You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

ஆர்.எஸ்.எஸ் அலுவலகங்களுக்கு மிரட்டல் விடுத்ததாக, புதுக்கோட்டை இளைஞரிடம் விசாரணை

உத்தரப்பிரதேசம், கர்நாடக மாநிலங்களில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகங்களை தகர்க்க போவதாக மிரட்டியதாக, புதுக்கோட்டையைச் சேர்ந்த இளைஞரிடம் லக்னௌ காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஜோ மகேஸ்வரன்

  1. இன்றைய நேரலை நிறைவு பெறுகிறது

    வணக்கம்.

    இன்றைய நேரலை இத்துடன் நிறைவு பெறுகிறது. தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருந்தமைக்கு நன்றி.

    இதுவரையிலான இன்றைய முக்கிய செய்திகள்.

    • பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட, நூபுர் ஷர்மாவின் வாக்குமூலத்தை பதிவு செய்ய மும்பை காவல் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
    • பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற்றார். 211 எம்.பி.க்கள் போரிஸ் ஜான்சனுக்கு ஆதரவாகவும் 148 எம்.பிக்கள் எதிராகவும் வாக்களித்தனர்.
    • எஞ்சிய இரண்டு வருட பதவி காலத்தையும் நிறைவு செய்த பிறகே விலகப்போவதாக, இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
    • சிதம்பரம் நடராஜர் கோயிலில் நிர்வாக ரீதியான அலுவல் ஆய்வு செய்ய இந்து சமய அறநிலையத்துறை குழு கோயிலுக்கு சென்றனர். இந்த குழு ஆய்வு செய்ய, தீட்சிதர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர்.
    • இலங்கையில் ஓராண்டு காலத்திற்கு சம்பளத்தை பெற்றுக்கொள்ளாமல் கடமையாற்ற அனைத்து அமைச்சர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
    • உத்தரப்பிரதேசம், கர்நாடக மாநிலங்களில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகங்களை தகர்க்க போவதாக மிரட்டியதாக, புதுக்கோட்டையைச் சேர்ந்த ராஜா முகமது என்பவரிடம் லக்னௌ காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

    தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள், குறிப்பாக இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய பிபிசி தமிழ் இணைய தளம், முகநூல், ட்விட்டர், இண்ஸ்டாகிராம் பங்கங்களில் இணைந்திருங்கள்.

  2. விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் - சீமான் கோரிக்கை

    விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

    புழல் மத்திய சிறையில் உள்ள தம் கட்சி நிர்வாகி துரைமுருகனை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சந்தித்தார். பின்னர் சீமான் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'துரைமுருகன் சமூக வலைதளங்களில் பதிவிட்டதற்காக, குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்கப்படுகிறார் என்பது வேதனையானது.

    இதை சட்டப்படி எதிர்கொள்வோம். தமிழ்நாட்டில், தினந்தோறும் ஒரு கொலை நிகழ்வது, சட்டம் ஒழுங்கை கேலிக் கூத்தாகி வருகிறது. இதுதான் திராவிட மாடல்.' என்றார்

    ஈழத் தமிழர் பிரச்சினையில், நாம் தமிழர் கட்சியினர், தங்களோடு இணைந்து செயல்பட வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளது குறித்த கேள்விக்கு, 'இலங்கை தமிழர் மீது இப்போது திடீர் பாசத்தில் பேசுகிறார்கள். முதலில் ஈழத் தமிழர்கள், விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குங்கள். தொடரும் இந்த தடை, தமிழ் தேசிய இனத்தின் மீது திணிக்கப்பட்ட அவமானம்.' என்றார்.

  3. நூபுர் ஷர்மா விவகாரம்: இந்தியா - இஸ்லாமிய நாடுகள் உறவில் என்ன பாதிப்பு?

  4. குவைத் கடைகளில் இந்தியப் பொருள்கள் அகற்றம் - நடந்தது என்ன?

  5. சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆய்வை திரும்பப் பெற வேண்டும்: பொது தீட்சிதர்கள்

  6. ஸ்ரீபெரும்புதூரில் பிற மாநில மாணவர்களுக்கு ஒமிக்ரான் தொற்று - சுகாதாரத்துறை செயலாளர்

    ஸ்ரீபெரும்புதூர் இளைஞர் மேம்பாட்டு மையத்தில், பிற மாநில மாணவர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டு, உரிய சிகிச்சை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி இளைஞர் மேம்பாட்டு மையத்தில் பயிலும், மாணவர்கள் சிலருக்கு ஓமிக்ரான் தொற்று, அறிகுறி காணப்பட்டது. இதையடுத்து அங்கு பயிலும் 235 மாணவர்களுக்கும் பரிசோதனை செய்தனர்.

    இதில், 2 பேருக்கு தொற்று உறுதியானது. அவர்களுடன் தொடர்பில் இருந்த 16 மாணவர்கள், தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர். இந்த மாணவர்களை, தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சந்தித்து, மருத்துவ ஆலோசனைகளை வழங்கினார்.

    பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'தற்போது பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் பிற மாநில மற்றும் பிற மாவட்ட மாணவர்கள். குறிப்பாக கேரளா பகுதிகளில் இருந்து வந்த மாணவர்களுக்கு, தொற்று இருப்பது கண்டறியப்பட்டு, உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது,' என்றார் ராதாகிருஷ்ணன்.

  7. முகமது நபி பற்றிய நூபுர் ஷர்மா பேச்சு: பாஜக எங்கே தவறு செய்தது?

  8. தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள் இருப்பதாக தெரியவில்லை - வைகோ பேட்டி

    தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள் இருப்பதாகவே தெரியவில்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திருச்சியில் தெரிவித்துள்ளார்.

    புதுக்கோட்டையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி சென்றார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் வைகோ கூறுகையில்,

    ''தமிழ்நாட்டில் தற்போது எதிர்க்கட்சிகள் இருப்பதாகவே தெரியவில்லை. மக்களின் பேராதரவோடு கருணாநிதி வகுத்து தந்த பாதையில், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மிக சிறந்த ஆட்சி நடைபெற்று வருகிறது.

    திராவிட கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் எந்த சமரசமுமின்றி முதலமைச்சர் ஸ்டாலினும் தி.மு.கவும் உறுதியோடு இருக்கிறது. தி.மு.க அரசின் ஓர் ஆண்டு கால ஆட்சிக்கும் பா.ஜ.க வின் எட்டாண்டுகால ஆட்சிக்கும் உள்ள வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் போன்றது.

    தி.மு.க வின் ஓர் ஆண்டு ஆட்சியை மலை என்று கூறினால் பா.ஜ.க வின் எட்டாண்டுகள் ஆட்சியை மடு என்று தான் கூற வேண்டும்.'' என்றார்.

  9. இலங்கையில் ரூ.1,500 விலையில் கிடைத்த யூரியா ரூ.42,500 ஆனது: நெல் விளைச்சல் என்ன ஆகும்?

  10. டெல்லி அமைச்சர் வீட்டில் சோதனை: 'கடவுள் எங்களுடன் உள்ளார்' - அரவிந்த் கேஜ்ரிவால்

    டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் மற்றும் அவருடன் தொடர்புடையவர்கள் இடங்களில் அமலாக்கத்துறை இயக்குநரகம் சோதனை நடத்தியது.

    அமலாக்கத்துறை இயக்குரகத்தின் இந்த சோதனையில், “பல்வேறு ஆவணங்கள், ரூ. 2.85 கோடி ரொக்கம், 1.80 கிலோ எடையுள்ள 133 தங்க நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவைகளுக்கான ஆதாரம் பற்றி உரிய தகவல் கிடைக்கவில்லை.'' என்று அமலாக்கத்துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், 'பொய் பொய், பொய் பொய். அனைத்து நிறுவனங்களின் அதிகாரமும் உங்களிடம் உள்ளது. ஆனால் கடவுள் எங்களுடன் இருக்கிறார்.'' என்று தெரிவித்துள்ளார்.

    கடந்த 30ம் தேதி சத்யேந்தர் ஜெயினை அமலாக்கத்துறை கைது செய்தது. ஹவாலா பண பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார்.

    அவரது குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மற்றும் பிற நிறுவனங்களின் ரூ.4.81 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக கடந்த மாதம் அமலாக்கத்துறை தெரிவித்தது.

  11. இஸ்லாம் மற்றும் முகமது நபிகள் குறித்து இந்தியாவுக்கு அறிவுரை கூறினாரா புதின்?

  12. கமல்ஹாசன், சூர்யா இணையும் அடுத்த படம் - கமல் வெளியிட்ட வீடியோவில் தகவல்

    கமல் ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில், சூர்யா உள்ளிட்டோர் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கடந்த 3ம் தேதி வெளியாகிய விக்ரம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    இதையடுத்து, நடிகரும் இப்படத்தின் தயாரிப்பாளருமான கமல்ஹாசன் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், 'தரமான திரைப்படத்தை தாங்கிப் பிடிக்க தமிழ் ரசிகர்கள் தவறியதே இல்லை. திறமையான, தரமான நடிகர்களையும்தான்.

    அந்தவரிசையில், என்னையும் எங்கள் விக்ரம் படத்தையும் நீங்கள் தேர்ந்தெடுத்தது எங்கள் பாக்கியம்.' என்று தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து அவர் கூறுகையில், 'தம்பிகள் விஜய்சேதுபதி, பஹத் பாசில், நரேன் உள்ளிட்ட வீரியமிக்க நடிகர்கள் படை வெற்றிக்கு முக்கிய காரணம். கடைசி 3 நிமிடமே வந்து திரையரங்கை அதிர வைத்த தம்பி சூர்யா, அன்பிற்காக மட்டுமே அதை செய்தார்.

    அதற்கு நன்றி சொல்லும் படலத்தை, அடுத்து நாங்கள் இணையும் படத்தில் முழுவதுமாக காட்டி விடலாம் என்று இருக்கிறேன். இந்த படத்தில், முகம் தெரியாமல் உழைத்த பலரும் பாராட்டுக்குரியவர்கள்.' என்று தெரிவித்துள்ளார்.

  13. யுக்ரேன் மீதான படையெடுப்பு - ரஷ்ய கால்பந்து வீராங்கனை எதிர்ப்பு

    யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்கு, ரஷ்ய கால்பந்து வீராங்கனை நாடியா கார்போவா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    ரஷ்யா கால்பந்து வீராங்கனையான இவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், போருக்கு எதிரான கருத்துகளை, பிப்ரவரிக்கு பிறகு வெளியிட்டு வருகிறார். இவரது இண்ஸ்டாகிராம் கணக்கை 143,000 பேர் பின்தொடந்து வருகின்றனர்.

    ரஷ்யாவின் தொழில்முறை வீராங்கனைகள் மூவரில் இவரும் ஒருவர். ரஷ்யாவிற்காக 24 முறை விளையாடியுள்ளார். ரஷ்யாவை எதிர்த்து குரல் கொடுத்து வரும் ஒரே பெண் நட்சத்திரமாகவும் உள்ளார். கர்போவா ஸ்பானிஷ் கிளப் -எஸ்பான்யோலுக்காக விளையாடுகிறார்.

    போருக்கு எதிராக குரல் எழுப்புவதை ஒரு "தனி பொறுப்பாக" உணர்கிறேன் என்கிறார். "இந்த மனிதாபிமானமற்ற தன்மையைப் பார்த்து, நான் அமைதியாக இருக்க முடியாது" என்று 27 வயதான அவர் ,பிபிசியிடம் தெரிவித்தார். இவரது உறவினர்கள் பலர் யுக்ரேனில் உள்ளனர்.

  14. நூபுர் ஷர்மா விவகாரம்: கடும் நெருக்கடியில் சிக்கியுள்ள இந்தியா; இஸ்லாமிய நாடுகளுடனான உறவில் பாதிப்பா?

  15. சீனாவில் குறைந்து வரும் மக்கள் தொகை - தேசிய புள்ளி விபரத்தில் தகவல்

    கடந்த 40 ஆண்டுகளாக 660 மில்லியனிலிருந்து 1.4 பில்லியன் வரை மக்கள்தொகை கண்ட சீனாவில், 1959 - 1961 பெருமளவில் ஏற்பட்ட பஞ்சத்திற்கு பிறகு தற்போது மக்கள்தொகை குறைந்து வருகிறது.

    சீனாவின் தேசிய புள்ளிவிவர பணியகத்தின் தகவல்படி, சீனாவின் மக்கள்தொகை 2021ஆம் ஆண்டில் வெறும் 1.41212லிருந்து 1.41260 வரையே வளர்ச்சி கண்டுள்ளதாக தெரிகிறது. இது குறித்த விரிவான செய்திக்கு இங்கே சொடுக்கவும்.

  16. இலங்கைக்கு மிக கடுமையான மூன்று வாரங்கள்: பிரதமர் ரணில் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

  17. ஆர்.எஸ்.எஸ் அலுவலகங்களுக்கு மிரட்டல் விடுத்ததாக - புதுக்கோட்டை இளைஞரிடம் விசாரணை

    உத்தரப்பிரதேசம், கர்நாடக மாநிலங்களில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகங்களை தகர்க்க போவதாக மிரட்டியதாக, புதுக்கோட்டையைச் சேர்ந்த ராஜா முகமது என்பவரிடம் லக்னௌ காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ராமலிங்கம் நகரைச் சேர்ந்த அன்சார்அலி என்பவரது மகன் ராஜா முகமது(21). இவர், வாட்ஸ்அப் மூலம் உத்தரப்பிரதேசம், கர்நாடகாவில் உள்ள ஆர்.எஸ்.எஸ் அலுவலகங்களுக்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்ததாக புகார் எழுந்தது.

    இதனடிப்படையில், உத்தரபிரதேசம் லக்னோ போலீசார், புதுக்கோட்டைக்கு சென்று, திருக்கோகர்ணம் காவல் நிலைய போலீசார் உதவியோடு ராஜாமுகமதுவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதனிடையே 'ராஜாமுகமது மனநலம் பாதிக்கப்பட்டவர். அவர் மனநல பிரச்சனைக்காக சிகிச்சை பெற்றுவருகிறார். மனநல சிகிச்சை பெறுவதற்கான மனநல மருத்துவரின் மருந்துச் சீட்டுகளையும் லக்னோ போலீசாரிடம் அளித்துள்ளதாக,' போலீசார் தெரிவிக்கின்றனர்.

  18. மதுரை ஆதினம் கருத்து: 'எங்களுக்கும் பாயத் தெரியும்' - சேகர் பாபு பதில்

    எங்களுடைய பதுங்கலை மதுரை ஆதீனம் பயமாகக் கருதக்கூடாது. எங்களுக்கும் பாயத் தெரியும். மதுரை ஆதீனம் தொடர்ந்து அரசியல்வாதியைப் போல பேசிக்கொண்டிருப்பதை, இந்து சமய அறநிலைய துறை அனுமதிக்காது என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

    மதுரை ஆதினத்தின் கருத்து குறித்து, தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பதில் அளிக்கையில், 'தொடர்ந்து அவர் இதுபோல பேசினால் பதில் சொல்ல எங்களிடமும் ஏராளமாக இருக்கிறது.' என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், 'உரிய சட்டதிட்டத்தின்படிதான் சிதம்பரம் கோயிலுக்கு அதிகாரிகள் ஆய்வுக்குச் சென்றிருக்கிறார்கள். மடியில் கனமில்லையென்றால் ஆய்வுக்கு ஒத்துழைக்க வேண்டும்.

    அதுதான் மனு நீதி. மனு தர்மம். அதிகாரிகள் குழுவுக்கு தீட்சிதர்கள் தேவைப்படும் தகவல்களை அளிக்க வேண்டும்.' என்றும் சேகர் பாபு கூறியுள்ளார்.

  19. முகமது நபி குறித்து சர்ச்சை கருத்து: ஓஐசிக்கு இந்தியா எதிர்வினை; யார் இந்த நூபுர் ஷர்மா?

  20. மணப்பாடு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

    மணப்பாடு மீனவ கிராமத்தில் தூண்டில் வளைவுப் பாலம் அமைக்கும் பணியை விரைவில் தொடங்க வலியுறுத்தி மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே மணப்பாடு மீனவ கிராமம் உள்ளது. இங்கு சுமார் 5, 000 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கிருந்து 300க்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் மூலம் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த மணப்பாடு பகுதியில் இயற்கை காலநிலை மாறுபாடு காரணமாக மணல் திட்டுகள் உருவாகி உள்ளது. கரையில் இருந்து கடல் வரை சுமார் ஒரு கி.மீ தூரம், மணல் திட்டுகள் உள்ளதால், மீனவர்கள் கடலுக்கு செல்லும் போது பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    அங்கு தூண்டில் வளைவு பாலம் அமைத்து தரக் கோரி, அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, ரூ. 43 கோடி மதிப்பில் தூண்டில் வளைவு பாலம் அமைக்க, கடந்த ஏப்ரல் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது.

    ஆனால், இதுவரை பணிகள் தொடங்கப்படவில்லை. எனவே, விரைவில் பணியைத் தொடங்க கோரி, இந்தப் பகுதி மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.