியேறினர்.

    இதையடுத்து, உயர் நீதிமன்றத் தீர்ப்பை மீறி அவைத் தலைவர் நியமிக்கப்பட்டதால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றை ஓ. பன்னீர்செல்வம் தரப்பு தொடர்ந்தது.

    இதற்கிடையில், பொதுக் குழுவில் 23 தீர்மானங்களை மட்டுமே விசாரிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்ற அமர்வு அளித்த தீர்ப்பை எதிர்த்து, எடப்பாடி கே. பழனிசாமி தரப்பு உச்ச நீதிமன்றத்தை அணுகியது. எடப்பாடி பழனிசாமி, நத்தம் விஸ்வநாதன், பெஞ்சமின் உள்ளிட்டோர் இணைந்து இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தனர்.

    உச்ச நீதிமன்ற விடுமுறைக் கால சிறப்பு அமர்வான இந்திரா பானர்ஜி அமர்வில் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென அவர்கள் கோரியிருந்தனர். இன்றோ, நாளையோ இந்த மனுவை விசாரிக்க வேண்டுமென எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்பு கோரியது. இதுபோன்ற வழக்குகள் வரும்போது தங்கள் தரப்பையும் விசாரிக்க வேண்டுமென ஓ. பன்னீர்செல்வம் தரப்பு கேவியட் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தது.

    இதனால், ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டியதில்லை என்று வாதாடினர். கோடை விடுமுறைக்குப் பிறகு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளலாம் என்று வாதாடினர். இருந்தபோதும் எடப்பாடி தரப்பு, இந்த வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும்படி கோரியது. 11ஆம் தேதி பொதுக் குழுக் கூடவிருப்பதால் அதற்குள் இந்த மனு விசாரித்து முடிக்கப்பட்டால் நன்றாக இருக்கும் என்றும் தெரிவித்தனர்.

    இதையடுத்து இந்த மனுவானது வரும் புதன்கிழமையன்று, அதாவது ஜூலை 6ஆம் தேதியன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

  14. காரைக்காலில் காலரா, வயிற்றுப்போக்கால் 700 பேர் பாதிப்பு - அரசு நடவடிக்கை என்ன?

    புதுச்சேரியின் காரைக்காலில் பொதுமக்களுக்கு காலரா, வயிற்றுப்போக்கு அறிகுறிகள் அதிகமாக காணப்படுவதால் அங்கு பொது சுகாதார அவசர நிலையை அரசு அறிவித்திருக்கிறது. இப்படியொரு அறிவிப்பை வெளியிடும் அளவுக்கு அங்கே பிரச்னை தீவிரமாகியிருப்பதால், விவரம் அறிய மாவட்ட சுகாதாரத்துறை, மாவட்ட நிர்வாகத்துடன் பிபிசி தமிழ் பேசியது.

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  15. டென்மார்க் வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு – 3 பேர் உயிரிழப்பு

    சந்தேக நபர்

    பட மூலாதாரம், MAHDI AL WAZNI

    டென்மார்க்கில் வணிக வளாகம் ஒன்றில் துப்பாக்கிதாரி ஒருவர் நடத்திய தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர்.

    காயமடைந்தவர்களில் மூன்று பேர் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என காவல்துறை தெரிவித்துள்ளது.

    டென்மார்க்கில் சவுத் கோபன் ஹாகென் என்னும் இடத்தில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக 22 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இந்த துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் தெரியவில்லை என்றும், இது பயங்கரவாத செயலா என்பதை தற்போது சொல்ல இயலாது எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இது ஒரு கொடூர தாக்குதல் என டென்மார்க் பிரதமர் மெட் ஃப்ரீடெரிக்சென் தெரிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுடன் டென்மார்க் மக்கள் துணை நிற்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

  16. முடி கொட்டியதால் பெங்களூரு கல்லூரி மாணவி தற்கொலை - போலீசார் விசாரணை

  17. கீழடி 8ம் கட்ட அகழாய்வில் சுடுமண் செங்கற்களால் கட்டப்பட்ட சுவர் கண்டுபிடிப்பு

    கீழடி அகழாய்வு

    கீழடி 8ம் கட்ட அகழாய்வில் சுடுமண் செங்கற்களால் கட்டப்பட்ட சுவர் கண்டுபிக்கப்பட்டுள்ளது.

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில், 8ம் கட்ட அகழாய்வு பணி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கீழடியில் குழி தோண்டும் போது 4அடி ஆழத்தில் சுமார் 2 அடி நீளம் கொண்ட சுடுமண் செங்கல் கட்டுமான சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    மேலும், இந்த கட்டுமான சுவற்றை ஆய்வு செய்யும்பட்சத்தில் இதனுடைய நீட்சி அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தொல்லியல் துறை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    கீழடி, அகரம், கொந்தகை‌‌ ஆகிய மூன்று இடங்களிலும் அகழ்வாராய்ச்சி பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

  18. வணக்கம் நேயர்களே!

    நான் நந்தினி வெள்ளைச்சாமி. பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன். தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    குறிப்பாக இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.உங்கள் பகுதியின் சுவாரசியமான செய்திகளைப் பற்றிஎங்கள் டிவிட்டர் கணக்கின் மூலம் தகவல் அளியுங்கள்.