You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

தமிழ்நாட்டுக்கு ரூ. 9,602 கோடி ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை விடுவித்த மத்திய அரசு

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு மொத்தம் 86, 912 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு விடுவித்துள்ளது. 2021-2022ஆம் நிதியாண்டில் இந்திய அரசின் நிதி பற்றாக்குறை ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.71 சதவிகிதமாக இருந்தது என்று இந்திய அரசு இன்று வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஜோ மகேஸ்வரன்

  1. இன்றைய நேரலை நிறைவுபெறுகிறது

    வணக்கம். இன்றைய நேரலை இத்துடன் நிறைவு பெறுகிறது. தொடர்ந்து நேரலைப்பக்கத்தில் இணைந்திருந்தமைக்கு நன்றி.

    இதுவரையிலான இன்றைய முக்கிய நிகழ்வுகள்.

    • தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு மொத்தம் 86, 912 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு விடுவித்துள்ளது. இதில், தமிழ்நாட்டுக்கு ரூ. 9, 602 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
    • இலங்கையின் பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரியாக ஜெனரல் ஷவேந்திர சில்வா, ராணுவ தளபதியாக விக்கும் லியனகே நியமிக்கப்பட்டுள்ளனர்.
    • நேபாளின் மஸ்டாங் மாவட்டத்தில், விமான விபத்து ஏற்பட்ட இடத்திலிருந்து தற்போது கருப்புப் பெட்டி கிடைத்துள்ளது.
    • தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது நாளாக இன்றும் ஆய்வு செய்தார். இந்த ஆண்டும் அதிக நெல் சாகுபடி , அதிக மகசூல் கிடைக்கும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
    • திண்டுக்கல் மாவட்டத்தில் அரசியல் கட்சி சார்பான கருத்துகளை முகநூலில் பகிர்ந்து வந்த காவலரை பணியிடை நீக்கம் செய்து, காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
    • உலகின் முதல் நிலை வீரர் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த்.
    • திருச்சி சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள், விடுதலை செய்யக்கோரி 12வது நாளாக தொடர் உண்ணாவிரதப் போராட்டம். இதில், உடல்நலம் பாதிக்கப்பட்ட 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள், குறிப்பாக, இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய, பிபிசி தமிழ் இணையதளம், முகநூல், ட்விட்டர், இண்ஸ்டாகிராம் பக்கங்களில் தொடர்ந்து இணைந்திருங்கள்.

  2. இலங்கையில் அடுத்த அதிர்ச்சி: வவுனியா அருகே மற்றுமொரு சிறுமி சடலம் கண்டெடுப்பு

  3. 2021-2022 நிதியாண்டில் நிதி பற்றாக்குறை ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.71% - இந்திய அரசு

  4. சென்னையில் சொந்த வீடு வாங்க இது சரியான தருணமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

    கொரோனா பெருந்தொற்றுகுப் பிறகு, சென்னையில் ரியல் எஸ்டேட் தொழில் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் சூழலில், பலரும் சொந்த வீடு வாங்குவதில் ஆர்வம் காட்டத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த நிலையில், வீடு வாங்க இது சரியான நேரம் தானா?, ஒரு வீடு வாங்கும் முன் எதையெல்லாம் கவனிக்க வேண்டும்? போன்ற கேள்விகளுக்கு நிபுணர்கள் தரும் விளக்கங்கள் மற்றும் அவசியமான தகவல்கள் நிறைந்த காணொளி இது.

  5. பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் Vs எண்ணெய் நிறுவனங்கள் - விலைக் குறைப்பால் யாருக்கு பாதிப்பு?

  6. வரி வீதத்தை அதிகரித்து அறிவிப்பு வெளியிட்டது இலங்கை பிரதமர் அலுவலகம் - காரணம் என்ன?

  7. தமிழ்நாட்டில் இந்த ஆண்டும் அதிகளவில் நெல் சாகுபடி - மு.க.ஸ்டாலின்

    தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

    திருச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'காவிரி டெல்டா மாவட்டங்களில் கடைமடை வரை தண்ணீர் சென்று சேரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    டெல்டா மாவட்டங்களில் 4,964 கி.மீக்கு 683 பணிகள் நிறைவு பெற்றுள்ளன. முன் கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டு, சாகுபடி பணிகள் முன் கூட்டியே நடைபெறுவதால், வடகிழக்கு பருவ மழையில் சம்பா பயிர்கள் பாதிக்கப்படுவது தவிர்க்கப்படும். இந்த ஆண்டும் ரூ. 61 கோடியில் குறுவைத் தொகுப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

    மகசூல் பெருக்கம், மகிழும் விவசாயி உள்ளிட்ட வாக்குறுதியை நடைமுறைப்படுத்தி வருகிறோம். இதன்படி, கடந்த ஆண்டு அதிக நெல் சாகுபடி செய்யப்பட்டு, உற்பத்தியில் சாதனை அளவாக மகசூல் கிடைத்து, விவசாயிகள் மகிழ்ந்தனர். இந்த ஆண்டும் அதிக சாகுபடி செய்யப்பட்டு, அதிக மகசூல் கிடைக்கும். நெல் உற்பத்தியில் புதிய சாதனையை டெல்டா விவசாயிகள் படைக்க வேண்டும்.' என்றார்.

  8. திருச்சி சிறப்பு முகாமில் இலங்கைத் தமிழர்கள் 12வது நாளாக உண்ணாவிரதம் - 4 பேர் மருத்துவமனையில் அனுமதி

    திருச்சி சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள், தங்களை விடுதலை செய்யக்கோரி 12வது நாளாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உடல்நலம் பாதிக்கப்பட்ட 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    தமிழ்நாட்டில் குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டினர் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இதில், சட்ட விரோதமாக வெளிநாடு செல்ல முயன்றது, சட்ட விரோத குடியேற்றம் உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழர்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்.

    சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள் 10க்கும் மேற்பட்டவர்கள் கடந்த 20ம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர். தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தினால், டிளச்சன், கபிலன், எப்சிபான், தினேஷ் ஆகிய 4 பேருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

    அவர்கள் திருச்சி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பிபிசி தமிழிடம் கூறுகையில், ''தற்போது 17 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். எங்கள் மீதான வழக்குகள் முடிந்து, 3 ஆண்டுகளுக்கு மேல் சிறப்பு முகாம் எனும் சிறையில் அடைத்துள்ளனர்.

    சட்டப்படி எங்களை விடுதலை செய்யக்கோரித்தான் இந்த போராட்டம். போலீசார் வந்து போராட்டத்தை கைவிட வேண்டும் என்கிறார்கள்.

    ஆனால், அரசு அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை. இப்போது மேலும் 8 பேரின் உடல்நிலை மோசமாக உள்ளது. மருத்துவ வசதி கூட செய்து தரவில்லை'' என்று தெரிவித்தனர்.

  9. இந்தியாவில் குரங்கம்மை இல்லை - சுகாதாரத்துறை

    இந்தியாவில் தற்போது வரை குரங்கம்மை நோய் பாதிப்பு கண்டறியப்படவில்லை என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு சுகாதாரத்துறை குரங்கம்மை நோய் மேலாண்மை குறித்த வழிகாட்டுதல்களை அனுப்பியுள்ளது.

    இதன்படி, அறியுடையோரின் மாதிரிகளை புனேவில் உள்ள என்.ஐ.வி பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும், தற்போது வரை இந்தியாவில் குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்படவில்லை. என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

  10. இலங்கை முன்னாள் எம்.பி துமிந்த சில்வாவின் பொது மன்னிப்பை இடைநிறுத்திய நீதிமன்றம்

  11. காங்கிரஸ் எனது சாதனைப் பதிவை வீணடித்து விட்டது - பிரசாந்த் கிஷோர்

    என்னுடைய சாதனைப் பதிவை காங்கிரஸ் வீணடித்து விட்டது என்று தேர்தல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

    இந்திய தேர்தல் உத்தி வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் பிகார் மாநிலத்தில் இன்று கூறுகையில், 'கடந்த 2011-21 வரை 11 தேர்தல்களில் பணியாற்றியுள்ளேன். இதில், உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பணியாற்றிய தேர்தலில் மட்டும் தோல்வி ஏற்பட்டது.

    இதையடுத்து, காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் பணியாற்றுவதில்லை என்று முடிவெடுத்தேன். அவர்கள் என்னுடைய சாதனைப் பதிவை வீணடித்து விட்டனர். '' என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்

  12. விளையாட்டாக லாட்டரி சீட்டு வாங்கியவருக்கு ரூ.10 கோடி பரிசு

  13. 2021-2022இல் இந்தியாவின் ஜிடிபி 8.7 சதவீதம் உயர்வு

    இந்தியாவில் கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் மொத்த உள்நாட்டு வளர்ச்சி உயர்ந்துள்ளது.

    இந்தியாவில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியின் (ஜிடிபி) வளர்ச்சி விகிதம் 2021-2022ஆம் நிதியாண்டில் 8.7 சதவீதம் உயர்ந்துள்ளது.

    இது 2020-21ஆம் நிதியாண்டில் 6.6 சதவீதமாக இருந்தது.

    2021-2022இன் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் ஜனவரி - மார்ச் காலாண்டில் 4.1 சதவீதமாக இருந்தது.

    இந்தியாவின் 8 உள்கட்டமைப்புத் துறைகள் 8.4 சதவீதமாக உயர்ந்துள்ளன. இந்த தகவலை இந்திய அரசுத் தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

  14. தமிழ்நாட்டுக்கு ரூ. 9, 602 கோடி ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை - மத்திய அரசு விடுவிப்பு

    தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு மொத்தம் 86, 912 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு விடுவித்துள்ளது.

    இந்திய அரசின் சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) மாநிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகையை மத்திய நிதி அமைச்சகம் விடுவித்துள்ளது.

    இதன்படி, தமிழ்நாட்டுக்கு ரூ. 9, 602 கோடி, மகராஷ்ட்ராவிற்கு ரூ. 14, 145 கோடி, கர்நாடகத்திற்கு ரூ. 8, 633 கோடி, உத்தரபிரதேசத்திற்கு ரூ. 8, 874, டெல்லிக்கு ரூ. 8, 012 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், கேரளாவிற்கு ரூ. 5, 693 கோடி, மேற்கு வங்கத்திற்கு ரூ. 6, 591 கோடி என 21 மாநிலங்களுக்கு மொத்தம் ரூ. 86, 912 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. 2022ம் ஆண்டு மே 31ம் தேதி வரையிலான இழப்பீட்டுத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

  15. இலங்கை: துமிந்த சில்வா பொதுமன்னிப்பை நீதிமன்றம் இடைநிறுத்தியது

    மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு, ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பை இடைநிறுத்துமாறு உயர்நீதிமன்றம் இன்று (31ம் தேதி) உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இலங்கையில் கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் போது, கொழும்பு புறநகர் பகுதியான கொலன்னாவை - கொட்டிகாவத்தை பகுதியில், இரு குழுக்களுக்கு இடையில் பரஸ்பர துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றது.

    அதில், இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதியின் தொழிற்சங்க ஆலோசகராகவும் இருந்த பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தார்.

    அப்போதைய ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான துமிந்த சில்வா காயமடைந்திருந்தார். பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் படுகொலைக்கு துமிந்த சில்வாவே காரணம் என்கிற குற்றச்சாட்டில், அவர் கைது செய்யப்பட்டார்.

    அவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருந்தது. அவரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, 2021ம் ஆண்டு ஜுன் மாதம் 24ம் தேதி, பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்திருந்தார்.

    ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் துமிந்த சில்வா விடுதலை செய்யப்பட்டமையை சவாலுக்கு உட்படுத்தி, பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் மகள் ஹிருணிகா பிரேமசந்திர, பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் மனைவி சுமனா பிரேமசந்திர மற்றும் மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரான ஜனாதிபதி சட்டத்தரணி கசாலி ஹசைன் ஆகியோர் அடிப்படை உரிமை மீறல் மனுக்களை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர்.

    இந்த மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம், ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பை இடைநிறுத்தி இன்று உத்தரவை பிறப்பித்துள்ளது.

  16. உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க தீர்மானம்: 'யாருக்கு தர்ம சங்கடம்?' ஆதரவும் மறுப்பும் சொல்வது என்ன?

  17. இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட 9 வயது சிறுமியின் உடல் அடக்கம்

  18. 2021-22இல் இந்தியாவின் நிதி பற்றாக்குறை

    2021-2022ஆம் நிதியாண்டில் இந்திய அரசின் நிதி பற்றாக்குறை ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.71 சதவிகிதமாக இருந்தது என்று இந்திய அரசு இன்று வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.

    இது 6.9 சதவிகிதமாக இருக்கும் என்று பட்ஜெட் கணிப்பு திருத்தப்பட்டபோது தெரிவிக்கப்பட்டிருந்தது.

  19. இலங்கை ராணுவ அதிகாரிகள் நியமனம்

    இலங்கையின் பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரியாக ஜெனரல் ஷவேந்திர சில்வா, தளபதியாக விக்கும் லியனகே நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இலங்கை ராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இன்று பணி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து அவர் நாளை (01ம் தேதி) முதல் பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரியாக செயற்படவுள்ளார்.

    ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

    புதிய ராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையின் 24வது ராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே நியமிக்கப்பட்டுள்ளார்.

  20. புதுக்கோட்டையில் டீ கடையில் மொய் விருந்து - இலங்கை மக்களுக்கு உதவ

    இலங்கை மக்களுக்கு உதவும் வகையில், புதுக்கோட்டையில் டீக்கடையில் வாடிக்கையாளர்களிடம் மொய் விருந்து நடத்தியுள்ளனர்.

    இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியால், உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசும் நிவாரணப் பொருட்களை அனுப்பியுள்ளது.

    இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே டீக்கடையில் மொய் விருந்து நடைபெற்றுள்ளது. நிவாரண நிதிக்காக இது இரண்டாவது மொய் விருந்து என்கிறார் இதை நடத்திய சிவக்குமார். இது குறித்த விரிவான காணொளியைக் காணவும்.