தமிழ்நாடு காவல்துறை மீதான குற்றச்சாட்டுகள் அதிகரிப்பு: உயர்நீதிமன்றம் அதிருப்தி
தமிழ்நாட்டில் காவல்துறையினர் மீதான குற்றச்சாட்டுகள் அதிகரித்திருப்பதாகவும் இது தொடர்பாக தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன ? என்றும் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
ஜோ மகேஸ்வரன்
இன்றைய நேரலை நிறைவு பெறுகிறது
வணக்கம்.
இன்றைய நேரலை இத்துடன் நிறைவு பெறுகிறது. தொடர்ந்து நேரலைப் பக்கத்தில் இணைந்திருந்தமைக்கு நன்றி.
இதுவரையிலான இன்றைய முக்கிய நிகழ்வுகள்.
- நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பான விசாரணைக்காக, அமலாக்கத்துறை விசாரணைக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, இன்று மீண்டும் ஆஜராகினார். விசாரணை குறித்து ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
- தமிழ்நாடு திருச்சியில் இருந்து பலாலிக்கு விமான சேவையும் புதுச்சேரி-யாழ்ப்பாணம் இடையே பயணிகள், சரக்கு கப்பல் சேவைக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- நாட்டில் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் புதிதாக 10 லட்சம் பேருக்கு இந்திய அரசுப்பணியில் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என, பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.
- தமிழ்நாட்டிலிருந்து இயக்கப்படும் முதல் தனியார் ரயில் கோயம்புத்தூரில் இருந்து மகாராஷ்டிர மாநிலம் ஷீரடிக்கு இன்று மாலை புறப்பட்டது. இதற்கு தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
- சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவிற்கான ஆலோசனைக் கூட்டத்தில், ஒற்றைத் தலைமை வேண்டும் என்று பெரும்பான்மையானவர்கள் கூறியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
- குடியரசுத் தேர்தல் குறித்து மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி டெல்லியில் நாளை நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி பங்கேற்கிறது. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை மமதா சந்தித்தார்.
- தமிழ்நாட்டில் காவல்துறையினர் மீதான குற்றச்சாட்டுகள் அதிகரித்திருப்பதாகவும் இது தொடர்பாக தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன ? என்றும் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.
தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறிப்பாக, இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய பிபிசி தமிழ் இணையதளம், முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இணைந்திருங்கள். நன்றி.
புதுச்சேரி முதலமைச்சர் தள்ளப்பட்ட விவகாரம்: காவல் அதிகாரி ஆயுதப்படைக்கு மாற்றம்

புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமியை தள்ளியதாக கூறப்படும் விவகாரத்தில் அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரியை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து காவல்துறை தலைமையகம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள வில்லியனூர் பகுதியில் உள்ள திருக்காமேஸ்வரர் கோயிலில் கடந்த 11ஆம் தேதியன்று நடைபெற்ற தேர்த் திருவிழா நடைபெற்றது. இத்திருவிழாவிற்குத் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்டபலர் பங்கேற்றனர்.
அப்போது தேரை இழுப்பதற்கு முன்னதாக கூட்ட நெரிசல் சிக்கி நிலை தடுமாறிய உள்துறை அமைச்சரின் பாதுகாவலரான ராஜசேகர், முதலமைச்சர் ரங்கசாமியை தள்ளியதாக கூறப்படுகிறது. கடும் சர்ச்சையாக மாற்றி இச்சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், முதலமைச்சரின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவின் பேரில் இச்சம்பவத்தில் தொடர்புடைய உள்துறை அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரியான உதவி ஆய்வாளர் ராஜசேகரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து காவல்துறை தலைமையகம் உத்தரவிட்டுள்ளது.
பஞ்சாப் பாடகர் கொலை வழக்கில், லாரன்ஸ் பிஷ்னேய் டெல்லியில் கைது
பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கொலை வழக்கில், லாரன்ஸ் பிஷ்னேய் டெல்லியில் இன்று கைது செய்யப்பட்டார்.
பஞ்சாப் பாடகரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான சித்து மூஸ்வாலா கடந்த மே 29ம் தேதி மான்சாவில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பஞ்சாப் அரசு மே 28ம் தேதி மத, அரசியல் தலைவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் என மொத்தம் 424 விஐபிக்களுக்கு அளித்துவந்த பாதுகாப்பை விலக்கிக்கொண்டது அல்லது பாதுகாப்பை குறைத்துக்கொண்டது.
அவ்வாறு பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டவர்களில் சித்து மூஸ்வாலாவும் ஒருவர். லாரன்ஸ் பிஷ்னோய் என்பவருக்கு இந்த கொலையுடன் தொடர்பிருப்பதாகவும், அவர் தலைமையிலான கும்பலைச் சேர்ந்த கனடாவில் உள்ள கோல்டி பிரார் என்பவர் இக்கொலைக்கு ஃபேஸ்புக் வாயிலாக பொறுப்பேற்றிருப்பதாகவும் பஞ்சாப் காவல்துறை தெரிவித்தது.
இந்நிலையில், சித்து மூஸ் வாலா கொலை வழக்கில் லாரன்ஸ் பிஷ்னோயை பஞ்சாப் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவரை டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
X பதிவை கடந்து செல்லX பதிவை அனுமதிக்கலாமா?எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காதுஇந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
மண்டபம் முகாமில் இலங்கைத் தமிழர்கள் உண்ணாவிரதம் - உணவுப்படி நிறுத்தப்பட்டதால்

படக்குறிப்பு, கோப்பு படம் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் உணவு தொகை வழங்காததை கண்டித்து இலங்கை அகதிகள் இருவர் குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கைக்கு கடந்த 2019ஆம் ஆண்டு, தனுஷ்கோடி கடல் வழியாக படகில் செல்ல முயன்ற இரண்டு குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதில், திருகோணமலை பகுதியைச் சேர்ந்த டிலக்சனா, சந்திரமதி ஆகிய இருவரையும் அவர்களது இரு குழந்தைகளுடன் மண்டபம் அகதிகள் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் .
இவர்களுக்கு தினசரி வழங்கப்படும் உணவு தொகையான 175 ரூபாய் மண்டபம் அகதிகள் முகாம் தனி ஆட்சியர் நிறுத்தியதாக கூறி இன்று காலை முதல் குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கும்பகோணத்தில் காதல் ஜோடியை கொன்ற உறவினர்கள் - சாதி ஆணவக் கொலையா ?
YouTube பதிவை கடந்து செல்லGoogle YouTube பதிவை அனுமதிக்கலாமா?எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
கும்பகோணம் அருகே சோழபுரத்தில் காதல் திருமணம் முடித்த 5 நாட்களில் இளம் தம்பதி, கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதில், பெண்ணின் சகோதரர் மற்றும் உறவினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட பெண் சரண்யா நர்சிங் படித்து விட்டு கடந்த 4 ஆண்டுகளாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றியுள்ளார். இவரும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மோகன் என்பவரும் காதலித்துள்ளனர்.
இந்த கொலைகள் குறித்து, காவல் கண்காணிப்பாளர் ரவளிப்ரியா, ''குடும்ப பிரச்சனை காரணமாக இந்த படுகொலை நடந்துள்ளது. படுகொலை குறித்து நேரடி சாட்சியங்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம்'' என்கிறார்.
ஏன் இந்த கொலை ? சாதி ஆணவப் படுகொலையா? இந்த காணொளியைப் பாருங்கள்.
ராமேஸ்வரம் விசைப்படகுகள் கடலுக்கு சென்றன - தடைக்காலம் நள்ளிரவு முடிகிறது

மீன்பிடி தடை காலம் இன்று நள்ளிரவுடன் முடிவடைய உள்ள நிலையில், மாலை 4 மணிக்கு மேல் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர்.
இந்திய கடல் பகுதியில், மீன்களின் இனப்பெருக்க காலமான ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை மீன் பிடிக்க மத்திய அரசு தடை விதித்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான தடை கடந்த ஏப்ரல் மாதம் 15-ந்தேதி தொடங்கியது.
இதனால் ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை இன்றி இருந்தனர். மீன்பிடி தடை காலத்தின் போது விசைப்படகுகள், வலைகள், மீன்பிடி சாதனங்களை பழுது பார்க்கும் பணியிலும் மீனவர்கள் ஈடுட்டனர்.
இந்நிலையில், 60 நாட்கள் மீன்பிடி தடை காலம் இன்று நள்ளிரவுடன் முடிவடைய உள்ளது. தமிழ்நாடு மீன் வளத்துறையினரால் வழங்கப்படும் மீன் பிடி அனுமதி சீட்டு பெறாமல், மீன் வளத்துறையினரின் அனுமதியின்றி, இன்று மாலை சுமார் 4 மணிக்கு மேல் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 4 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர்.
முன்னதாக மீனவர்கள் தாங்கள் மீன் பிடிக்க கடலுக்குள் செல்லும் போது இயற்கை பேரிடர்களில் இருந்து காத்து கொள்ளவும், நடுக்கடலில் இலங்கை கடற்படை பிரச்சனையின்றி மீன் பிடிக்க வேண்டும், நல்ல மீன்பாடு கிடைக்க வேண்டும் என பிராத்தனை செய்தனர். விசைப்படகுகளுக்கு வாழை மரம், தோரணம் கட்டி உற்சாகத்துடன் கடலுக்குள் சென்றனர்.
கோவை - ஷீரடி: தமிழ்நாட்டின் முதல் தனியார் ரயில் ஏன் சர்ச்சைக்குள்ளாகிறது?
தமிழ்நாடு காவல்துறை மீதான குற்றச்சாட்டுகள் அதிகரிப்பு- உயர்நீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாட்டில் காவல்துறையினர் மீதான குற்றச்சாட்டுகள் அதிகரித்திருப்பதாகவும் இது தொடர்பாக தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன ? என்றும் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.
தமிழ்நாடு காவலர் குடியிருப்பு ஒன்றில் ஒதுக்கப்பட்ட வீட்டை காலி செய்யும்படி 2014ம் ஆண்டு அனுப்பப்பட்ட நோட்டீசை எதிர்த்து காவல்துறையை சேர்ந்த மாணிக்கவேல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், '2014 ம் ஆண்டிலேயே இடத்தை காலி செய்யுமாறு உத்தரவிட்டு, அதை உயர் நீதிமன்றம் உறுதிசெய்த பிறகும் இந்த ஆண்டுதான் இடத்தை காலி செய்திருப்பதாகவும், இது தொடர்பாக அவர் மீது இப்போதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.' எனறும் சுட்டிக்காட்டினார்.
மேலும், "காவல்துறை உயரதிகாரிகள் தங்களுக்குக் கீழே பணிபுரிபவர்களை உரிய முறையில் கட்டுப்படுத்துவதில்லை. இதனால், காவல்துறையின் மேல் மட்டத்திலிருந்து கீழ் மட்டம்வரை அதிருப்தி நிலவுகிறது" என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
குறிப்பாக "யாரும் வாகனங்களில் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்று விதி இருக்கும்போது காவல்துறையினரின் வாகனங்களில் மட்டும் கறுப்பு ஸ்டிக்கர் இருக்கிறது. 'காவல்துறையினர் வாகனம்' என்ற பெயரைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள். காவல்துறை உயர் அதிகாரி வீடுகளில் 'ஆர்டர்லி' முறை இருக்கிறது.
இப்படியாக காவல்துறையினர் தங்கள் துறையில் இருப்பவர்கள் மீதே அதிகார துஷ்பிரயோகம் செய்கின்றனர். இதுபோன்ற குற்றச்சாட்டுகள் சமீப நாட்களில் அதிகமாகியுள்ளது. இவற்றை பொறுத்துக்கொள்ள முடியாது.
இவை சீரழிவுக்கும் அரசியலமைப்பு சட்ட மீறலுக்கும் வழிவகுக்கும் என்றும் எச்சரித்த நீதிபதி, காவல்துறையினர் செய்த அதிகார துஷ்பிரயோகம் தொடர்பாக அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண அரசு என்ன செய்யவிருக்கிறது என்பது குறித்தும் மாநில அரசு அறிக்கை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். வழக்கின் விசாரணையை ஜூன் 21ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்
இந்திய குடியரசுத் தலைவர் தேர்தல்: சரத் பவார் - மமதா ஆலோசனை

பட மூலாதாரம், TMC
படக்குறிப்பு, சரத் பவார் - மமதா பானர்ஜி சந்திப்பு குடியரசுத் தேர்தல் குறித்து மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை இன்று சந்தித்தார்.
இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து 22 கட்சியின் தலைவர்களுக்கு மேற்கு வங்க முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மமதா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்த ஆலோசனைக் கூட்டம் டில்லியில் நாளை பிற்பகல் 3 மணியளவில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி பங்கேற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்க போவதில்லை என்று அறிவித்துள்ளது.
இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரை மமதா பானர்ஜி டெல்லியில் இன்று சந்தித்து பேசினார். குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளர் குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது.
கேரள முதல்வர் பினராயி விஜயனை எதிர்த்து விமானத்துக்குள் போராட்டம் - பின்னணி என்ன?
அதிமுக ஒற்றைத் தலைமை: பெரும்பான்மையானவர்கள் ஆதரவு - டி.ஜெயக்குமார் பேட்டி

படக்குறிப்பு, டி.ஜெயக்குமார் அதிமுகவிற்கு ஒற்றைத் தலைமை குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இது குறித்து பொதுக் குழுவில் முடிவு செய்யப்படும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் வரும் 23ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய முடிவுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், துணை ஒருங்கிணைப்பாளர்கள் வைத்திலிங்கம், முனுசாமி, முன்னாள் அமைச்சர் பொன்னையன், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு பின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'இன்று நடைபெற்ற கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்தும் விவாதிக்கப்பட்டது. அது ஆரோக்கியமானதாக இருந்தது.
அன்றைக்கிருந்த சூழல் வேறு. இன்றைக்குள்ள நிலை வேறு. ஆகையால், காலத்திற்கு ஏற்ப அதிமுகவிற்கு ஒற்றைத்தலைமை வேண்டும் என்பதை பெரும்பான்மையானவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.'என்றார்.
சசிகலா குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதா? என்கிற கேள்விக்கு, 'கட்சிக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை. கட்சியில் இல்லாத ஒருவர், கிஞ்சித்தும் தொடர்பில்லாதவர் குறித்து விவாதித்து, நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.'என்றார்.
மேலும், 'நூறாண்டுகளுக்கு மேலும் அதிமுக இருக்கும். யார் எதிர்க்கட்சி என்று சொல்லிக் கொண்டாலும், நாங்கள்தான் முதன்மையான கட்சியாக உள்ளோம். மற்றவர்கள் எதிரிக்கட்சிகள் அல்ல. உதிரிக்கட்சிகள்.'என்றார்.

பட மூலாதாரம், ADMK
படக்குறிப்பு, அதிமுக ஆலோசனைக் கூட்டம் 'திரையில் இருந்தாலும் தலைவர்தான்' - கமல்ஹாசன்
சிறையில் இருந்தால்தான் தலைவர் என்று இல்லை. திரையில் இருந்தாலும் தலைவர்தான் என்று மக்கள் நீதி மய்ய தலைவரும் நடிகருமான கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றுள்ளது. இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கமல் ஹாசன், "நான் மீண்டும் நடிக்க சென்று விட்டதாக கூறுகின்றனர்.
சிறையில் இருந்தால்தான் தலைவர் என்று இல்லை. திரையில் இருந்தாலும் தலைவர்தான். காந்திக்கு சினிமா பிடிக்காது. ஆனால், அவரை திரை மூலம் பார்த்தவர்கள் அதிகம்.'என்றார் கமல்.

தமிழ்நாட்டில் 9, 494 ஆசிரியர்கள் இந்த ஆண்டு நியமனம் - அமைச்சர் அன்பில் மகேஷ்

பட மூலாதாரம், DIPR
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் இரவு வரை காத்திருந்து மாணவர்களை சேர்த்து வருகின்றனர். இந்த சேர்க்கையை தக்க வைத்துக் கொள்ள, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
'பள்ளி மாணவர்கள் வகுப்பறைக்கு செல்போன் எடுத்துச் செல்ல அனுமதியில்லை. வகுப்பறையில் மாணவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்படும் செல்போன்கள் திரும்ப வழங்கப்படாது என்பதை உறுதியாக தெரிவித்துள்ளோம்.
ஜிஎஸ்டி வரி நிலுவையைப் பெற்றது போல், நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதில் சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி பெறுவோம்.
இரவு வரை காத்திருந்து அரசுப் பள்ளிகளில் மாணவர்களை பெற்றோர்கள் சேர்த்து வருகின்றனர். இந்த மாணவர் சேர்க்கையைத் தக்க வைத்துக்கொள்ள, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். அந்த வகையில், 9, 494 ஆசிரியர் பணியிடங்கள் இந்த ஆண்டு நிரப்பப்பட உள்ளன.' என்றார்.
இலங்கையில் சிவன் வழிபாட்டு தலத்தை பெளத்த பிக்குகள் ஆக்கிரமிக்க முயற்சி - தமிழர்கள் போராட்டம்

படக்குறிப்பு, இலங்கையில் தமிழர்கள் போராட்டம் முல்லைத்தீவு மாவட்டம் குமுழமுனை பிரதேசத்தில் ஆதி சிவன் வழிபாடு நடந்து வந்த குருந்தூர் மலையில், பௌத்த அடையாளங்களை வைப்பதற்கு பௌத்த பிக்குகள் நேற்று (13) முயற்சித்தனர். அந்தப் பிரதேச தமிழ் மக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராஜா கஜேந்திரன், வினோ நோகராதலிங்கம் ஆகியோரால் தடுத்து நிறுத்தப்பட்டது.
இலங்கை குருந்தூர் மலைப்பகுதியில் பண்டைய காலத்தில் தமிழ் மன்னர்களின் அரண்மனைகள் இருந்ததாக கூறப்படுகிறது. 1932ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் குறித்த பகுதி, தொல்பொருள் இடமாக பிரகடனப்படுத்தப்பட்டது. உள்நாட்டு ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னர், குறித்த இடத்தில் பௌத்த பிக்குகள் ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபட முயற்சித்தனர்.
இதனால் அந்தப் பகுதியில் வழிபாடுகளில் ஈடுபட்டுவந்த தமிழ் மக்களுக்கும், பௌத்த பிக்குகளுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டன. இந்தப் பின்னணியில் 2018ஆம் ஆண்டு இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக அந்தப் பகுதியிலுள்ள தமிழ் மக்கள் - முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தனர்.
இதனையடுத்து அந்தப் பகுதியில் எந்தவிதக் கட்டுமான வேலைகளையும் மேற்கொள்ளக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது. தாது கோபுரத்தில் கலசங்களை அமைத்து, புத்தர் சிலைகளை வைப்பதற்காகவே நேற்றைய தினம் அங்கு பெருமளவிலான பௌத்த பிக்குகள் வந்திருந்தனர்.
ஆனால், அந்த முயற்சிக்கு அந்தப் பகுதியிலுள்ள தமிழ் மக்கள் திரண்டு, எதிர்ப்புக்களை வெளிப்படுத்தினர். நேற்று காலை 8.00 மணி முதல் பிற்பகல் 3.30 மணிவரை, இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியவாறு அங்கு இருந்தனர்.
''குருந்தூர் மலை பிரதேசம் தொல்பொருள் இடமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, அந்த இடம் அப்படியே வைத்துப் பாதுகாக்கப்பட வேண்டுமே தவிர, அங்கு புதிய கட்டுமானங்கள் எதனையும் மேற்கொள்ள முடியாது. ஆனால், தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளரும், அந்தத் திணைக்களம் சார்ந்தோரும் - முழுவதுமாக பௌத்த பிக்குகளுக்கு சார்பாகவும், வரலாற்றைத் திரிபுபடுத்தும் வகையிலும் அங்கே புராதன தாதுகோபுரம் ஒன்று இருந்ததைப் போன்ற தோற்றப்பாடொன்றினைக் காட்ட முற்படுகின்றனர்" என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் பிபிசி தமிழிடம் கூறினார்.

இந்திய ராணுவத்தில் 4 ஆண்டுகால பணி: அக்னிபாத் திட்டம் அறிமுகம்
இந்திய ராணுவத்தில் அக்னி பாத் என்ற திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய ராணுவத்தில் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் குறுகிய கால சேவையாற்றும் அக்னிபாத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தின் மூலம், 4 ஆண்டுகள் ஒப்பந்தத்தில் ராணுவத்தின் முப்படைகளில் பணியாற்ற முடியும். இந்திய அளவிலான தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படும் 17-21வயதிற்கு உட்பட்ட ஆண்கள், பெண்கள் தரைப்படை, விமானப்படை, கப்பல் படை இவற்றில் பணியாற்ற முடியும்.
அவர்களுக்கும் 6 மாத கால பயிற்சியுடன் 4 ஆண்டுகள் பணியாற்றலாம். நான்கு ஆண்டுகளுக்கு பிறகு, விருப்பம் உள்ளவர்கள் நிரந்தரப் பணியிலும் தொடரலாம். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
X பதிவை கடந்து செல்லX பதிவை அனுமதிக்கலாமா?எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காதுஇந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
சுற்றுச்சூழல் தரவரிசையில் இந்தியாவுக்குக் கடைசி இடம்: அதிருப்தியில் இந்திய அரசு – காரணம் என்ன?
இந்திய குடியரசுத் தலைவர் தேர்தல்: மமதா கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்பு
குடியரசுத் தேர்தல் குறித்து மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி பங்கேற்கிறது.
இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து 22 கட்சியின் தலைவர்களுக்கு மேற்கு வங்க முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மமதா பானர்ஜி அழைப்பு விடுத்து, கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்த ஆலோசனைக் கூட்டம், டெல்லியில் நாளை பிற்பகல் 3 மணியளவில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி பங்கேற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்கட்சியின் சார்பில் மூத்த தலைவர்கள் மல்லிகார்ச்சுன கார்கே, ஜெய்ராம் ரமேஷ், ரந்தீப் சிங் சுர்ஜ்வாலா ஆகியோர் பங்கேற்கின்றனர் என்று ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
X பதிவை கடந்து செல்லX பதிவை அனுமதிக்கலாமா?எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காதுஇந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
அதிமுக பொதுக்குழுவிற்கான ஆலோசனைக் கூட்டம்: ஒற்றைத் தலைமை முழக்கத்தால் சலசலப்பு

பட மூலாதாரம், ADMK
படக்குறிப்பு, அதிமுக பொதுக்குழுவிற்கான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவிற்கான ஆலோசனைக் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்த முழக்கத்தால் சலசலப்பு ஏற்பட்டது.
அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் வரும் 23ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய முடிவுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், துணை ஒருங்கிணைப்பாளர்கள் வைத்திலிங்கம், முனுசாமி, முன்னாள் அமைச்சர் பொன்னையன், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பொதுக்குழுவிற்கான, சிறப்பு அழைப்பாளர்கள், கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு அனுமதி உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்ட அரங்கத்திலும், வெளியிலும் ஒற்றைத் தலைமை குறித்து சிலர் முழக்கமிட்டதால், சலசலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது

பட மூலாதாரம், ADMK
படக்குறிப்பு, அதிமுக பொதுக்குழுவிற்கான ஆலோசனைக் கூட்டம் லே லடாக்: உறையும் தண்ணீர்; தவிக்கும் மக்கள் - எப்படி சமாளிக்கிறார்கள்?
