You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மகாராஷ்டிரா முதல்வராக ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வராக தேவேந்திர ஃபட்னாவிஸ் பதவியேற்பு
மகாராஷ்டிரா மாநில முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்றுள்ளார். அம்மாநில துணை முதல்வராக தேவேந்திர ஃபட்னாவிஸ் பதவியேற்றுள்ளதாக ஏ.என்.ஐ முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
எம்.ஆர். ஷோபனா
நேயர்களுக்கு நன்றி!
இன்றைய நேரலை இத்துடன் நிறைவு பெறுகிறது.
இன்று நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இதோ:
- ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்பட்டது.
- மகாராஷ்டிரா மாநில முதல்வராக ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதல்வராக தேவேந்திர ஃபட்னாவிசும் பதவியேற்றுள்ளனர்.
- வரும் ஜூலை 18ம் தேதி முதல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.
- மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஏக்நாத் ஷிண்டேவுக்கு பிரதமர் நரேந்திர மோதி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- மகாராஷ்டிராவின் முதல்வர் மற்றும் எம்.எல்.சி பதவிகளை ராஜிநாமா செய்தார் உத்தவ் தாக்கரே
- ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் கன்ஹையா லால் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் விசாரணையைத் தொடங்கியது தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) - உள்துறை அமைச்சகம்
- ஆந்திராவில் பயணிகளுடன் சென்ற ஆட்டோ மீது மின்கம்பி விழுந்து, 5 பெண்கள் உயிரிழப்பு
- அ.தி.மு.க. அழிந்துகொண்டிருப்பதாகவும் நயவஞ்சகர்கள் கையில்தான் கட்சியும் சின்னமும் இருப்பதாகவும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்திருக்கிறார்.
- ஆளுநரின் உத்தரவின்படி, நம்பிக்கை வாக்கெடுப்பு இப்போது தேவையில்லை, எனவே இன்றைய சிறப்புக் கூட்டத்தொடர் கூட்டப்படாது - மகாராஷ்டிர சட்டப்பேரவை செயலாளர் ராஜேந்திர பகவத்
- அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக உட்கட்சி பூசல் நிலவிவரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி ஓ. பன்னீர் செல்வத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஜூலை 18இல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடக்கம்
வரும் ஜூலை 18ம் தேதி முதல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்தொடர் ஜூலை 18ம் தேதி தொடங்கி ஆக்ஸ்ட் 12ம் தேதி வரை நடைபெறும்.
இதற்கான அழைப்பாணையை மக்களவை உறுப்பினர்கள் அனைவருக்கும் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அனுப்பியுள்ளார்.
இதேபோல, மாநிலங்களவை கூட்டத்தொடர் தொடங்குவதற்கான அழைப்பாணையை அதன் செயலகம் அனைத்து மாநிலங்களவை உறுப்பினர்களுக்கும் அனுப்பியிருக்கிறது.
ஜூலை 18ஆம் தேதி இந்திய குடியரசு தலைவரின் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள், மாநில சட்டமன்றங்களின் உறுப்பினர்கள் வாக்களிக்கவுள்ளனர்.
இந்த தேர்தலில் பதிவான வாக்குகள், ஜூலை 21ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.
ஏக்நாத் ஷிண்டேவுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோதி
மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்றுக்கொண்ட ஏக்நாத் ஷிண்டேவுக்கு பிரதமர் நரேந்திர மோதி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது ட்விட்டர் பக்கத்தில், “மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்றுக்கொண்ட ஏக்நாத் ஷிண்டேவுக்கு வாழ்த்துகள். அவர் சிறந்த அரசியல் மற்றும் நிர்வாக அனுபவம் பெற்றவர். மகாராஷ்டிராவை உயரத்திற்கு கொண்டு செல்வார் என்று நம்புகிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அம்மாநில துணை முதல்வரான தேவேந்திர ஃபட்னாவிசுக்கும் பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜி.எஸ்.டி முறை இயல்பிலே பிழையானது - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கோவையில் இன்று தொழில் கூட்டமைப்பினருடன் கலந்துரையாடினார். அப்போது பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய கோரிக்கைகளை முன் வைத்தனர்.
அதன் பின்னர் பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், 'ஜி.எஸ்.டி கூட்டத்தில் விவாதிக்கப்படும் விஷயங்கள், வரி மாற்றம் செய்யப்படும் பொருட்களை ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அடங்கிய குழு தான் முடிவு செய்கிறது. அரசியலமைப்பு சட்டப்படி ஆட்சியாளர்கள் முடிவு செய்ய வேண்டிய விஷயங்களை ஆட்சிப்பணி அதிகாரிகள் முடிவு செய்கிறார்கள். யதார்த்தத்தில் மிகவும் விலகி இருக்கிறார்கள். அதனால் தான் ஜி.எஸ்.டி வரி விதிப்புகளில் இத்தனை குளறுபடிகள் ஏற்படுகின்றன. ஜி.எஸ்.டி முறை இயல்பிலே பிழையான ஒன்று,” என்றார்.
இதுகுறித்து மேலும் பேசிய அவர், "ஒரே நாடு, ஒரே வரி விதிப்பு முறை, இந்தியா முழுவதற்கும் ஒரே வரி என்பது பிழையானது. நேரடி வரி, மறைமுக வரி விகிதாச்சாரம் 60:40 என்று இருக்க வேண்டும். ஆனால் ஜி.எஸ்.டி முறை அமலுக்கு வந்த பிறகு இது தலைகீழாக மாறிப்போனது. தற்போது மறைமுக வரி 60: நேரடி வரி 40 ஆக உள்ளது. மறைமுக வரி அதிகம் இருந்தால் ஏழை மக்கள் தான் பாதிக்கப்படுவர்.
ஜி.எஸ்.டி முறையில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள், திருத்தங்களை ஆராய தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. நியாயப்படி மத்திய அரசு செய்ய வேண்டிய இந்த வேலையை தமிழ்நாடு அரசு செய்ய முன்வந்திருக்கிறது.” என்றார்.
“தீவிரவாதிகளிடமிருந்து இந்து மதத்தை காப்பாற்றுங்கள்” - உதய்பூர் கொலைக்கு எதிராக சர்வதேச அளவில் எழும் கண்டனம்
பாஜகவின் 'இந்துத்துவா' உத்தவ் தாக்கரேவின் இந்துத்துவத்தை ஓரங்கட்டி விட்டதா?
கமல் ஹாசனுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசின் கோல்டன் விசா
வந்துகொண்டிருக்கும் செய்தி, மகாராஷ்டிரா முதல்வராக ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வராக தேவேந்திர ஃபட்னாவிஸ் பதவியேற்பு
மகாராஷ்டிரா மாநில முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்றுள்ளார். அம்மாநில துணை முதல்வராக தேவேந்திர ஃபட்னாவிஸ் பதவியேற்றுள்ளதாக ஏ.என்.ஐ முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக, புதன்கிழமை இரவு 9:30 மணியளவில் ஃபேஸ்புக் நேரலையில் பேசிய உத்தவ் தாக்கரே, தனது முதல்வர் பதவியையும், சட்ட மேலவை பதவியையும் ராஜிநாமா செய்வதாக அறிவித்தார்.
ஏக்நாத் ஷிண்டே உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக கலகம் செய்து அவர் ஆட்சியை இழக்க காரணமான சிவசேனா கிளர்ச்சி எம்எல்ஏக்கள் குழுவின் தலைவர் ஆவார்.
தமிழக ஆளுநரின் செயல்பாடுகள் வருத்தமளிக்கின்றன - யஷ்வந்த் சின்ஹா
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான எதிர்கட்சிகளின் பொது வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹா சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, தமிழக ஆளுநரின் செயல்பாடுகள் வருத்தம் அளிக்கும் வகையில் உள்ளன என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் அவர், கூறுகையில், மாநில ஆளுநர்கள் மத்திய அரசின் ஏஜெண்டுகள் போல செயல்படுகின்றனர் என்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மதித்து ஆளுநர்கள் செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இதுப்போன்ற செயல்பாடுகளுக்கு குடியரசுத் தலைவரால் மட்டுமே முற்றுபுள்ளி வைக்க முடியும் என்று யஷ்வந்த் சின்ஹா தெரிவித்தார்.
மகாராஷ்டிரா துணை முதல்வராக தேவேந்திர ஃபட்னாவிஸ் பதவியேற்க வேண்டும் - நட்டா
மகாராஷ்டிரா துணை முதல்வராக தேவேந்திர ஃபட்னாவிஸ் பதவியேற்குமாறு பாரதிய ஜனதா கட்சியின் மத்தியத் தலைமை கேட்டுக் கொண்டுள்ளதாக அக்கட்சியின் அகில இந்திய தலைவர் ஜகத் பிரகாஷ் நட்டா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை பேசிய நட்டா, “தேவேந்திர ஃபட்னாவிஸ் மகாராஷ்டிரா அரசாங்கத்தின் ஒரு பகுதியாக மாற வேண்டும் என்று பாஜகவின் மத்திய தலைமை முடிவு செய்துள்ளது. எனவே, அவரிடம் இது தொடர்பாக தனிப்பட்ட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் துணை முதல்வராக தேவேந்திர ஃபட்ன்வாய்ஸ் பொறுப்பேற்க வேண்டும் என்று மத்திய தலைமை கூறியுள்ளது,” என்று கூறினார்.
சிவசேனை கட்சியின் எம்எல்ஏக்கள் குழுவுக்கு தலைமை தாங்கிய ஏக்நாத் ஷிண்டேவே மாநிலத்தின் புதிய முதல்வராக இருப்பார் என்று தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறியிருந்தார். அப்போது அவர் தாம் அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருக்கப் போவதில்லை என்றும், ஏக்நாத் ஷிண்டே அரசாங்கத்திற்கு முழு ஆதரவு வழங்கப்படும் என்றும் செய்தியாளர்களிடம் கூறினார்.
நயவஞ்சவர்கள் கையில் கட்சியும் சின்னமும் இருக்கின்றன: டிடிவி தினகரன்
அ.தி.மு.க. அழிந்துகொண்டிருப்பதாகவும் நயவஞ்சகர்கள் கையில்தான் கட்சியும் சின்னமும் இருப்பதாகவும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்திருக்கிறார். அரசியல் ரீதியாக வெற்றிபெற்று அ.தி.மு.கவை மீட்கப் போவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் கூட்டம் அக்கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி. தினகரன், இன்னொரு கட்சிப் பிரச்னையில் தான் தலையிடப் போவதில்லை என்று கூறினார்.
மேலும், "உள்ளாட்சித் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் போட்டியிடுகிறது. எங்கள் வேட்பாளர்கள் வெற்றிக்கு எப்படி உழைக்க வேண்டுமென்பதைப் பேசினோம். கடந்த நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெறாததால் எங்கள் கட்சி போய்விட்டது என்றார்கள்.
இன்று தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்திற்கு, 320 பேர் வந்திருந்தார்கள். ஆட்சி, அதிகாரம், பணம் எல்லாவற்றையும் தாண்டி எங்களுடன் நிற்கிறார்கள்.
தமிழக மக்கள் எங்களுக்கு வருங்காலத்தில் அங்கீகாரம் கொடுப்பார்கள்.
நாங்கள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை ஐந்து வருடங்களாக நடத்திக்கொண்டிருக்கிறோம். தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு அந்த இயக்கத்தை மீட்டெடுப்போம்.
அங்கு உள்ள உண்மையான தொண்டர்கள் அங்கு நடப்பவற்றை சகித்துக்கொண்டிருக்காமல் எங்களிடம் வாருங்கள் என்று சொல்லலாமே தவிர, வேறு வகையில் தலையிட முடியாது. இந்த மோதலை நாங்கள் சாதகமாக பயன்படுத்தவில்லை. தி.மு.கதான் சாதகமாகப் பயன்படுத்துகிறது," என்றார்.
நாகர்கோவில் காசி வழக்கு - தந்தைக்கு ஜாமீன் மறுப்பு
நாகர்கோவில் காசி வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், அவரது தந்தைக்கு ஜாமீன் வழங்கினால் வழக்கின் விசாரணை பாதிக்கக்கூடும் என கூறி காசியின் தந்தைக்கு ஜாமீன் வழங்க மறுத்து மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமூக வலைதளங்கள் மூலமாக தமிழகம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த 120க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் இளம் பெண்களை காதலிப்பதாக ஏமாற்றி பணமோசடி மற்றும் ஆபாச புகைப்படங்களை வெளியிட்டுவதாக மிரட்டிய வழக்கில், நாகர்கோவில் சேர்ந்த சுஜி என்ற காசி என்பவர் கடந்த 2020 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் காசியை காப்பாற்றும் நோக்கில் சாட்சியங்களை அழிக்க காசியின் தந்தை தங்கபாண்டியன் முயன்றதாக சிபிசிஐடி போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.
தங்கபாண்டியன் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.
விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்
சிங்கப்பூரில் இருந்து 3 செயற்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் இன்று ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்டது என்று ஏ.என்.ஐ முகமை செய்தி தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவின் வளர்ச்சிக்காகவே இந்த முடிவு - ஏக்நாத் ஷிண்டே
மகாராஷ்டிராவின் புதிய முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்கவுள்ள நிலையில், இந்த முடிவு பால் தாக்கரேவின் இந்துத்துவா மற்றும் மகாராஷ்டிராவின் வளர்ச்சி பணிக்காக எடுக்கப்பட்டது என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், “ எங்களிடம் 50 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவிடம் முன்பு எங்கள் தொகுதி பிரச்னைகள் குறித்து பேசினோம். நாங்கள் பாஜகவுடன் இணைய வலியுறுத்தினோம்,” என்றார்.
பிரதமர் நரேந்திர மோதிக்கும், பாஜகவுக்கும் நன்றி தெரிவித்த அவர், பால் தாக்கரேவின் கட்சி தொண்டரை மாநிலத்தின் முதலமைச்சராக்கியுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆந்திராவில் ஆட்டோ மீது மின் கம்பி அறுந்து விழுந்து 5 பேர் உயிரிழப்பு
ஆந்திராவில் ஆட்டோ மீது உயர் மின் அழுத்த கம்பி அறுந்து விழுந்து தீ விபத்து ஏற்பட்டு 5 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்தியசாய் மாவட்டத்தில் நடந்துள்ள இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் விவசாய தொழிலாளர்கள் என்றும் 11 பேருடன் வேலைக்காக ஆட்டோவில் சென்றதாக முதல்கட்ட தகவல் தெரிவித்துள்ளது.
இந்த விபத்து குறித்து ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வருத்தத்தை தெரிவித்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளார். இதில் 5 லட்சம் ரூபாய் உடனடி நிதி உதவியாக வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஆந்திரப் பிரதேச தெற்கு மின் விநியோக நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஹரிநாதராவ் கூறுகையில், அணில் ஒன்று மின்கம்பத்தில் ஏறியதை அடுத்து மின் கம்பி அறுந்து விழுந்ததாகவும், இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என்றும் இந்த விபத்தை குறித்து விசாரணை நடத்தி உடனடி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மனிதகுலம் தோன்றியது எப்போது? - புதிய வெளிச்சம் பாய்ச்சிய ஆராய்ச்சி
வந்துகொண்டிருக்கும் செய்தி, மகாராஷ்டிராவின் புதிய முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்கவுள்ளதாக அறிவிப்பு
மகாராஷ்டிராவின் முதலமைச்சராக இருந்த உத்தவ் தாக்கரே பதவி விலகிய நிலையில், இன்று ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிராவின் புதிய முதலமைச்சராக பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் பட்னவிஸ், தான் அரசாங்கத்தில் அங்கம் வகிக்க போவதில்லை என்றும் ஆனால் வெளியில் இருந்து முழு ஆதரவு வழங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, புதன்கிழமை இரவு 9:30 மணியளவில் ஃபேஸ்புக் நேரலையில் பேசிய உத்தவ் தாக்கரே, தனது முதல்வர் பதவியையும், சட்ட மேலவை பதவியையும் ராஜிநாமா செய்வதாக அறிவித்தார்.
ஏக்நாத் ஷிண்டே உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக கலகம் செய்து அவர் ஆட்சியை இழக்க காரணமான சிவசேனா கிளர்ச்சி எம்எல்ஏக்கள் குழுவின் தலைவர் ஆவார்.
இவர் உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி அமைச்சரவையில் அங்கம் வகித்தவர்.
நான்கு இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடி வருகை
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை வவுனியா மாவட்டத்தில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் அகதிகளாக தனுஷ்கோடி வந்துள்ளனர்.இலங்கை தமிழர்களை மீட்ட கடலோர காவல்துறையினர் ராமேஸ்வரம் கடலோர காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைக்கு பின்னர் 4 பேரையும் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்படுவார்கள்.
தற்போது வரை இலங்கை தமிழர்கள் 96 பேர் அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர்.
உள்ளாட்சிகளுக்கான தற்செயல் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் யாரும் போட்டியிடாதது ஏன்?