கைதான தமிழக மீனவர்களை இந்தியாவிடம் ஒப்படைகிறது இலங்கை கடற்படை
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கடந்த இரண்டு நாட்களில் 17 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
ஜோ மகேஸ்வரன்
இன்றைய நேரலை நிறைவு பெறுகிறது
வணக்கம்.
இன்றைய நேரலை நிறைவு பெறுகிறது. தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருந்தமைக்கு நன்றி.
இது வரையிலான இன்றைய முக்கிய நிகழ்வுகள்.
- தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐந்து மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று கைது செய்துள்ளனர்.
- தமிழ்நாட்டில் கீழடி 8ஆம் கட்ட அகழாய்வில் சுடுமண் செங்கற்களால் கட்டப்பட்ட சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- காரைக்காலில் இருந்து சென்ற இந்திய மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. உடனே விடுவிக்க, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ள்ளார்.
- இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, வாகனங்கள் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. சாலைகள் வெறிசோடி காணப்படுகின்றன.
- 71-வது உலக அழகி போட்டியில் இந்தியா சார்பில் பங்கெடுக்க கர்நாடகாவின் சினி ஷெட்டி தேர்வாகி உள்ளார்.
- உலகம் முழுவதும் வாழும் இனம் தமிழ் இனம் என, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- இலங்கை தடகள வீரர் யுபுன் அபேகோன் 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் புதிய சாதனையொன்றை படைத்துள்ளார்.
- மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஏக்நாத் ஷிண்டே அரசாங்கம் வெற்றி பெற்றது.
- அதிமுக பொதுக்குழுவில் அடியாட்கள் இருந்தனர். திட்டமிட்டே ஓபிஎஸ் அவமானப்படுத்தப்பட்டார் என்று அதிமுக செய்தித் தொடர்பாளர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறிப்பாக, இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய பிபிசி தமிழ் இணைய தளம், முகநூல், ட்விட்டர், இண்ஸ்டாகிராம் பக்கங்களில் இணைந்திருங்கள்.
ஜம்மு-காஷ்மீரில் கைதான லஷ்கர் தீவிரவாதி பாஜக உறுப்பினரா?
ஆசிரியர் முகப்பருவை ஊசியால் குத்தியதால் மாணவர் இறந்ததாக சர்ச்சை - நடந்தது என்ன?
வந்துகொண்டிருக்கும் செய்தி, தமிழக மீனவர்கள் 5 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை
தமிழ்நாடு மீனவர்கள் ஐந்து பேரை சர்வதேச கடல் எல்லை தாண்டி வந்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டம் கோடியாக்கரையில் இருந்து மீன்பிடிக்க சென்ற TN 06 mm 477 எண் கொண்ட விசைப்படகு காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் ரோந்துப் பணியில் இருந்த இலங்கை கடற்படை அந்த படகையும் அதிலிருந்த 5 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்தனர்.
காரைநகர் கடற்படை முகாமிற்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கடந்த இரண்டு நாட்களில் 17 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
X பதிவை கடந்து செல்லX பதிவை அனுமதிக்கலாமா?எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காதுஇந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
இந்த நிலையில், இலங்கை கடற்படை சிறைப்பிடித்துள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்தறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி தலைவர் கே. அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.
வந்துகொண்டிருக்கும் செய்தி, வண்டலூர் உயிரியல் பூங்காவில் பெண் சிங்கம் புவனா உயிரிழப்பு

படக்குறிப்பு, கோப்புப்படம் சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் 25 வயது பெண் சிங்கம் புவனா உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இந்த சிங்கம் உயிரிழந்த தகவலை அதிகாரிகள் தற்போது உறுதிப்படுத்தியுள்ளனர்.
சென்னையில் ஒரே நாளில் 1,066 பேருக்கு கொரோனா தொற்று
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 2,654 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் 1,066 பேருக்கும், அடுத்ததாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 375 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
மாநிலத்தில் இன்று கொரோனாவால் யாரும் இறக்கவில்லை என்று அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்களின் மெக்காவில் இனி தமிழும் ஒலிக்கும்: அரபு ஊடகம்
ஆஸ்திரேலியாவில் இந்து, இஸ்லாமிய மதங்கள் விரிவடைவதன் பின்னணி என்ன?
தமிழ்நாட்டில் ஒரு நாள் கொரோனா தொற்று 2, 654

பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாட்டில் ஒரு நாள் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2, 654 என பதிவாகியுள்ளதாக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று ஒரு நாளில் மொத்தம் 30 ஆயிரத்து 031 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 2, 654 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய தினம் மொத்தம் 2, 672 பேருக்கு தொற்று பதிவானது.
இன்றைய தினம் அதிகபட்சமாக சென்னையில் 1,066 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தொடர்ந்து 4வது நாளாக சென்னையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.
செங்கல்பட்டில் இன்று 375 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரு நாளில் 1, 542 பேர் குணமடைந்துள்ளனர். மாநிலம் முழுக்க தற்போது 15, 616 சிகிச்சையில் உள்ளனர் என்று மருத்துவத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மசூதியை மூடக்கோரும் வழக்கு: 2 வாரத்திற்கு தற்போதைய நீடிக்கும் - உயர்நீதிமன்றம் உத்தரவு

திருப்பூர் வேலம்பாளையம் மசூதி சீல் வைப்பது தொடர்பான வழக்கில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் வேலம்பாளைம் அருகே மகாலக்ஷ்மி நகரில் உள்ள மசூதி குறித்த குடியிருப்போர் சங்கத்தினரின் வழக்கில், மசூதியை மூட உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 30-ம் தேதி மாநகராட்சி அதிகாரிகள் காவல்துறையினருடன் மசூதிக்கு சீல் வைக்க சென்றனர்.
அப்போது மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். திருப்பூரில் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் வழக்கின் மேல்முறையீட்டில் தீர்ப்பு வரும் வரை சீல் வைப்பதை தள்ளி வைப்பதாக முடிவெடுத்தனர்.
இந்நிலையில், மசூதியை மூடுவது குறித்த வழக்கின் மேல்முறையீட்டில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில், 'அடுத்த இரண்டு வாரங்களுக்கு தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும்' என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேல்முறையீட்டு மனுவை முழுமையாக விசாரித்து இரண்டு வாரங்களுக்குப் தீர்ப்பு வழங்கப்படும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் போலீஸ் கூடுதல் டிஜிபியை கைது செய்த சிஐடி - என்ன நடந்தது?
'அதிமுக பொதுக்குழுவில் அடியாட்கள், திட்டமிட்டே ஓ.பிஎஸ் அவமானப்படுத்தப்பட்டார்'- மருது அழகுராஜ் பேட்டி

பட மூலாதாரம், ㅤ
படக்குறிப்பு, ஜெயலலிதாவுடன் மருது அழகுராஜ் (கோப்புப்படம்) அதிமுகவில் இரு பிரிவுகளாக செயல்பட்டு வரும் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் சுயநலத்துடன் இருப்பதாக அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று மருது அழகுராஜ் செய்தியாளர்களை சந்தித்த போது, "எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் அதிமுவை ஒன்றாக சேர்ந்து முன்னெடுத்துச் செல்வார்கள் என்ற எனது நம்பிக்கை பொய்த்து விட்டது. நில அபகரிப்பு போல அதிமுகவை அபகரிக்க தற்போது முயற்சி நடந்து வருவதாகவும்'' அவர் குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், ''கடந்த 23ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பெயர்கள் பதிவு செய்யப்படவில்லை. பொதுக்குழுவிற்கு சம்மந்தமில்லாத, திட்டமிட்டு, அழைத்து வரப்பட்ட அடியாட்கள் பலர் கூட்டத்தில் இருந்தனர். எங்கும் அடியாட்கள் மயமாக இருந்தது. ஏதோ நோக்கத்துடன் உள்ளனர் என்பது எனக்கு புரிந்து விட்டது.
திட்டமிட்டு அழைத்து வரப்பட்ட அடியாட்கள், நிர்வாகிகளுக்கு பின்னால் அமர்ந்து கொண்டு, அவர்கள்தான், நா கூசும் அளவிற்கு ஒருங்கிணைப்பாளரை நோக்கி கூச்சலிட்டனர்.
ஏதோ ஒரு திட்டத்துடன் நடைபெற்ற பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டு, திரைக்கதை எழுதி அவமானப்படுத்தப்பட்டது என்னைப் போன்றவர்களை கண்ணீர் சிந்த வைத்தது.
அம்மா (ஜெயலலிதா) இருந்த பொதுச் செயலாளர் பதவி அவருக்கு மட்டுமே நிரந்தரமாக விட்டு வைத்துள்ளோம் என்று நீங்கள் தானே சொன்னீர்கள். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒரே விண்ணப்பத்தில் தேர்வு செய்யப்பட்ட பிறகு, இப்போது திடீர் மாற்றம் ஏன்?'' என்றும் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், ''திமுக, மதிமுக, பாமக, பாஜக என பல கட்சிகளில் சம கால அரசியல் அடுத்த தலைமுறைக்கு வந்து விட்டது. எனவே அனுபவம் வாய்ந்த ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் இரட்டைத் தலைமையாக நீடித்து, அடுத்த தலைமுறைக்கு கட்சியை கொண்டு சேர்க்க வேண்டும்.
எதிர்க்கட்சி இடத்தை முந்த பாஜக துடிக்கும் நிலையில், உள்கட்சி யுத்தத்தை தொடங்கியது தவறானது. அதிமுகவில் குழு மனப்பான்மை, மண்டல வாரியான பிரிவினை, சாதி அடிப்படையில் பேசப்படுகிறது.
அதிமுகவை அழிக்க நினைப்பவர்கள் இபிஎஸ்க்கு ஆதரவாக செயல்படுகின்றனர். உங்கள் பதவி வெறியை கைவிடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.''என்றார்.
'தனி நாடு கேட்க விட்டு விடாதீர்கள், மாநில சுயாட்சி தாருங்கள்' - ஆ.ராசா பேசியது என்ன ?

தனிநாடு கேட்க எங்களை விட்டு விடாதீர்கள். மாநில சுயாட்சி தாருங்கள் என்று திமுக கொள்கை பரப்புச் செயலாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா பேசியுள்ளார்.
திமுகவின் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ‘மத்தியில் கூட்டாட்சி.. மாநிலத்தில் சுயாட்சி’ என்ற தலைப்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா பேசினார். அப்போது அவர்,
"எவ்வளவோ பேசியும் இன்றைக்கும் மாநில சுயாட்சி கேட்கும் நிலை உள்ளது. தனித் தமிழ்நாடு கோரிக்கையை கைவிட்டு, மாநில சுயாட்சி கொள்கையை ஏற்றுக் கொண்டோம். ஆனால், பெரியார் கடைசி வரை தனித்தமிழ்நாடு வேண்டும். இளைஞர்களே முன் வாருங்கள் என்றார்.
பெரியாரை முழுமையாக ஏற்றுக் கொண்ட நாங்கள். அதிலிருந்து விலகி, ஜனநாயகத்திற்காக, ஒருமைப்பாட்டிற்காக, இந்தியா வாழ்க என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
பிரதமர் மோதி, அமித் ஷாவிற்கு பணிவுடன் சொல்லிக் கொள்கிறேன். அண்ணா வழியில் பயணம் செய்கிறார் முதலமைச்சர், எங்களை பெரியார் வழிக்கு தள்ளிவிடாதீர்கள்.
எங்களை தனிநாடு கேட்க விட்டு விடாதீர்கள்; மாநில சுயாட்சி தாருங்கள். அதுவரை நாங்கள் ஓய மாட்டோம்." என இந்திய பிரதமர் நரேந்திர மோதி, இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு திமுக எம்.பி ஆ.ராசா வேண்டுகோள் விடுத்து பேசினார்.
இந்திய மீனவர்களுக்கு 8ம் தேதி வரை சிறை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 12 பேரையும் வரும் 8ம் தேதி வரையில் சிறையில் அடைக்க பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 30ஆம் தேதி மீன்பிடிக்க சென்ற மயிலாடுதுறை மீனவர்கள் 7, காரைக்கால் மீனவர்கள் 5 பேர் என மொத்தம் 12பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக, பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து, இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் யாழ்பாணம் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 12 மீனவர்களையும் பருத்தித்துறை நீதிமன்றத்தில் யாழ்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகள் இன்று ஆஜர்படுத்தினர்.
வழக்கை விசாரித்த பருத்தித்துறை நீதிமன்ற நீதிபதி கிரிஷாந்த் பொன்னுத்துறை, மீனவர்களை வரும் 8ந் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார் . இதனையடுத்து மீனவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கைது செயப்பட்ட 12 மீனவர்களையும் இந்திய துணை தூதரக அதிகாரிகள் சந்தித்தனர். மீனவர்களுக்கு உலர் உணவு, உடை உள்ளிட்ட அடிப்படை பொருட்களை வழங்கினர்.
கோயிலுக்குள் இந்துக்கள் அல்லாதவர்கள் செல்ல தடை கோரிய வழக்கு - உயர்நீதிமன்றம் தள்ளுபடி

படக்குறிப்பு, உயர்நீதிமன்ற மதுரை கிளை திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் திருக்கோவில் குடமுழுக்கு விழாவில் இந்துக்கள் அல்லாதோர் கோவிலுக்குள் நுழைய அனுமதிக்க தடை கோரி வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் பிரம்மபுரத்தை சேர்ந்த சோமன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்தார். அதில், "அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோவிலில் குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கோவிலின் முடமுழுக்கு விழாவிற்காக பக்தர்களிடம் இருந்து தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.
குடமுழுக்கு விழாவில் கலந்து கொள்ள தொழில்நுட்பத் துறை அமைச்சருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட பூசாரிகள் மட்டுமே, கலச பூஜைகள் செய்ய வேண்டும். இந்த விழா அரசு விழாவாக நடத்தப்படும்போது இதுபோன்ற சம்பிரதாயங்கள் முறையாக கடைபிடிக்க படாமல், புனிதம் கெட்டு விடுவதற்கான வாய்ப்புள்ளது. ஆகவே கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் திருக்கோவில் குடமுழுக்கு விழாவின் போது இந்துக்கள் அல்லாதோர் கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், "இந்துக்கள் அல்லாதோர் நுழைய வேண்டாம் என அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. குடமுழுக்கு விழாவில் இந்துக்கள் அல்லாதோர் பங்கேற்கக்கூடாது என விதிகள் எதுவும் இல்லை.
120 கோடி மக்களில் கோயிலுக்கு செல்லும்போது, அவர்களின் மதத்தினை கேட்கும் போது பிரச்சனை ஏற்படும்" என தெரிவித்தனர். மனுதாரர் தரப்பில், "கோவில் குடமுழுக்கு விழாவிற்கான அழைப்பிதழ் வழங்கப்பட்டது. அதில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பெயர் இடம்பெற்றிருப்பதை குறிப்பிட்டு அவர் இந்து அல்ல ஆனால் குடமுழுக்கு விழாவில் பங்கேற்க உள்ளார்.' என தெரிவித்தனர்.
அதற்கு நீதிபதிகள், 'யேசுதாஸ் வேறு சமயத்தைச் சார்ந்தவர். இந்து பாடல்களை பாடியுள்ளார். வேளாங்கண்ணி தேவாலயத்திற்கும், நாகூர் தர்காவிற்கும் ஏராளமான இந்துக்கள் சென்று வழிபட்டு வருகின்றனர். ஆகவே, நீதிமன்றம் குறுகிய பார்வையில் அணுக விரும்பவில்லை. என்ற அடிப்படையில் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது" என உத்தரவிட்டனர்.
கர்நாடக ஏடிஜிபி கைது: எஸ்.ஐ தேர்வு முறைகேடு வழக்கில்

பட மூலாதாரம், Amrit Paul
படக்குறிப்பு, கர்நாடக ஏடிஜிபி அம்ரித் பால் கர்நாடக காவல் உதவி ஆய்வாளர் தேர்வு முறைகேடு வழக்கில் ஏடிஜிபி அம்ரித் பால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற காவல் உதவி ஆய்வாளர் தேர்வில் முறைகேடு நடைபெற்றது, குறித்து குற்றப் புலனாய்வுத்துறை (சிஐடி) போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த மோசடியில், உதவி ஆய்வாளர் தேர்வாணைய தலைவராக இருந்த ஏடிஜிபி அம்ரித் பால் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் தொடர்புடைய டிஎஸ்பி சாந்தராஜு மற்றும் சில ஊழியர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த குற்றச்சாட்டு எழுந்ததும், தேர்வாணைய தலைவர் பொறுப்பிலிருந்து அம்ரித் பால் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருந்தார். முறைகேடு குறித்து 4 முறை அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது
மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கைது - சுங்கச் சாவடியை அகற்றக் கோரி போராட்டம்

உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் கேட்கும் மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக் கோரி முன்னாள் அமைச்சர் ஆர். பி.உதயகுமார் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். அனுமதி இன்றி போராட்டம் நடத்தியதாக உதயகுமார் உட்பட நூற்றுக்கு மேற்பட்ட அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் கேட்பது தொடர்பாக தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. அண்மையில் உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு கடந்த இரண்டு ஆண்டுக்குரிய சுங்க கட்டணத்தை செலுத்த வேண்டும் என சுங்கச்சாவடி நிர்வாகம் சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்நிலையில் திருமங்கலம் ,கப்பலூர் வாகன ஓட்டிகளுக்கு உள்ளூர் கட்டணம் வசூலிக்க கூடாது என தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் மக்களுக்கு ஆதரவாக சுங்கச்சாவடியை அகற்றக்கோரி முன்னாள் அமைச்சர் ஆர். பி.உதயகுமார் உண்ணாவிரத போராட்டம் அறிவித்தார்.
இன்று காலை கப்பலூர் சுங்கச்சாவடி அருகே சுங்கச்சாவடியை அகற்றக்கோரி முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தலைமையில் நடைபெறும் போராட்டத்திற்கு பந்தல் அமைக்க ஏற்பாடு செய்தனர். அப்போது அங்கு சென்ற திருமங்கலம் டிஎஸ்பி சிவகுமார் தலைமையிலான போலீசார் உண்ணாவிரத போராட்டத்திற்கு முறையாக அனுமதி பெறவில்லை. எனவே பந்தல் அமைக்க கூடாது என்றனர்.
இதையடுத்து, ஆர்.பி.உதயகுமார் காவல்துறையிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பந்தல் அமைக்க அனுமதி அளிக்காததால், தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் உட்பட ஏராளமான அதிமுகவினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர் பி உதயகுமாரிடம் போலீசார் உரிய அனுமதி பெறாமல் போராட்டம் நடத்துவதற்கு அனுமதிக்க மாட்டோம் .போராட்டத்தை கைவிட வேண்டும் என போலீசார் கூறினர். போராட்டத்தை கைவிடாததால், அனைவரையும் காவல்துறை கைது செய்து பேருந்துகளில் ஏற்றினர்.

ஆல்ட் நியூஸ் இணை நிறுவனரை சீதாபூருக்கு அழைத்துச் செல்லும் டெல்லி போலீஸ்
மஹந்த் பஜ்ரங் முனி, யதி நரசிங்கானந்த் சரஸ்வதி மற்றும் சுவாமி ஆனந்த் ஸ்வரூப் ஆகியோரின் ட்வீட் மூலம் மத உணர்வுகளைத் தூண்டியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர் முகமது ஜுபைரை டெல்லி காவல்துறை சீதாபூருக்கு அழைத்துச் சென்றிருக்கிறது.
மத உணர்வுகளை புண்படுத்தியதாக முகமது சுபைர் மீது உத்தர பிரதேசத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
மஹந்த் பஜ்ரங் முனியை சர்ச்சைக்குரிய வார்த்தையைப் பயன்படுத்தியும் யதி நரசிங்கானந்த் மற்றும் சுவாமி ஆனந்த் ஸ்வரூப் ஆகியோரை ட்விட்டரில் "வெறுக்கத்தக்கவர்கள்" என்று ஜுபைர் தமது ட்விட்டர் பக்கத்தில் அழைத்ததாக சர்ச்சை எழுந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக இந்து ஷேர் சேனாவின் சீதாபூர் பிரிவுத் தலைவரான பகவான் ஷரனின் புகாரின் பேரில் காவல்துறையினர் ஜுபைர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
"எங்கள் நம்பிக்கையின் அடையாளமான எங்கள் தர்ம ஸ்தலத்தின் மகான்களுக்கு எதிராக தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்துவதன் மூலம் எங்கள் மத உணர்வுகளை முகமது ஜுபைர் புண்படுத்தியுள்ளார்," என்று பகவான் ஷரன் புகாரில் கூறியுள்ளார்.
X பதிவை கடந்து செல்லX பதிவை அனுமதிக்கலாமா?எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காதுஇந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
டெல்லி எம்எல்ஏக்கள், அமைச்சர்களின் சம்பளத்தை உயர்த்தும் மசோதா நிறைவேறியது
டெல்லியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள், சபாநாயகர் மற்றும் மக்களவை உறுப்பினர்களின் சம்பளத்தை உயர்த்தும் மசோதா, டெல்லி சட்டசபையில் இன்று நிறைவேற்றப்பட்டது.
கடந்த 11 ஆண்டுகளாக எம்எல்ஏக்களின் அடிப்படை சம்பளம் ரூ.12,000 ஆக இருந்தது. இந்த மசோதா நிறைவேறியதைத் தொடர்ந்து துணைநிலை ஆளுநரின் அனுமதி கிடைத்ததும் அது ரூ.30,000 ஆக உயர்த்தப்படும். அவர்களின் மொத்த சம்பளம் ரூ.90,000 ஆகும் என்று டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
X பதிவை கடந்து செல்லX பதிவை அனுமதிக்கலாமா?எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காதுஇந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
