You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

இலங்கை நெருக்கடி: ஒருநாள் மட்டுமே பெட்ரோல் கையிருப்பு, மின்வெட்டும் அதிகரிக்கும் - ரணில் விக்ரமசிங்க

கடந்த காலங்களை விடவும், மிக மோசமான காலத்தை, குறுகிய காலத்திற்கு இலங்கை எதிர்கொள்ளவுள்ளது என இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஜோ மகேஸ்வரன்

  1. யுக்ரேன் கிழக்கில் ரஷ்யாவை வெளியேற்ற தயாராகி வருகிறோம் - ஸெலென்ஸ்கி

    யுக்ரேனின் கிழக்கு டோன்பாஸ் பிராந்தியத்தில் இருந்து ரஷ்யாவை வெளியேற்ற தயாராகி வருவதாக யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

    யுக்ரேன் மீது ரஷ்யாவின் படையெடுப்பின் தொடக்கத்தில் கியவ் நகரை ரஷ்யா கைப்பற்றத் தவறியது. இதனால், டோன்பாஸினை கட்டுப்பாட்டில் கொண்டு வருவது ரஷ்யாவின் முக்கிய நோக்கமாகியுள்ளது. "தெற்கு யுக்ரேனில் ரஷ்யாவின் தாக்குதலை முறியடிக்க தயாராகி வருகிறோம். ரஷ்யாவின் புதிய தாக்குதலை எதிர்கொள்ளவும் நாங்கள் தயாராகி வருகிறோம்" என்று ஸெலென்ஸ்கி தனது உரையில் கூறினார். "ஆக்கிரமிப்பாளர்கள் இறுதி கட்டத்தில் இருப்பதை இன்னும் ஏற்கவில்லை. அவர்களின் 'சிறப்பு நடவடிக்கை' என்று என்பது ஏற்கனவே காலாவதியாகி விட்டது." என்றும் அவர் கூறியுள்ளார்.

  2. நேபாளத்தில் இந்திய பிரதமர் மோதி

    இந்திய பிரதமர் நரேந்திரமோதி நேபாளத்திற்கு சென்றுள்ளார். புத்த பூர்ணிமாவில் லும்னியில் வழிபாடு நடத்தினர்.

    நேபாளத்தில் இந்திய பிரதமரை அந்நாட்டு பிரதமர் ஷெர் பகதூர் தேவ்பா வரவேற்றார். புத்த பூர்ணிமாவை முன்னிட்டு புத்தர் பிறந்த லூம்னிக்கு பிரதமர் மோதி சென்று வழிபாடு செய்தார். முன்னதாக மாயாதேவி கோயிலுக்கு பிரதமர் சென்று வழிபட்டார்.

    இந்த பயணம் குறித்து பிரதமர் மோதி தனது ட்விட்டர் பக்கத்தில், 'புத்த பூர்ணிமாவன்று மாயா தேவி கோயிலில் வழிபட்டதை ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். புத்தர் நம் அனைவரையும் ஆசீர்வதித்து, உலகை அமைதியாகவும் வளமாகவும் மாற்றட்டும்.' என்றும் தெரிவித்துள்ளார்.

  3. உஷார் நிலையில் இலங்கை; இந்தியா அனுப்பிய ரிப்போர்ட் - என்ன நடக்கிறது?

  4. வங்கிப் பணிகள்: வட இந்தியர்களுக்காக தமிழ் புறக்கணிக்கப்படுகிறதா?

  5. இந்தியாவின் பிற மாநிலங்களிலும் தமிழ் - ஆளுநர் ஆர்.என்.ரவி

    சென்னை பல்கலைக்கழகத்தின் 164 ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநரும் பல்கலைக்கழங்களின் வேந்தருமான ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், ''இந்திய பிரதமர் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல் உலகின் மிகப் பழமையான மொழி தமிழ். தமிழை தமிழ்நாடு கடந்து இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும்.

    தமிழை கொண்டு செல்லும் வகையில், உத்தரபிரதேச மாநிலம் பனாரஸ் பல்கலைக்கழகத்தில் சுப்பிரமணிய பாரதியார் இருக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது.பிற மாநிலங்களில் தமிழை மூன்றாவது மொழியாக்க முயற்சிப்போம்.

    உயர்நீதிமன்றங்களில் மாநில மொழிகள் பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் கூறியுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்க வேண்டும்.'' என்றார்.

  6. புத்த பூர்ணிமா: பாதாள கோட்டைகள், அழிந்து போன எச்சங்கள் தேடலை தொடரும் பூடானின் வரலாறு

  7. உத்தராகண்டில் புனித யாத்திரையில் 39 பேர் உயிரிழப்பு

    உத்தராகண்ட் மாநிலத்தில் சார் தாம் யாத்திரையில் (நான்கு கோயில்களுக்கான புனித பயணம்) தற்போது வரை 39 பேர் உயிரிழந்துள்ளனர்.

    உத்தராகண்ட் மாநில சுகாதாரத்துறை இயக்குநர் சைலஜா பட் யாத்ரீகர்கள் இறப்பு குறித்து தகவல் தெரிவித்துள்ளார். 'புனித யாத்திரை சென்றவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம், இதயம் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் மலையேற்றம் சார்ந்த உபாதைகளால் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

    எனவே, நோய் பாதித்தவர்கள், மருத்துவ ரீதியாக உடல் தகுதியற்றவர்கள்பயணம் செய்ய வேண்டாம்' என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார் என்று ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

  8. இலங்கை வன்முறை : இதுவரை 398 பேர் கைது

    இலங்கையில் கடந்த 9ம் தேதி ஏற்பட்ட வன்முறை சம்பவம் தொடர்பில் இதுவரை 398 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இலங்கை காவல்துறை ஊடகப் பேச்சாளர் மூத்த போலீஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாடு முழுவதும் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பாக இன்று காலை 6 மணி வரை 756 முறைபாடுகள் போலீஸாருக்கு கிடைத்துள்ளன.

    இவ்வாறு கிடைத்த முறைபாடுகள் தொடர்பில் பிரதி போலீஸ் மாஅதிபர்களின் நேரடி கண்காணிப்புக்களின் கீழ் குற்றத் தடுப்பு பிரிவினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

    இதன்படி, நாடு முழுவதும் நேற்றைய தினம் நடத்தப்பட்ட சுற்றி வளைப்புக்களின் இந்த வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய 159 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

    நேற்றைய தினம் கைது செய்யப்பட்டவர்களுடன் இந்த வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் என்ற குற்றச்சாட்டில் இதுவரை 398 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, அவர்களில் 101 பேருக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. இந்த வன்முறை சம்பவம் தொடர்பில் மேலும் பலர் கைது செய்யப்படவுள்ளதாகவும், சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிக்கின்றார்.

  9. தொடர்ந்து இணைந்திருங்கள்

    வணக்கம். நான் ஜோ மகேஸ்வரன்.

    இதுவரை நந்தினி வெள்ளைச்சாமி தொகுத்து வழங்கிய நேரலைப் பக்கத்தை இனி நான் வழங்குகிறேன்.

    தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    குறிப்பாக, இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இணைந்திருங்கள்.

  10. நுழைவுத்தேர்வுகள் பயிற்சி மையங்கள் கொள்ளையடிக்கவே வழிவகுத்திருக்கிறது - அமைச்சர் பொன்முடி

    நுழைவுத்தேர்வுகள் பயிற்சி மையங்கள் கொள்ளையடிக்கவே வழிவகுத்திருக்கிறது என, தமிழ்நாடு உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

    சென்னை பல்கலைக்கழகத்தின் 164 ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    நிகழ்ச்சியில் பேசிய பொன்முடி, "நீட் உள்ளிட்ட எந்த நுழைவுத்தேர்வுகளும், அவை பயிற்சி மையங்கள் கொள்ளையடிக்கவே வழிவகுத்திருக்கிறது.

    நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பியதற்காக தமிழ்நாடு ஆளுநருக்கு நன்றி.

    பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் உயர்கல்வி சேர்க்கை நடைபெற வேண்டும் என்பதே திராவிட மாடல் அரசின் கொள்கை. அதனையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்.

    அனைத்து பல்கலைக்கழகங்களிலும் தமிழ் வழியில் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் உருவாகி இருக்கிறது" என பேசினார்.

  11. மீஞ்சூர் அருகே 10 பேர் கொண்ட கும்பலால் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி கொலை

    மீஞ்சூர் அருகே 10 பேர் கொண்ட கும்பலால் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

    இதுதொடர்பாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

    திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கொண்டகரை ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன். அதிமுக பிரமுகரான இவர், நேற்று இரவு குருவிமேடு கிராமத்தில் நடந்த சுபநிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு தனது காரில் குடும்பத்துடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

    குருவிமேடு அருகே டிப்பர் லாரி ஒன்று மனோகரன் சென்ற கார் மீது மோதியது. காரிலிருந்து இறங்கிய ஊராட்சி மன்ற தலைவர் மனோகரனை அவரது குடும்பத்தினர் கண் முன்னே லாரியில் இருந்து இறங்கி வந்த 10 பேர் கும்பல் வெட்டிவிட்டு அங்கிருந்து அதே லாரியில் தப்பிச் சென்றனர். மனோகரனின் குடும்பத்தினர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

    பின்னர், அங்கிருந்த மக்கள், ஊராட்சி மன்ற தலைவர் மனோகரனை மீட்டு, சிகிச்சைக்காக விம்கோ நகர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே மனோகரன் இறந்து விட்டதாக கூறினர். இதையடுத்து, அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கொலை செய்யப்பட்ட மனோகரன் அரசியல் கட்சியை சேர்ந்தவர் என்பதால், அரசியல் முன்பகை காரணமாக இந்த கொலை நடந்திருக்குமா? அல்லது மனோகரன் ரியல் எஸ்டேட், ஒப்பந்த பணிகள் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் செய்து வருவதால், தொழில் போட்டியின் காரணமாக கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதாவது காரணங்கள் இருக்கிறதா? என்ற கோணத்தில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மீஞ்சூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

  12. வேலை கிடைக்கவில்லை என்ற நிலை எந்த இளைஞருக்கும் ஏற்படக் கூடாது - மு.க.ஸ்டாலின்

    வேலை கிடைக்கவில்லை என்ற நிலை எந்த இளைஞருக்கும் ஏற்படக் கூடாது என, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    சென்னை பல்கலைக்கழகத்தின் 164 ஆவது பட்டமளிப்பு விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின், "இளைஞர்களுக்கு அனைத்து தகுதிகளையும் உருவாக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. அந்த கடமையைத்தான் தமிழ்நாடு அரசு செய்துகொண்டிருக்கிறது.

    அனைத்து மணவர்களையும் முதல்வனாக்க உருவாக்கப்பட்டதுதான் "நான் முதல்வன்" திட்டம்.

    வேலை கிடைக்கவில்லை என்று எந்த இளைஞரும் இருக்கக் கூடாது. வேலைக்குத் தகுதியான இளைஞர்கள் கிடைக்கவில்லை என்று எந்த நிறுவனமும் நினைக்கக் கூடாது. அதற்காகத்தான் பல திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

    பெண் கல்விக்கான பல்வேறு திட்டங்களையும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

    சென்னை பல்கலைக்கழகத்தில் 2022-23 ஆம் கல்வியாண்டு முதல் இளநிலை பாடப்பிரிவுகளில் சமூக நீதிப்பாடம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது" என பேசினார்.

  13. பருத்தி, நூல் விலை உயர்வு - நடவடிக்கை கோரி பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

    பருத்தி, நூல் விலை உயர்வின் காரணமாக, தமிழ்நாட்டில் ஜவுளித் தொழில் எதிர்கொள்ளும் கடுமையான பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    அக்கடிதத்தில், பருத்தி, நூல் விலை உயர்வால் தமிழ்நாட்டில் ஜவுளித்தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது எனவும், அதன் விலையை கட்டுப்படுத்துமாறு ஏற்கெனவே இந்திய அரசை தமிழ்நாடு அரசு வலியுறுத்தியதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

    மேலும், பருத்தி மீதான இறக்குமதி வரியை ரத்து செய்த போதிலும் நூல் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருவதாகவும் அவர் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

    எனவே, ஆலைகளில் பருத்தி மற்றும் நூல் இருப்பு குறித்த முழு விவரங்களை வெளியிட வேண்டும், பருத்தி, நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஸ்டாலின் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

  14. ஒரே மேடையில் தமிழ்நாடு ஆளுநர், முதலமைச்சர்

    சென்னை பல்கலைக்கழகத்தின் 164 ஆவது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் தொடங்கியது.

    பல்கலைக்கழக வேந்தரான தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடக்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கலந்துகொண்டுள்ளார். பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுடன் 6 ஐஏஎஸ் அதிகாரிகளும் முனைவர் பட்டம் பெறுகின்றனர்.

    முன்னதாக, "இந்தி படித்தால் பானிப்பூரி தான் விற்க முடியும்" என, ஆளுநர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் தமிழ்நாடு அமைச்சர் பொன்முடி கூறியிருந்தார். இந்நிலையில், தமிழ்நாடு ஆளுநரும் முதலமைச்சரும் ஒரே நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.

  15. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,202 பேருக்கு கொரோனா

    இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 2,550 பேர் குணமடைந்துள்ளனர். 27 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

    தற்போதுவரை 17,317 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் வார கொரோனா தொற்று விகிதம் 0.59 சதவீதமாக உள்ளது.

  16. புனிதராக இருக்க நாங்கள் என்ன சங்கரமடமா நடத்துகிறோம் - தமிழ்நாடு அமைச்சர் கே.என்.நேரு

    "புனிதராக இருக்க நாங்கள் என்ன சங்கரமடமா நடத்துகிறோம்" தமிழ்நாடு அமைச்சர் கே.என்.நேரு பேசியது குறித்து உங்கள் எண்ணம் என்ன என்பதை பிபிசி தமிழின் இந்த ட்விட்டர் பதிவுக்கு சென்று தெரிவியுங்கள்:

  17. நெல்லை கல்குவாரி விபத்து - 4 பேர் மீது வழக்குப் பதிவு

    நெல்லை கல்குவாரியில் நடந்த விபத்து தொடர்பாக முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் 304, 304 A, 336 மூன்று பிரிவுகளின் கீழ் 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    குவாரி உரிமையாளர் சங்கரநாராயணன் குவாரி ஒப்பந்ததாரர் செல்வராஜ் மற்றும் அவரது மகன் குமார் மற்றும் மேலாளர் செபஸ்டின் ஆகிய 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும், விபத்தில் சிக்கியுள்ள 3 பேரை மீட்பதற்கான தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் இரண்டு குழுக்களாக பிரிந்து மீட்பு பணியை தொடங்கி உள்ளனர்.

    முன்னதாக, முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் சிக்கிய 6 பேரில் மூவர் மீட்கப்பட்ட நிலையில், அதில் ஒருவர் உயிரிழந்தார்.

  18. வணக்கம் நேயர்களே!

    நான் நந்தினி வெள்ளைச்சாமி. பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன். தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    குறிப்பாக இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.உங்கள் பகுதியின் சுவாரசியமான செய்திகளைப் பற்றிஎங்கள் டிவிட்டர் கணக்கின் மூலம் தகவல் அளியுங்கள்.