இலங்கை நெருக்கடி: ஒருநாள் மட்டுமே பெட்ரோல் கையிருப்பு, மின்வெட்டும் அதிகரிக்கும் - ரணில் விக்ரமசிங்க
கடந்த காலங்களை விடவும், மிக மோசமான காலத்தை, குறுகிய காலத்திற்கு இலங்கை எதிர்கொள்ளவுள்ளது என இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
ஜோ மகேஸ்வரன்
இன்றைய நேரலை நிறைவு பெறுகிறது
வணக்கம். இன்றைய நேரலை இத்துடன் நிறைவு பெறுகிறது.
நேரலைப்பக்கத்தில் தொடர்ந்து இணைந்திருந்தமைக்கு நன்றி.
இதுவரையிலான இன்றைய முக்கிய நிகழ்வுகள்.
- கடந்த காலங்களை விடவும், மிக மோசமான காலத்தை, குறுகிய காலத்திற்கு இலங்கை எதிர்கொள்ளவுள்ளது என இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
- இலங்கையில் இன்று இரவு முதல் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
- இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசுக்கு எதிர்க்கட்சியான, ஐக்கிய மக்கள் கட்சி ஆதரவளிப்பதாக முடிவு செய்துள்ளது.
- இந்திய பிரதமர் நரேந்திரமோதி நேபாளத்திற்கு சென்றுள்ளார். புத்த பூர்ணிமாவில் லும்னியில் வழிபாடு நடத்தினர்.
- திருநெல்வேலி கல்குவாரி விபத்து: பாறை சரிவதால், மீட்பு பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
- உத்தராகண்ட் மாநிலத்தில் சார் தாம் யாத்திரையில் (நான்கு கோயில்களுக்கான புனித பயணம்) தற்போது வரை 39 பேர் உயிரிழந்துள்ளனர்.
- நியூயார்க் மாகாணத்தில் உள்ள பஃப்பலோ நகரில் 10 பேரை சுட்டுக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் நபர், அதிக கறுப்பின மக்கள் வசிக்கும் இடத்தை திட்டமிட்டு தேர்ந்தெடுத்ததாக தகவல்.
தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள், குறிப்பாக, இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய பிபிசி தமிழ் இணையதளம், ட்விட்டர், முகநூல், இண்ஸ்டாகிராம் பக்கங்களில் தொடர்ந்து இணைந்திருங்கள்.
யுக்ரேன் போர்: புதின் புகழ்பாட தென்னிந்தியாவில் இருந்து திருடப்பட்ட சமூக ஊடக கணக்குகள்
ஜவுளி உற்பத்தியாளர்களின் கோரிக்கைகள் என்னென்ன?, மோகன்

வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜவுளி உற்பத்தியாளர்கள் மூன்று பிரதானமான கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
- மூலப் பொருட்களான பருத்தி மற்றும் நூல் ஏற்றுமதியை தற்காலிகமாக தடை செய்ய வேண்டும்
- பருத்தியை மீண்டும் அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும்
- யூக வணிகத்தில் பஞ்சை தடை செய்ய வேண்டும்.
"ஏற்றுமதி தற்காலிகமாக தடை செய்யப்பட்டால் உள்நாட்டு தேவைகளுக்கு உள்ள தட்டுப்பாடு குறையும் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பருத்தி சந்தைக்கு வரலாம்," என்கிறார் தென்னிந்திய நூற்பாலை சங்கத்தின் செயலாளர் ஜெகதீஷ் சந்திரா.
பருத்தியை அத்தியாவசிய பட்டியலில் சேர்க்கும்போது அதிக அளவில் பதுக்கி வைக்க முடியாது. மேலும் பருத்தியின் கையிருப்பை முறையாக அறிவிக்க வேண்டும். இதன்மூலம் சட்டவிரோத பதுக்கல்கள் குறையும் என்கிறார் என்கிறார் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் செயலாளர் செந்தில்.
ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம், மோகன்

பட மூலாதாரம், Getty images
மூலப் பொருட்களின் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வர வலியுறுத்தி திருப்பூர், ஈரோடு, சேலம் மற்றும் கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் மே 16, 17 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர். இதனால் ரூ.1000 கோடி வரை உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜவுளித்துறை சந்தித்து சிக்கல்கள் தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டில் ஜவுளி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களில் 90% சிறு, குறு மற்றும் நடுத்தர வகையைச் சார்ந்தவை என்கிறார் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் செயலாளர் செந்தில்.
பிபிசி தமிழிடம் பேசியவர், `திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் கிட்டத்தட்ட 8,000 சிறு நிறுவனங்கள் ஜவுளி உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன. 7 லட்சம் பேர் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். ஆண்டுதோறும் ரூ.70,000 கோடிக்கு விற்பனை நடைபெறுகிறது
தமிழ்நாடு முழுவதும் சுமார் 10,000க்கும் மேற்பட்ட சிறு நிறுவனங்கள் மற்றும் 10 லட்சம் பேர் ஜவுளித்துறையின் மூலம் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். ஜவுளித்துறை முடங்கினால் இவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும்` என்றார்.
ராமநாதபுரத்தில் மதம் மாறச்சொல்லி கட்டாயம் - பெண் தற்கொலை முயற்சி

மதமாற்றம் செய்ய கட்டாயப்படுத்துவதாகக் கூறி பெண்ணொருவர், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலை செய்து கொள்ள முயன்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் ஆர்.எஸ். மங்கலம் அருகே உள்ள கருப்ப குடும்பன் பச்சேரி கிராமத்தை சேர்ந்த வளர்மதி என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தற்கொலைக்கு முயன்றார்.
'தன்னை கிறிஸ்தவ மதத்திற்கு மாறச்சொல்லி தொல்லை கொடுத்து, துன்புறுத்தியவர்கள் மீதும் தனது மகனை தாக்கியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.' என்றும் இதற்காகத்தான் தற்கொலைக்கு முயன்றதாகவும் அவர் தெரிவித்தார்.
போலீசாரின் விசாரணையில், வளர்மதி என்பவர் தனது மகனுடன் தனியாக வசித்து வருகிறார். கடந்த 6 ஆம் தேதி கருப்ப குடும்பன் பச்சேரி கிராமத்தை சிலர், வளர்மதி மகன் சுரேஷ்குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது.
அவர்களை மதம் மாறச்சொல்லி மீண்டும் மீண்டும் அச்சுறுத்தி வருவதாகவும், இது குறித்து காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்து ஆட்சியரிடம் மனுகொடுக்க மருமகள், பேரக்குழந்தைகளுடன் வளர்மதி சென்றுள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கை நெருக்கடி: ஒரு நாள் மட்டுமே பெட்ரோல் கையிருப்பு, மின்வெட்டு அதிகரிக்கும் - ரணில் உரையின் முக்கிய அம்சங்கள்

பட மூலாதாரம், Getty Images
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றினார். அப்போது அவர் குறிப்பிட்ட முக்கிய அம்சங்களை பார்க்கலாம்.
- இலங்கையின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையிலேயே உள்ளது. 2022 ற் ஆரம்பத்தில் கடந்த அரசாங்கத்தின் வரவுசெலவு திட்டத்தில் 2.3 ட்ரில்லியன் ரூபாய்கள் வருமானமாக உள்ளன என காட்டப்பட்டாலும் இந்த வருடத்திற்கான உண்மையான வருமான எதிர்வு கூறல் 1.6 ட்ரில்லியன் ரூபாய்களாகவே உள்ளன.
- அனைத்து நெருக்கடிகளுக்கு மத்தியில் நாம் முகம் கொடுக்கும் மிகமோசமான சில சிக்கல்கள் உள்ளன. மிகவிரைவில் சுமார் 75 மில்லியன் அமெரிக்க டொலர்களை தேடவேண்டிய உள்ளது. இப்போது நமது கையிருப்பில் ஒரு நாளைக்குத் தேவையான பெற்றோல் மட்டுமே உள்ளது.
- இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் மே 19 மற்றும் ஜூன் 01 ஆகிய திகதிகளில் மேலும் இரண்டு டீசல் கப்பல்களும் மே 18 மற்றும் மே 29 இரண்டு பெற்றோல் கப்பல்கள் வரவுள்ளன. இன்றுவரை 40 நாட்களுக்கு மேலாக இலங்கையின் கடற்பரப்பில் பெற்றோல், மசகெண்ணெய் , எண்ணெய் ஏற்றிவந்த கப்பல்கள் 3 நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
- மின்சாரத் தேவையில் நான்கில் ஒன்றை உற்பத்தி செய்ய எரிபொருளே பயன்படுத்தப்படுகிறது. இதனால் நாளாந்த மின்வெட்டு இன்னும் சில நாட்களில் 15 மணித்தியாலங்களாக மாறவும் இடமுண்டு.
- இந்த நேரம் வரை இலங்கை மத்திய வங்கி, அரச வங்கிகள், தனியார் வங்கிகள் , இலங்கையில் உள்ள வெளிநாட்டு வங்கிகள் அனைத்தும் டொலர் இல்லாத சிக்கலுக்கு முகம் கொடுத்துள்ளன. நம்மிடம் கையிருப்பில் உள்ள டொலர்களின் அளவு மிகவும் சிறியது என்பதை நீங்கள் அறிவீர்கள்.
- மருத்துவ மருந்துகளுக்கானத் தட்டுப்பாடு. இருதய நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகள், சத்திர சிகிச்சைக்குத் தேவையான சிகிச்சை உபகரணங்கள் உட்பட பல மருத்துவ மருந்து வகைகளுக்கான தட்டுப்பாடு நிலவுகிறது.
- இதற்கிடையில் 2022 ஆண்டிற்காக முன்வைக்கப்பட்ட அபிவிருத்தி வரவுசெலவு திட்டத்திற்கு பதிலாக புதிய வரவுசெலவு திட்டமொன்றை முன்வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதனை சலுகை வரவுசெலவு திட்டமாக முன்வைக்கவே நான் திட்டமிடுகிறேன்.
- இதேபோல், இதுவரை நட்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் ஸ்ரீலங்கன் விமான சேவையை தனியார் மயப்படுத்துமாறு நான் முன்மொழிகின்றேன்.
- குறுகிய காலத்திற்கு நாம் இதனை விட மோசமான காலத்திற்கு முகம் கொடுக்க போகின்றோம். பணவீக்கம் மேலும் அதிகரிக்க இடமுள்ளது.
- இந்த நேரத்தில் விருப்பப்படா விட்டாலும் பணத்தை அச்சடிப்பதற்கு அனுமதி வழங்க நேரிடும். அரச ஊழியர்களின் இந்த மாத சம்பளத்தை வழங்கவும் , உங்களுக்கு தேவையான பொருட்கள் சேவைகளின் பொருட்டே அதனை செய்யவுள்ளது. எவ்வாறாயினும் பணத்தை அச்சடிப்பதால் ரூபாவின் பெறுமதி குறையும் என்பதை நாம் நினைவில் வைக்க வேண்டும்.
- நான் மக்களுக்கு விடயங்களை மறைத்து பொய் சொல்வதற்கு எந்தவகையிலும் விரும்பவில்லை. பயங்கரமாக இருந்தாலும் அசிங்கமாக இருந்தாலும் இதுதான் உண்மையான நிலைமை. குறுகிய காலத்திற்கு நாம் கடந்த காலத்தைவிட மிகவும் கஸ்டமான காலத்திற்கு முகம் கொடுக்க போகின்றோம்.
- எனது நோக்கமும் அர்ப்பணிப்பும் ஒரு தனிமனிதன் , ஒரு குடும்பம், அல்லது ஒரு கூட்டத்தை பாதுகாப்பது அல்ல முழு நாட்டினதும் மக்களை காப்பாற்றுதே, இளைஞர்களின் எதிர்காலத்தை காப்பாற்றுவதே .
- உயிரை பணயம் வைத்து இந்த சவாலுக்கு நான் முகம் கொடுப்பேன். அந்த சவாலை வெற்றி கொள்வேன். அதற்கு உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பையும் எனக்கு பெற்றுத் தாருங்கள். இவ்வாறு ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை ஊரடங்கு நேரத்தில் மாற்றம்

இலங்கையில் இன்று இரவு அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் இன்று இரவு 11 மணி முதல் நாளை காலை 05 மணி வரை ஊரடங்கு என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தற்போது அறிவித்துள்ளது. இன்றிரவு 08 மணி முதல் - நாளை காலை 05 மணி ஊரடங்கு என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இதை மாற்றி தற்போது அறிவித்துள்ளனர்.
வடகொரியாவில் கொரோனா: 10 லட்சம் பேருக்கு காய்ச்சல் - அரசு ஊடகம்

பட மூலாதாரம், AFP
தடுப்பூசி எடுத்துக்கொள்ளாத வட கொரிய நாடு முழுவதும் கொரோனா தொற்று அலை அலையாகப் பரவி வருகிறது. இதை கையாளும் பணியில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறது.
சுகாதாரத் துறை அலுவலர்களை கடுமையாக விமர்சித்த, வட கொரியத் தலைவர் கிம் ஜோங் - உன் மருந்துகளை விநியோகிக்கும் பணியை மேற்கொள்ளுமாறு ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.
நாட்டில் 10 லட்சம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இதை "காய்ச்சல்" என்று மட்டுமே வட கொரிய அரசு ஊடகம் குறிப்பிடுகிறது. இது குறித்த விரிவான செய்திக்கு இங்கே சொடுக்கவும்.
திருநெல்வேலி கல்குவாரி விபத்து: மீட்புப் பணி எப்படி நடக்கிறது
திருநெல்வேலி மாவட்டத்தில் கல்குவாரியில் ராட்சத கல் சரிந்த விபத்தில் மீட்புப் பணி தொடர்ந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், தேசிய மீட்பு படையினர் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். என்ன நடந்தது ? இரண்டு பேர் எப்படி மீட்கப்பட்டனர் ? இந்த காணொளியைப் பாருங்கள்.
தமிழ்நாடு - ஆந்திர எல்லையில் நிரம்பி வழியும் தடுப்பணை: விவசாயிகள் மகிழ்ச்சி

படக்குறிப்பு, புல்லூர் தடுப்பணை திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே தமிழ்நாடு -ஆந்திர எல்லையான பெரும்பள்ளம் ஊராட்சியில் புல்லூர் அருகே பாலாற்றின் குறுக்கே தடுப்பணை நிரம்பி வழிகிறது.
ஆந்திர அரசு இந்த தடுப்பணையைக் கட்டியுள்ளது. கடந்த ஒரு வாரமாக தமிழ்நாடு -ஆந்திர வனப்பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால், பாலாறு குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையைத் தாண்டி, தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வரத் தொடங்கி உள்ளது.
தற்போது தடுப்பணை நிரம்பி உபரிநீர் வெளியேறி வருவதால் பாலாற்று படுகையில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
நன்றி தெரிவித்த ஸ்டாலின்; தமிழின் பெருமையை பேசிய ஆளுநர் - பட்டமளிப்பு விழாவில் என்ன நடந்தது?
இலங்கையில் விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்த திட்டமா? - இந்திய உளவுத்துறை சொன்னது என்ன ?
இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியால் மக்கள் போராட்டம் எழுந்தது. அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ, அவரது சகோதரர் மஹிந்த ராஜபக்ஷ இருவரும் பதவி விலகக்கோரி, மக்கள் போராட்டங்களை நடத்தினர்.
கடந்த 9ம் தேதி மஹிந்த கொழும்புவில் ராஜபக்ஷவின் ஆதரவாளர்களாக அடையாளப்படுத்திக் கொண்டவர்கள் நடத்திய வன்முறையைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன.
மஹிந்த ராஜபக்ஷ வீடு மற்றும் அமைச்சர்கள், ஆளுங்கட்சி எம்.பிக்களின் வீடுகளிலும் தாக்குதல் நடைபெற்றது. ஆளுங்கட்சி எம்.பி ஒருவர் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இந்திய உளவுத்துறை தெரிவித்துள்ளதாக ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது என்ன ? விரிவான செய்திக்கு இந்த காணொளியைப் பாருங்கள்.
YouTube பதிவை கடந்து செல்லGoogle YouTube பதிவை அனுமதிக்கலாமா?எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
இலங்கை நெருக்கடி, போராட்டம், சமாளிப்பாரா ரணில் ? - செய்திகளின் தொகுப்பு

பட மூலாதாரம், Getty Images
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து அரசியல் நெருக்கடியும் ஏற்பட்டது. பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகினார்.
அவரைத் தொடர்ந்து ரணில் விக்ரமசிங்க 6வது முறையாக இலங்கை பிரதமராகியுள்ளார்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடி, மக்கள் போராட்டம், வன்முறை, அரசியல் நெருக்கடி, ராபக்ஷ சகோதரர்களின் நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து விரிவாக அறிய இங்கே சொடுக்கவும்
புதுக்கோட்டையில் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு : அரசு அலுவலர்கள் 25 பேருக்கு நோட்டீஸ்

படக்குறிப்பு, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு வீடுகட்டும் திட்டத்தில் ரூ. 7 கோடி வரை முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2020 ம் ஆண்டு வரை பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், தமிழ்நாடு அரசின் பசுமை வீடு திட்டம் ஆகிய திட்டங்களின் மூலம் 1, 750 வீடுகள் கட்டப்பட்டதாக ஆவணத்தில் உள்ளது.
இது குறித்து அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட போது, சுமார் 480 வீடுகள் கட்டாமலே, கட்டப்பட்டதாக பதிவு செய்து, பயனாளிகளுக்கு ரூ 7 கோடி வரையில் பணம் வழங்கி, முறைகேடு செய்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஒன்றியத்தில் பணியாற்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பிற அரசு அதிகாரிகள் 25 பேர் மீது துறை ரீதியாக நடவடிக்கை, எடுக்க மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு ஊரக வளர்ச்சித் துறை துணை இயக்குனருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து, முதற்கட்டமாக 25 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். நோட்டீசுக்கு பதிலளிப்பதையடுத்து, மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரணில் விக்ரமசிங்க அரசின் பொருளாதார முன்னேற்ற திட்டங்களுக்கு முக்கிய கட்சிகள் ஆதரவு
நெல்லை குவாரி விபத்து: இடிபாடுகளால் மீட்பு பணியில் சிக்கல்

படக்குறிப்பு, நெல்லை கல்குவாரியில் நடைபெறும் மீட்பு பணி திருநெல்வேலி கல்குவாரி விபத்தில் பாறை இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள ஒருவரை மீட்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.
தமிழ்நாடு, திருநெல்வேலி கல்குவாரியில் விபத்து ஏற்பட்ட இடத்தில் தென்மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க் ஆய்வு செய்தார். மீட்பு பணிகள் குறித்து தேசிய பேரிடர் மீட்பு குழு, தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு படையினரிடம் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது வரை குவாரி உரிமதாரர், மேலாளர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
பாறை இடிபாடுகளில் ஒரு நபர் சிக்கியிருப்பது தெரியவந்துள்ளது. அவர் யார், உயிருடன் உள்ளாரா ? என தெரியவில்லை. தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது. சட்டத்திற்கு புறம்பாக நேரடியாகவோ, மறைமுகவோ முறைகேடாக குவாரி நடத்த உதவி செய்திருந்தால் அவர்கள் மீது சட்டப்படியாகவோ, துறை ரீதியாகவோ நடவடிக்கை எடுக்கப்படும்.'' என்றார்.
இச்சம்பவம் தொடர்பான விசாரணை அதிகாரியாக நாங்குனேரி உதவி காவல் கண்காணிப்பாளர் ராஜா சதுர்வேதி நியமிக்கப்பட்டுள்ளதாக அஸ்ரா கார்க் தெரிவித்தார்.
இதனிடையே, தொடர்ந்து பாறை சரிவால் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டது. பாறைகளில் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டு உள்ளதால், அவை இடிந்து விழும் அபாயம் உள்ளது. மண்ணியல் நிபுணர்கள் ஆய்வு செய்த பின் மீட்பு பணிகளை தொடங்க, தற்காலிமாக மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அருண்ராஜா காமராஜ்: 'நெஞ்சுக்கு நீதி' என்ற தலைப்பை தேர்ந்தெடுத்த காரணம் இதுதான்
இலங்கை நெருக்கடி: ரணில் அரசுக்கு ஆதரவு - எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி முடிவு

பட மூலாதாரம், Getty Images
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசுக்கு எதிர்க்கட்சியான, ஐக்கிய மக்கள் கட்சி ஆதரவளிப்பதாக முடிவு செய்துள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல், பொருளாதார நெருக்கடியால் மக்கள் தொடர் போராட்டங்களையடுத்து, பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷ பதவியில் இருந்து விலகினார். இதையடுத்து புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இந்நிலையில், இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்றக் குழு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், தற்போது நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுப்பது அவசியம். அதன்பிரகாரம், தற்போதைய அரசாங்கம் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக மேற்கொள்ளும் நலன்சார்ந்த வேலைத் திட்டங்களுக்கு அரசாங்கத்தின் பதவிகள் எதுனையும் பெறாமல், பாராளுமன்ற செயல்முறையின் கீழ் பூரண ஆதரவை வழங்க ஏகமனதாக முடிவு எடுக்கப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கையில் மீண்டும் ஊரடங்கு

இலங்கையில் இன்று இரவு முதல் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கையில் இன்று இரவு 8 மணி முதல் நாளை அதிகாலை 5 மணி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.
கடந்த 9ம் தேதி ஏற்பட்ட வன்முறை சம்பவத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கில் அன்று முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு நேற்று அதிகாலை வரை அமலில் இருந்தது.
எனினும், நேற்றைய தினம் ஊரடங்கு பிறப்பிக்கப்படாத நிலையில், இன்றிரவு மீண்டும் ஊரடங்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது
