அதிமுகவில் ஒற்றை தலைமையாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தான் வர வேண்டும் என, ராமநாதபுரத்தில் அதிமுகவினர் சுவரொட்டி ஒட்டியுள்ளனர்.
அதிமுகவில் ஒற்றை தலைமை உருவாக வேண்டும் என்பது குறித்து நேற்று சென்னையில் நடந்த அக்கட்சியின் கூட்டத்தில் விவாதம் எழுந்துள்ள நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் அதிமுகவினர், “அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும், அது ஓபிஎஸ் தலைமையாக இருக்க வேண்டும்” என்ற வாசகங்களுடன் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.
அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகிற 23ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தை எவ்வாறு நடத்துவது, என்னென்ன தீர்மானங்களை கொண்டு வருவது என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிப்பதற்காக அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகளில் பலர் அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என கோரிக்கை வைத்ததாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ராமநாதபுரத்தில் “அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும், அது ஓபிஎஸ் தலைமையாக இருக்க வேண்டும்” என்ற வாசகங்களுடன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
இதேபோன்று, தேனி மாவட்டத்திலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.