You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: இந்தியாவின் சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை சிந்து உலகின் முதல் நிலை வீராங்கனையை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஜோ மகேஸ்வரன்

  1. கான் திரைப்பட விழா 2022: ஐஷ்வர்யா ராய் முதல் கமல்ஹாசன் வரை பேசியது என்ன?

  2. ஜக்கி வாசுதேவ் வருகையை எதிர்க்கும் ஓமன் மக்கள் – ட்விட்டரிலும் எதிர்வினை

  3. இன்றைய நேரலை நிறைவு பெறுகிறது

    வணக்கம்.

    இன்றைய நேரலை இத்துடன் நிறைவு பெறுகிறது. தொடர்ந்து நேரலைப் பக்கத்தில் இணைந்திருந்தமைக்கு நன்றி.

    இது வரையிலான இன்றைய முக்கிய நிகழ்வுகள்.

    • தாய்லாந்து ஓபன் பேட்மின்டன் போட்டியில் இந்திய வீராங்கனை சிந்து உலகின் முதல் நிலை வீராங்கனையை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார்.
    • பாங்காங்கில் சீனாவால் கட்டப்பட்ட பாலங்கள் 1960களில் இருந்து சீனாவின் ஆக்கிரமிப்பில் உள்ள பகுதிகளில் உள்ளன. இதை ஒருபோதும் ஏற்கவில்லை என்று இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
    • உத்தரபிரதேசம் ஞானவாபி மசூதி வழக்கை வாரணாசி மாவட்ட நீதிபதிமன்றத்துக்கு மாற்றியும் நீதித்துறையில் அனுபவம் வாய்ந்தவர் அந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    • மொழி அடிப்படையில் சர்ச்சைகளை கிளப்ப முயற்சிகள் நடப்பதாக, இந்திய பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளதாக, ஏ.என்.ஐ. செய்தி முகமை தெரிவித்துள்ளது.
    • தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை சிந்து உலகின் முதல் நிலை வீராங்கனையை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார்.
    • இலங்கையில் 9 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்றனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் புதிய அமைச்சர்கள் பதவி பிரமாணம் செய்துகொண்டனர்.
    • உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் பட்டத்தை தெலங்கானா சிறுமி நிகத் ஜரீன் வென்றார். சீனியர் பிரிவில் உலக சாம்பியனான அவர், இந்த சாதனையை நிகழ்த்திய முதல் தெலுங்கு பெண் என்ற சாதனையை படைத்தார்.
    • இலங்கையில் பணவீக்கம் 40 சதவீதமாக அதிகரிக்கும் என்று மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
    • இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் செந்தில் தொண்டமான் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைச் டெல்லியில் இன்று சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார்.

    தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள், குறிப்பாக, இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய பிபிசி தமிழின் இணையதளம், முகநூல், ட்விட்டர், இண்ஸ்டாகிராம் பக்கங்களில் இணைந்திருங்கள். நன்றி.

  4. தாய்லாந்து ஓபன்: இந்தியாவின் சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார்

    தாய்லாந்து ஓபன் பேட்மின்டன் போட்டியில் இந்திய வீராங்கனை சிந்து உலகின் முதல் நிலை வீராங்கனையை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார்.

    தாய்லாந்து ஓபன் - 2022 மகளிர் ஒற்றையர் பேட்மின்டன் போட்டியில், அரையிறுதிக்கான ஆட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், ஒலிம்பிக் போட்டியில் 2 பதக்கம் வென்ற இந்தியாவின் பி.வி சிந்து, உலக சாம்பியனான ஜப்பானின் அகேனே யமாகுச்சியை வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறினார்.

    இந்த காலிறுதிப் போட்டியில், 21-15, 20-22, 21-13 என்ற செட் கணக்கில் உலகின் முதல் நிலை வீராங்கனையை தோற்கடித்தார். கடந்த மாதம் நடைபெற்ற ஆசியா பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் அரையிறுதியில் யமகுச்சியிடம் இந்திய வீராங்கனை தோல்வியடைந்தார்.

    சனிக்கிழமை நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் உலகின் 7ம் நிலை வீராங்கனையான சிந்து, உலகின் 4ம் நிலை வீராங்கனை, டோக்கியோ 2020 சாம்பியனான சீனாவின் சென் யூ ஃபீயை எதிர்கொள்கிறார்.

    தாய்லாந்து ஓபனில் களத்தில் உள்ள ஒரே இந்திய வீராங்கனை சிந்து என்பது குறிப்பிடத்தக்கது. சாய்னா நேவால், எச்.எஸ் பிரணாய், கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் ஏற்கனவே வெளியேறி விட்டனர்.

  5. அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை – யார் காரணம்?

  6. இலங்கை நெருக்கடி: அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்த எம்.பிக்கள்

    நாடாளுமன்ற உறுப்பினராக இனி தான் இனி வரப்போவதில்லை என்று இலங்கை முன்னாள் நிதி மற்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி இன்று தெரிவித்தார்.

    இலங்கை நாடாளுமன்றத்தில் முன்னாள் அமைச்சர் அலி சப்ரி இன்று பேசுகையில், ''நான் மீண்டும் இந்த நாடாளுமன்றத்தைப் பார்க்கப் போவதில்லை. எனக்கு அது தேவையில்லை. இவ்வாறான ஒரு நிலையைப் பார்ப்பதற்காக நாங்கள் இங்கு வரவில்லை. நான் இங்கு மீண்டும் வர மாட்டேன்,'' என்று அவர் கூறினார்.

    பொதுஜன பெரமுன கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமை ஊடாக, சட்டத்தரணி அலி சப்ரி நாடாளுமன்றுக்கு தெரிவானமை குறிப்பிடத்தக்கது.

    இதேபோல், அரசியலில் இருந்து விலகிக் கொள்வதற்கு எண்ணியுள்ளதாக பொது ஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினரும் நடிகையுமான கீதா குமாரசிங்க நாடாளுமன்றில் தெரிவித்தார்.

    கடந்த 9ஆம் திகதி தனது வீட்டை 100 பேர் கொண்ட ஆண்கள் சுற்றி வளைத்துத் தாக்கியதாகவும், அப்போது அச்சத்துடன் தான் ஓர் அறையில் ஒளிந்திருந்ததாகவும் அவர் இதன்போது கூறினார்.

  7. பிரான்ஸ் கான் திரைப்பட விழா - முக்கிய நிகழ்வுகள் என்ன ?

    பிரான்ஸ் நாட்டின் கான் நகரில், 75வது கான் திரைப்பட விழா கோலாகலமாகத் தொடங்கி இருக்கிறது.

    கடந்த 17ஆம் தேதி தொடங்கி வரும் 22ஆம் தேதி வரை நடக்கும் இந்த விழாவில், ஹாலிவுட்டில் இருந்து கோலிவுட் வரை பலர் பங்கேற்றுள்ளனர்.

    குறிப்பாக, இந்தியா சார்பாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தலைமையில் நடிகர் அக்‌ஷய்குமார், மாதவன், இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், நடிகை பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

    விழாவில் நடைபெறும், நடிகர் கமல்ஹாசனின் 'விக்ரம்' பட முன்னோட்டம், ஏ.ஆர்.ரஹ்மான் இயக்கியுள்ள 'லீ மாஸ்க்' திரையிடல் உள்ளிட்ட விழாவின் முக்கிய நிகழ்வுகள் குறித்து படிக்க இங்கே சொடுக்கவும்.

  8. கடன் கட்ட முடியாத நிலையில் இலங்கை - அடுத்து என்ன நடக்கும்?

  9. இந்திய நிதியமைச்சருடன் இலங்கை தலைவர்கள் சந்திப்பு

    இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் செந்தில் தொண்டமான் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைச் டெல்லியில் இன்று சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார்.

    இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அங்கு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் செந்தில் தொண்டமான், கட்சியின் பொதுச் செயலாளரும் எம்.பியுமான ஜீவன் தொண்டமான் இருவரும் இந்திய நிதியமைச்சரை டெல்லியில் இன்று சந்தித்து பேசினார்.

    அப்போது, இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இந்திய அளித்து வரும் உதவிக்கு நன்றி தெரிவித்தனர். தொடர்ந்து, மருந்து, உணவுப் பொருட்களுக்கான உதவி உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நிதியமைச்சரிடம் மனுவாக அளித்தனர்.

  10. பாங்காங் ஏரியில் புதிய பாலம் - என்ன சொல்கிறது இந்திய வெளியுறவுத்துறை

    சீனாவால் பாங்காங் ஏரியின் குறுக்கே கட்டப்படும் இரண்டாவது பாலம் குறித்த செய்திகள் தொடர்பான ஊடகங்களின் கேள்விகளுக்கு இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி பதில் அளித்துள்ளார்.

    இது தொடர்பான தகவலை அவர் வெளியுறவுத்துறையின் சமூக ஊடக பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.

    "பாங்காங் ஏரியில் அதன் முந்தைய பாலத்துடன் சேர்ந்து சீனாவால் பாலம் கட்டப்பட்டதாக செய்திகளை நாங்கள் பார்த்தோம். இந்த இரண்டு பாலங்களும் 1960களில் இருந்து சீனாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்பின் கீழ் தொடர்ந்து இருக்கும் பகுதிகளில் உள்ளன.

    இதுபோன்ற சட்டவிரோத ஆக்கிரமிப்பை இந்தியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை. நியாயமற்ற சீன உரிமைகோரலையோ அத்தகைய கட்டுமான நடவடிக்கைகளையோ நாங்கள் ஏற்கவில்லை.

    ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை நாங்கள் பல சந்தர்ப்பங்களில் தெளிவுபடுத்தியுள்ளோம். மற்ற நாடுகள் இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

    தேசத்தின் நலன்கள் முழுமையாகப் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, அரசாங்கம் குறிப்பாக 2014ஆம் ஆண்டு முதல் எல்லை உள்கட்டமைப்பின் வளர்ச்சியை முடுக்கிவிட்டுள்ளது. இதில் சாலைகள், பாலங்கள், கட்டுமானம் போன்றவை அடங்கும்.

    எல்லைப் பகுதிகளில் மட்டும் அல்லாமல் உள்கட்டமைப்பை உருவாக்கும் நோக்கத்தில் அரசு உறுதியாக உள்ளது. இந்தியாவின் கேந்திர மற்றும் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு இந்தப் பகுதிகளின் பொருளாதார வளர்ச்சியையும் எளிதாக்குகிறது. நிச்சயமாக, இந்தியாவின் பாதுகாப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் அனைத்து முன்னேற்றங்களையும் அரசாங்கம் தொடர்ந்து கண்காணிக்கிறது. அதன் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா எடுத்து வருகிறது," என்று வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார்.

  11. ஹைதராபாத் என்கவுன்டர் 'போலி': உச்ச நீதிமன்றத்தில் விசாரணை ஆணையம் அறிக்கை - முழு விவரம்

  12. நெஞ்சுக்கு நீதி - உதயநிதியின் படம் ஊடகங்கள் பார்வையில் எப்படி?

  13. சிவகங்கையில் தந்தை இறந்தும் தேர்வு எழுதிய 12ம் வகுப்பு மாணவர்

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தந்தை இறந்த துக்கத்திலும் +2 பொதுத்தேர்வு எழுதிய சந்தோஷ் என்ற மாணவர். தந்தைக்கு இறுதி மரியாதை செலுத்தி விட்டு, தேர்வறைக்கு சென்றார்.

  14. என்கவுன்டர் கொலைகளை சமூகம் கொண்டாடுவது ஏன்?

  15. யுக்ரேன் வீரர்கள் 2,000 பேர் சரண் - ரஷ்யா தகவல்

    யுக்ரேன் மேரியுபோல் இரும்பு தொழிற்சாலையில் இருந்த ராணுவ வீரர்கள் 2 ஆயிரம் பேர் சரணடைந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

    ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு இது குறித்து மேலும் கூறுகையில், '' ''மேரியுபோலில் முற்றுகைக்குள்ளாகியுள்ள அசோவ்ஸ்டல் ஆலையில் இருந்து தற்போதுவரை 2,000 வீரர்கள் சரணடைந்துள்ளனர்'' என்று தெரிவித்துள்ளார்.

    சரணடைந்தவர்கள் ரஷ்ய கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். பிபிசியால் இந்த எண்ணிக்கையை உறுதிப்படுத்த இயலவில்லை.

    முன்னதாக, இங்கிலாந்தின் பாதுகாப்பு அமைச்சகம், 'சுமார் 1,700 வீரர்கள் தொழிற்சாலை வளாகத்தில் தங்களது ஆயுதங்களைக் கைவிட்டிருக்கலாம்.' என்கிறது.

  16. நிகத் ஜரீன்: உலக பாக்சிங் போட்டியில் தங்கம் வென்று வரலாறு படைத்த தெலங்கானா வீராங்கனை

  17. கோவையில் ஐந்தரை ஆண்டுகளில் 93 யானைகள் இறப்பு. ஏன் ?

    உலகம் முழுவதும் மே மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமை அருகிவரும் உயிரனங்களின் (Day of Endangered species) நாளாக கடைபிடிக்கப்படுகிறது.

    இந்தியாவில் பரவலாக காணப்படும் யானைகளும் அருகிவரும் உயிரினங்கள் பட்டியலில் உள்ளன. தமிழ்நாட்டில் யானைகளின் மரணங்கள் சமீப காலங்களில் பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது.

    தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 79 யானைகள் வெவ்வேறு காரணங்களால் இறந்துள்ளன என, தகவல் பெறும் உரிமைச் (ஆர்.டி.ஐ) சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.

    இது குறித்து விரிவான செய்திக்கு இங்கே சொடுக்கவும்.

  18. நெல்லை குவாரி விபத்து: தலைமறைவான தந்தை, மகன் கைது

    திருநெல்வேலி விபத்து நடைபெற்ற கல் குவாரியை நடத்திய செல்வராஜ், அவரது மகன் குமார் இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அருகே அடைமிதிப்பான் குளம் என்ற கிராமத்திலுள்ள கல்குவாரியில் கடந்த 15ம் தேதி ராட்சத பாறை சரிந்து, விபத்து ஏற்பட்டது. இதில், இருவர் உயிருடன் மீட்கப்பட்டனர். 3 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர்.

    சங்கரநாராயணன் என்பவருக்குச் சொந்தமான இந்த கல் குவாரியை 'சேம்பர்' செல்வராஜ் என்பவரும் அவரது மகனும் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தனர். இவர்கள் மீது போலீசார் வழக்குப பதிவு செய்து, தேடி வந்தனர்.

    இந்நிலையில், தலைமறைவாக இருந்த சேம்பர் செல்வராஜ், அவரது மகன் குமார் இருவரையும் மங்களூரில், தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

  19. ஞானவாபி மசூதி - பாபர் மசூதி: இரண்டையும் ஒப்பிடுவது எவ்வளவு சரியானது?

  20. ஞானவாபி வழக்கு மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றம் - உச்சநீதிமன்றம் உத்தரவு

    ஞானவாபி மசூதி வழக்கை வாரணாசி மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றியும் நீதித்துறையில் அனுபவம் வாய்ந்த, மூத்த நீதிபதி அந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் ஆய்வு மேற்கொள்ள தடை விதிக்குமாறு மசூதி நிர்வாகம் தாக்கல் செய்த மனு கடந்த 17ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

    நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், பி.எஸ்.நரசிம்ஹா இந்த விவகாரத்தை விசாரித்தனர். இதைத்தொடர்ந்து, மசூதியில் சிவலிங்கம் கண்டறியப்பட்டதாக சொல்லப்படும் இடத்தை பாதுகாக்க வேண்டும். அதேநேரத்தில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    தொடர்ந்து, நேற்று நடைபெற்ற விசாரணையில், ''ஞானவாபி மசூதி பற்றி வாரணாசி நீதிமன்றம் ஆணை ஏதும் பிறப்பிக்கவேண்டாம் என்றும் நாளை (வெள்ளிக்கிழமை ) இது பற்றி தாங்கள் விசாரிப்பதாகவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

    வாரணாசி சிவில் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி மேற்கொள்ளப்பட்ட வீடியோ சர்வே அறிக்கை வாரணாசி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்தது.

    இந்நிலையில், ஞானவாபி மசூதி வழக்கை வாரணாசி மாவட்ட நீதிபதிக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதித்துறையில் அனுபவம் மிக்க, மூத்த நீதிபதி இதை விசாரிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.