'இலங்கை அரசியல் தலைவர்கள் இந்தியாவிற்கு தப்பிச் சென்றதாக வரும் செய்தியில் உண்மை இல்லை'
இலங்கை பொருளாதார ரீதியில் பெரும் நெருக்கடிகளை சந்தித்துள்ள இந்த தருணத்தில், நேற்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் வன்முறைகள் வெடித்தன. இதையடுத்து, பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ விலகியுள்ளார். அவர் மற்றும் குடும்பத்தினர் தஞ்சமடைந்திருப்பதாக கருதி, திருகோணமலை கடற்படை முகாமை முற்றுகையிட்டு பொது மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
ஜோ மகேஸ்வரன்
இலங்கை நெருக்கடி: திருகோணமலை கடற்படை தளத்தை பொது மக்கள் முற்றுகை

படக்குறிப்பு, திருகோணமலை கடற்படை முகாம் இலங்கை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தஞ்சமடைந்துள்ளதாக தெரிவித்து திருகோணமலை கடற்படை முகாமை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்று வருகிறது.
இலங்கையில் நேற்றைய தினம் ஏற்பட்ட வன்முறையை அடுத்து, பிரதமர் பதவியை மஹிந்த ராஜபக்ஷ ராஜினாமா செய்திருந்தார். வன்முறையில் ஈடுபட்ட அரசாங்க எதிர்ப்பு போராட்டக்காரர்கள் அலரிமாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியிருந்தனர்.
போராட்டக்காரர்களை கலைப்பதற்கு கண்ணீர் புகை பிரயோகம் நடத்தப்பட்டது. போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வந்த பின்னணியில், இன்று காலை போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
அதையடுத்து, அலரி மாளிகையிலிருந்து மஹிந்த உள்ளிட்ட குடும்பத்தினர், பாதுகாப்புடன் வெளியேறியதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தினர் பாதுகாப்புடன் விமான படைக்கு சொந்தமான ஹெலிகொப்டரில் திருகோணமலை கடற்படை முகாமை நோக்கி சென்றதாக கூறப்பட்டது.
இவ்வாறான நிலையிலேயே, திருகோணமலை கடற்படை முகாமிற்கு முன்பாக பொதுமக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால், திருகோணமலையில் தற்போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. கடற்படை முகாம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் கடும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு பாஜகவினர் மதுரையில் ஆலோசனை - 2024 தேர்தலுக்கு வியூகம்
தமிழ்நாடு பாஜகவினர் வரும் 2024 மக்களவைத் தேர்தல் வியூகம் குறித்து நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் மதுரையில் இன்று நடைபெறுகிறது.
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில அளவிலான ஆலோசனை கூட்டம், மதுரை அழகர்கோயில் சாலையில் உள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெறுகிறது. மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம், தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
மேலும், பாஜகவின் மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், மாநில அணி பிரிவு தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தில், தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சி, 2024 மக்களவைத் தேர்தல் வெற்றி வியூகம், நடைபெற்று முடிந்த தேர்தல்கள் குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.

படக்குறிப்பு, மதுரையில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் இந்தியாவிலேயே பாதுகாப்பான, அமைதியான மாநிலம் தமிழ்நாடு - மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கைகள் மீதான பதிலுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
அப்போது, 'தமிழ்நாட்டு மக்கள் அமைதியான வாழ்க்கை வாழ்வதற்கான அடித்தளத்தை அமைத்துள்ளோம். இந்தியாவிலேயே அமைதியான, பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு. காவல்துறை என்பது குற்றங்களே நடைபெறாத சூழலை உருவாக்கும் துறையாக மாற வேண்டும் என்பதே இந்த அரசின் கொள்கை.
காவல் துறையைச் சார்ந்த ஒவ்வொருவரும் விமர்சனத்திற்கு இடம் தராமல் பணியாற்ற வேண்டும். சட்டத்தின் பக்கம் நின்று நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறு செய்யும் அதிகாரிகளுக்கு இந்த ஆட்சியில் இடமில்லை.' என்றார்.
X பதிவை கடந்து செல்லX பதிவை அனுமதிக்கலாமா?எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காதுஇந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து விலகல்: அடுத்து என்ன நடக்கும்?
இந்திய ஹாக்கி அணிக்கு தமிழ்நாடு வீரர்கள் இருவர் தேர்வு

இந்தோனேஷியாவில் நடைபெற உள்ள ஆசியா ஹாக்கி கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
ஆசிய ஆண்கள் ஹாக்கி கோப்பை விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேஷியாவின் ஜகர்த்தா நகரில் வரும் 23ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி தேதி வரை நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் இந்திய அணியில் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ள 20 வீரர்கள் மற்றும் காத்திருப்பில் உள்ள 4 வீரர்கள் என மொத்த 24 வீரர்கள் கொண்ட பட்டியலை ஹாக்கி இந்தியா வெளியிட்டுள்ளது.
இந்திய அணி கேப்டனாக ரூபேந்திர பால் சிங், துணை கேப்டனாக பீரேந்திர லக்ரா, அனுபவம் வாய்ந்த மூத்த வீரர்கள், புதுமுக வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். குறிப்பாக தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த ஹாக்கி விளையாட்டு வீரர் மாரீஸ்வரன், அரியலூரை சேர்ந்த கார்த்திக் ஆகிய இருவரும் இடம் பெற்றுள்ளனர்.
இருவரும் கோவில்பட்டியில் உள்ள சர்வதேச தரத்திலான செயற்கை புல்வெளி ஹாக்கி விளையாட்டு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றவர்கள். கடந்த 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய ஹாக்கி அணியில் தமிழ்நாட்டு வீரர்கள் இருவர் தேர்வாகி உள்ளனர் என்று ஹாக்கி சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், கோவில்பட்டியில் தீப்பெட்டி தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளி சக்திவேல் - சங்கரேஸ்வரி தம்பதியரின் மகன் மாரீஸ்வரன். அரியலூர் கார்த்திக் தந்தை இரவு நேரக் காவலாளியாக உள்ளார்.
X பதிவை கடந்து செல்லX பதிவை அனுமதிக்கலாமா?எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காதுஇந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
தமிழ்நாட்டில் அதிகரித்த காற்றாலை மின் உற்பத்தி, குறையும் அனல் மின் உற்பத்தி: பின்னணி என்ன?
இலங்கை வன்முறை: 7 பேர் உயிரிழப்பு, 231 பேர் படுகாயம், 5 பேர் கவலைக்கிடம்

பட மூலாதாரம், Getty Images
இலங்கையில் ஏற்பட்ட வன்முறையில் தற்போது வரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியால் மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நேற்றைய தினம் மஹிந்த ராஜபக்ஷ ஆதரவாளர்கள் என்று அடையாளப்படுத்திக் கொண்டவர்கள் கொழும்பு உள்ளிட்ட இடங்களில் வன்முறையில் ஈடுபட்டனர்.
காலிமுகத் திடலில் அரசுக்கு எதிரான போராட்டக்காரர்கள், செஞ்சிலுவை சங்க மருத்துவமனை மற்றும் பேருந்துகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. இதையடுத்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன.
ஆளும் கட்சி எம்.பிக்கள், அமைச்சர்களின் வீடுகளில் தாக்குதல் நடத்தப்பட்டன. ஆளும் கட்சி எம்.பி அமரகீர்த்தி அத்துகோரல தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், புதன் கிழமை வரை பல்வேறு இடங்களில் ஊரடங்கு உத்தரவு தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நடைபெற்ற பல்வேறு வன்முறைச் சம்பவங்களில் தற்போது வரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
மருத்துவமனை அவரச சிகிச்சை பிரிவில் 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. கொழும்பு தேசிய மருத்துவமனையில் 218 நபர்கள் உட்பட மொத்தம் 231 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கலங்கும் கனவு உலகம் - இலங்கை சினிமாவின் இன்றைய நிலை
காஞ்சிபுரம் பட்டு விற்பனையாளர்கள் கடையடைப்பு: நூல் விலை உயர்வை குறைக்க கோரி

படக்குறிப்பு, காஞ்சிபுரத்தில் மனிதச் சங்கிலி போராட்டம் காஞ்சிபுரத்தில் பட்டுநூல் விலை உயர்வை குறைக்க கோரி 300க்கும் மேற்பட்ட கடைக்காரர்கள், உற்பத்தியாளர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் பட்டு சேலை உற்பத்திக்கு காஞ்சிபுரம் பெயர்பெற்றுள்ளது. பட்டுச் சேலைகள் தயாரிப்பதற்கு தேவையான மூலப் பொருட்கள் விலை கணிசமாக உயர்ந்துள்ளதால், பட்டு சேலைகளின் விலை 20 முதல் 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
இதனால் விற்பனையில் சரிவு ஏற்பட்டு கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக காஞ்சிபுரம் பட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையடுத்து, பட்டு நூல் விலையைக் உடனடியாக குறைக்க வேண்டும். தேவைக்கு ஏற்ப வரி நீக்கம் செய்ய வேண்டும். நெசவுத் தொழிலுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். சரிகைக்கு மானியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பட்டு நகரமான காஞ்சிபுரத்தில் 300க்கும் மேற்பட்ட பட்டு சேலை விற்பனை கடைகள், கோரா விற்பனை கடைகள் இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
இந்த போராட்டத்தில், காஞ்சிபுரம் பட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள் அமைப்பு, பட்டு கடைகள், கூட்டுறவு சங்க அமைப்பு, அனைத்து தொழிற்சங்கம், அனைத்து வர்த்தக சங்க கூட்டமைப்பு, கோரா வர்த்தக அமைப்பினர் பங்கேற்றுள்ளனர். தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, மனிதச் சங்கிலி போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
ஜார்கண்டில் ஒரு பாரம்பரியம்: வாழ்ந்து பார்த்த பிறகு திருமணம் செய்துகொள்ளும் ஜோடிகள்
இலங்கை நெருக்கடி: மஹிந்த ராஜபக்ஷ ராஜிநாமா ஏற்பு
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியால் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நேற்றைய தினம் மஹிந்த ராஜபக்ஷ ஆதரவாளர்கள் என்று கூறிக்கொண்டவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.
அரசுக்கு எதிரான போராட்டக்காரர்கள், செஞ்சிலுவை சங்க மருத்துவமனை மற்றும் பேருந்துகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. இதையடுத்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன.
இதற்கிடையே பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக மஹிந்த ராஜபக்ஷ தனது சகோதரரும் அதிபருமான கோட்டாபய ராஜபக்ஷவிற்கு நேற்று கடிதம் அனுப்பினார். அவரது ராஜிநாமா ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை அரசின் வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பட மூலாதாரம், Sri Lanka Govt.
தொடர்ந்து இணைந்திருங்கள்
வணக்கம். நான் ஜோ மகேஸ்வரன். இது வரை நந்தினி வெள்ளைச்சாமி தொகுத்து வழங்கிய நேரலைப் பக்கத்தை இனி நான் வழங்குகிறேன். தொடர்ந்து இணைந்திருங்கள்.
தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.
குறிப்பாக இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.
இலங்கை சூழல் இந்தியாவிலும் ஏற்படும் என்பதை பாஜக புரிந்துகொள்ள வேண்டும் - திருமாவளவன்

இலங்கை சூழல் இந்தியாவிலும் விரைவில் ஏற்படும் என்பதை பாஜக புரிந்துகொள்ள வேண்டும் என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், "புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு திமுக அரசின் தேர்தல் வாக்குறுதிகளில் கூறியதைப்போல பழைய ஓய்வூதிய திட்டத்தை விரைவில் அமல்படுத்த வேண்டும்.
இலங்கையில் ஒரே மொழி, ஒரே இனம், ஒரே சட்டம், ஒரே ஆட்சி என்ற ஒற்றைத் தன்மை நோக்கி ராஜபக்ஷ குடும்பம் இலங்கையை இழுத்துச் சென்றதால் இலங்கைத்தமிழர் நசுக்கப்பட்டு பன்முகத்தன்மை சிதைக்கப்பட்டது.
இதே நிலைமை இந்தியாவிலும் மோதி அரசால் வழி நடத்தப்படுகிறது. ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கட்சி, ஒரே சட்டம் என்ற இலக்கை நோக்கி பாஜக செல்கிறது இந்தியை திட்டமிட்டு திணிக்கிறது. எனவே, இலங்கையில் ஏற்பட்ட நிலைமை இந்தியாவிலும் விரைவில் ஏற்படும் என்பதை பாஜகவினர் புரிந்துகொள்ள வேண்டும்" என்றார்.
சாந்தனுக்கு 3வது நாளாக மருத்துவ பரிசோதனை

பட மூலாதாரம், police
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் சாந்தனுக்கு 3வது நாளாக மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் சாந்தன் என்கிற சாந்தகுமாருக்கு (53) இன்று மூன்றாவது நாளாக அடுக்கம்பாறையிலுள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மத்திய சிறையில் இருந்து அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். ஏற்கெனவே இரண்டு நாட்களாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் முடிவுகள் இன்று வழங்கப்படுவதாகவும் மேற்கொண்டு சிகிச்சை தேவைப்படுமா என மருத்துவர்கள் அறிவுறுத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளுக்கு பொது மருத்துவ முழு உடல் பரிசோதனை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டதை அடுத்து சாந்தனுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
கனமழை: வீட்டின் முன்பக்க சுவர் இடிந்து விழுந்து 6 வயது சிறுமி உயிரிழப்பு

பட மூலாதாரம், police
திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக வீட்டின் முன்பக்க சுவர் இடிந்து விழுந்ததில் 6 வயது சிறுமி உயிரிழந்தார்.
நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் சொத்தமலை பகுதியில் நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக, கிருஷ்ணபாலுவின் குடிசை வீட்டின் முன்பக்க சுவர் திடீரென்று இடிந்து விழுந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் வீட்டில் இருந்து அலறி அடித்து வெளியே ஓடிவந்தார். இருப்பினும் கிருஷ்ண பாலுவின் 6 வயது மகள் தேவிகா குடிசை வீட்டின் உள்ளே சிக்கிக்கொண்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அறிந்த நாட்றம்பள்ளி வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் அங்கு சென்று இடிந்து விழுந்த வீட்டை பார்வையிட்டனர். சிறுமி உயிரிழப்புக்கு அரசின் நிவாரண உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
மேலும், ஏலகிரி மலை பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த கன மழையினால் பல கூரை வீடுகள் சேதமடைந்துள்ளன.
ஜிப்மரின் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை - நிர்வாகம் விளக்கம்

ஜிப்மரின் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என, ஜிப்மர் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இனி அலுவல் மொழியாக இந்தி இருக்கும் என்ற அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து புதுச்சேரி ஜிப்மர் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜிப்மரில் அலுவலகப் பணிகளுக்கு அலுவல் மொழிகள் பயன்படுத்துவது தொடர்பாக கொள்கைகளை மாற்றி அமைத்துள்ளதாக, பல ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. இந்த விஷயத்தில் ஜிப்மரின் கொள்கைகளில் எந்த மாற்றமும் இல்லை.
ஊடகங்களில் ஜிப்மர் தொடர்பாக வெளியிடப்படும் சுற்றறிக்கைகள் அனைத்தும் அரசாங்கத்தின் கொள்கை மற்றும் உத்தரவுகளின்படியும், கடந்த காலங்களில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகளைப் போன்றே இருக்கும் என்பதை தெரிவிக்கிறோம்.
அலுவல் மொழி கொள்கையின்படி, பெயர் பலகைகள் மற்றும் அடையாள பலகைகள், மத்திய அரசாங்கத்தால் பொதுமக்களின் தகவலுக்காக காட்சிப்படுத்தப்பட வேண்டும். இந்தி பேசாத பகுதிகளில் அமைந்துள்ள அலுவலகங்கள் பிராந்திய மொழியில் அதாவது தமிழ், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட வேண்டும்.
மேலும், மொழிகள் மேலே குறிப்பிட்டுள்ள வரிசையில் ஒருமித்த அளவில் இருக்க வேண்டும். நிறுவனத்தின் அலுவல் பயன்பாட்டுக்கான பெயர் பலகைகள், அடையாள பலகைகள், நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சுற்றறிக்கைகள் (Letter Head) போன்றவை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும்.
எனவே, ஜிப்மர் மருத்துவமனைக்கு வருகை தரும் நோயாளிகள் மற்றும் பிற உறுப்பினர்களுடனான மொழி பரிமாற்றங்கள் அனைத்தும் உள்ளூர் மொழியில் பயன்படுத்துவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பது தெளிவாகிறது" என தெரிவித்துள்ளது.
வந்துகொண்டிருக்கும் செய்தி, இலங்கை நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்ட ஜனாதிபதியிடம் சபாநாயகர் கோரிக்கை
இலங்கை நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டில் நிலவும் அசாதாரண அரசியல் நெருக்கடிக்கும், புதிய அரசாங்கம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் ஆராய்வதற்காகவே நாடாளுமன்றத்தை கூட்டுமாறும் சபாநாயகர் கோரியுள்ளார்.
இதனிடையே, அலரி மாளிகை முன்பு நேற்று நடைபெற்ற வன்முறையில் காவல் உதவி ஆய்வாளர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக, காவல்துறை தெரிவித்துள்ளது. நேற்று நடைபெற்ற வன்முறையில் இதுவரை 217 பேர் காயமடைந்துள்ளனர்.
வணக்கம் நேயர்களே!
நான் நந்தினி வெள்ளைச்சாமி. பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன்.
தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம். குறிப்பாக இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.உங்கள் பகுதியின் சுவாரசியமான செய்திகளைப் பற்றிஎங்கள் டிவிட்டர் கணக்கின் மூலம் தகவல் அளியுங்கள்.
நேற்றைய நேரலை பக்கத்திலிருந்து முக்கியமான செய்திகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்:
- இலங்கை பிரதமர் ராஜபக்ஷ பதவியில் இருந்து விலகும் கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பியுள்ளார்.
- இலங்கை கொழும்பு புறநகர் பகுதியான நிட்டம்புவ பகுதியில், ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல உயிரிழந்துள்ளார்.
- இலங்கை தலைநகர் கொழும்புவில் போராட்டம் நடத்திவர்களை நோக்கி காவல் துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
- சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த முதியவர் உயிரிழந்தார்.
- டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
- இலங்கை பிரதமர் ராஜபக்ஷ பதவி விலக கூடாது என்று வலியுறுத்தி அவரது ஆதரவாளர்கள் கொழும்புவில் திடீர் போராட்டம் நடத்தினர். காலி முகத்திடலில் போராட்டம் நடத்தியவர்களின் கூடாரங்கள் எரிக்கப்பட்டன.
- புதுச்சேரி ஜிப்மரில் இந்தித் திணிப்பு இல்லை என்றும் இயக்குநரின் சுற்றறிக்கை தவறாக முன் வைக்கப்படுவதாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
- இலங்கை கொழும்புவில் ராஜபக்ஷ ஆதரவாளர்கள் காலிமுகத்திடலில் புகுந்து கூடாரங்களுக்கு தீ வைப்பு. போராட்டக்காரர்கள், செஞ்சிலுவை சங்க மருத்துவமனை, ஆம்புலன்ஸ் மீதும் தாக்குதல். கண்ணீர் புகைகுண்டு பிரயோகம்.
- இலங்கை எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, எஸ்ஜேபி எம்.பி.க்கள் குழுவுடன் காலி முகத்திடலுக்குள் நுழைந்தபோது அவரை நோக்கி சிலர் கட்டை, தண்ணீர் பாட்டில்களை வீசினார்கள்.
- இலங்கை வன்முறை: அரசுடன் தொடர்புடைய தீவிரவாதிகளின் தாக்குதல் என்று நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம்சாட்டியுள்ளார்.
- புதுச்சேரி ஜிப்மரில் அலுவல் மொழியாக இந்தி மட்டுமே இருக்கும் என்ற அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக சுதன்ஷு துலியா மற்றும் ஜம்ஷெட் பர்ஜோர் பர்திவாலா ஆகியோர் இன்று பதவியேற்றுக்கொண்டனர்.
- சென்னை ராஜா அண்ணாமலைபுரம், இளங்கோ தெருவில் வீடுகளை இடிக்கும் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
- இலங்கை தற்போது எதிர்கொண்டு வரும் நெருக்கடிக்கு வன்முறை தீர்வாகாது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
- இலங்கையில் மறு அறிவிப்பு வரும் வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
- இலங்கையில் இல் உணர்ச்சிமயமான நிலைமை அதிகமாக இயங்கிக் கொண்டிருக்கும் வேளையில், நமது பொது மக்கள் நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- இந்தியாவின் பிற பகுதிகளிலும் கடல் கடந்து வெற்றி கொண்ட பிற நாடுகளிலும் தொல்லியல்துறையின் அகழாய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- ஆதீன மடங்களின் சமய, சம்பிரதாயங்களை பாதுகாக்க வேண்டும். எல்லோரையும் அனுசரித்து போக வேண்டும் என அரசை கேட்டுக் கொள்கிறேன் என்று மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.
- இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய கோரியும், பறிமுதல் செய்த படகுகளை விற்பனை செய்வதை கண்டித்து ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் மீனவர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல்ராஜனை கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 25 இடங்களுக்கு மேல் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- தமிழ்நாடு பாஜகவின் 2 சட்டமன்ற உறுப்பினர்கள் எங்களிடம் தொடர்பில் உள்ளார்கள். எங்கள் தலைமை இசைவு தெரிவித்தால், 2 பேரையும் தூக்கிவிடுவோம் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
- எட்டு வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி என்று சேலத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
