மணிப்பூரில் நிலச்சரிவு - ராணுவத்தினர் உள்பட 18 பேரின் சடலங்கள் மீட்பு

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவுகளால் பிரதேச ராணுவப்படை வீரர்கள் உட்பட பலர் புதைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. காயமடைந்த 18 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஐந்து பேர் ரயில்வே ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஜோ மகேஸ்வரன்

  1. ரஷ்ய அதிபருடன் இந்திய பிரதமர் மோதி பேச்சு

    இந்திய பிரதமர் நரேந்திர மோதி ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடன் தொலைபேசியில் உரையாடினார்.

    இந்தியா - ரஷ்யா இடையிலான இருதரப்பு வர்த்தகம் மற்றும் பல்வேறு உலகளாவிய பிரச்னைகள் குறித்து புதினுடன் இந்திய பிரதமர் விவாதித்தார். மேலும், புதினின் இந்தியப் பயணத்தின் போது எடுக்கப்பட்ட முடிவுகளை நடைமுறைப்படுத்துவது குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

    யுக்ரேன் மீது ரஷ்யாவின் படையெடுப்பு தொடர்ந்து வரும் சூழ்நிலையில் இடம்பெற்ற இந்த தொலைபேசி உரையாடல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  2. BBC தமிழ் இணையதளத்தில் கடந்த சில நாட்களில் வெளியான, நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய செய்திகள்

  3. வேலூரில் மீண்டும் வாகனத்துடன் அமைக்கப்பட்ட சாலை

    வேலூர் மாநகாட்சியில் அமைக்கப்பட்டுள்ள தார் சாலை
    படக்குறிப்பு, வேலூர் மாநகாட்சியில் அமைக்கப்பட்டுள்ள தார் சாலை

    வேலூரில் கடந்த வாரம் இரு சக்கர வாகனத்துடன் சாலை அமைத்த நிலையில், ஜீப்பை வைத்தும் சாலை அமைத்துள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

    வேலூர் மாநகராட்சியின் காளியம்மன் கோயில் தெருவில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை அப்புறப்படுத்தாமல், வாகனத்தின் மீது சிமெண்ட் சாலை அமைத்தனர்.

    இந்த சர்ச்சை அடங்குவதற்குள்ளாகவே, வேலூர் சாயிநாதபுரம் பொன்னியம்மன் கோயில் தெருவில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஓடாத பழைய ஜீப்பை அப்புறப்படுத்தாமல் ஒப்பந்ததாரர்கள் தார்ச்சாலை அமைத்துள்ளனர்.

    இது தொடர்பாக அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர். இதையடுத்து, மாநகராட்சி ஆணையர் அசோக்குமார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மாநகராட்சி ஆணையரின் உத்தரவையடுத்து, கிரேன் மூலம் ஜீப்பை அங்கிருந்து எடுத்து, சாலை சீர் செய்யப்பட்டது.

    வேலூர் மாநகாட்சியில் அமைக்கப்பட்டுள்ள தார் சாலை
    படக்குறிப்பு, வேலூர் மாநகாட்சியில் அமைக்கப்பட்டுள்ள தார் சாலை
  4. "உதய்பூர் படுகொலைக்கு நூபுர் ஷர்மாவின் பேச்சுதான் காரணம்" - உச்சநீதிமன்றம்

  5. ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்கிற்கு இந்தியாவில் தடை

    பிளாஸ்டிக் கழிவுகள்
    படக்குறிப்பு, பிளாஸ்டிக் கழிவுகளை பிரித்தெடுக்கும் தொழிலாளர்கள்

    ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு இந்தியாவில் இன்று முதல் தடை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    பிளாஸ்டிக் கழிவுகள் பட்டியலில் அன்றாடம் பயன்படுத்தப்படுகின்ற ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்கள் முதலிடத்தில் உள்ளன. இன்று வரை 77 நாடுகள் பிளாஸ்டிக்கை முற்றிலுமாகவோ அல்லது பகுதியாகவோ தடை செய்யப்பட்டுள்ளன.

    இந்நிலையில், இந்தியாவும் ஜூலை 1, 2022 முதல் ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்கை தடை செய்ய முடிவெடுத்துள்ளது.

    டிசம்பர் 7, 2021 அன்று குளோபல் பிளாஸ்டிக் வாட்ச் இணையதளம் வெளியிட்ட அறிக்கையின்படி, உலகில் பெரியளவிலான பிளாஸ்டிக் கழிவுகள் உற்பத்தியில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

  6. தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை

  7. மயிலாடுதுறையில் 'சாகுபடி செய்ய பாதுகாப்பு கேட்டு' விவசாயிகள் போராட்டம்

    மயிலாடுதுறை விவசாயிகள் போராட்டம்

    நேரடி நெல் விதைப்பு பிரச்சினை தொடர்பாக விவசாயிகள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மயிலாடுதுறை மாவட்டம் பருத்திகுடி கிராமத்தில், விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு செய்ய ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டனர். இதனால், விவசாயக் கூலி தொழிலாளர்கள் வேலை இழக்கக் கூடும் என்று கூறி , கடந்த திங்கட்கிழமை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தினர் வயலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்து, வழக்கு பதிவு செய்தனர். இதனிடையே நேற்று 144 தடை உத்தரவு அப்பகுதியில் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, காவல்துறை பாதுகாப்புடன் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு பணிகளை தொடங்கினர்.

    இந்நிலையில், 'விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு செய்த போது வயலில் இறங்கி சேதப்படுத்தி போராட்டம் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும், நேரடி நெல் விதைப்பு செய்ய அரசு தங்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கிட வலியுறுத்தியும்'

    தமிழ்நாடு விவசாயிகள் நலச் சங்க மாவட்ட தலைவர் சேதுராமன் தலைமையில் 300க்கும் மேற்பட்டவர்கள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு , போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைய முயன்ற விவசாயிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தைனர்.

    மயிலாடுதுறை விவசாயிகள் போராட்டம்
  8. 'அதிமுக தலைமை நிலையச் செயலாளர்' - எடப்பாடி பழனிசாமி ட்விட்டர் பக்கத்தில் மாற்றம்

    எடப்பாடி பழனிசாமி

    பட மூலாதாரம், Twitter

    அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் என்பதை நீக்கி விட்டு, தலைமை நிலையச் செயலாளர் என்கிற கட்சிப் பதவியை மட்டும் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தால், அக்கட்சியில் பெரும் குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 23ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமியை ஒற்றைத் தலைமையாக அறிவிக்க எடுக்கப்பட்ட முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டது.

    ஓ.பன்னீர்செல்வம்

    பட மூலாதாரம், Twitter

    அந்த கூட்டத்தில் இருந்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் உள்ளிட்டோர் வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து, 'ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டது. ஓபிஎஸ் பொருளாளராகவும் இபிஎஸ் தலைமை நிலைய செயலாளராகவும் தற்போது இருப்பதாக' முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

    இதற்கு ஓபிஎஸ் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. இரட்டைத் தலைமை தொடர்வதாக கூறினர். இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் என்பதை நீக்கி விட்டு, எதிர்க்கட்சித் தலைவர், தலைமை நிலையச் செயலாளர் என்பதை குறிப்பிட்டுள்ளார்.

    ஆனால், ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்றே தொடர்ந்து வைத்துள்ளார்

  9. 'ஒரே நாடு, ஒரே சட்டம்' செயலணி: இனவாத ரீதியிலான பரிந்துரைகள் என முஸ்லிம்கள் கண்டனம்

  10. அதிக முடி வைத்துள்ளவர்கள் எல்லாம் ஒழுக்கம் இல்லாதவர்களா?

    அதிகமான முடி வைத்துள்ளவர்கள் எல்லாம் ஒழுக்கம் இல்லாதவர்களா? ஒருவரின் முடியை சரி செய்துவிட்டால் அவர் ஒழுக்கமானவர் ஆகிவிடுவாரா?

    இதுதொடர்பான உங்கள் கருத்துகளை பிபிசி தமிழ் ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவியுங்கள்.

    அதிக முடி வைத்துள்ளவர்கள் எல்லாம் ஒழுக்கம் இல்லாதவர்களா?
  11. தொடர்ந்து இணைந்திருங்கள்

    வணக்கம்.

    நான் ஜோ மகேஸ்வரன். இது வரை க.சுபகுணம் வழங்கி வந்த, நேரலைப் பக்கத்தை இனி நான் தொகுத்து வழங்குகிறேன். தொடர்ந்து இணைந்திருங்கள்.

    தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    குறிப்பாக, இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.

  12. தடை செய்யப்பட்ட சாட்டிலைட் ஃபோனை பறிமுதல் செய்த தூத்துக்குடி கடலோர காவல் படை

    தடை செய்யப்பட்ட சாட்டிலைட் ஃபோனை பறிமுதல் செய்த தூத்துக்குடி கடலோர காவல் படை

    பட மூலாதாரம், Indian Coastguard

    தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு வந்த பார்ஜர் கப்பலில் பயன்படுத்தப்பட்ட தடை செய்யப்பட்ட சாட்டிலைட் போனை கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தனர்.

    நாட்டின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சில பொருட்களைப் பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது. அந்த வகையில் ப்ரீபெய்டு வகையைச் சேர்ந்த துரையா என்னும் 'சாட்டிலைட் ஃபோன்'களை பயங்கரவாதிகள் எளிதில் பயன்படுத்துவதற்கு வாய்ப்பு இருப்பதாகக் கருதப்பட்டது. இதனால் இந்திய எல்லைக்குள் துரையா சாட்டிலைட் ஃபோன்களை பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது.

    அதேநேரத்தில் இந்த ஃபோன்களை மற்ற நாடுகளில் பயன்படுத்துவதற்குத் தடை இல்லை என்பதால் கப்பல்களில் மாலுமிகள் அவற்றை வைத்திருப்பது வழக்கமாக உள்ளது. ஆனால், இந்திய எல்லைக்குள் பயன்படுத்துவதற்கு அனுமதி கிடையாது. அதை மீறிப் பயன்படுத்தும்போது அவற்றை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த 21ஆம் தேதி மாலத்தீவில் இருந்து தூத்துக்குடி பழைய துறைமுகத்துக்கு 'ஓஜாஸ் பிரைடு' என்ற பார்ஜர் கப்பல் கடந்த 27ஆம் தேதி வந்தது. இதில் இந்தோனேசியாவை சேர்ந்த 3 பேர், இந்தியாவை சேர்ந்த 6 பேர், பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 10 மாலுமிகள் இருந்தனர்.

    தூத்துக்குடியில் இருந்து கற்களை மாலத்தீவுக்கு ஏற்றிச் செல்வதற்காக வந்திருந்த அந்தக் கப்பல், துறைமுகத்தின் வெளிப்பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கப்பலில் உள்ள ஒரு இன்ஜினில் பழுது ஏற்பட்டதால் கப்பல் கேப்டன், பார்ஜர் கப்பலின் உரிமையாளர் மற்றும் முகவரை தொடர்பு கொள்வதற்காக துரையா சாட்டிலைட் ஃபோனை பயன்படுத்தியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. அதைப் பயன்படுத்தியதன் சிக்னல் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள தகவல் தொழில்நுட்ப மையத்தில் பதிவானது.

    இதுகுறித்து உயர் அதிகாரிகள் உடனடியாக தூத்துக்குடி கடலோர காவல் படை மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து நேற்று நள்ளிரவு கடலோர காவல் படையினரும் சுங்கத்துறை அதிகாரிகளும் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த பார்ஜர் கப்பலில் தீவிர விசாரணை நடத்தி, தடை செய்யப்பட்ட சாட்டிலைட் ஃபோனை பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்துத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  13. வந்துகொண்டிருக்கும் செய்தி, "நூபுர் ஷர்மா மொத்த இந்தியாவிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்" - உச்சநீதிமன்றம்

    நபிகள் நாயகம் குறித்து கருத்து தெரிவித்ததாக பல மாநிலங்களில் தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து முதல் தகவல் அறிக்கைகளையும் விசாரணைக்காக டெல்லிக்கு மாற்றக் கோரிய பாஜக-வில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட அதன் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் ஷர்மாவின் மனுவை உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது.

    அதன் விசாரணையின்போது, நூபுர் ஷர்மா தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார் என்று உச்சநீதிமன்றம் கூறியது. மேலும் அவரைக் கண்டித்த உச்சநீதிமன்றம், அவர் சிந்திக்காமல் பேசியது ஒட்டுமொத்த நாட்டையும் பற்றி எரிய வைத்துள்ளது என கூறியதுடன், அவர் மொத்த நாட்டிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறியுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

  14. ஆதிச்சநல்லூர் அகழாய்வில் தங்க காதணி கண்டெடுக்கப்பட்டுள்ளது

    ஆதிச்சநல்லூர் அகழாய்வில் தங்க காதணி கண்டெடுக்கப்பட்டுள்ளது

    பட மூலாதாரம், Tamil Nadu State Department of Archaeology

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் கடந்த 8 மாதங்களாக அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதில் 70-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் உள்ளிட்ட பல்வேறு பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆதிச்சநல்லூரில் நடைபெற்று வரும் அகழாய்வில் இதுவரை வெண்கலம் மற்றும் தங்க ஆபரணங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

    இந்நிலையில், ஆதிச்சநல்லூரில் 'சி சைட்' எனப்படும் பகுதியில் தொல்லியல் துறையினர் நடத்திய அகழாய்வில் பழங்கால தங்க காதணி கிடைத்துள்ளது. இதனால் தொல்லியல் ஆய்வாளர்களும் ஆர்வலர்களும் உற்சாகம் அடைந்து உள்ளனர்.

    தற்போது கிடைத்துள்ள தங்க காதணியை ஆய்வு செய்தபோது 20 காரட் தங்கம் என்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் செம்பு சேர்த்து இருப்பதும் முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாக ஆதிச்சநல்லூர் தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

  15. வழக்குகளை டெல்லிக்கு மாற்றுமாறு உச்சநீதிமன்றத்தை அணுகிய நூபுர் ஷர்மா

    கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் ஷர்மா, நபிகள் நாயகத்தைப் பற்றி அவர் பேசியதாகக் கூறி பல்வேறு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட டஜன் கணக்கிலான முதல் தகவல் அறிக்கைகளை விசாரணைக்காக புது டெல்லிக்கு மாற்ற உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

  16. மூன்று மாத கர்ப்பிணியை தற்கொலைக்குத் தூண்டியதாக கணவர் கைது

    மூன்று மாத கர்ப்பிணியை தற்கொலைக்குத் தூண்டியதாக கணவர் கைது

    பட மூலாதாரம், Kodaikanal Police Department

    கொடைக்கானலில் மூன்று மாத கர்ப்பிணியான இளம் பெண் மர்மமான முறையில் உயிரிழ‌ந்தார். 26 நாள் விசாரணைக்கு பிறகு, த‌ற்கொலைக்குத் தூண்டியதாக அந்தப் பெண்ணின் க‌ண‌வ‌ர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள நாயுடுபுரம் பகுதியில் வசித்து வந்த மோனிஷா என்ற 23 வயது பெண் வட்டகானல் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கிய சாம் என்பவரை ஆறு மாதத்திற்கு முன்னர் திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. திருமணமாகி ஆறு மாதம் முடிந்த நிலையில் 3 மாத கர்ப்பிணியாக இருந்த மோனிஷா கடந்த ஜூன் 4ஆம் தேதி வீட்டில் இறந்து கிடந்ததாக காவல்துறைக்கு மோனிஷாவின் கணவர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    23 வயது மோனிஷா 3 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் அவர் எப்படி தூக்கிட்டுக் கொள்வார் என்று மோனிஷாவின் பெற்றோர் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அன்றே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

    விசார‌ணையை தீவிர‌ப்ப‌டுத்த‌வில்லை என‌ ஆத்திரமடைந்த மோனிஷாவின் பெற்றோர் மற்றும் உறவினர், க‌ட‌ந்த‌ சில‌ நாட்க‌ளுக்கு முன் நாயுடுபுரம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, மோனிஷாவின் கணவா் ஆரோக்கிய சாம் மற்றும் உறவினா்களிடம் போலீஸாா் மற்றும் வருவாய் கோட்டாட்சியா் முருகேசன் ஆகியோா் விசாரணை நடத்தினா்.

    அவரிடம் 26 நாள்கள் போலீஸாா் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, ஆரோக்கிய சாம் தூண்டுதலின்பேரில், அவருடைய கா்ப்பிணி மனைவி மோனிஷா தற்கொலை செய்துகொண்டதாதத் தெரியவந்துள்ளது என்றும் இதையடுத்து மோனிஷாவின் கணவரை கைது செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளதாகவும் கொடைக்கானல் காவல்துறை தெரிவித்துள்ளது.

  17. இந்தியா: ஒரே நாளில் 17,070 பேருக்கு கோவிட் தொற்று பாதிப்பு

    இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 17,070 பேர் கோவிட்-19 தொற்றுக்கு ஆளாகியுள்ளனர், 23 பேர் உயிரிழந்துள்ளனர். அதோடு, நேற்று ஒரு நாளில் 14,413 பேர் கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர் என்று ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. மேலும், இப்போதைய நிலவரப்படி தினசரி தொற்று பாதிப்பு அளவு 3.40% என்ற விகிதத்தில் உள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  18. வணக்கம் நேயர்களே

    நான் க.சுபகுணம். தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் பிற உலக நாடுகளில் நிகழும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலை பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    செய்திகள் குறித்த உங்கள் கருத்துகளை எங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் நீங்கள் தெரிவிக்கலாம். நேற்றைய நேரலைப் பக்கத்தை இந்த இணைப்பில்காணலாம்.

    தொடர்ந்து இணைந்திருங்கள்.