You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
லடாக் வாகன விபத்து - ராணுவ வீரர்கள் 7 பேர் உயிரிழப்பு
தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம். குறிப்பாக, இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
எம்.ஆர். ஷோபனா
நேயர்களுக்கு வணக்கம்!
இன்றைய நேரலை இத்துடன் நிறைவு பெறுகிறது.
இன்று நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இதோ:
- லோக்பால் அமைப்பின் தற்காலிக தலைவராக நீதிபதி பிரதீப் குமார் மொஹந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
- இந்தி எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீ இலக்கியத்திற்காக வழங்கப்படும் புகழ்வாய்ந்த சர்வதேச புக்கர் பரிசை வென்றுள்ளார்.
- லடாக்கின் துர்துக் பகுதியில், வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில், ராணுவ வீரர்கள் 7 பேர் உயிரிழந்ததாக ஏ.என்.ஐ முகமை தெரிவித்துள்ளது.
- விசா முறைகேடு விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம், டெல்லி சிபிஐ அலுவலகத்தில் இன்று விசாரணைக்காக ஆஜரானார்.
- சிபிஐ வழக்கு தொடர்பாக, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கார்த்தி சிதம்பரம் கடிதம் எழுதியுள்ளார்.
- போதைப் பொருள் வைத்திருந்ததாகக் கூறப்படும் வழக்கில், பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் மகன் ஆர்யன் கான் நிரபராதி என்று தேசிய போதைப் பொருள் தடுப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
- பத்திரிக்கையாளர் கெளரி லங்கேஷ் கொல்லப்பட்ட வழக்கின் விசாரணை, நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இன்று தொடங்கியுள்ளது.
- தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் கல்வி கட்டணம் உயர்த்தப்படாது என்று உயர்கல்வி அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
- ராமேஸ்வரம் அருகே மீனவப் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில், ஆறு வடமாநில இளைஞர்களை காவல்துறை கைது செய்தது. இதில், இருவர் இவ்வழக்கில் சம்மந்தப்பட்டவர்கள் என காவல்துறை தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
BBC தமிழ் இணையதளத்தில் கடந்த சில நாட்களில் வெளியான, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டிய செய்திகள்
இலங்கை பொருளாதார நெருக்கடி: பல நாட்கள் நீடித்த போராட்டம் வலுவிழந்தது ஏன்?
லோக்பால் அமைப்பின் தற்காலிக தலைவராக நீதிபதி பிரதீப் குமார் நியமனம்
அரசியல்வாதிகள் மற்றும் அரசு ஊழியர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் லோக்பால் அமைப்பின் தற்காலிக தலைவராக நீதிபதி பிரதீப் குமார் மொஹந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த அமைப்பின் தற்போதைய தலைவராக உள்ள நீதிபதி பினாகி சந்திரகோஸின் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து, நீதிபதி பிரதீப் குமாரை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தற்காலிக தலைவராக நியமித்துள்ளார்.
ஒடிசா மாநிலம் கட்டாக் பகுதியைச் சேர்ந்த நீதிபதி பிரதீப் குமார் மொஹந்தி, நாளை (மே 28) பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை எம்.பி விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமுன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போலி ஆவணங்கள் மூலம் இரண்டு கடவுச் சீட்டுக்களைப் பெற்றார் எனும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டமையை அடுத்து, இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், 1 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்தவும் அவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த தொகையை செலுத்தத் தவறினால், மேலும் ஆறு மாத காலம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.இதனையடுத்து, சஷி வீரவன்ச தனக்கு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தனது சட்டத்தரணிகள் மூலம் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மேல்முறையீட்டு மனு வரும் திங்கட்கிழமை (30) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தில் அமைச்சராக பதவி வகித்த விமல் வீரவன்ச, சில காலங்களுக்கு முன்னர் ஜனாதிபதியினால் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
இதனையடுத்து, அவரும் அவருடைய சகாக்களும், அரசாங்கத்தை விட்டு வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.
கச்சத்தீவு விவகாரம் - தமிழக முதல்வர் ஸ்டாலின் மீது இலங்கை மீனவர்கள் அதிருப்தி, ரஞ்சன் அருண் பிரசாத்
இந்திய பிரதமர் நரேந்திர மோதி, தமிழகத்திற்கு நேற்று விஜயம் மேற்கொண்டிருந்த தருணத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்த கோரிக்கை இன்று இலங்கை மக்கள் மத்தியில் பாரிய மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் கடலோர மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோதியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இது தற்போது இலங்கை மீனவ சமூகத்திற்கு மத்தியில் பாரிய மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, நிவாரண உதவிகளை செய்வதை போல காண்பித்து, தமது உரிமையை பறித்தெடுக்க தமிழக முதல்வர் முயற்சிப்பதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இலங்கை - இந்திய மக்களின் தொப்புள் கொடி உறவை அறுக்கும் செயற்பாடாகவே தாம் இதனை பார்ப்பதாக யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளன தலைவர் அண்ணலிங்கம் அன்னராசா பிபிசி தமிழுக்கு தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சர்க்கரை ஏற்றுமதிக்கு இனி அரசு அனுமதி அவசியம்: காரணம் என்ன?
கெளரி லங்கேஷ் கொலை வழக்கு விசாரணை இன்று தொடக்கம், இம்ரான் குரேஷி
பத்திரிக்கையாளர் கெளரி லங்கேஷ் கொல்லப்பட்ட வழக்கின் விசாரணை, நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இன்று தொடங்கியுள்ளது.
இந்த வழக்கில் 18 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சிறப்பு அரசு வழக்கறிஞர் தரப்பையும், குற்றச்சாட்டப்பட்ட 18 பேரில், ஒருவர் தலைமறைவாக இருக்க, 17 பேருக்கான வழக்கறிஞர்களின் தரப்பையும் கேட்ட பிறகு, இந்த விசாரணையின் அடிப்படை விதிகளை, கூடுதல் மாவட்ட சிவில் மற்றும் அமர்வு நீதிபதி சி.எம். ஜோஷி அமைத்தார்.
பெங்களூருவில் கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி, கெளரி லங்கேஷ் அவரது வீட்டு வாசலில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். முதல் ஆறு மாதங்கள் எந்த தகவலும் கிடைக்காத நிலையில், மண்டையா பகுதியில், நவீன் குமார் என்பவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்திய போது, இந்த கொலைக்கான ஆயுதங்கள் எவ்வாறு பெறப்பட்டன என்று கூறினார்.
இந்த வழக்கின் விசாரணை, ஒவ்வொரு மாதமும் ஒரு வாரத்தில் தினமும் நடக்கும் என்று நீதிபதி தெரிவித்தார். இந்த வழக்கின் முதல் அமர்வு ஜூலை 4 முதல் 8 ஆம் தேதி வரை நடக்கும்.
வந்துகொண்டிருக்கும் செய்தி, லடாக் விபத்தில் ராணுவ வீரர்கள் 7 பேர் உயிரிழப்பு - பிரதமர் இரங்கல்
லடாக்கின் துர்துக் பகுதியில், வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில், ராணுவ வீரர்கள் 7 பேர் உயிரிழந்ததாக ஏ.என்.ஐ முகமை தெரிவித்துள்ளது. மேலும், சிலர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு விரைவாக மருத்துவ சிகிச்சை அளிக்கும் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோதி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "காயமடைந்த வீரர்கள் விரைவில் குணமடைவார்கள் என நம்புகிறேன். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும்," என்று அவர் தெரிவித்துள்ளார்.
பசுமை ஹைட்ரஜன் தயாரிப்பில் முன்னணி வகிக்க இந்தியா திட்டம்: எந்த அளவு கை கொடுக்கும்?
சொத்து குவிப்பு வழக்கு - முன்னாள் ஹரியானா முதல்வருக்கு 4 ஆண்டுகள் சிறை
சொத்து குவிப்பு வழக்கில், முன்னாள் ஹரியானா முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், 50 லட்சம் ரூபாய் அபராதமும் செலுத்த உத்தரவிட்டுள்ளது.
அவர் 1999 முதல் 2005 ஆம் ஆண்டு வரை முதல்வராக பதவி வகித்த காலகட்டத்தில், முறைகேடாக ரூ.6.09 கோடி மதிப்பிலான சொத்துகளைச் சேர்த்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கு, டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
முதல்வர் மு.க. ஸ்டாலின் நடந்துகொண்ட விதம் ஒரு கரும்புள்ளி - அண்ணாமலை
"தமிழ்நாட்டில் இதுவரை பிரதமரை மதித்திருக்கிறார்கள். ஆனால், முதல்வர் மு.க. ஸ்டாலின் நடந்துகொண்ட விதம் ஒரு கரும்புள்ளி" - தமிழ்நாடு பாஜக தலைவர் கே. அண்ணாமலையின் இந்த கருத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
பிபிசி தமிழின் ட்விட்டர் பக்கத்தில் உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்.
''கையில் ஒரு ரூபாய் வருமானம் கூட இல்லை; பணம் அச்சடிக்க வேண்டும்'' - ரணில் விக்ரமசிங்க
போதைப் பொருள் வழக்கு - 'நடிகர் ஷாரூக்கான் மகன் ஆர்யன் கான் நிரபராதி'
மும்பையில் கடந்த 2021ஆம் ஆண்டு கப்பலில் நடந்த விருந்தில், போதைப் பொருள் வைத்திருந்ததாகக் கூறப்படும் வழக்கில், பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் மகன் ஆர்யன் கான் நிரபராதி என்று தேசிய போதைப் பொருள் தடுப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஆண்டு, ஆர்யன் கான் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் வெளிவந்தார்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமையன்று இந்த வழக்கு தொடர்பாக 6 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை தேசிய போதைப்பொருள் தடுப்பு அமைப்பு தாக்கல் செய்தது. இதில், ஆர்யன் கான் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரங்கள் இல்லாததால், இந்த வழக்கில் அவரை நிரபராதி என்று தேசிய போதைப் பொருள் தடுப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
யுக்ரேனில் கைவிடப்பட்ட ரஷ்ய படை வீரர்களின் உடல்கள்
ரஷ்ய ராணுவ வீரர்களின் சடலங்களை யுக்ரேன் அதிகாரிகள் மீட்டு ரஷ்யாவுக்கு அனுப்பி வருகின்றனர். ஆனால், ரஷ்யா இதில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை என்று யுக்ரேன் தெரிவிக்கிறது.ஆனால், இந்த சடலங்களுக்காக அவர்களது குடும்பங்கள் இன்னும் காத்திருக்கலாம். என்ன நடக்கிறது? எதிரியாக பார்க்கப்படும் நாட்டு வீரர்களின் சடலங்களை இவர்கள் மீட்டு வருவது ஏன் ஆகியவற்றை இந்தக் காணொளியில் அறிந்து கொள்ளலாம்.
தாய் இறந்ததை மகள்களிடம் மறைத்து தேர்வெழுத வைத்த தந்தை
தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் கட்டணம் உயர்த்தப்படாது - பொன்முடி
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் கல்வி கட்டணம் உயர்த்தப்படாது என்று உயர்கல்வி அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பாலிடெக்னிக் என்ற அழைக்கப்படும் பலவகை தொழில்நுட்ப கல்விக்கான மாணவர் சேர்க்கைக்காக அட்டவணையை அமைச்சர் பொன்முடி இன்று சென்னையில் வெளியிட்டார். மேலும் பாலிடெக்னிக் படிப்புகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க இந்த ஆண்டு 10 புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.
பொறியியல் கல்வி கட்டணம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், பொறியியல் கல்லூரிகளில் பழைய செமஸ்டர் கட்டணமே வசூலிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
நீலகிரி : காட்டு யானை அச்சத்தால் பொது தேர்வு எழுத செல்ல முடியாத பள்ளி மாணவிகள்
நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட ஆரூற்றுபாறை கிராமத்தில் வியாழக்கிழமையன்று காலை ஆனந்த் (46) என்பவர் காட்டு யானை தாக்கி பலியானார்.
இதனைத் தொடர்ந்து அங்கு குவிந்த கிராம மக்கள் 5 மணி நேரம், அவரது உடலை சாலையில் வைத்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து வனத்துறையினர் மற்றும் உயர் அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக அந்த யானையை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனிடையே அப்பகுதியில் உள்ள குடியிருப்புகள் வழியாக சென்ற காட்டு யானை, அங்குள்ள தேயிலை தோட்டம் ஒன்றில் தஞ்சம் அடைந்தது. யானை வழக்கமாக செல்லும் வழியில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. பிரகாஷின் இரண்டு பெண் குழந்தைகளான ரஷ்மிதா மற்றும் பிரவீனா தற்போது பத்தாம் வகுப்பு படித்து வருகின்றனர்.
இன்று காலை அவர்கள் பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு எழுத தயாராக இருந்த நிலையில், அவர்களது வீட்டு வழியாக சென்ற காட்டு யானை அவர்களின் வீடு அருகே உள்ள தேயிலை தோட்டத்தில் தஞ்சம் அடைந்திருந்தது.
அவர்கள் தேர்வுக்குச் செல்ல நேரம் ஆன நிலையில் காட்டு யானை எந்நேரமும் வரலாம் என்ற அச்சத்தில் மாணவிகள் இருவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கினர். தொடர்ந்து காட்டு யானை அதே பகுதியில் முகாமிட்டு இருந்ததால் அவர்களால் குறித்த நேரத்திற்கு தேர்வு எழுத செல்ல முடியவில்லை. மாவட்ட கல்வி நிர்வாகம் பொதுத்தேர்வு எழுத உதவுமாறு மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாட்டுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் நரேந்திர மோதி
"தமிழ்நாட்டுக்கு நேற்று வருகை தந்தது மறக்க முடியாதது," என்று பிரதமர் நரேந்திர மோதி தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.
சென்னையில் வியாழக்கிழமையன்று வருகை தந்த நரேந்திர மோதி, ரூ 31,500 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், அவர் 'நன்றி தமிழ்நாடு' என்று ட்வீட் செய்து, அவரது வருகை குறித்த முக்கிய நிகழ்வுகளை சிறிய வீடியோ பதிவாகவும் பகிர்ந்துள்ளார்.