ரிலையன்ஸ் ஜியோ குழுவில் இருந்து முகேஷ் அம்பானி விலகல்

முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் ஜியோ நிர்வாக இயக்குநர்கள் குழுவில் இருந்து விலகியுள்ளார். அவருடைய மகன் ஆகாஷ் அம்பானி தலைவர் பொறுப்பை ஏற்க உள்ளார் என்று பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஜோ மகேஸ்வரன்

  1. பெல் வளாகத்தில் செயல்பட்டு வரும் பள்ளியில் இந்தி திணிப்பு எனக்கூறி முற்றுகைப் போராட்டம்

    பெல் வளாகத்தில் செயல்பட்டு வரும் பள்ளியில் இந்தி திணிப்பு எனக்கூறி முற்றுகைப் போராட்டம்

    திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பெல் (BHEL) நிறுவன வளாகத்தில் ஆர்.எஸ்.கே பள்ளி மற்றும் பெப் பள்ளி ஆகியவை செயல்பட்டு வருகின்றன.

    பெல் நிர்வாகம் தோன்றியபோது அதன் முதல் செயலாண்மை இயக்குனராக இருந்த ஆர்.எஸ். கிருஷ்ணனின் நினைவாக ஆர்.எஸ்.கே. என்ற பெயரில் பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இந்தப் பள்ளியில் மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பாடத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

    இந்நிலையில் ஆர்எஸ்கே பள்ளியை நிர்வகிக்க 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தனியார் கல்வி நிறுவனங்கள் ஒப்பந்தம் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகிறது.

    பெல் வளாகத்தில் செயல்பட்டு வரும் பள்ளியில் இந்தி திணிப்பு எனக்கூறி முற்றுகைப் போராட்டம்

    தற்போது ஆர்.எஸ்.கே., பள்ளியைடி.ஏ.வி., எனப்படும் தயானந்த ஆங்கில வேதிக் பள்ளி 10 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்து பள்ளியை நடத்தி வருகிறது.

    இந்நிலையில் பள்ளியில் இந்தி மொழியில் நமஸ்தே நமஸ்காரம் சொல்லும் வழக்கத்தை திணிப்பதைக் கண்டித்தும் மதம் சார்ந்த கடவுள் வழிபாட்டை ஊக்குவிப்பதற்கும்தமிழ் பாடத்தைத் தடை செய்யும் போக்கு, இந்தி மொழி திணிப்பு, சிப்ட் முறையில் வகுப்புகள் ஆகியவற்றைக் கண்டித்து அனைத்திந்திய மாணவர் பெருமன்ற திருவெறும்பூர் ஒன்றிய தலைவர் கபிலன் தலைமையில் ஆர் எஸ் கே பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தின் போது காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அமைதிப் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காணப்படலாம் என போலீசார் கூறியதையடுத்து சமரச பேச்சுவார்த்தைக்கு உட்பட்ட போராட்டக்காரர்கள் தற்காலிகமாக போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இந்த முற்றுகைப் போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட், திராவிட கழகம், மதிமுக மற்றும் தமிழ் தேசிய பேரியக்கத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

  2. இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த மேலும் 47 பேர் கைது

    இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த மேலும் 47 பேர் கைது

    பட மூலாதாரம், Sri Lanka Navy Media

    இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியா நோக்கிப் பயணிக்க முயன்ற மேலும் 47 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    நீர்கொழும்பை அண்மித்த கடற்பரப்பில் நேற்றிரவு நடத்தப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவிக்கின்றது.

    குறித்த கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமான படகொன்று பயணிப்பதை அவதானித்த கடற்படையினர், அந்தப் படகைச் சுற்றி வளைத்து சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

    இந்நிலையில், குறித்த படகிலிருந்து சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவிற்கு குடியேற முயன்ற 47 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

    இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த மேலும் 47 பேர் கைது

    பட மூலாதாரம், Sri Lanka Navy Media

    இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 34 ஆண்களும் 6 பெண்களும் 7 குழந்தைகளும் அடங்குகின்றனர்.

    அத்துடன், ஆட்கடத்தலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வென்னப்புவ, நாத்தான்டி, சிலாபம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த ஆண்டின் இதுவரையான காலம் வரை, சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குச் செல்ல முயன்ற 497 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  3. மதுரையில் மாஸ்க் அணியாமல் சென்றால் 500ரூ அபராதம்

    mask

    பட மூலாதாரம், Getty Images

    தமிழகத்தில் சமீப நாட்களாக கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் மதுரையில் மாஸ்க் அணியாமல் சென்றால் இன்று முதல் 500ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  4. வணக்கம் நேயர்களே!

    நேயர்களுக்கு வணக்கம்!

    நான் விஷ்ணுப்ரியா ராஜசேகர். தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் பிற உலக நாடுகளில் நிகழும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலை பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    தொடர்ந்து இணைந்திருங்கள்.