You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

புதிய திட்டங்களைத் தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோதி

பிரதமர் நரேந்திர மோதி இன்று சென்னைக்கு வருகை தந்துள்ளார். அவரை ஆளுநர் ஆர்.என் ரவி, அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் விமான நிலையத்தில் வரவேற்றனர்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

எம்.ஆர். ஷோபனா

  1. நேயர்களுக்கு வணக்கம்!

    இன்றைய நேரலை இத்துடன் நிறைவு பெறுகிறது.

    இன்று நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இதோ:

    • சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கும் அரசு விழாவில், ரூ.31,500 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோதி.
    • ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் நான்கு வெவ்வேறு இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
    • விசா முறைகேடு வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரத்திடம் சிபிஐ விசாரணை.
    • பிரபல சமூக வலைதளமான ட்விட்டர் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் இருந்து முன்னாள் தலைமை செயல் அதிகாரி ஜாக் டோர்சி விலகியுள்ளார்.
    • இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,628 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
    • சென்னையில் பாஜக நிர்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில், சேலம் மாவட்டத்தில் பதுங்கியிருந்த நான்கு பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
    • கடற்பாசி எடுக்கச் சென்ற மீனவப் பெண்ணை வடமாநில இளைஞர்கள் கூட்டு பாலியல் வன்முறை செய்து கொலை செய்த வழக்கில், ராமநாதபுரம் காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், பாஜக தொண்டர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் நரேந்திர மோதி, குடும்ப அரசியல் செய்யும் கட்சிகள்தான் நாட்டிற்கு மிகப்பெரிய எதிரிகளாக உள்ளனர் என்றார்.
  2. இலங்கைக்கான சீன தூதர் முதன்முறையாக கிழக்கு மாகாணத்திற்கு பயணம்

    இலங்கைக்கான சீனத்தூதுவர் ஷி ஷென்ஹாங் நேற்று முன்தினம் தொடங்கி கிழக்கு மாகாணத்தில் பல்வேறு இடங்களுக்கும் பயணங்களை மேற்கொண்டு வருகிறார்.

    கிழக்கு மாகாணத்துக்கான அவரின் முதல் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    அந்த வகையில், அவர் இன்று கிழக்கிலுள்ள கல்முனை பிரதேசத்துக்கு வருகை தந்து, மக்களுக்கு உலருணவுப் பொருள்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை வழங்கி வைத்தார்.

    நேற்று முன்தினம் திருகோணமலைக்கு விஜயம் செய்த சீனத் தூதுவர்; அங்குள்ள துறைமுகம் மற்றும் சீனன்குடா பகுதிகளுக்கும் படகு மூலம் சென்றிருந்தார்.

    இதன்போது கிழக்கு மாகாண ஆளுநர் அனுராத யஹம்பத் உடனிருந்தார்.

  3. பொருளாதார நெருக்கடியில் இலங்கை முதல் இடம்: ரணில்

    உலகம் எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வரும் சுமார் 70 நாடுகளில், இலங்கை முதலிடத்தில் உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார்.மத்திய வங்கி ஆளுநர், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வங்கிகளின் பிரதானிகளை இன்று சந்தித்து கலந்துரையாடல்களை நடத்திய போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

    ஏற்றுமதியை இலக்காக கொண்டு பொருளாதார அடிப்படையில் கொள்கைகளை எடுக்கும் அவசியம் தற்போது உள்ளதாக அவர் கூறுகின்றார்.

    ஏற்றுமதி ஊக்குவிப்பில் மாத்திரமே, இந்த பொருளாதார நெருக்கடியை வெற்றிக் கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.எதிர்வரும் காலங்களில் உள்நாடு மற்றும் வெளிநாடு என்ற ரீதியில் பல்வேறு சவால்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக கூறிய அவர், அதற்கான தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

    சர்வதேச ரீதியில் வட்டி விதம் அதிகரிப்பதற்கான அபாயம் காணப்படுவதாகவும், சர்வதேச ரீதியில் உணவு பொருட்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

    இவ்வாறான விடயங்களை புரிந்துக்கொண்டு செயற்பட வேண்டியுள்ளதாக பிரதமர் தெரிவிக்கின்றார்.இந்த சந்தர்ப்பத்தில் சரியான கொள்கைகளை பின்பற்றி, முன்னோக்கி செல்வதானது, நாடு தேவையற்ற விளைவுகளை வரையறுத்துக் கொள்ள முடியும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

  4. மதுரை ஆவின் பணி நியமன முறைகேடு: 30 பணியாளர்களுக்கு சம்மன்

    மதுரை ஆவின் நிறுவனத்தில் நடந்த பணிநியமனம் தொடர்பான முறைகேடுகள் குறித்து விசாரிக்க 30 பணியாளர்களுக்கு சம்மன் அனுப்பட்டுள்ளது.

    மதுரை ஆவின் நிறுவனத்தில், கடந்த 2020,2021 ஆகிய ஆண்டுகளில் மேலாளர், நிர்வாகிகள் உட்பட 61 பணியிடங்கள் நிரப்பபட்டன. இதில் தகுதி இல்லாதவர்களுக்கு முறைகேடாக பணி நியமனம் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ஜெயசீலன் தலைமையிலான குழு இரண்டு முறை விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தது.

    மேலும், கூட்டுறவு சங்கங்கள் 81ஆம் சட்டப்படி, ஆவின் பால்வளத்துறை துணை பதிவாளர் கணேசன் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. எஸ்பி ஜெயலெட்சுமி தலைமையிலும் இரண்டு நாட்களாக விசாரணை தொடர்ந்தது.

    இந்நிலையில் துணை பதிவாளர் கணேசன், 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் பணி நியமனம் செய்யப்பட்ட 30க்கும் மேற்பட்டோர் இன்று நேரில் ஆஜராக சம்மன் அனுப்பபட்டு உள்ளது. பணி நியமம், கல்வித்தகுதி உள்ளிட்ட அனைத்து வகையில் அசல் சான்றிதழை ஆவணங்களை சமர்ப்பித்து விசாரணை நடந்தது.

  5. சென்னையில் பிரதமர் மோதி: முதலமைச்சர் ஸ்டாலின் முன்வைத்த கோரிக்கைகள்

  6. புதிய திட்டங்களைத் தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோதி

    சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கும் அரசு விழாவில், ரூ.31,500 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோதி.

    அதில், ரூ.1,803 கோடியில், எழும்பூர், ராமேஸ்வரம், மதுரை, காட்பாடி, குமரி ஆகிய இடங்களில் 5 ரயில் நிலையங்களை நவீனமயமாக்கும் திட்டத்திற்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

    கலங்கரை விளக்கம் திட்டத்தின் கீழ் ரூ.116 கோடியில் கட்டப்பட்டுள்ள 1,152 வீடுகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.

    எண்ணூர் காமராஜர் துறைமுகம் முதல் தூத்துக்குடி வரை திரவ இயற்கை எரிவாயு பைப்லைன் திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.

    ரூ. 598 கோடியில் தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 3வது ரயில் வழித்தடத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.

  7. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய அரசு விழா

    சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் அரசு விழாவில், பிரதமர் நரேந்திர மோதியை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வரவேற்றார்.

    தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க நடைபெறும் இந்த அரசு விழா, தமிழ்தாய் வாழ்த்துடனும், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளுடனும் தொடங்கியுள்ளது.

    நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு செல்லும் வழியில், பாஜக தொண்டர்கள் பிரதமர் நரேந்திர மோதிக்கு உற்சாக வரவேற்பை அளித்தனர்.

  8. வயது வந்த, சுய ஒப்புதலோடு பாலியல் தொழில் செய்வோர் மீது குற்ற நடவடிக்கை கூடாது: உச்ச நீதிமன்றம்

  9. ராமேஸ்வரம் அருகே பெண் பாலியல் வன்முறை - காவல்துறை தீவிர விசாரணை

    கடற்பாசி எடுக்கச் சென்ற மீனவப் பெண்ணை வடமாநில இளைஞர்கள் கூட்டு பாலியல் வன்முறை செய்து கொலை செய்த வழக்கில், ராமநாதபுரம் காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த செவ்வாய்க்கிழமை காலை ராமேஸ்வரம் அடுத்த வடகாடு பகுதியில் இருந்து கடற்பாசி எடுப்பதற்காக சென்ற மீனவப் பெண் ஒருவரை அப்பகுதியில் இயங்கி வரும் இறால் பண்ணையில் பணிபுரியும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் கூட்டு பாலியல் வன்முறை செய்து கொலை செய்ததாக சொல்லப்படுகிறது.

    இந்நிலையில் அந்த இறால் பண்ணையில் வேலை செய்த 6 வடமாநில இளைஞர்கள் கைது செய்த ராமநாதபுரம் காவல்துறை அவர்களை மண்டபம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில் உயிரிழந்த பெண் அணிந்திருந்த வெள்ளி மற்றும் தங்க நகைகள் சில கைப்பற்றப்பட்டதாகவும் தெரிகிறது.

  10. சென்னையில் பிரதமர் நரேந்திர மோதி

    பிரதமர் நரேந்திர மோதி இன்று சென்னைக்கு வருகை தந்துள்ளார். அவரை ஆளுநர் ஆர்.என் ரவி, அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் விமான நிலையத்தில் வரவேற்றனர்.

    சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கும் அரசு விழாவில் நரேந்திர மோதி கலந்துகொள்கிறார். தமிழகத்தில் ரூ. 31,500 கோடி மதிப்பிலான 11 திட்டங்களை பிரதமர் நரேந்திர மோதி தொடங்கி வைக்கிறார்.

    அவரது வருகையையொட்டி, சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

  11. பழவேற்காடு - வேலைவாய்ப்பை வழங்கக் கோரி மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

    எல் அண்ட் டி நிறுவனம், அதானி துறைமுகம் வருகையால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாகவும், அரசு அறிவித்தபடி எஞ்சிய 1,500 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கக் கோரியும் பழவேற்காடு பகுதி மீனவர்கள் இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

    திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளியில் கடந்த 2007ஆம் ஆண்டு எல் அண்ட் டி நிறுவனம், கப்பல் கட்டும் துறைமுக தளம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும் எனக் கூறி பழவேற்காடு பகுதி மீனவர்கள் எல் அண்ட் டி துறைமுகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்போது போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனைத் தொடர்ந்து, 1750 குடும்பங்களைச் சேர்ந்த மீனவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு, அதற்கான அதிகாரபூர்வ அரசாணை கடந்த 2011ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதன்பின் எல் அண்ட் டி துறைமுகத்தில் குறைந்த ஊதியத்தில் 250 பேருக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் பணி வழங்கப்பட்டன. ஆனால், பத்தாண்டுகளுக்கு மேலாகியும் அவர்களுக்கு ஊதிய உயர்வு பணி நிரந்தரம் வழங்கப்படவில்லை. மேலும் 1,500 பேருக்கு வேலை வழங்கப்பட்டவில்லை.

    இதன் காரணமாக பழவேற்காட்டில், எல் அண்ட் டி துறைமுகம் அருகே மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர்.

  12. பத்தல பத்தல பாடல்: ஒன்றியம் என்ற சொல் பற்றி கமல்ஹாசன் சொன்னது என்ன?

  13. “வீட்டிற்கு சென்று சமையல் செய்யுங்கள்,” பெண் எம்.பி குறித்து மகாராஷ்ட்ரா பாஜக தலைவர் சர்ச்சை கருத்து

    மகாராஷ்ட்ரா மாநிலத்தின் பாஜக தலைவர் சந்திரகாந்த் படேல், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான சுப்ரியா சுலே குறித்து பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    பி.டி.ஐ முகமை செய்தியின்படி, “உங்களுக்கு அரசியல் புரியவில்லையெனில், வீட்டிற்கு சென்று சமையல் செய்யுங்கள்,” என்று சந்திரகாந்த் படேல் கூறியுள்ளார்.

    மகாராஷ்ட்ரா மாநிலத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓ.பி.சி) இட ஒதுக்கீடு விவகாரத்தில் இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.

    இந்நிலையில், அவர் இந்த கருத்தைத் தெரிவித்துள்ளார்.

    இதற்கு பதிலளித்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி தலைவர் வித்யா சவான், “நீங்கள் மனுதர்மத்தின் மீது நம்பிக்கை கொண்டவர் என்று எங்களுக்கு தெரியும். ஆனால், அதற்காக நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம்.அவர் ரொட்டி செய்ய கற்றுக் கொள்ளட்டும். அவரது மனைவிக்கு உதவியாக இருக்கும்,” என்று கூறியுள்ளார்.

  14. வீரப்பன் அண்ணன் மாதையன்: 34 ஆண்டுகள் சிறையில் கழித்த பின்னணி என்ன?

  15. நாட்டிற்கு மிகப்பெரிய எதிரிகள் குடும்ப அரசியல் செய்யும் கட்சிகளே: பிரதமர் மோதி

    தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்துக்கு இன்று பிரதமர் நரேந்திர மோதி வருகை தந்துள்ளார். பாஜக தொண்டர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், குடும்ப அரசியல் செய்யும் கட்சிகள்தான் நாட்டிற்கு மிகப்பெரிய எதிரிகளாக உள்ளனர் என்று தெரிவித்துள்ளதாக பி.டி.ஐ செய்தி முகமை ட்வீட் செய்துள்ளது.

    மேலும், அவர்கள் தங்களின் வளர்ச்சியில் மட்டுமே நாட்டம் கொண்டவர்கள் என்றும் மோதி கூறியுள்ளார்.

  16. ஞானவாபி மசூதி: இந்த விவகாரம் சர்ச்சையாக மாறுவதை நீதிமன்றத்தால் தடுத்திருக்க முடியுமா?

  17. ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் நான்கு இடங்களில் குண்டுவெடிப்பு - 12 பேர் உயிரிழப்பு

    ஆப்கானிஸ்தானில் புதன்கிழமையன்று நான்கு வெவ்வேறு இடங்களில் நடந்த குண்டு வெடிப்பில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

    மசர்-இ-ஷரிஃப் பகுதியில் மினி பஸ் ஒன்றில் மூன்று குண்டுகள் வெடித்ததில், 10 பேர் உயிரிழந்துள்ளனர்; 15 பேர் காயமடைந்தனர். காபூல் நகரிலுள்ள மசூதி ஒன்றில் நடந்த குண்டுவெடிப்பில், இருவர் உயிரிழந்தனர்; 10 பேர் காயமடைந்தனர். ராய்ட்டர்ஸ் செய்தி முகமையின் தகவலின்படி, இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் ஐ.எஸ். அமைப்பு இந்த குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்றுள்ளது.

  18. பணப் பரிமாற்ற முறைகேடு வழக்கு: டி.கே சிவகுமார் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

    பணப் பரிமாற்ற முறைகேடு வழக்கில், கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே சிவகுமார் மீது குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்துள்ளது அமலாக்கத்துறை.

    பணப் பரிமாற்ற முறைகேடு தொடர்பாக வருவாய் வரித்துறை அவர் மீது அளித்த புகாரின் பெயரில், அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் கடந்த 2019 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட அவர், தற்போது ஜாமீனில் வெளி வந்துள்ளார். இந்நிலையில், அவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

  19. ட்விட்டர் நிறுவனத்திலிருந்து விலகினார் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ஜாக் டோர்சி

    பிரபல சமூக வலைதளமான ட்விட்டர் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் இருந்து முன்னாள் தலைமை செயல் அதிகாரி ஜாக் டோர்சி விலகியுள்ளதாக ஏ.என்.ஐ முகமை தெரிவித்துள்ளது.

    இதன் மூலம், அந்நிறுவனத்தில் இருந்து அவர் அனைத்து பொறுப்பில் இருந்து விலகியுள்ளார்.

    உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கவுள்ள நிலையில், ஜாக் டோர்சி விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

  20. பிரதமர் தமிழ்நாடு வரும்போதெல்லாம் 'Go Back Modi' ட்ரெண்ட் ஆவது ஏன்?