You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

காஷ்மீர் படுகொலைகள்: ராணுவ தளபதியுடன் அமித் ஷா ஆலோசனை

காஷ்மீர் தொடர் படுகொலைகள் குறித்து இந்திய உள்துறை அமைச்சர், ராணுவ தளபதி, ஆளுநர் மற்றும் அதிகாரிகள்கொண்ட உயர்மட்ட குழுவினருடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஜோ மகேஸ்வரன்

  1. தமிழ்நாட்டில் பாஜக மாயத் தோற்றத்தை உருவாக்குகிறது - அன்புமணி ராமதாஸ் பேட்டி

    தமிழ்நாட்டில் பாஜக முழுமையாக வரவில்லை. அவர்கள் ஒரு மாய தோற்றத்தை உருவாக்குகின்றனர். தமிழ்நாட்டில் உண்மையான எதிர்க்கட்சி பாமக தான் என்று முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    சேலத்தில் இன்று பாட்டாளி மக்கள் கட்சி தலைவர், மருத்துவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'நீட் பயிற்சி மையம் என்கிற பெயரில் வணிகம் செய்து வருகிறார்கள். இதன் மூலன் ஆண்டிற்கு 1 லட்சம் கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்படுகிறது. நீட் தேர்வு காரணமாக தமிழ்நாட்டில் 60 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இந்தியாவில் எந்த மாநிலத்தில் இது போல் இல்லை.

    மற்ற மாநிலங்களை நீட் தேர்வு முறையாக நடக்கவில்லை. தமிழ்நாட்டு மாணவர்கள் நேர்மையாக, நியாயமாக எழுதுவதால்தான், தேர்ச்சி பெற முடியவில்லை.' என்றார்.

    மேலும், 'பாஜக இந்தியாவிலேயே பெரிய கட்சி. தமிழ்நாட்டைப் பொருத்தவரை, அது வளர்ந்து வரும் கட்சிதான். குறிப்பாக கன்னியாகுமரி உள்ளிட்ட சில இடங்களில் மட்டும் அதிக வாக்குகளை பெற்றுள்ளனர். அதுவும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தான்.

    தமிழ்நாட்டில் பாஜக முழுமையாக வரவில்லை. அவர்கள் ஒரு மாய தோற்றத்தை உருவாக்குகின்றனர். தமிழ்நாட்டில் உண்மையான எதிர்க்கட்சி பாமக தான்.

    முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி எனக்கு மிகவும் பிடித்த தலைவர். சமூக நீதிக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தியவர். இதன் மூலம் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தவர். பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் கருணாநிதி இருவரையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்கிறேன்.' என்றார் அன்புமணி ராமதாஸ்.

  2. சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆய்வு: ஆணையைத் திரும்ப பெறுவதில்லை - அறநிலையத்துறை திட்டவட்டம்

    சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்து அறநிலையத்துறை வரும் 7, 8 தேதிகளில் ஆய்வு செய்ய அதிகாரம் உள்ளது என்று இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயில் பணிப் பிரிவு, கோயில் நிர்வாகம், சிற்றம்பலம் மீது ஏற அனுமதி மறுத்தது உள்ளிட்டவை தொடர்பாக ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை விசாரணைக் குழு அமைந்தது.

    இதையடுத்து, வரும் 7, 8ஆம் தேதிகளில் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக, கோயில் நிர்வாக பொது தீட்சிதர்கள் குழு செயலாளருக்கு தகவல் அனுப்பியது. இதற்கு, எதிர்ப்பு தெரிவித்த கோயில் பொது தீட்சிதர்கள் குழு இந்திய குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர், தமிழ்நாடு ஆளுநர், முதலமைச்சர், தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பியது.

    இந்நிலையில், இந்து சமய அறநிலைய ஆணையர் கண்ணன், பொது தீட்சிதர்கள் குழு செயலாளருக்கு அறிக்கை அனுப்பி உள்ளார். அதில், 'கோயில் நிர்வாகத்தை சீரமைக்க, கோயில் அலுவல்களை விசாரிக்க குழுவை நியமிக்க ஆணையருக்கு அதிகாரம் உள்ளது.

    சிதம்பரம் நடராஜர் கோயிலில் கொரோனா தொற்றுக்கு முன் கனகசபை மீது ஏற அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தொடர்ந்து கொரோனா பரவல் காரணமாக வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதன்படி, சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது பக்தர்கள் ஏற தடை விதிக்கப்பட்டிருந்தது.

    தற்பொழுது அனைத்து கட்டுப்பாடுகளையும் அரசு தளர்த்தியுள்ளது. கோயிலில் பக்தர்கள் வழிபாட்டிற்காக திறக்க அனுமதி அளித்துள்ளது. எனவே ஆணையம் பிறப்பித்த அரசாணையைத் திரும்பப் பெறுவது இல்லை. வருகின்ற 7, 8ஆம் தேதி ஆய்வை முடிக்க இணைந்து செயல்படுமாறு.' உத்தரவிடப்பட்டுள்ளது.

  3. 'ரயில்களில் அளவுக்கு மேல் எடுத்துச் செல்லும் உடைமைகளுக்கு கூடுதல் கட்டணம்'

  4. தொடர்ந்து இணைந்திருங்கள்

    வணக்கம்.

    நான் ஜோ மகேஸ்வரன். இதுவரை எம்.ஆர். ஷோபனா வழங்கிய நேரலைப் பக்கத்தை இனி நான் தொகுத்து வழங்குகிறேன். தொடர்ந்து இணைந்திருங்கள்.

    தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    குறிப்பாக, இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.

  5. "ஒவ்வொரு மசூதியிலும் ஏன் சிவலிங்கத்தை தேட வேண்டும்?" - மோகன் பகவத்

  6. கேரளாவில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த மட்டோம் - பினராயி விஜயன்

    கேரளாவில் சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) தமது அரசு அமல்படுத்தாது என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

    கேரளாவில், இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்து ஓர் ஆண்டு நிறைவடைந்ததையொட்டி பேசிய பினராயி விஜயன் , "குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த எங்கள் அரசின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. இந்த நிலைப்பாடு தொடரும்" என்றார்.

    இது குறித்து தொடர்ந்து பேசிய அவர், “இந்திய அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மதச்சார்பின்மை கொள்கையின் அடிப்படையில் நமது நாடு செயல்படுகிறது. இப்போது மதச்சார்பின்மையை அழிக்கும் முயற்சிகள் நடக்கின்றன. இதனால் ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் கவலையில் உள்ளனர். சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்தில், மதத்தின் அடிப்படையில் மக்களின் குடியுரிமையை ஒரு குறிப்பிட்ட பிரிவினர் முடிவு செய்தனர். இந்த சம்பவத்திற்கு எதிராக கேரள அரசு உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளது," என்று தெரிவித்துள்ளார்.

  7. வணக்கம் நேயர்களே!

    நான் எம்.ஆர். ஷோபனா. பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன். தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    குறிப்பாக இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.உங்கள் பகுதியின் சுவாரசியமான செய்திகளைப் பற்றிஎங்கள் டிவிட்டர் கணக்கின் மூலம் தகவல் அளியுங்கள்.

    • ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவில் இருந்து அதன் முதன்மை செயல்பாட்டு அதிகாரி ஷெரில் சாண்ட்பெர்க் பதவி விலகியுள்ளார்.
    • இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த வங்கி மேலாளர் விஜய் குமார், காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
    • அண்மையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ஹர்திக் படேல் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.
    • ஹாலிவுட் நடிகர் ஜானி டெப், தனது முன்னாள் மனைவி ஆம்பர் ஹெர்ட் மீது தொடர்ந்த அவதூறு வழக்கில், அவருக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
    • தமிழ்நாட்டுக்கான புதிய கல்விக்கொள்கையை வரையறை செய்யும் உயர்மட்டக் குழு மற்றும் வழிகாட்டுதல் குறித்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
    • பொருளாதார நெருக்கடியால், இலங்கையில் இருந்து செளதி அரேபியாவிற்கு இந்த ஆண்டு ஹஜ் யாத்திரிகர்கள் செல்ல மாட்டார்கள் என்று இலங்கை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
    • தமிழ்நாடு கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார்.