You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் கைது: அமலாக்கத்துறை நடவடிக்கை

ஹவாலா பணப்பரிமாற்றம் குறித்த வழக்கில் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கைது செய்யப்பட்டுள்ளார்

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஜோ மகேஸ்வரன்

  1. மோதி ஆட்சியின் 8 ஆண்டுகள்: மக்கள் என்ன சொல்கிறார்கள்?

  2. தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் - எடப்பாடி பழனிச்சாமி

    தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தை, தனி சட்டம் இயற்றி தடை செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.

    தமிழ்நாட்டில் காலியாகவுள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு, அதிமுக சார்பில் போட்டியிடும் சி.வி.சண்முகம், தர்மர் ஆகியோர் இன்று மனுத்தாக்கல் செய்தனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் வைத்திலிங்கம், முனுசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், ''ஆன் லைன் ரம்மி சூதாட்டத்தால் இளைஞர்கள், மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதை தடை செய்ய வேண்டும் என்று நானும், ஒருங்கிணைப்பாளரும் அறிக்கை விட்டோம். சட்டமன்றத்திலும் பேசியுள்ளேன்.

    ஆனால், தமிழ்நாடு அரசு இதை செய்யவில்லை. இன்றைக்கு காவல்துறை டிஜிபியே அறிக்கை விட்டுள்ளார். எனவே ஆன் லைன் ரம்மி சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும். இல்லை என்றால், ஆன்லைன் ரம்மி சூதாட்ட நிறுவனத்தினருடன் ஆட்சியாளர்களுக்கு தொடர்பு இருக்கிறதோ என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.'' என்றார்

  3. சிசேரியன் பிரசவங்களில் தேசிய அளவில் தமிழ்நாடு 2ஆம் இடம் - அதிகரித்தது ஏன்?

  4. ஆந்திரா: சாலை விபத்தில் 9 பேர் உயிரிழப்பு

    ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே பல்நாடு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிரக் மீது டாடா ஏஸ் வாகனம் மோதியதில், 9 பேர் உயிரிழந்தனர்.

    ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலம் சென்று தரிசனம் செய்து விட்டு திரும்பியவர்கள் பயணம் செய்தபோது, நடைபெற்ற இந்த விபத்தில், பலர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் குர்ஜாலா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது.

  5. உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் - திருச்சியில் தீர்மானம்

    திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று திருச்சியில் திமுகவினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

    திமுக திருச்சி தெற்கு மாவட்டக் செயற் குழுக் கூட்டம் அக்கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு பள்ளிக் கல்வி துறை அமைச்சரும் தெற்கு மாவட்ட பொறுப்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை வகித்தார்.

    திருச்சி கிழக்கு எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ், முன்னாள் எம்.எல்.ஏ கே.என்.சேகரன் மற்றும் மாநில, மாவட்டக் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில், 'சட்டமன்ற உறுப்பினரும் மாநில இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும்'என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  6. நரேந்திர மோதியின் 8 ஆண்டு ஆட்சி: மக்களை பாதித்த 8 விஷயங்கள்

  7. தொடர்ந்து இணைந்திருங்கள்

    வணக்கம். நான் ஜோ மகேஸ்வரன்.

    இது வரை நந்தினி வெள்ளைச்சாமி வழங்கிய நேரலைப் பக்கத்தை இனி நான் வழங்குகிறேன். தொடர்ந்து இணைந்திருங்கள்.

    தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    குறிப்பாக, இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.

  8. கொழும்பில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

    கொழும்பு - புறக்கோட்டை பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த துப்பாக்கிச்சூடு இன்று (30) முற்பகல் நடத்தப்பட்டதாக போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

    புறக்கோட்டை - பெஸ்டியன் மாவத்தை பகுதியில் வைத்தே இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. பெஸ்டியன் மாவத்தை பகுதியில் நின்றுகொண்டிருந்த இருவர் மீது, மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவர் இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளனர்.

    சம்பவத்தில் 30 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 27 வயதான ஒருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்த நபர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவரின் நிலை கவலைக்கிடமாக இல்லை என போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

    சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில், புறக்கோட்டை போலீசார் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

  9. கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதி உதவி வழங்கும் திட்டம் - பிரதமர் மோதி தொடங்கி வைத்தார்

    கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோதி தொடங்கிவைத்தார். மேலும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் காப்பீடு அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சியையும் பிரதமர் மோதி காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோதி, கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நாட்டு மக்கள் துணைநிற்பர் என தெரிவித்தார். மேலும், " மனரீதியாக குழந்தைகள் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்வது நமது கடமை. கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதி உதவி வழங்குவது சிறு ஆறுதலைத் தரும். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைவரும் ஒருங்கிணைந்து உதவ வேண்டும்" என அவர் தெரிவித்தார்.

  10. ரணிலுக்கு உதவி செய்யும் ஜப்பானும் இரண்டாம் உலக போரும் - ஒரு சுவாரசிய கதை

  11. தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டியில் உத்தர பிரதேச அணி சாம்பியன்

    கோவில்பட்டியில் நடைபெற்ற தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டியில் உத்தர பிரதேச அணி சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றது.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டியில் உத்தர பிரதேசம் அணி வெற்றி பெற்று 2-வது முறையாக சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றது.

    கோவில்பட்டியில் உள்ள செயற்கை புல்வெளி மைதானத்தில் 12-வது தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டிகள் கடந்த 17-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. நேற்று மாலை நடந்த 4வது போட்டியில், ஹாக்கி ஹரியாணா அணியும், ஹாக்கி அசோசியேஷன் ஆஃப் ஒடிசா அணியும் மோதின.

    போட்டியில், ஹரியாணா அணி 3 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 3-வது இடத்தை பிடித்தது. இந்த அணியை சேர்ந்த விகாஷ் சிறந்த ஆட்டக்காரராக தேர்வு செய்யப்பட்டார்.

    இறுதி போட்டியில் உத்தர பிரதேசம் ஹாக்கி அணியும், ஹாக்கி சண்டிகர் அணியும் மோதின. இதில், உத்தர பிரதேசம் அணி 2 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை வென்றது.

    தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில் கனிமொழி எம்.பி. தலைமை வகித்து போட்டியில் வெற்றி பெற்ற உத்தர பிரதேசம் அணிக்கு கோப்பையை வழங்கினார்.

    கடந்த ஆண்டு கோவில்பட்டியில் நடந்த 11-வது தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டியில் உத்தர பிரதேசம் அணிதான் சாம்பியன் வென்றது குறிப்பிடத்தக்கது.

  12. நான் என்ன தகுதி குறைந்தவளா? - காங்கிரஸ் மீது நக்மா அதிருப்தி

    காங்கிரஸ் கட்சி மீது நக்மா அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

    மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.

    அதன்படி, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தமிழ்நாட்டிலிருந்தும் ஜெய்ராம் ரமேஷ் கர்நாடகாவிலிருந்தும் அஜய் மக்கான் ஹரியாணாவிலிருந்தும் காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா ராஜஸ்தானிலிருந்தும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதேபோன்று ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து பிரமோத் திவாரி, சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து முன்னாள் மத்திய அமைச்சர்கள் ராஜீவ் சுக்லா, ரஞ்சித் ரஞ்சன் ஆகியோரும் மஹாராஷ்டிராவில் இருந்து இம்ரான் பிரதாப்காரியும் போட்டியிடுகின்றனர்.

    மேலும், காங்கிரஸ் கட்சியில் சீர்திருத்தம் வேண்டும் என கோரி, அக்கட்சி தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய 'ஜி 23' தலைவர்களான முன்னாள் மத்திய அமைச்சர்கள் முகுல் வாஸ்னிக் மற்றும் விவேக் தன்கா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

    இதில் அக்கட்சியின் மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளர் நக்மாவின் பெயர் இடம்பெறவில்லை. இதுதொடர்பாக, அவர் காங்கிரஸ் மீது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

    தன் ட்விட்டர் பக்கத்தில் அவர், "2003-04ல் காங்கிரஸ் கட்சியில் நான் இணைந்தபோது, நாங்கள் ஆட்சியில் இல்லை. அப்போது தலைவர் சோனியா காந்தி, என்னை ராஜ்ய சபாவில் தேர்ந்தெடுப்பதாக தனிப்பட்ட முறையில் என்னிடம் உறுதியளித்திருந்தார்.

    அதன்பிறகு இப்போது 18 வருடங்கள் ஆகிவிட்டபோதும் கூட இன்னும் ஒரு வாய்ப்பு கூட வழங்கப்படவில்லை. ஆனால் மஹாராஷ்டிராவிலிருந்து இம்ரானுக்கு மாநிலங்களவையில் இடமளிக்கப்படுகிறது. நான் கேட்கிறேன், நான் என்ன தகுதி குறைந்தவளா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

  13. மாநிலங்களவை தேர்தல்: காங்கிரஸ் சார்பாக ப.சிதம்பரம் உள்ளிட்ட 10 பேர் போட்டி

    மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.

    அதன்படி, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தமிழ்நாட்டிலிருந்தும் ஜெய்ராம் ரமேஷ் கர்நாடகாவிலிருந்தும் அஜய் மக்கான் ஹரியாணாவிலிருந்தும் காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா ராஜஸ்தானிலிருந்தும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதேபோன்று ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து பிரமோத் திவாரி, சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து முன்னாள் மத்திய அமைச்சர்கள் ராஜீவ் சுக்லா, ரஞ்சித் ரஞ்சன் ஆகியோரும் மஹாராஷ்டிராவில் இருந்து இம்ரான் பிரதாப்காரியும் போட்டியிடுகின்றனர்.

    மேலும், காங்கிரஸ் கட்சியில் சீர்திருத்தம் வேண்டும் என கோரி, அக்கட்சி தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய 'ஜி 23' தலைவர்களான முன்னாள் மத்திய அமைச்சர்கள் முகுல் வாஸ்னிக் மற்றும் விவேக் தன்கா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

  14. பாதுகாப்பை திரும்ப பெற்ற மறுநாள் பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா சுட்டுக் கொலை - ஆம் ஆத்மி அரசு மீது கடும் விமர்சனம்

    பஞ்சாப் பாடகரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான சித்து மூஸ்வாலா நேற்று மாலை மான்சாவில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, முதலமைச்சர் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு மீது கடும் விமர்சனம் எழுந்துள்ளது.

    பஞ்சாப் அரசு சனிக்கிழமை (மே 28) அன்று மத, அரசியல் தலைவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் என மொத்தம் 424 விஐபிக்களுக்கு அளித்துவந்த பாதுகாப்பை விலக்கிக்கொண்டது அல்லது பாதுகாப்பை குறைத்துக்கொண்டது. அவ்வாறு பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டவர்களில் சித்து மூஸ்வாலாவும் ஒருவர்.

    லாரன்ஸ் பிஷ்னோய் என்பவருக்கு இந்த கொலையுடன் தொடர்பிருப்பதாகவும், அவர் தலைமையிலான கும்பலைச் சேர்ந்த கனடாவில் உள்ள கோல்டி பிரார் என்பவர் இக்கொலைக்கு ஃபேஸ்புக் வாயிலாக பொறுப்பேற்றிருப்பதாகவும் பஞ்சாப் காவல்துறை தெரிவித்துள்ளது.

  15. நேபாளத்தில் காணாமல் போன விமானம் சிதைந்த நிலையில் கண்டெடுப்பு

    நேபாளத்தில் நேற்று காணாமல் போன தாரா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இரட்டை எஞ்சின் விமானம் சிதைந்த நிலையில் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று நேபாள நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

    இந்த விமானத்தில் மொத்தம் 22 பேர் பயணித்தனர். இதுவரை 14 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்று நேபாள ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் தேவ் சந்திர லால் கர்ணா பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

    நேபாளத்தில் உள்ள மஸ்டாங் மாவட்டத்தில் சுமார் 14500 அடி உயர இமயமலைப் பகுதியில் இந்த விமானம் நேற்று விழுந்து நொறுங்கியது. விமானம் விழுந்து நொறுங்கிய இடத்திற்கு மீட்பு ஹெலிகாப்டர்கள் சென்று அடைந்துள்ளதாகவும் அங்கு மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் நேபாள அரசு தெரிவித்துள்ளது.

  16. வணக்கம் நேயர்களே!

    நான் நந்தினி வெள்ளைச்சாமி. பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன். தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    குறிப்பாக இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள். உங்கள் பகுதியின் சுவாரசியமான செய்திகளைப் பற்றிஎங்கள் டிவிட்டர் கணக்கின் மூலம் தகவல் அளியுங்கள்.