You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் கவலைக்கிடம்
பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் உடல்நலம் கவலைக்கிடமாக உள்ளதாக அவரது அதிகாரபூர்வமான ட்விட்டர் பக்கத்தில், அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
எம்.ஆர். ஷோபனா
நூபுர் ஷர்மா கைதை வலியுறுத்தி போராட்டம், வன்முறை - ஜார்கண்டில் இருவர் பலி
நேயர்களுக்கு வணக்கம்!
இன்றைய நேரலை இத்துடன் நிறைவு பெறுகிறது. இன்று நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இதோ:
- இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 7,584 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதேவேளை, தமிழ்நாட்டில் வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி 219 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
- பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் உடல்நலம் கவலைக்கிடமாக உள்ளதாக அவரது அதிகாரபூர்வமான ட்விட்டர் பக்கத்தில், அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
- முகமது நபி பற்றி பாஜக முன்னாள் நிர்வாகிகள் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கண்டித்து இந்தியாவின் பல நகரங்களில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு நடந்த போராட்டங்களில் வன்முறை வெடித்தது. பல நகரங்களில் போலீசார் மீது கற்கள் வீசப்பட்டன.
- 1,456 மருத்துவ மேற்படிப்பு இடங்களை நிரப்ப சிறப்பு கலந்தாய்வு நடத்த கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததாக, ஏ.என்.ஐ. செய்தி முகமை தெரிவித்துள்ளது.
- ஆன்லைன் ரம்மி ஆட்டத்தினால் ஏற்படும் விளைவுகளைக் கண்டறியவும், அதன் பாதிப்புகளை ஆராயவும் ஓய்வுபெற்ற நீதிபதி கே. சந்துரு தலைமையில் குழு அமைத்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
- யுக்ரேனைச் சேர்ந்த ராணுவ வீரர்களில் தினமும் 100 முதல் 200 பேர் வரை உயிரிழப்பதாக, அந்நாட்டு அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கியின் மூத்த ஆலோசகர் மெகைலோ போடோல்யாக் தெரிவித்துள்ளார்.
- நான்கு மாநிலங்களில் 16 இடங்களுக்கான மாநிலங்களவை தேர்தல் இன்று நடைபெற்றது.
தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள், குறிப்பாக இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய பிபிசி தமிழ் இணைய தளம், முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் பங்கங்களில் இணைந்திருங்கள்.
முகமது நபி பற்றிய சர்ச்சை கருத்து: மோதியின் மெளனம் பற்றி ஹமீது அன்சாரி கருத்து
முகமது நபி தொடர்பாக பாஜகவைச் சேர்ந்த நூபுர் சர்மா, நவீன் ஜிண்டால் தெரிவித்த சர்ச்சை கருத்து விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மெளனம் காத்து வருவது தற்செயலானதல்ல, அதில் ஏதோ அர்த்தம் உள்ளது என்று இந்திய குடியரசு முன்னாள் துணைத் தலைவர் முகமது ஹமீது அன்சாரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிபிசி ஹிந்தி சேவையிடம் கருத்து தெரிவித்த ஹமீது அன்சாரி, “இது மிக முக்கியமான விஷயம்” என்று கூறினார்.
அரபு நாடுகளுடனான பிரதமர் மோதியின் உறவைப் பற்றி ஹமீது அன்சாரி குறிப்பிடுகையில், "பல நாடுகளுடன் பல தொடர்புகளைக் கொண்டிருக்கும் தற்போதைய பிரதமர் இந்த விஷயத்தில் காத்து வரும் மௌனம், தற்செயலானது அல்ல. ஒன்று பிரதமர் அதில் உடன்படவில்லை என்று அர்த்தம் கொள்ளலாம் அல்லது குறைந்தபட்சம் அதை அவர் ஒப்புக்கொள்கிறார் என்றும் கூறலாம். இந்த விஷயத்தில் வெளியுறவுத்துறை அமைச்சரின் கருத்து இன்னும் வரவில்லை," என்று தெரிவித்தார்.
பாஜக செய்தித் தொடர்பாளர்களின் கருத்தானது, முகமது நபியின் ஆளுமை மீதான தாக்குதலாகும், இதை உலகில் எந்த முஸ்லிமும் பொறுத்துக்கொள்ள மாட்டார் என்றும் ஹமீது அன்சாரி தெரிவித்தார்.
இந்திய குடியரசுத் தலைவர் தேர்தல்: பொது வேட்பாளரை நிறுத்த காங்கிரஸ் விருப்பம் - ப.சிதம்பரம் பேட்டி
இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் விருப்பம் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
' குடியரசு தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்பதுதான் காங்கிரசின் விருப்பம். எதிர்கட்சியில் சிலர் மதில் மேல் பூனை போல உள்ளனர். அவர்கள் இணைந்தால் பொது வேட்பாளர் வெற்றி பெறலாம்.' என்றார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், 'தன்னிச்சையாக, தான்தோன்றித்தனமாக செயல்பட்டல் இலங்கைக்கு ஏற்பட்ட நிலைதான் எந்த நாட்டிற்கும் ஏற்படும். மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு இல்லை. கட்சியில் குடும்பத்தில் ஒருவருக்கு பதவி, விசயத்தில் நான் பதவி விலக தயார்.
ஒரே குடும்பத்தில் உள்ளவர்கள் பதவிகளை பெறுவது என்பது காங்கிரஸ் கட்சியில் மட்டும் அல்ல. பா.ஜ.,விலும் உள்ளது . எனவே அந்த நிலை மாற வேண்டும். மாறும். 2024 முதல் மாற்றுவதற்கான நடவடிக்கையில் காங்., கட்சி எடுக்க வேண்டும் என்பது எனது விருப்பம்.உள்நாட்டு நிர்வாகத்தில் மத்திய அரசு முற்றிலும் தோற்று விட்டது.' என்றார்.
மேலும்,
'பெட்ரோல், டீசல் விலையை முன்பே குறைத்திருக்க வேண்டும். பண வீக்கம் 7.5 சதவீதமாக உள்ளது. இது இன்னும் கூடும். உணவு பொருட்கள் மீதான பண வீக்கம் 10 சதவீதமாக உள்ளது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி வட்டியை அதிகரித்திருப்பது மேலும் விலை உயர்வு ஏற்படும். அரசும், ரிசர்வ் வங்கியும் இணைந்து செயல்பட்டு விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டும்.
எ.ஐ.சி., பங்கு விற்பனை என்பது ஒரு சோதனை முயற்சி. குளறுபடி முடிவால் எந்த நேரத்தில் விற்பது என்று தெரியாமல் விற்பனை செய்ததால் விற்ற விலையை விட குறைந்துள்ளது.
2024 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் வலுவான கூட்டணி அமைய வேண்டும். தேர்தல் ஆணையம் மீது நம்பிக்கை குறைந்து வருகிறது. மத்திய அரசு மாநிலங்களுடன் பகிர்ந்தளிக்கும் நிதிகளுக்கான வரிகளை குறைப்பதால், மாநிலங்களுக்குத்தான் இழப்பு ஏற்படும்.
மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்காத நிதி வரவினங்களுக்கான வரியை மத்திய அரசு குறைப்பது இல்லை. ஆளுநர் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு சுதந்திரமாக செயல்பட வேண்டும். மசோதாவை கிடப்பில் போடக்கூடாது.' என்றார்.
புதுச்சேரியில் 'சூப்பர் முதல்வராக' தமிழிசை - முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி
புதுச்சேரியில் 'சூப்பர் முதல்வராக' துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செயல்படுவதாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரியின் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தார்.பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'கடந்த 8 ஆண்டு கால மோடி ஆட்சி சாதனை ஏதுவும் செய்யவில்லை. ரேஷன் கடையில் இலவச அரிசி உள்ளிட்ட காங்கிரஸின் திட்டங்களை, பாஜகவின் திட்டமாக காட்டி வருகின்றனர்.
மதத்தை வைத்து ஆட்சியை பிடிக்கலாம் என்கிற ஒரே திட்டத்தில் பாஜக இருக்கிறது. அமலாக்கத்துறை, சிபிஐயை வைத்து எதிர்கட்சி தலைவர்களை பாஜக மிரட்டுகிறது. வரும் 2024ல் பாராளுமன்ற தேர்தலில் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்தால், பாஜக தோல்வியடையும்.' என்றார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், 'பாஜகவினரின் நபிகள் நாயகம் குறித்த பேச்சு, இந்தியாவிற்கு மற்ற நாடுகள் மத்தியில் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரியின் 'சூப்பர் முதல்வராக' தமிழிசை சவுந்தரராஜன் செயல்படுகிறார். ரெங்கசாமி டம்மி முதல்வராக இருக்கிறார். பெஸ்ட்(best) மாநிலமாக இருந்த புதுச்சேரி வொஸ்ட் (worst) மாநிலமாக மாறியுள்ளது.
ஆதீனங்கள் அரசியல் பேசுவதென்றால் வெளியில் வந்து பேசுங்கள். அதீனங்களுக்குள் அரசியல் பேசுவது சரியில்லை. கோயில்களில் நடைபெறும் சில தவறுகளை அமைச்சர்கள் தடுக்க வேண்டியது, அவர்களின் கடமை. அதனை தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்து வருகிறார்' என்றார்.
BBC தமிழ் இணையதளத்தில் கடந்த சில நாட்களில் வெளியான, நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய செய்திகள்
தமிழ்நாட்டில் இன்று 219 பேருக்கு கொரோனா தொற்று
தமிழ்நாட்டில் இன்று 219 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பொது சுகாதார இயக்குரகத்தின் அறிக்கையில், ' இன்று ஒரு நாளில் மொத்தம் 137 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை தற்போது 1159 ஆகவுள்ளது.' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு மீண்டும் கடனுதவி வழங்கிய இந்தியா
இலங்கை நிதி அமைச்சின் செயலாளர் எம்.சிறிவர்தன, இந்தியாவின் எக்ஸிம் வங்கியுடன் ஒப்பந்தமொன்றில் இன்று கையெழுத்திட்டார்.
65,000 மெட்ரிக் டன் யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்கு இந்திய அரசாங்கத்திடம் கடன் வசதியை இலங்கை அரசாங்கம் கோரியிருந்தது.
சிறுபோக பருவத்தில் யூரியா உர தேவையின் உடனடி தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில் இந்த கடன் வசதி கோரப்பட்டிருந்தது.
இந்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக, இந்தியாவில் இருந்து யூரியா உரம் கொள்முதல் செய்வதற்கு 55 மில்லியன் அமெரிக்க டாலர் கடனை வழங்க இந்திய அரசாங்கம் ஒப்புக்கொண்டது.
இதன்படி, இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நிகழ்வு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தலைமையில் இன்று இடம்பெற்றது
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் பற்றாக்குறையை இலங்கை எதிர்கொண்டுள்ள நிலையில், மக்களுக்கு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதே தமது முன்னுரிமை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
இந்த கடன் வசதி எதிர்வரும் சிறுபோக பருவத்தில் யூரியா கிடைப்பதை உறுதி செய்ய உதவும் என பிரதமர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
புதுச்சேரி வந்த சொகுசு கப்பலுக்கு அனுமதி மறுத்த அரசு - என்ன நடந்தது?
இந்தியா இன்று 'காஷ்மீர்' போல் காட்சியளிக்கிறது - சுப்ரமணியன் சுவாமி கருத்து
முகமது நபி குறித்து பாஜக முன்னாள் நிர்வாகிகள் சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்ததைக் கண்டித்து, இந்தியாவில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து முன்னாள் எம்.பி சுப்ரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியா இன்று காஷ்மீர் போல் காட்சியளிக்கிறது. அதற்கு மாறாக இந்தியாவின் மற்ற பகுதிகளைப் போல் காஷ்மீர் இருக்க வேண்டும் என்று நாம் விரும்பினோம்.
இந்த நிலை அடுத்த 48 மணிநேரத்தில் கட்டுக்குள் வராவிட்டால், உள்துறை அமைச்சராக அமித் ஷா இருக்க வேண்டுமா? பிரதமர் நரேந்திர மோதிதான் முடிவு செய்ய வேண்டும்,” என்று தெரிவித்துள்ளார்.
வந்துகொண்டிருக்கும் செய்தி, பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் கவலைக்கிடம்
பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் உடல்நலம் கவலைக்கிடமாக உள்ளதாக அவரது அதிகாரபூர்வமான ட்விட்டர் பக்கத்தில், அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அந்த ட்வீட்டில், முஷாரஃப் கடந்த மூன்று வாரங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் வென்டிலேட்டர் உதவியுடன் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முஷாரஃப் தற்போது கடினமான கட்டத்தில் இருப்பதாகவும், அவர் குணமடைய பிரார்த்தனை செய்யுங்கள் என்றும் ட்வீட்டில் கூறப்பட்டுள்ளது.
Jurassic World Dominion படம்: ஊடகங்கள் பார்வையில் எப்படி?
நான் மக்களுக்காக போராடுவதை தடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை - தமிழிசை சவுந்தரராஜன்
தெலங்கானாவில் ஆளுநர் மாளிகையில், தமிழிசை சவுந்தரராஜன் மஹிளா தர்பார்’ என்ற பெண்கள் குறை கேட்பும் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், “பெண்கள் பாதுகாப்பு இல்லாமல் உணர்ந்தால், என்னால் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. நான் தெலங்கானா மக்களுக்காக இருப்பேன். குறிப்பாக, பெண்களுக்காக இருப்பேன். மக்களுக்காக நான் போராடுவதை தடுக்க, யாருக்கும் அதிகாரம் இல்லை. தெலங்கானாவில் பெண்கள் பாதுகாப்புடன், மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும்,” என்றார்.
ஹைதராபாத்தில் கடந்த மே 28ஆம் தேதி சிறுமி பாலியல் வல்லுறவு சம்பவம் நடந்த நிலையில், ஆளுநர் நடத்திய இந்த நிகழ்ச்சி, மாநில அரசுடனான உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.
முகமது நபி பற்றிய சர்ச்சை கருத்து: இந்தியாவின் பல மாநிலங்களில் நடந்த போராட்டத்தில் வன்முறை
முகமது நபி பற்றி பாஜக முன்னாள் நிர்வாகிகள் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கண்டித்து இந்தியாவின் பல நகரங்களில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு நடந்த போராட்டங்களில் வன்முறை வெடித்தது. பல நகரங்களில் போலீசார் மீது கற்கள் வீசப்பட்டன.
மேற்கு வங்க மாநிலம் ஹெளராவில் நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தினர்.
பாஜக தலைவர்கள் இருவர், முகமது நபிகள் பற்றி ஆட்சேபத்துக்குரிய வகையில் கருத்துக்களை தெரிவித்ததாகக் கூறி அவரது உருவபொம்மையை பொதுமக்கள் எரித்தனர்.
மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையில், முகமது நபி பற்றி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பாஜக தலைவருக்கு எதிராக நூற்றுக்கணக்கான பெண்கள் பேரணியில் ஈடுபட்டனர். இதையொட்டி, சோலாப்பூரில் ஏராளமானோர் திரண்டு முழக்கங்களை எழுப்பினர்.
உத்தர பிரதேசத்தின் பல்வேறு நகரங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, நபிகள் நாயகம் குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை தெரிவித்தவர்களை கைது செய்ய வலியுறுத்தினர். மேலும் பல இடங்களில் கல்வீச்சு மற்றும் தீ வைப்பு சம்பவங்கள் நடந்தன.
உத்தர பிரதேசத்தின் மொராதாபாதில் நூற்றுக்கணக்கான மக்கள் பாஜக எதிர்ப்பு கோஷமிட்டனர். அவர்களை அப்புறப்படுத்த போலீசார் லேசான தடியடி நடத்தினர்.
கடந்த 3ஆம் தேதி கான்பூரில் நடந்த வகுப்புவாத வன்முறையைக் கருத்தில் கொண்டு, சமீபத்திய போராட்ட நிகழ்வுகளை போலீசார் கேமரா பொருத்திய ட்ரோன்கள் மூலம் கண்காணித்து வருகின்றனர்.
முன்னதாக, பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
அங்கு நிலைமையை கட்டுக்குள் வைத்திருக்க மாநில ஆயுதப்படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு, கான்பூரின் பெக்கங்கஞ்ச் காவல் நிலைய வரம்புக்கு உட்பட்ட நை சதக் பகுதியில் வகுப்புவாத வன்முறைகள் அரங்கேறின.
பிரயாக்ராஜில் நடந்த போராட்டத்திற்கு பிறகு கல் வீச்சு நடந்தது. போலீஸ் வாகனத்தை இலக்கு வைத்து சிலர் கற்களை வீசினர்.
அங்கு குவிந்த போராட்டக்காரர்களை கலைக்க அதிவிரைவு அதிரடிப்படையினர் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்த வேண்டியிருந்தது.
போராட்டக்காரர்களில் சிலர், சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல ரிக்ஷாக்களுக்கு தீ வைத்தனர்.
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், கல் வீச்சுக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஹைதராபாத்தில் உள்ள மெக்கா மசூதிக்கு வெளியே இஸ்லாமியர்கள் சிலர் திரண்டு போராட்டம் நடத்தினர். அங்கு நிலைமையை கட்டுக்குள் வைத்திருக்க மத்திய ரிசர்வ் காவல் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
தலைநகர் டெல்லியில் உள்ள ஜமா மசூதிக்கு வெளியே மக்கள் கைகளில் சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளுடன் முழக்கங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டம் குறித்து ஜாமா மசூதியின் ஷாஹி இமாம் கூறுகையில், மஸ்ஜித் கமிட்டியால் எந்த ஆர்ப்பாட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்றார்.
இதேவேளை, தேவ்பந்தில் ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் அனுமதிக்கவில்லை. ஷாஹரன்பூரில் தெருக்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
சிலர் கைகளில் பேனருடன் மூவர்ணக் கொடியை பிடித்துள்ளனர். லக்னெளவில் உள்ள மசூதிகளிலும் போராட்டத்தில் பங்கெடுக்க மக்கள் கூட்டம் பெருமளவில் காணப்பட்டது. லக்னெளவில் உள்ள மவுண்ட் மசூதிக்கு வெளியே பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பிர்ஸா முண்டா: பழங்குடிகளால் கடவுளாக போற்றப்படும் இவர் யார்?
லடாக் பகுதியில் சீன நடவடிக்கைகளை புறக்கணிப்பது நாட்டுக்கு செய்யும் துரோகம் - ராகுல் காந்தி
லடாக் பகுதியில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டு கோட்டில் (LAC) சீன நடவடிக்கைகளை குறித்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
லடாக் பகுதியில் சீனாவின் நடவடிக்கைகள் கவலையளிப்பதாக உள்ளது என்று அமெரிக்கா உயர்மட்ட ஜெனரல் ஒருவர் கூறியது பற்றிய செய்தியைப் பகிர்ந்து, “எதிர்கால நடவடிக்கைகளுக்கு சீனா அடித்தளம் அமைத்து வருகிறது. இதை புறக்கணிப்பதன் மூலம், இந்திய அரசு நாட்டுக்கு துரோகம் இழைக்கிறது,” என்று தெரிவித்துள்ளார்.
முகமது நபி விவகாரம் - டெல்லி, உ.பி உட்பட பல்வேறு இடங்களில் போராட்டம்
முகமது நபி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில், டெல்லி மற்றும் உத்தர பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
டெல்லியில் ஜாமா மசூதி அமைந்துள்ள பகுதியில் மக்கள் கோஷங்களை எழுப்பியும், வாசக பலகைகளை தாங்கியும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நுபர் ஷர்மாவையும், நவீன் ஜிண்டாலையும் கைது செய்யுமாறு அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
உத்தர பிரதேசத்தில் உள்ள சஹாரான்பூர் பகுதியிலும் போராட்டம் நடந்தது. இது தவிர, கொல்கத்தா, ஹைதராபாத், லக்னோ ஆகிய நகரங்களில் உள்ள மசூதிகளிலும் மக்கள் கூடியிருந்தனர்.
மதுரை ஆதீனத்திற்கு பாதுகாப்பு கோரி அர்ஜுன் சம்பத் மனு
மதுரை ஆதீனத்திற்கு பாதுகாப்பு தர வேண்டி மதுரை மாநகர காவல்துறை ஆணையாளரிடம் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மனு அளித்துள்ளார்.
பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், “மதுரை ஆதினத்திற்கு தற்போது அரசியல்வாதிகள், நடிகர்களின் ரசிகர்கள் மற்றும் இன்னபிற சக்திகளால் தொடர் அச்சுறுத்தல் நிலவி வருகிறது.
மதுரை ஆதீனத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்த வேண்டும் என்பது எங்களது எண்ணம். அதற்கு மாநில அரசு கொடுக்கவில்லை என்று சொன்னாலும் மத்திய அரசை வலியுறுத்துவோம்,” என்று தெரிவித்தார்.
பிகாரில் மகனின் சடலத்தைப் பெற மருத்துவமனை ஊழியர் லஞ்சம் கேட்டதால் பிச்சை எடுத்த தம்பதி
இந்தியாவில் வட மாநிலங்களில் ஒன்றான பிகாரில், வயதான தம்பதியினர் பிச்சை எடுக்கும் காணொளி ஒன்று, சமூக வலைதளங்களில் பரவியது. பிகாரின் சமஸ்திபுர் மாநகரில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், மருத்துவமனையில் உள்ள தங்களது மகனின் சடலத்தைப் பெறுவதற்காக, இறந்தவரின் பெற்றோர், வீடு வீடாக சென்று பிச்சை எடுப்பதாக உள்ளது.