You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
முதன்முறையாக நடைபெற்ற போர்க் குற்ற விசாரணை: ரஷ்ய படை வீரருக்கு வாழ்நாள் சிறை
தண்டனை விதிக்கப்பட்ட ரஷ்ய கமாண்டர் வாதிம் ஷிஷிமரின், யுக்ரேனின் வட கிழக்கு பகுதியில் உள்ள சுபாகிவ்கா என்ற கிராமத்தில் ஒலெக்சாண்டர் ஷெலிபோவ் என்ற 62 வயது முதியவரை கொன்றதாக குற்றம் சுமத்தப்பட்டது.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
விஷ்ணுப்ரியா ராஜசேகர்
நேயர்களுக்கு வணக்கம்!
இன்றைய நேரலை இத்துடன் நிறைவு பெறுகிறது.
இன்று நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இதோ:
- யுக்ரேனில் நடைபெற்ற போர்க் குற்ற விசாரணையில் ரஷ்ய படை வீரர் ஒருவருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
- கேரளாவில் வரதட்சணை கொடுமையால் 24 வயது பெண் உயிழந்த சம்பவத்தில் கணவர் குற்றவாளி என கொல்லம் கூடுதல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
- பதவியேற்ற பிறகு முதன்முறையாக ஜப்பான் சென்றுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்தோ பசிபிக் பொருளாதார கட்டமைப்பை (IPEF) தொடங்கியுள்ளார்.
- கேரள மாநிலம் லச்சத்தீவு அருகே ரூ.1,526 கோடி மதிப்பிலான 218 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக குமரி மீனவர்கள் உட்பட 20 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
- திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 55 குவாரிகளை ஆய்வு செய்ய வெளி மாவட்ட அதிகாரிகள் உள்ளிட்ட ஆறு சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
- தைவான் மீது சீனா படையெடுத்தால், தைவானை பாதுகாக்க அமெரிக்கா தன் படைகளை பயன்படுத்தும் என அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்துள்ளார்.
- யுக்ரேனின் கிழக்கு பகுதியில் ஒரு நாளில் 50 – 100 பேர் வரை உயிரிழக்கின்றனர் என யுக்ரேன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் நடராஜரை தவறாக பேசியதாக யூடியூப்ரை கைது செய்ய வலியுறுத்தி சிவனடியார்கள் ஆர்பாட்டம்
சிதம்பரம் நடராஜரையும், தில்லை காளியையும் இழிவாகப் பேசிய யூடியூபர் விஜய்யை கைது செய்ய வலியுறுத்திசிதம்பரத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
யூடியூப் சேனல் ஒன்றில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள நடராஜரையும், தில்லைக்காளி நடனத்தையும் கொச்சைப்படுத்தும் வகையில்கருத்து பதிவு செய்யப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அன்று முதல் பல்வேறு இந்து சமய அமைப்புகள் மற்றும் சிவனடியார்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் மனு அளித்து வந்தனர்.
இந்த நிலையில் சர்ச்சைக்குரிய அந்த பதிவு சம்பந்தப்பட்ட யூட்யூப் தளத்திலிருந்து நீக்கப்பட்டது. ஆனால் அரசு தரப்பில் இதுவரையிலும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறி இன்று காலை முதலே சிதம்பரம் நடராஜர் கோயில் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரக்கணக்கான சிவனடியார்கள் குவிய தொடங்கினர்.
சிவனடியார்கள் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இசை வாத்தியங்களும், வாத்தியக் கருவிகளும் இசைத்தபடி சிவ நடனம் ஆடி சிவனடியார்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் ‘யூட்யூபர் மைனர் விஜய்யை’ கைது செய்யக்கோரி சிவனடியார்கள் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், சிவனடியார்கள் குரு தாமோதரன் தலைமையில் ஆயிரக்கணக்கான சிவனடியார்கள் கலந்து கொண்டனர்.
அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் பாதுகாக்கும் விதமாக விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன் மற்றும் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன்தலைமையில் 300க்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்தியா பாகிஸ்தான் ஆசிய கோப்பை ஹாக்கி: ட்ராவில் முடிந்த ஆட்டம்; கோல் அடித்த தமிழக வீரர்
இன்று தொடங்கிய ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.
இந்த போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் ட்ராவில் முடிந்துள்ளது.
ஆட்டத்தின் முதல் பாதியில் இந்தியா முன்னிலை வகித்த நிலையில், கடைசி நேர போட்டியில் பாகிஸ்தான் அணி ஆட்டத்தை சமன் செய்தது.
ஆசிய கோப்பை ஹாக்கி போட்டிகள் இந்தோனீசியாவில் நடைபெற்று வருகிறது.
இன்று (மே 23) தொடங்கி ஜூன்1ஆம் தேதி வரை நடக்க இருக்கும் இந்தப் போட்டிகளில், நடப்பு சாம்பியனான இந்தியா உட்பட 8 நாடுகள் களம் காண்கின்றன.
ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த மாரீஸ்வரன் சக்திவேல், அரியலூரை சேர்ந்த செ. கார்த்திக் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இன்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணிக்காக தனது முதல்கோலினை கார்த்திக் பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து கார்த்திக்கின் தாய் வளர்மதி கூறுகையில், "இந்தியா பாகிஸ்தான் போட்டி துவங்கி முதல் 5 நிமிடங்களில் கோல் போட்டது பெருமையாக இருக்கிறது. வரவிருக்கும் போட்டிகளிலும் தொடர்ச்சியாக கோல்கள் அடித்து இந்திய அணி வெற்றி பெற வேண்டும்" என தெரிவித்தார்
இராக்கில் அடுத்தடுத்த மணல் புயல் - புழுதியால் சூழப்பட்ட தலைநகர்
இராக்கில் திங்களன்று ஏற்பட்டுள்ள மணல் புயலால் அங்கு அரசு அலுவலகங்கள், விமான நிலையங்கள் ஆகியவை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக ஏஎஃப்பி செய்தி முகமையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதம் தொடங்கியதிலிருந்து அங்கு மணல் புயல் ஏற்பட்டு வருகிறது.
இன்று ஏற்பட்ட மணல் புயல் ஒன்பதாவது மணல் புயல் ஆகும்.
இரான் தலைநகர் பாக்தாத் முழுவதும் புழுதி படர்ந்துள்ளது. மேலும் போக்குவரத்தும் ஸ்தம்பித்துள்ளது.
இராக் பிரதமர் முஸ்தஃபா அல் கதேமி, அரசு அலுவலகங்களில் அனைத்து பணியையும் நிறுத்த முடிவு செய்துள்ளார்.
இருப்பினும் சுகாதார துறை சார்ந்த பணிகள் வழக்கம் போல செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருவநிலை மாற்றத்தால் பெரும் தாக்கத்தை சந்தித்து வரும் ஐந்து நாடுகளில் இராக்கும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் பெட்ரோல், டீசலுக்கு அதிக வரி வசூலிப்பது மத்திய அரசா, மாநில அரசா?
தனுஷ்கோடியில் கடலில் மூழ்கிய தரைப்பாலம் 58 ஆண்டுகளுக்கு பிறகு வெளியே தெரிகிறதா?
தனுஷ்கோடியில் 1964ஆம் ஆண்டு ஏற்பட்ட புயலுக்கு முன் மூழ்கிய தரைப்பாலம் இப்போது மீண்டும் வெளியே தெரிவது உண்மையா?
முதன்முறையாக நடைபெற்ற போர்க் குற்ற விசாரணை: ரஷ்ய படை வீரருக்கு வாழ்நாள் சிறை
யுக்ரேனில் நடைபெற்ற போர்க் குற்ற விசாரணையில் ரஷ்ய படை வீரர் ஒருவருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
யுக்ரேன் மீது ரஷ்யா தாக்குதல் தொடங்கியதிலிருந்து நடைபெற்ற முதல் போர் குற்ற விசாரணை இது.
தண்டனை விதிக்கப்பட்ட ரஷ்ய கமாண்டர் வாதிம் ஷிஷிமரின், யுக்ரேனின் வட கிழக்கு பகுதியில் உள்ள சுபாகிவ்கா என்ற கிராமத்தில் ஒலெக்சாண்டர் ஷெலிபோவ் என்ற 62 வயது முதியவரை கொன்றதாக குற்றம் சுமத்தப்பட்டது.
வாதிம் முதியவரை சுட்டதை ஒப்புக் கொண்டாலும், தான் ஆணைக்கு இணங்க செயல்பட்டதாக தெரிவித்தார்.
தன்னால் கொலை செய்யப்பட்ட முதியவரின் மனைவியிடம் மன்னிப்பு கேட்டார் வாதிம்.
"ஆனால் உங்களால் என்னை மன்னிக்க முடியாது என்பது எனக்கு புரிகிறது" என முதியவரின் மனைவியிடம் பின்பு தெரிவித்தார் வாதிம்.
யுக்ரேனில் மேலும் பல போர் குற்றங்கள் குறித்து விசாரிக்கப்பட்டு வருகின்றன.
பல சாட்சியங்கள் இருந்தாலும் இந்த படையெடுப்பு தாக்குதல்களில் குடிமக்கள் யாரையும் தாக்குவதில்லை என ரஷ்யா தெரிவித்து வருகிறது. ஆனால் குடிமக்களுக்கு எதிராக 11 ஆயிரம் குற்றங்கள் நிகழ்ந்திருக்கலாம் என யுக்ரேன் தெரிவிக்கிறது.
முன்னதாக ரஷ்ய சிப்பாய் குறித்து தாங்கள் கவலை கொள்வதாக ரஷ்யா தெரிவித்திருந்தது.
விஸ்மயா வரதட்சணை வழக்கில் கணவர் குற்றவாளி என தீர்ப்பு
கேரளாவில் வரதட்சணை கொடுமையால் 24 வயது பெண் உயிழந்த சம்பவத்தில் கணவர்தான் குற்றவாளி என கொல்லம் கூடுதல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தண்டனை விவரங்கள் நாளை அறிவிக்கப்படும்.
கேரளாவில் விஸ்மயா என்னும் ஆயுர்வேத மருத்துவத்தின் இறுதி ஆண்டு மாணவிக்கு கிரண் குமார் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
கணவர் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததால் விஸ்மயா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.
விஸ்மயாவின் மரணம் கேரளாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் விஸ்மயா வழக்கில் விஸ்மயாவின் கணவர் கிரண் குமார் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமிழ்நாட்டு வீரர் இடம் பெறும் ஆசியக் கோப்பை ஹாக்கி போட்டி இன்று தொடக்கம்
இந்தோ பசிபிக் பொருளாதார கட்டமைப்பை தொடங்கி வைத்த பைடன்
பதவியேற்ற பிறகு முதன்முறையாக ஜப்பான் சென்றுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்தோ பசிபிக் பொருளாதார கட்டமைப்பை (IPEF) தொடங்கியுள்ளார்.
அமெரிக்கா தலைமையிலான இந்த கட்டமைப்பில் இந்தியா உட்பட 13 நாடுகளை அவர் இணைத்துள்ளார்.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, புரூனே, இந்தியா, இந்தோனீசியா, ஜப்பான், தென் கொரியா, மலேசியா, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகியவைதான் அந்த 13 நாடுகள். இவை ஆரம்பக்கட்ட உறுப்பு நாடுகள்தான் இந்த கட்டமைப்புக்குள் மேலும் சில நாடுகள் சேர வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இதில் சீனா சேர்க்கப்படவில்லை.
சீனாவின் பொருளாதார விரிவாக்கத்தை எதிராகவே இந்த கட்டமைப்பு முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உறுப்பு நாடுகளுக்கிடையே விநியோகச் சங்கிலி, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல் வர்த்தகம் ஆகியவை சார்ந்து இந்த கட்டமைப்பு செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் முக்கிய தொழிலதிபர்களை சந்தித்த இந்திய பிரதமர் மோதி
ஜப்பானின் முக்கிய தொழிலதிபர்களை சந்தித்து கலந்துரையாடியதாக இந்திய பிரதமர் மோதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பதிவிட்ட ட்வீட்டில், "டோக்யோவில் உள்ள முக்கிய தொழிலதிபர்களை சந்தித்து பல்வேறு துறைகள் குறித்து ஆலோசித்தேன்.
அவர்கள் இந்தியாவின் இளைஞர்களின் மத்தியில் இருக்கும் தொழில்முனைவு திறன் குறித்து பெரிதும் பாராட்டினர்," என தெரிவித்துள்ளார்.
குவாட் மாநாட்டில் பங்கேற்க ஜப்பானிற்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ளார் பிரதமர் மோதி என்பது குறிப்பிடத்தக்கது.
கட்டுமான நிறுவனத்தை மிரட்டியதாக ஒருவர் கைது; ஜூனியர் விகடன் மீது வழக்குப் பதிவு
'இந்தியாவிலேயே அதிக ஆதரவு பெற்ற முதல்வர் மு.க. ஸ்டாலின்' - ஐ.ஏ.என்.எஸ்-சி வோட்டர் கருத்துக்கணிப்பு
"தமிழ்நாட்டில் மதக்கலவரத்தைத் தூண்டும் வேலையில் பாஜக ஈடுபட்டுள்ளது" - வேளாண் துறை அமைச்சர்
"தமிழ்நாட்டில் மதக்கலவரத்தைத் தூண்டும் வேலையில் பாஜக ஈடுபட்டுள்ளது. அதில் முக்கியமாக அண்ணாமலை இருக்கிறார்..." - தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்கே.பன்னீர்செல்வம்
நெல்லை கல்குவாரி விபத்து: 55 குவாரிகளை ஆய்வு செய்ய சிறப்பு குழு
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 55 குவாரிகளை ஆய்வு செய்ய வெளி மாவட்ட அதிகாரிகள் உள்ளிட்ட ஆறு சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 18 சுரங்க துறை நிபுணர்களும் பங்கேற்பார்கள். ஆய்வறிக்கையின் அடிப்படையில் குவாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும்என நெல்லை அடைமிதிப்பான் குளம் குவாரியில் மீட்பு பணிகள் முடிவடைந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே அடைமதிப்பான் குளம் பகுதியில் உள்ள தனியார் குவாரியில் கடந்த 14ம் தேதி பாறைகள் சரிவு ஏற்பட்டு குவாரிக்குள் விழுந்தது. இதில் 6 பேர் சிக்கி கொண்டனர். விபத்தில் சிக்கியவர்களை மீட்க 8 நாட்கள் மீட்பு பணிகள் நடந்தன.
இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இருவர் உயிருடன் மீட்டப்பட்டனர். இந்த நிலையில் நேற்று இரவு ஆறாவது நபரின் உடல் மீட்கப்பட்ட நிலையில் குவாரி மீட்பு பணிகள் முடிவுக்கு வந்தன.
நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, குவாரியை இன்று மீண்டும் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, “மாவட்டத்தில் உள்ள 55 குவாரிகளை ஆய்வு செய்ய 6 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சிறப்பு குழுவில் பிறமாவட்ட அதிகாரிகளும் இடம் பெறுவார்கள்.
இந்த குழுவின்தலைவராக மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் இடம் பெறுவார்.
துணை ஆட்சியர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் வருவாய் துறை, கனிம வளத்துறை, காவல்துறையினரும் இந்த குழுவில் இடம்பெறுவார்கள். இந்த குழுக்களின் ஆய்வு அறிக்கை அடிப்படையில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் குவாரிகளின் மீது எடுக்கப்படும். போர்க்கால அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்படும்.” என தெரிவித்தார்.
''மனிதனாக பார்க்கவில்லை, தெய்வமாக பார்க்கிறோம்''- பல்லக்கு தூக்கும் குடும்பங்கள்
மனிதரை மனிதர் சுமக்கும் நடைமுறையை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்று, மடாதிபதியை பல்லக்கில் தூக்கிவரும் தருமபுர ஆதீன பட்டினப் பிரவேசத்துக்கு தமிழ்நாடு தடை விதித்தது. இந்த தடைக்கு எழுந்த எதிர்ப்பை அடுத்து தடையை விலக்கிக் கொண்டது தமிழ்நாடு அரசு.
பொதுவாக மக்கள் கவனத்துக்கு வராத இந்த பட்டனப் பிரவேச நிகழ்ச்சி, இந்த சர்ச்சைக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை இரவு கோலாகலமாக நடத்தப்பட்டது. வழக்கத்துக்கு மாறாக ஏராளமான பக்தர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
தைவான் குறித்து பைடன் குறித்த முக்கிய கருத்து
தைவான் மீது சீனா படையெடுத்தால், தைவானை பாதுகாக்க அமெரிக்கா தன் படைகளை பயன்படுத்தும் என அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்துள்ளார்.
பைடனின் இந்த கூற்று மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
அதே சமயம் தைவான் குறித்த அமெரிக்காவின் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை எனவும் பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு முதன்முறையாக ஜப்பானிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார் பைடன். அங்குதான் அவர் தைவான் குறித்து இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பில், தைவானை பாதுகாக்க அமெரிக்கா தனது படைகளை அனுப்புமா என பைடனிடம் கேள்வி கேட்கப்பட்டபோது, “ஆம் நாங்கள் உறுதியளித்துள்ளோம்.” என தெரிவித்தார்.
‘ஒரே சீனா’ என்ற கொள்கையை அமெரிக்கா கடைப்பிடிக்கும் ஆனால் தைவானை வலுகட்டாயமாக சீனா கைப்பற்ற நினைத்தால் அது சரியல்ல என பைடன் தெரிவித்துள்ளார்.
கல்லூரி மாணவியின் வாயில் விஷத்தை ஊற்றி கொலை: உறவினர்கள் சாலை மறியல்
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நொச்சி வயல் புத்தூரை சேர்ந்த 19 வயது மாணவி தனியார் கல்லூரி ஒன்றில் பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
கடந்த 12ஆம் தேதி, மாணவி தனது தாத்தா வீட்டிற்கு செல்வதற்காக பிளக் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி நடந்து சென்று கொண்டிருந்தபோது அவரை வழிமறித்த மூன்று நபர்கள் விஷம் கலந்த குளிர்பானத்தை கட்டாயப்படுத்தி குடிக்க வைத்ததாகவும், இதனால் தனியார் மருத்துவமனையில் மாணவி சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது தாய் சாந்தி, பெல் காவல் நிலையத்தில் கடந்த 18ம் தேதி புகார் அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில் பெல் (BHEL) போலீசார் வழக்கு பதிந்து மாணவிக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்த மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த மாணவி சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் உயிரிழந்தார்.
இந்நிலையில் மாணவியின் இறப்புக்கு காரணமான மூன்று நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாக பெல் போலீசாரை கண்டித்து திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலை மலைக்கோவில் பகுதியில் பொதுமக்கள் மற்றும் மாணவியின் உறவினர்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்துபோராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
அப்போது போலீசார் போராட்டக்காரர்களை தடியடி நடத்தி கலைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.