You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

ராகுல் காந்தி மீண்டும் ஜூன் 14இல் விசாரணைக்கு வர அமலாக்கத்துறை உத்தரவு

நேஷனல் ஹெரால்ட் நாளிதழ் தொடர்புடைய பண மோசடி வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை மத்திய அமலாக்கத்துறை இயக்குநரகம் டெல்லியில் உள்ள அதன் அலுவலகத்துக்கு விசாரணைக்கு அழைத்துள்ளது. ராகுல் விசாரணைக்கு அழைக்கப்பட்டதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர் தொடர்ந்து போலீஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஜோ மகேஸ்வரன்

  1. எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகளை முடக்குவதற்காக அமலாக்கத்துறை பயன்படுத்தப்படுகிறது - பீட்டர் அல்போன்ஸ்

    எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகளை முடக்குவதற்காக அமலாக்கத்துறை பயன்படுத்தப்படுகிறது என, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.

    நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து தொலைக்காட்சி சேனல் ஒன்றில் பீட்ட அல்போன்ஸ் பேசுகையில், "சமீப காலமாக அமலாக்கத்துறையின் நடவடிக்கைகளை உற்று கவனித்தால் அது எதற்காக படன்படுத்தப்படுகிறது என்பதை அறியலாம். எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகளை முடக்குவதற்காக அமலாக்கத்துறை பயன்படுத்தப்படுகிறது. பாஜக தலைவர்கள், அக்கட்சியின் கூட்டணி தலைவர்களுக்கு எதிராக இந்த முகமை விசாரணை நடத்தியதில்லை.

    உடல் நலமில்லாமல் இருக்கும் சோனியாவை வேண்டுமென்றே சிரமப்படுத்தும் வகையிலும் ராகுல் காந்தியை முடக்கும் வகையிலும் அமலாக்கத்துறை பயன்படுத்தப்படுகிறது. இதனை காங்கிரஸ் கட்சி அரசியல் ரீதியாக எதிர்க்கிறது. ஏனெனில், இது அரசியல் காரணங்களுக்காக போடப்பட்ட வழக்கு. அதற்காகத்தான் காங்கிரஸ் இதற்காக போராடுகிறது" என தெரிவித்தார்.

  2. வந்துகொண்டிருக்கும் செய்தி, நேஷனல் ஹெரால்டு வழக்கு: அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ராகுல் காந்தி ஆஜர்

    நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக, இன்று டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக புறப்பட்டார் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி.

    அவர் ஆஜராவதற்கு முன்னதாக, செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சி செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, ராகுல் காந்தி மீது பாஜக பொய் குற்றச்சாட்டுகளை சுமத்துவதாகவும், காங்கிரஸை கண்டு பாஜக பயப்படுவதாகவும் குற்றம்சாட்டினார். விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதிப் பேரணி நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

    இந்நிலையில், அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக தன் சகோதரி பிரியங்கா காந்தியுடன் காரில் வந்தார் ராகுல் காந்தி. பின்னர், காரிலிருந்து இறங்கிய ராகுல் காந்தி அமலாக்கத்துறை அலுவலகத்தை நோக்கி கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகளுடன் பேரணியாக சென்றுகொண்டிருக்கிறார். இதில், ப.சிதம்பரம் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

    ராகுல் காந்தி ஆஜராவதை முன்னிட்டு முன்னதாகவே அப்பகுதியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தடுப்புகளும் அமைக்கப்பட்டிருந்தன.

    இதையடுத்து, பேரணியாக வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    இந்நிலையில், அமலாக்கத்துறை அலுவலகத்தை வந்தடைந்தார் ராகுல் காந்தி.

    இதனிடையே, அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி, சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர்.

  3. விசாரணைக் கைதி மரணம் - காவல்துறையை சேர்ந்த 5 பேர் பணியிடை நீக்கம்

    சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி ராஜசேகர் என்பவர் சந்தேகத்திற்கிடமான வகையில் உயிரிழந்த சம்பவத்தில், காவல்துறையை சேர்ந்த 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

    குற்ற வழக்கில் ராஜசேகரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்ததாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை உயரதிகாரிகள் கொடுங்கையூர் காவல் நிலைய போலீசாரிடம் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த விசாரணை சி.பி.சி.ஐ.டி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது என்றும், குற்றவியல் நடுவரின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் சென்னை மாநகரக் காவல்துறை தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், விசாரணைக் கைதி ராஜசேகர் உயிரிழந்த விவகாரத்தில் காவல் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ், உதவி ஆய்வாளர் கன்னியப்பன், தலைமை காவலர்கள் ஜெயசேகர், மணிவண்ணன், முதல்நிலை காவலர் சத்தியமூர்த்தி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

  4. ஆசியாவிலேயே மிக நீளமான தந்தங்களை கொண்ட காட்டு யானை உயிரிழப்பு

  5. தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறப்பு

    தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன.

    பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. சில பள்ளிகளில் வாழை மரங்கள், தோரணம் உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது.

    மேலும், மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்கள், சீருடைகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இன்று முதல் ஏழு நாட்களுக்கு மாணவ, மாணவிகளுக்கு புத்துணர்வு பயிற்சி வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  6. வணக்கம் நேயர்களே!

    நான் நந்தினி வெள்ளைச்சாமி. பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன். தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    குறிப்பாக இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.உங்கள் பகுதியின் சுவாரசியமான செய்திகளைப் பற்றிஎங்கள் டிவிட்டர் கணக்கின் மூலம் தகவல் அளியுங்கள்.