ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியது ஏன்? - திருச்சி மாவட்ட செயலாளர் கேள்வி
எடப்பாடி பழனிச்சாமி ஜாதி, மதம் பாராமல் பணியாற்றுவார் என நம்புகிறோம் என்று முன்னாள் எம்பி ப.குமார் தெரிவித்துள்ளார்.
திருச்சி சுப்ரமணியபுரத்தில் அதிமுக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்.பியுமான ப.குமார் செய்தியாளர்களிடம் இன்று கூறுகையில், ''ஒபிஎஸ் தான் சார்ந்த முக்குலத்தோர் சமுதாயத்திற்கு எந்த காலத்திலும் ஒரு நன்மையும் செய்ததில்லை. தற்போது அதிமுகவில் முக்குலத்தோர் சமுதாய மாவட்ட செயலாளர்கள் 19 பேர் உள்ளனர். அவர்களில் 2 பேர் தவிர மற்ற 17 பேரும் எடப்பாடியின் தலைமையை ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.
எடப்பாடி பழனிச்சாமி ஜாதி, மதம் பாராமல் பணியாற்றுவார் என நம்புகிறோம். சசிகலாவை முதல்வராக விடாமல் ஓபிஎஸ் தர்மயுத்தம் செய்தது ஏன்?' என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், 'ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டனர். 95 சதவீத அதிமுக தொண்டர்கள் இபிஎஸ் பக்கம் தான் இருக்கின்றனர்.
வரும் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும். ஓபிஎஸ், டிடிவி, சசிகலா சுற்றுப்பயணங்களால் அதிமுகவில் எந்த மாற்றமும் ஏற்படாது.' என்றார் ப.குமார்.