இலங்கை ராணுவத்துக்கு பயந்து பத்து மணிநேரத்துக்கு மேலாக மன்னார் காடுகளில் மறைந்து இருந்து குழந்தைகளுடன் இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடி வந்துள்ளனர்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக இரு நாட்டு கடற்படை பாதுகாப்பையும் மீறி நேற்று நள்ளிரவில் வவுனியா மற்றும் திருகோணமலை பகுதிகளிலிருந்து இரண்டு குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள், பெண்கள் உட்பட 7 இலங்கை தமிழர்கள் தனூஷ்கோடி அரிச்சல் முனைப்பகுதிக்கு பைபர் படகில் வந்து இறங்கினார்கள்.
இலங்கை ராணுவத்தின் கைது நடவடிக்கைக்கு பயந்து மன்னார் காடுகளில் சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக இருளில் பதுங்கியிருந்து உயிர் தப்பி வந்ததாகவும், காடுகளில் மறைந்து இருந்த போது கை கால்களில் காயம் பட்டதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.
மேலும், தனது குழந்தையின் தொண்டை அறுவை சிகிச்சைக்கு ரூபாய் 5 லட்சம் செலவாகும் என்பதால் தமிழ்நாடு முதலமைச்சர் என் குழந்தையை காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையில் தமிழகம் வந்ததாகவும் தெரிவித்தனர்.
மத்திய மாநில உளவுத் துறை மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் விசாரணைக்குப் பின்னர் இவர்கள் 7 பேரையும் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதம் 22-ஆம் தேதி முதல் இன்றைய தினம் வரை இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு அகதிகளாக 25 குடும்பத்தை சேர்ந்த 90 இலங்கை தமிழர்கள் வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.