You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

ஃபேஸ்புக் தாய் நிறுவனமான மெட்டா முதன்மை செயல் அதிகாரி ஷெரில் பதவி விலகல்

தமிழ்நாடு கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து பேசினார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஜோ மகேஸ்வரன்

  1. காஷ்மீரில் வங்கி மேலாளர் சுட்டுக்கொலை - ஒரு மாதத்தில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர், ரியாஸ் மஸ்ரூர், பிபிசி, ஸ்ரீநகர்

    இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த வங்கியாளர் விஜய் குமார். இவர் இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் வியாழக் கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார்.

    காஷ்மீரில் விஜய்குமார் மேலாளராக பணிபுரிந்த வங்கிக்கு சென்றுகொண்டிருந்தபோது, தீவிரவாதிகள் அவரை சுட்டுக் கொன்றதாக, காவல்துறையினர் தெரிவித்தனர். ஒரு மாதத்திற்குள் விஜய்குமாருடன் நான்காவது நபர் கொல்லப்பட்டுள்ளார்.

    முன்னதாக காஷ்மீரி இந்துவான ராகுல் பட், இஸ்லாமிய தொலைக்காட்சி நடிகை அம்ரீனா பட், ஜம்முவைச் சேர்ந்த இந்து ஆசிரியை ரஜனி பாலா ஆகியோர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர்.

    இந்தக் கொலைகள் பள்ளத்தாக்கு முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. இதனால், காஷ்மீருக்கு திரும்பியவர்கள் அங்கிருந்து வெளியேறுவதை தூண்டும் என்றும் அஞ்சப்படுகிறது.

    “எங்களை அடைத்து வைத்துள்ளனர். இங்கு எப்படி நாங்க வேலை செய்ய முடியும்? எல்லாம் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டதாக சொன்னார்கள். ஆகையால் இங்கு அரசுப் பணியில் சேர்ந்தோம், ஆனால் இப்போது நாங்கள் கொல்லப்படுகிறோம்.'' என்று அவர்கள் கூறியதாக, புட்காம் ஷேக்போரா முகாமில் போராட்டம் நடத்திய பண்டிட் ஊழியர் தெரிவிக்கிறார்.

    காவல்துறை தகவல்படி, ஜனவரி முதல் பொதுமக்கள் 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில், 6 பேர் சிறுபான்மை சமூகத்தினர், 12 பேர் காஷ்மீர் முஸ்லிம்கள்.

    கடந்த 1990ம் ஆண்டு ஆயுதம் ஏந்தியவர்களால் பண்டிட்டுகள் கொல்லப்பட்டனர். இதில், இந்த பள்ளத்தாக்கில் இருந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாதிக்கப்பட்ட்டு, வெளியேறினர். தப்பிச் சென்ற பண்டிட்டுகளில் 5, 000 பேர். 2012ம் ஆண்டு, பிரதமர் அறிவித்த வேலை திட்டத்தால் திரும்பியுள்ளனர்.

  2. ஐஎன்ஏ அஞ்சலை பொன்னுசாமி மறைவு - முதலமைச்சர் இரங்கல்

    நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தில் (ஐ.என்.ஏ) இருந்த, விடுதலைப் போராட்ட வீராங்கனை அஞ்சலை பொன்னுசாமி, உடல் நலக் குறைவால் மலேசியாவில் செந்துல் நகரில் நேற்று முந்தினம் காலமானார். அவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''1943ம் ஆண்டு இரண்டாம் உலகப்போரின் போது, நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் ஜான்சி ராணி படைப்பிரிவில் இணைந்து, இந்திய விடுதலைக்காக போராடிய வீரமங்கை அஞ்சலை பொன்னுசாமி. அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    வீரம், மனவுறுதி, துணிச்சல் ஆகிய பண்புகளால் பெண்குலத்துக்கே சிறந்ததோர் எடுத்துக் காட்டாக விளங்கிய, அவரின் தியாகம், இந்திய விடுதலை வரலாற்றில் என்றும் அழியாப்புகழ் பெற்று விளங்கும். '' இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  3. குஜராத்தில் பாஜகவில் இணைந்த ஹர்திக் படேல்

    அண்மையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ஹர்திக் படேல் பாரதிய ஜனதா கட்சியில் இன்று இணைந்தார்.

    குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஹர்திக் படேல் காங்கிரஸ் கட்சியில் இருந்து கடந்த மாதம் விலகினார். இந்நிலையில், குஜராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகத்தில், மாநிலத் தலைவர் சி.ஆர்.பாட்டீல் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

    கடந்த 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது, ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் ஹர்திக் படேல் இணைந்தார். இதையடுத்து 2020ம் ஆண்டு மாநில காங்கிரஸ் செயல் தலைவராக நியமிக்கப்பட்டார். கடந்த மாதம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார்.

  4. தேனியில் தம்பி திருமணத்தன்று இறந்த அண்ணன் - கொலையா? தற்கொலையா? போலீசார் விசாரணை

    தம்பியின் திருமணத்தன்று சந்தேகத்திற்கிடமான வகையில் இறந்த அண்ணன். கொலையா? தற்கொலையா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி மாவட்டம் சின்னமனூர் காந்திநகரைச் சேர்ந்தவர் அய்யாச்சாமி - ராஜேஸ்வரி தம்பதியினர். இவர்களது மூத்த மகன் மூவேந்திரன், தவணை முறையில் பொருட்கள், கொடுத்து வசூல் செய்யும் தொழில் செய்து வருகிறார்.

    இளைய மகன் அரவிந்திற்கு, உறவுக்காரப் பெண்ணுடன் இன்று காலை திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று காலை, மூவேந்தனுக்கும் தந்தை அய்யாச்சாமிக்கும் இடையே வாக்குவாதம் முற்றி, தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து, மற்ற அனைவரும் திருமணத்திற்கு சென்று விட்டு, வீட்டிற்கு திரும்ப வந்து பார்க்கும் பொழுது, மூவேந்தன் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். அவரது தலையிலிருந்து ரத்தம் கசிவதாகவும் கம்பியால் அடித்து கொலை செய்துள்ளதாக சின்னமனூர் காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

    காவல்துறையினர் அங்கு சென்று சடலத்தை உடற்கூராய்விற்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது கொலையா? தற்கொலையா? என்று அவரின் தந்தை உள்ளிட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  5. உலகின் மிக நீளமான தாவரம்: ஒரே விதையிலிருந்து உருவான அதிசயம் - ஆஸ்திரேலிய கடற்கரையில் கண்டுபிடிப்பு

  6. தொடர்ந்து இணைந்திருங்கள்

    வணக்கம். நான் ஜோ மகேஸ்வரன்.

    இதுவரை எம்.ஆர். ஷோபனா வழங்கிய நேரலைப் பக்கத்தை இனி நான் தொகுத்து வழங்குகிறேன். தொடர்ந்து இணைந்திருங்கள்.

    தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    குறிப்பாக, இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.

  7. 24 மணிநேரத்தில் 3712 பேருக்கு கொரோனா தொற்று

    கடந்த 24 மணி நேரங்களில் இந்தியாவில் 3 ஆயிரத்து 712 பேர் புதியதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதே 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 584 பேர் குணமடைந்துள்ளனர்.

    இதுகுறித்து இந்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட தகவல்படி, இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 509 ஆக அதிகரித்துள்ளது.

    அதேபோல இதுவரை 4 கோடியே 26 லட்சத்து 20 ஆயிரத்து 394 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  8. இலங்கைக்கு சட்டவிரோதமாக படகில் செல்ல முயன்றவர் கைது, பிரபுராவ் ஆனந்தன்

    கடல் வழியாக இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் படகில் தப்பிச் செல்ல முயன்ற இலங்கையைச் சேர்ந்த இளைஞர் மற்றும் இலங்கைக்கு தப்பி செல்ல உதவிய ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர் ஒருவர் கைது.

    இலங்கை வவுனியா மாவட்டம்கல்நாட்டினார் குளம் பகுதியை சேர்ந்தவர் கீர்த்தனன். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16ஆம் தேதி இலங்கையில் இருந்து பாஸ்போர்ட் மூலம் சென்னை வந்துள்ளார்.

    கீர்த்தனன் தமிழகத்திற்கு வந்து இரண்டு ஆண்டுகளானதால் வழங்கப்பட்ட விசா காலாவதியானது அவர் விசாவை புதுப்பிக்க இரண்டு முறை முயற்சித்தும் புதிப்பிக்க முடியாததால் தமிழகத்தில் கீர்த்தனன்சட்டவிரோதமாக தங்கியுள்ளார்.

    இதனையடுத்து கீர்த்தனன் இலங்கைக்குசட்டவிரோதமாக தப்பி செல்ல முடிவு செய்து ராமேஸ்வரம் புதுரோடு சுனாமி காலணியை சேர்ந்த முத்துகுமாரனை தொடர்பு கொண்டு தனுஷ்கோடி கடல் வழியாக சட்டவிரோதமாக படகு மூலம் இலங்கைக்குத் திரும்பிச் செல்ல முடிவு செய்துள்ளார்.

    முத்துக்குமாரன் பணத்தை பெற்று கொண்டு படகில் கீர்த்தனை இலங்கை அழைத்து செல்லமுயற்சி செய்துள்ளார்.

    இது குறித்து தகவல் அறிந்த கியூ பிரிவு போலீசார் இருவரையும் கைது செய்து ராமேஸ்வரம் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து போலீசார் இருவரும் இன்று ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட உள்ளதாகபோலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

  9. இளையராஜா பிறந்தநாள்: பண்ணைப்புரத்து ராசய்யா மாஸ்ட்ரோ ஆன கதை

  10. மெட்டாவின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பிலிருந்து விலகுகிறார் சாண்ட்பர்க்

    ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவின் தலைமை செயல் அதிகாரி 14 வருடங்களுக்கு பிறகு தனது பொறுப்பிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து தனது முகநூலில் அறிவிப்பு வெளியிட்ட ஷெரில் சாண்ட்பர்க், இனி தொண்டு பணிகளில் கவனம் செலுத்தப்போவதாக தெரிவித்துள்ளார்.

    மெட்டா நிறுவனம் பல போட்டிகளை சந்தித்து வரும் இவ்வேளையில் சாண்ட்பர்கின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    “நான் இந்த பணியை கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கியபோது, ஒரு ஐந்து வருடங்கள் இங்கு இருப்பேன் என்று நினைத்தேன்” என்று தனது பதிவில் தெரிவித்திருக்கும் ஷெரில் நிறுவனத்தின் அதிகார மட்டத்தில் இரண்டாம் இடத்தில் இருந்தார்.

    “14 வருடங்களுக்கு பிறகு, எனது வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தை தொடங்க வேண்டிய தருணம் வந்துவிட்டது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

    2015ஆம் ஆண்டு சாண்ட்பர்க்கின் கணவர் இறந்துவிட்டார். அவர் நிறுவனத்தைவிட்டு விலகி சென்றாலும் போர்ட் உறுப்பினராக தொடருவேன் என்று தெரிவித்துள்ளார்.

    சாண்ட்பர்க் ஃபேஸ்புக் நிறுவனத்தில் சேரும் போது 23 வயது மார்க் சர்க்கர்பர்க் என்பவரால் தொடங்கப்பட்ட ஒரு சிறிய நிறுவனமாக அது இருந்தது

  11. வணக்கம் நேயர்களே!

    நான் எம்.ஆர். ஷோபனா. பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன். தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    குறிப்பாக இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.உங்கள் பகுதியின் சுவாரசியமான செய்திகளைப் பற்றிஎங்கள் டிவிட்டர் கணக்கின் மூலம் தகவல் அளியுங்கள்.

    நேற்றைய நேரலை பக்கத்தைக் காண இங்கே சொடுக்குங்கள்நேற்றைய நேரலை பக்கத்திலிருந்து முக்கிய செய்திகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்:

    • நேஷ்னல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
    • இலங்கையில் ஒரே நாடு ஒரே சட்ட ஜனாதிபதி செயலணியின் பதவிக் காலம் மேலும் 3 வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
    • தமிழ்நாட்டில் மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த கூகுள் நிறுவனத்துடன் இணைந்து புதிய திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று தொடங்கி வைத்தார்.
    • இலங்கையின் 8 மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கடும் மழையுடனான வானிலையினால், பல்வேறு இயற்கை சீற்றங்கள் பதிவாகியுள்ளன.
    • ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டியில் ஜப்பானை வீழ்த்தி, இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.
    • வடமாநில மாணவர்களால் கொரோனா தொற்று என்று தமிழ்நாடு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதற்கு, உத்தரபிரதேச அமைச்சர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
    • இந்தியாவில் விரைவில் மக்கள் தொகை கட்டுப்பாட்டு சட்டம் கொண்டு வரப்படும் என்று மத்திய அமைச்சர் பிரஹலாத் படேல் தெரிவித்துள்ளார்.