பிரதமர் நரேந்திர மோதிக்கு மு.க ஸ்டாலின் கடிதம்
மாநிலங்களுக்கிடையேயான கவுன்சில் கூட்டத்தை ஆண்டுக்கு மூன்று முறை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோதிக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
எம்.ஆர். ஷோபனா
நன்றி நேயர்களே!
இன்றைய நேரலை இத்துடன் நிறைவு பெறுகிறது. இன்று நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இதோ:
- அதிமுகவில் ஒற்றைத்தலைமை என்பது தற்போதைய சூழ்நிலையில் தேவையில்லை என்று கூறியிருக்கிறார் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்.
- மாநிலங்களுக்கிடையேயான கவுன்சில் கூட்டத்தை ஆண்டுக்கு மூன்று முறை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோதிக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
- அதிமுகவில் இரட்டைத் தலைமையே நீடிக்க வேண்டும் என்றும், ஒற்றைத் தலைமை ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம் எனவும் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
- இலங்கையில் அரச பாடசாலை மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
- அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிகாரில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்திலும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி தலைமையில் இன்று காங்கிரஸ் கட்சியினர் சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து முறையிட்டனர்.
- இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில்12,213 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
- ஜூன் 23ஆம் தேதி சென்னையில் நடக்கவிருக்கும் அ.தி.மு.கவின் பொதுக் குழுவுக்குத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரித் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உரிமையியல் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.
- உத்தர பிரதேச மாநிலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்டவர்களின் வீடுகள் புல்டோசர் வைத்து இடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அம்மாநில அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது.
தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறிப்பாக, இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய பிபிசி தமிழ் இணையதளம், முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இணைந்திருங்கள். நன்றி.
இலங்கையில் பரவும் இன்ஃப்ளூயன்சா ஏ வைரஸ் - அறிகுறிகள் என்ன?
"எங்களின் ராணுவ கனவை அக்னிபத் கலைத்து விடும்" - வேலூரில் கதறிய இளைஞர்கள்
வந்துகொண்டிருக்கும் செய்தி, காங்கிரஸ் ஊடகப்பிரிவு பொதுச்செயலாளர் பொறுப்புக்கு ஜெய்ராம் ரமேஷ் நியமனம் - ரந்தீப் சூர்ஜேவாலா விடுவிப்பு
காங்கிரஸ் ஊடகப்பிரிவு மற்றும் கட்சியின் சமூக ஊடகங்கள் பிரிவு பொதுச்செயலாளர் பதவி வகித்து வந்த ரந்தீப் சூர்ஜேவாலா அப்பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார். அவர் தற்போது வகித்து வரும் கர்நாடகா காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் பதவியை மட்டும் கவனிப்பார் என்று அக்கட்சி மேலிடம் தெரிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து ஊடகப்பிரிவு பொதுச்செயலாளர் பதவிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
மன்னார் வளைகுடா கடல்பகுதியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய அரியவகை ஆண் கடல் பசு

பட மூலாதாரம், MANDAPAM FOREST DEPARTMENT
ராமநாதபுரம் அருகே மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இன்று இறந்த நிலையில் அரிய வகை ஆண் கடல் பசு கரை ஒதுங்கியது. அதனை வனத்துறையினர் உடல் கூராய்வு செய்த பிறகு மணலில் புதைத்தனர்.
கடல் பசு என்பது கடலின் ஆழமான மீன் பிடிப்பகுதிகளில் காணப்படும் தாவரங்களை உண்டு வாழும் ஓர் அரிய வகை கடல் வாழ் உயிரினம். மன்னார் வளைகுடாப் பகுதியில் கடல் பசுக்கள் அதிக அளவில் வாழ்ந்து வந்தன. ஆனால் கடந்த 2018-19 ஆம் ஆண்டு வனத்துறையினர் எடுத்த கணக்கெடுப்பில் 70 முதல் 140 கடல் பசுக்கள் மட்டுமே தற்போது வாழ்ந்து வருவது தெரிய வந்தது. கடல் பசுவின் இறைச்சி சுவைமிக்கதாக இருப்பதால், சிலர் கடல் பசுகளை வேட்டையாடி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மாலை ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அடுத்த காந்தி நகர் கடற்கரை பகுதியில் அரியவகை ஆண் கடல் பசு இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது.
இதனையடுத்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள் கடலில் இறந்து கரை ஒதுங்கிய 3 மீட்டர் நீளம், 2 மீட்டர் அகலம், 500 கிலோ எடை கொண்ட 30 வயது மதிக்கதக்க ஆண் கடல் பசுவை கரைக்கு எடுத்து வந்தனர். பின்னர், கால்நடை மருத்துவர்களால் உடல் கூராய்வு செய்யப்பட்ட பின் கடற்கரை அருகில் உள்ள மணல் பகுதியில் புதைத்தனர்.
ஒற்றைத் தலைமை ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம் - ஓ. பன்னீர் செல்வம்

பட மூலாதாரம், Getty Images
அதிமுகவில் இரட்டைத் தலைமையே நீடிக்க வேண்டும் என்றும், ஒற்றைத் தலைமை ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம் எனவும் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் சர்ச்சையை எழுப்பியுள்ள நிலையில், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
மேலும் அவர் பேசுகையில்,”கட்சியின் பொதுச்செயலாளரை தேர்தல் முறையில்தான் தேர்வு செய்ய முடியும். நிர்வாகிகளால் தேர்வு செய்ய முடியாது. துணை முதலமைச்சர் பதவிக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பதால் முதலில் அப்பதவியை ஏற்க மறுத்தேன். முதலமைச்சருக்கு இருக்கும் பிரத்யேக அதிகாரம் துணை முதலமைச்சருக்கு இல்லை என்றாலும், பிரதமர் நரேந்திர மோதியின் வேண்டுகோளுக்கு இணங்க அப்பதவியை ஏற்றுக்கொண்டேன்.” என்று தெரிவித்துள்ளார்.
பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக எடப்பாடி பழனிசாமியும் நானும் கலந்து பேசி முடிவு எடுத்தால், பொதுக்குழுவில் எந்த பிரச்சனையும் வராது என்று அவர் கூறியுள்ளார்.
காவிரி: டெல்லியில் தமிழ்நாடு விவசாயிகள் மீண்டும் போராட்டம்
பெண்களுக்கு கருத்துச் சொல்ல உரிமை இல்லையா? - திவ்யா ஸ்பந்தனா கேள்வி

பிரதமர் நரேந்திர மோதிக்கு மு.க ஸ்டாலின் கடிதம்

பட மூலாதாரம், FACEBOOK/M.K.STALIN
மாநிலங்களுக்கிடையேயான கவுன்சில் கூட்டத்தை ஆண்டுக்கு மூன்று முறை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோதிக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இந்த கூட்டம் கடந்த 2016ம் ஆண்டு முதல், ஒருமுறை மட்டுமே நடந்ததாக அவர் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், மாநிலங்களுக்கிடையேயும் மற்றும் ஒன்றிய-மாநிலங்களுக்கிடையேயும் உள்ள கருத்து வேறுபாடுகளை களைந்து, கூட்டாட்சி உறவை வலுப்படுத்த இந்த கூட்டத்தை ஆண்டுக்கு மூன்று முறை நடத்த வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
போட்டி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 13 ஆயிரம் நூல்களை வழங்கிய எம்.பி வெங்கடேசன்

தமிழகத்தில் எம்.பி நிதியிலிருந்து போட்டி தேர்வு எழுதும் மாணவர்களுக்காக 13 ஆயிரம் நூல்களை வழங்கியுள்ளார் மதுரை எம். பி வெங்கடேசன்.
இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய வெங்கடேசன், “மதுரை மாவட்டத்தில் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் அனைத்து மாணவர்களுக்கு ஓர் உரிய நியாயம் வழங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் சில முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.
போட்டித் தேர்வுகளை எழுதுவதற்கான வாய்ப்பு கிராமப்புற மாணவர்களுக்கு அரிதாக இருக்கிறது” என்று கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், “இன்றைக்கு மதுரை மாவட்டத்தில் இருக்கின்ற 85 நூலகங்கள் மாவட்ட மைய நூலகம்,முழு நேர நூலகம், நகர்ப்புற நூலகம், பகுதி நேர நூலகங்கள் என்று பல அடுக்குகளில் இருக்கிற ஒவ்வொரு நூலகங்களுக்கும் போட்டித் தேர்வுகளுக்கான ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் 164 நூல்கள் தொகுப்புகள் வழங்கப்படவிருக்கின்றன. இதன் அடிப்படையில் சுமார் 13 ஆயிரம் நூல்கள் வாங்கப்பட்டுள்ளன. அனைத்து மாணவர்களுக்கும் அவர்கள் கைக்கு எட்டும் தூரத்தில் அனைத்து போட்டித் தேர்வுக்கான கருவி நூல்கள் இருக்க வேண்டும் என்ற ஒரு கனவில் உடைய வடிவமாக இந்தத் திட்டத்தை நாங்கள் அமல்படுத்தி உள்ளோம்,” என்றார்.
ஈரோடு சிறுமியின் கருமுட்டைகளை விற்பனை செய்த வழக்கில் இடைத்தரகருக்கு ஒரு நாள் போலீஸ் காவல்

படக்குறிப்பு, இடைத்தரகர் மாலதி (கோப்புப் படம்) ஈரோடு மாவட்டத்தில் 16 வயதான சிறுமியின் கருமுட்டைகளை விற்பனை செய்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் இதுவரை சிறுமியின் தாயார் அவரது இரண்டாவது கணவர், இடைத்தரகர் மற்றும் ஆதார் அட்டையில் திருத்தம் செய்து கொடுத்தவர் ஆகிய நான்கு பேரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சிறுமியின் தாய் இந்திராணி அவருடைய இரண்டாவது கணவர் சையத் அலி மற்றும் இடைத்தரகர் மாலதி ஆகியோர் 15 நாள் நீதிமன்ற காவல் முடிவடைந்து இன்று மீண்டும் ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதில் இடைத்தரகர் மாலதியை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க காவல்துறையினர் அனுமதி கோரி இருந்தனர்.
இந்நிலையில் மாலதியை ஒரு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அனுமதியளித்துள்ளது.
அதிமுக நெருக்கடி: இ.பி.எஸ் இல்லாமல் ஓ.பி.எஸ் நடத்திய கூட்டம் - நடந்தது என்ன?
இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு - பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு

இலங்கையில் அரச பாடசாலை மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை இன்று கல்வி அமைச்சு வெளியிட்டது.
நாட்டிற்குள் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாகவே, இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாளைய தினம் முதல் எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு வெள்ளிகிழமைகளில் அரச நிறுவனங்களுக்கு விடுமுறை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, வெள்ளிகிழமைகளில் அரச விடுமுறை வழங்கும் சுற்று நிரூபம் இன்று வெளியிடப்பட்டது.
அத்தியாவசிய சேவைகளை தவிர்த்து, ஏனைய அனைத்து சேவைகளுக்கும் இவ்வாறு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
வேலூர் - ராணுவ உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் போராட்டம்

ராணுவ உடல் தகுதி தேர்வில் தேர்வான இளைஞர்கள், மத்திய அரசு அறிவித்த ‘அக்னிபத்’ திட்டத்தை ரத்து செய்யக் கோரியும், தங்களுக்கு எழுத்து தேர்வு நடத்த கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு தற்போது அறிவித்துள்ள ‘அக்னிபத்’ திட்டத்தை ரத்து செய்ய கோரி வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சத்துவாச்சாரியில் உள்ள வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தேசிய கொடியுடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 2019 ஆம் ஆண்டு இந்திய ராணுவத்திற்காக ஆட்களை சேர்க்க திருவண்ணாமலையில் நடைபெற்றது. அப்போது, இவர்களது கல்விச் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு உடல் தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டு, மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. இதில், தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான பொது நுழைவு தேர்வு இரண்டு முறை அறிவிக்கப்பட்டு பல்வேறு நிர்வாக காரணங்களால் தற்போது வரை நடத்தப்படாமல் உள்ளது. குறிப்பாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பொது முடக்கம் காரணமாக தேர்வு நடத்தப்படாமல் உள்ளது.
இந்த நிலையில், ராணுவ உடல் தகுதி தேர்வில் தேர்வான இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அக்னிபத்: மோதி அரசின் திட்டத்தால் யாருக்கு பயன்?
தூத்துக்குடி: சாதிய உணர்வை தூண்டும் வகையில் பேசிய ஆசிரியர்கள் தற்காலிக பணியிடை நீக்கம்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே குளத்தூர் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில், உதவி தலைமை ஆசிரியை உட்பட இரண்டு ஆசிரியர்கள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.குளத்தூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவரிடம், அதே பள்ளியைச் சேர்ந்த உதவி தலைமை ஆசிரியையான கலைச்செல்வி, ஆசிரியரான மீனா இருவரும் சாதிய உணர்வை தூண்டும் வகையில் பேசும் ஆடியோ கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வெளியானது.
இதையடுத்து, இருவரையும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் தனியார் ரயில்: கோவை - ஷீரடி ரயில் ஏன் சர்ச்சைக்குள்ளாகிறது?
அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இளைஞர்களின் கோரிக்கை சரியே - அரவிந்த் கேஜ்ரிவால்

பட மூலாதாரம், Getty Images
அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இளைஞர்களின் கோரிக்கைகள் சரியானவை என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அவர் பதிவிட்ட ட்வீட்டில், "ராணுவத்தில் ஆட்சேர்க்கைக்கு மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய திட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. இளைஞர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். அவர்களின் கோரிக்கைகள் சரியே. இந்த நாட்டின் பெருமை ராணுவம். இளைஞர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதையும் ராணுவத்திற்கு அர்பணிக்க விரும்புகின்றனர். அவர்களின் கனவுகளை 4 ஆண்டுகளுக்கு மட்டும் என கட்டிப்போடாதீர்கள்," என்று தெரிவித்துள்ளார்.
சூரிய ஒளியில் ஓவியம்; பள்ளிக்கால விளையாட்டால் புதுமை படைக்கும் ஓவியர்
சூரிய ஒளியில் உருப்பெருக்கி லென்சைக் காட்டி, அதன் மூலம் காகிதத்தை எரித்து விளையாடுவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆனால், அப்படி எரித்து ஓவியமும் வரைய முடியும், அதன் மூலம் வாழ்வையும் நகர்த்த முடியும் என்று நமக்கு நிரூபிக்கிறார், இந்த மயிலாடுதுறை இளைஞர் விக்னேஷ். பள்ளிக்காலத்து விளையாட்டைத் தன் வாழ்வாகவே இவர் வரித்துக்கொண்டது எப்படி? அவரே சொல்கிறார் கேளுங்கள்.
காணொளிக் குறிப்பு, சூரிய ஒளியால் படம் வரையும் மயிலாடுதுறை இளைஞர்
