You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

மத்தியபிரதேச உள்ளாட்சித் தேர்தல்: ஓபிசி இட ஒதுக்கீட்டிற்கு உச்சநீதிமன்றம் அனுமதி

மத்தியப் பிரதேச மாநில உள்ளாட்சித் தேர்தலில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான (ஓபிசி) இடஒதுக்கீட்டிற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஜோ மகேஸ்வரன்

  1. மாநில சுயாட்சியை உறுதி செய்த தீர்ப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின்

    பேரறிவாளன் விடுதலையை வரவேற்று அறிக்கை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், தமது சமூக ஊடக பக்கங்களில், "30 ஆண்டுகளுக்கும் மேலான சிறைவாசத்திலிருந்து விடுதலைக் காற்றை முழுமையாகச் சுவாசிக்க உள்ள பேரறிவாளனுக்கு எனது வாழ்த்துகளும் வரவேற்பும்.ஒரு துளி நியாயமான கண்ணீருக்கு எதையும் வெல்லும் திறன் உண்டு எனத் தாய்மையின் இலக்கணமாக நின்றுள்ளார் அற்புதம் அம்மாள் என்னும் அயராத போராளி! பேரறிவாளன் வழக்கின் தீர்ப்பு என்பது மனிதவுரிமை அடிப்படையில் மட்டுமல்லாமல், மாநில உரிமை சார்ந்தும் வரலாற்றில் இடம்பெறத்தக்கது! மாநில அரசின் கொள்கை முடிவில் ஆளுநர் தலையிட அதிகாரம் இல்லை என்ற தீர்ப்பைப் பெற்று இந்தியா முழுமைக்கும் கூட்டாட்சியியலைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான அரசில் தமிழ்நாடு நிலைநாட்டியுள்ளது" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

  2. பேரறிவாளன் விடுதலை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

  3. மக்சிம் கார்க்கியின் 'தாய்' போன்றவர் என் அம்மா - பேரறிவாளன் நெகிழ்ச்சி

    மக்சிம் கார்க்கியின் 'தாய்' போன்றவர் என் அம்மா என, பேரறிவாளன் தெரிவித்துள்ளார்.

    செய்தியாளர்களிடம் பேசிய பேரறிவாளன், "அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும், செவ்வியான் கேடும் நினைக்கப்படும்" என்பது குறள். கெட்டவர்கள் நன்றாக வாழ்வதையும், நல்லவர்கள் வீழ்த்தப்படுவதையும் இந்த உலகம் நினைத்து பார்க்கும் என்பது இந்த குறள். 'செவ்வியான் கேடு' தான் என் சிறை வாழ்க்கை.

    தமிழ்நாடு மக்கள் என் மீது அன்பு செலுத்தினார்கள். தங்கள் வீட்டில் ஒரு பிள்ளையாக என்னை நினைத்தார்கள். என் விடுதலையின் மூலக்காரணம் என் அம்மா. என் அம்மாவின் தியாகம், அவரின் போராட்டம் தான் இதற்கு காரணம்.

    ஆரம்ப காலங்களில் நிறைய அவமானங்களையும் புறக்கணிப்புகளையும் அம்மா சந்தித்துள்ளார். நிறைய வேதனை, வலிகளை சந்தித்துள்ளார். அதையெல்லாம் கடந்து 31 ஆண்டுகள் இடைவிடாமல் போராடியுள்ளார். இதற்கு காரணம் எங்கள் பக்கம் இருந்த உண்மை, நியாயம். அதுதான் எங்களுக்கு வலிமையை கொடுத்தது.

    மக்சிம் கார்க்கியின் 'தாய்' நாவலை நான் நான்கு முறை படித்திருக்கிறேன். சிறிய வயதிலும் சிறைபட்ட போதும், தூக்கு தண்டனை வழங்கியபோதும் படித்திருக்கிறேன். ஒவ்வொரு காலத்திலும் அது ஒவ்வொரு உணர்வை தந்திருக்கிறது. ஒரு காலகட்டத்திற்கு பிறகுதான் அதனுடன் என் அம்மாவை நான் ஒப்பிட ஆரம்பித்தேன். இதனை நான் அம்மாவிடம் சொல்லியதில்லை. ஏனெனில், எங்களுக்குள்ளான இயல்பான உணர்வு போய்விடக் கூடாது என நினைத்தேன். இந்த நேரத்தில் சொல்ல வேண்டும் என நினைக்கிறேன்.

    அப்பா, என் இரு சகோதரிகள், அவர்களுடைய கணவர்களும் காட்டிய அன்பும், பாசமும் தான் இவ்வளவு தூரம் என்னை கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது" என்றார்.

  4. வந்துகொண்டிருக்கும் செய்தி, நன்றி சொல்வதை தவிர வேறு எதையும் சொல்ல முடியவில்லை - அற்புதம் அம்மாள்

    நன்றி சொல்வதை தவிர வேறு எதையும் சொல்ல முடியவில்லை என, பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் தெரிவித்துள்ளார்

    பேரறிவாளன் விடுதலையை வலியுறுத்தி தற்கொலை செய்த செங்கொடி, நீதிபதி கிருஷ்ணய்யர் ஆகியோரின் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் பேரறிவாளன் தன் தாயார் அற்புதம் அம்மாள் மற்றும் தந்தை குயில்தாசனுக்கு இனிப்புகளை வழங்கினார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அற்புதம் அம்மாள், "என்ன சொல்றது, என்ன பேசுறது என்கிற தடுமாற்றத்தால் கடந்த சில தினங்களாக ஊடகங்களை சந்திக்க முடியவில்லை. எல்லோருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். 32 ஆண்டுகால போராட்டம் இது. பேரறிவாளனை பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை. அவருடைய சிறை வாழ்க்கையை உட்கார்ந்து ஒரு நொடி யோசித்தால் தான் வலி, வேதனை புரியும். அதனை என் மகன் கடந்துவந்துள்ளார்.

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. என் மகன் விடுதலைக்காக குரல் கொடுத்த முகம் தெரியாத நபர்களுக்கும் தலைவர்களுக்கும் நன்றி. நன்றி சொல்வதை தவிர வேறு எதையும் சொல்ல முடியவில்லை" என்றார்.

  5. பேரறிவாளன் விடுதலை: காங்கிரஸுக்கு மாற்று கருத்து இல்லை - திருநாவுக்கரசர்

    பேரறிவாளன் விடுதலையில் காங்கிரஸுக்கு மாற்று கருத்து இல்லை என, தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருநாவுக்கரசர் பேரறிவாளன் விடுதலை குறித்து கூறுகையில், "31 ஆண்டுகால போராட்டம் உச்ச நீதிமன்றத்தால் முடிவுக்கு வந்துள்ளது. யாருடைய கருணையின் அடிப்படையில் அல்லாமல், சட்டபூர்வமாக அவர்கள் நிவாரணம் பெற வேண்டும் என்பதுதான் காங்கிரஸின் கருத்தாக இருந்தது. இப்போது, சட்டபூர்வமாக பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸுக்கு இதில் மாற்று கருத்து இல்லை" என தெரிவித்தார்.

  6. வந்துகொண்டிருக்கும் செய்தி, பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

    இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதாக, ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

    பிரிவு 142-ஐ பயன்படுத்தி பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக, பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர் பிரபு தெரிவித்துள்ளார்.

    தீர்ப்பு வெளியான நிலையில், ஜோலார்பேட்டையில் உள்ள பேரறிவாளன் இல்லத்தில், அவருடைய உறவினர்கள் கண்ணீர் மல்க ஒருவரையொருவர் ஆரத்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்திக்கொண்டனர். மேலும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    செய்தியாளர்களை சந்தித்த பேரறிவாளனின் தந்தை, "மனிதநேயம் உள்ள அனைவருக்கும் நன்றி" என தெரிவித்தார். பேரறிவாளனுக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்படுமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "எல்லாம் அம்மாவுக்குத்தான் (பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள்) தெரியும்" என பதிலளித்தார்.

  7. கொழும்பு காலிமுகத் திடலில் தமிழர்கள் - சிங்களர்கள் இணைந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

  8. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நேரலை

    2009ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் இறந்த தமிழர்களுக்கு முள்ளிவாய்க்காலில் இன்று நினைவேந்தல் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அங்கிருந்து நேரலை:

  9. காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்தின் நெருங்கிய நண்பர் கைது

    காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்தின் நெருங்கிய நண்பர் பாஸ்கரராமன் என்பவரை சிபிஐ கைது செய்துள்ளது. அதிகாரிகளை மேற்கோளிட்டு பி.டி.ஐ செய்தி முகமை இதனை தெரிவித்துள்ளது.

    முன்னதாக, நேற்று இந்திய முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தின் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ சோதனை செய்தது.

    இதுதொடர்பாக, ப.சிதம்பரம் நேற்று தன் ட்விட்டர் பக்கத்தில், "சென்னை மற்றும் டெல்லியில் உள்ள என் வீடுகளில் சிபிஐ இன்று காலையில் சோதனை செய்தது. சோதனையில் ஈடுபட்ட சிபிஐ அதிகாரிகள் எஃப்.ஐ.ஆர் ஒன்றை காண்பித்தனர். அதில், குற்றம்சாட்டப்பட்டவராக என்னுடைய பெயர் இல்லை. அவர்கள் எதையும் கண்டுபிடிக்கவில்லை மற்றும் எதையும் கைப்பற்றவில்லை. இந்த சோதனை சுவாரஸ்யமானது" என பதிவிட்டிருந்தார்.

    மேலும், சீன நாட்டினருக்கு விசா வழங்க லஞ்சம் வாங்கியதாக கார்த்தி சிதம்பரம் எம்.பி. மீது சிபிஐ புதிய வழக்கு ஒன்றையும் பதிவு செய்துள்ளது.

    இந்நிலையில், கார்த்தி சிதம்பரத்தின் நெருங்கிய நண்பர் பாஸ்கரராமன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

  10. பேரறிவாளன் விடுதலை வழக்கில் இன்று தீர்ப்பு

    தன்னை விடுதலை செய்யுமாறு பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

    இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன் தன்னை விடுதலை செய்யுமாறு கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை சமீபத்தில் நிறைவடைந்து தீர்ப்புக்காக வழக்கு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில், இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. இந்த வழக்கில் பேரறிவாளன், தமிழ்நாடு அரசு, மத்திய அரசு எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்திருந்தது.

    முன்னதாக, அமைச்சரவை முடிவை குடியரசு தலைவருக்கு அனுப்ப ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதா என்பது போன்ற கேள்விகளை உச்ச நீதிமன்றம் எழுப்பியிருந்தது. மேலும், பேரறிவாளனை விடுவிக்கும் அதிகாரம் யாருக்கு என்பது தொடர்பாக வாதங்கள் நடைபெற்ற நிலையில் இன்று இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

  11. ‘முள்ளிவாய்க்கால்’ நினைவேந்தல் நிகழ்வு - தமிழர்களுடன் சிங்கள மக்களும் பங்கேற்பு

    ‘முள்ளிவாய்க்கால்’ நினைவேந்தல் நிகழ்வு: இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்புவில் நடந்த நினைவேந்தல். தமிழர்களுடன் சிங்கள மக்களும் பங்கேற்பு. களத்திலிருந்து நேரலை

  12. வணக்கம் நேயர்களே!

    நான் நந்தினி வெள்ளைச்சாமி. பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன். தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    குறிப்பாக இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.உங்கள் பகுதியின் சுவாரசியமான செய்திகளைப் பற்றிஎங்கள் டிவிட்டர் கணக்கின் மூலம் தகவல் அளியுங்கள்.

    நேற்றைய நேரலை பக்கத்திலிருந்து முக்கியமான செய்திகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்:

    • இலங்கை நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது.
    • இலங்கை தலைநகர் கொழும்பு காலி முகத் திடல் வன்முறை சம்பவத்தில் தொடர்புடையதாக எம்.பிக்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
    • திருநெல்வேலி கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா 15 லட்ச ரூபாய் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
    • உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் இருப்பதாக தெரிவிக்கப்பட்ட இடத்தை பாதுகாக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
    • யுக்ரேனின் மேரியோபோலில் உள்ள அஸவ்ஸ்டால் ஆலையில் இரு மாதங்களுக்கு மேல் சிக்கியிருந்த யுக்ரேன் படையினர் அங்கிருந்து மனிதநேய வழித்தடம் மூலமாக வெளியேற்றப்பட்டதாக யுக்ரேன் தெரிவித்துள்ளது.
    • சீன நாட்டினருக்கு விசா வழங்க லஞ்சம் வாங்கியதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மகன் கார்த்திக் சிதம்பரம் உள்ளிட்ட 5 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
    • பாஜகவின் எதிர்மறை எண்ணமும் வெறுப்பு அரசியலும் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.