இலங்கையில் நள்ளிரவு முதல் அவசரநிலை பிரகடனம்: ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

இலங்கை அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை வெளியேறுமாறும் கோரி மே 6ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடைபெற்ற நிலையில், நள்ளிரவு முதல் அவசரநிலையை பிரகடனம் செய்துள்ளார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஜோ மகேஸ்வரன்

  1. இலங்கை நெருக்கடி: நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் - பாட சாலைகளும் மூடல்

  2. இலங்கையில் துப்பாக்கிச் சூடு: பொலிஸார் உள்ளிட்ட 9 பேர் காயம்

    இலங்கை துப்பாக்சிச் சூடு

    இலங்கையில் பொலிஸ் காவலரண் தீ வைத்து எரிக்கப்பட்டது. அங்கிருந்த பொலிஸார் மற்றும் ஊர்க் காவல் படையினர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    இலங்கை அம்பாறை மாவட்டம் பாலமுனை பிரதேசத்தில் நேற்று இரவு (மே 5ம் தேதி) இரவு தொடங்கி இன்று அதிகாலை 1.30 மணி வரை இச்சம்பவம் நடந்துள்ளது.

    பொலிஸ் காவலரணில் பணியில் இருந்த ஊர்க் காவல் படை உத்தியோகத்தர் பொதுமகன் ஒருவரை கடுமையாகத் தாக்கியதால், கோபங்கொண்ட பொமக்கள் ஊர்க் காவல் படையினர் மற்றும் பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

    பொலிஸ் வீதித் தடைக் காவலரணை தீ வைத்து எரித்ததாகவும் அப்பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர். சம்பவ இடத்துக்கு வந்திருந்த அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் தாக்கப்பட்டுள்ளார்.

    இதையடுத்து காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, வைத்திய அத்தியட்சகர் ஆசாத் எம். ஹனீபா பிபிசி தமிழுக்குத் தெரிவித்தார்.

    இவர்களில் இமாமுதீன் (40) என்பவர் கையில் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடனும், பாஹிர் (31) வயிற்றில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடனும் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறினார். இதேவேளை, 6 பொலிஸாரும் ஊர் காவல் படை உத்தியோகத்தர்கள் மூவரும் சிறிய காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்திய அத்தியட்சகர் ஆசாத் எம். ஹனீபா தெரிவித்தார்.

    இந்த சம்பவத்தில் தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளர் ஒருவரும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொவிட் தீவிரமடைந்திருந்த காலப்பகுதியில் பாலமுனை வைத்தியசாலைக்கு அருகாமையில் அமைக்கப்பட்ட பொலிஸ் வீதிக் காவலரண் ஒன்றே - இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

  3. தொடர்ந்து இணைந்திருங்கள்

    வணக்கம். நான் ஜோ மகேஸ்வரன். இதுவரை நந்தினி வெள்ளைச்சாமி தொகுத்து வழங்கிய நேரலைப் பக்கத்தை இனி நான் தொகுத்து வழங்குகிறேன்.

    தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    குறிப்பாக, யுக்ரேன் மற்றும் இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.

  4. விசாரணை கைதி விக்னேஷ் மரணம்: கொலை வழக்காக மாற்றம் - முதலமைச்சர் ஸ்டாலின்

    மு.க.ஸ்டாலின்

    பட மூலாதாரம், @mkstalin/Twitter

    சென்னையில் போலீஸ் காவலில் இருந்த விக்னேஷ் என்ற இளைஞர் உயிரிழந்த வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

    விக்னேஷ் மரணத்தில் மிகப்பெரிய சந்தேகம் இருப்பதாக, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் குற்றம்சாட்டினார்.

    இதற்கு பதிலளித்த முதலைமைச்சர் ஸ்டாலின், "விசாரணை கைதி விக்னேஷ் மரணம் தொடர்பாக ஏற்கெனவே சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டு, எதிர்க்கட்சி தலைவரும், உறுப்பினர்களும் பேசியுள்ளனர்.

    அப்போது நான் பதிலளித்துப் பேசுகையில், 'விக்னேஷ் இறப்பு குறித்து சந்தேக மரணம் என முறைப்படி வழக்குப்பதிவு செய்து மாஜிஸ்திரேட் விசாரணை நடைபெற்று வருகிறது. மாஜிஸ்திரேட் முன்னிலையில் உடற்கூராய்வு செய்யப்பட்டு, அது வீடியோவில் பதிவு செய்யப்பட்டு, அன்றைய தினமே விக்னேஷின் உடல் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது' என நான் தெரிவித்திருந்தேன்.

    தலைமை செயலக காலனி காவல் நிலைய உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள், காவலர் பொன்ராஜ், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த தீபக் ஆகியோர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    இவ்வழக்கு 24-04-2022 அன்று, சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது. உயிரிழந்த விக்னேஷ் உடலில் 13 காயங்கள் இருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

    அதனடிப்படையில், இவ்வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு, காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க சிபிசிஐடி போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.

  5. சிற்றுண்டியில் உப்பு அதிகம் என மனைவி கொலை: இந்திய மனைவிகளின் நிலை பற்றிய அதிர்ச்சி தரவுகள்

  6. நரேந்திர மோதி ஜெர்மனி பயணத்தில் குழந்தை பாடிய பாடல் வைரலானபோது, தந்தை கொதித்தது ஏன்?

  7. ஒரத்தநாட்டில் ஷவர்மா சாப்பிட்ட 3 பேருக்கு வாந்தி, மயக்கம்

    ஷவர்மா சாப்பிட்ட 3 பேருக்கு வாந்தி, மயக்கம்

    தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் ஷவர்மா சாப்பிட்ட 3 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு கால்நடை கல்லூரியில் இரண்டாம் ஆண்டு கால்நடை மருத்துவம் படிக்கும் மாணவர்களான கன்னியாகுமரியை சேர்ந்த பிரவீன் (22), புதுக்கோட்டையை சேர்ந்த பரிமலேஸ்வரன், (21) தருமபுரியை சேர்ந்த மணிகண்டன் (21) ஆகியோர், ஒரத்தநாடு பிரிவு சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே உள்ள துரித உணவுகத்தில் ஷவர்மா சாப்பிட்டுள்ளனர்.

    சாப்பிட்டு சிறிது நேரத்தில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், ஒரத்தநாடு போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதைத்தொடர்ந்து, திருச்சி தில்லைநகர், வயலூர் ரோடு, மத்திய பேருந்து நிலையம் பகுதியில் ஷவர்மா விற்பனை செய்யும் 21 கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு செய்தனர். ஆய்வு செய்ததில் கடைகளில் கெட்டுப்போன கோழி இறைச்சி சுமார் 12 கிலோ வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டது.

    மேலும், ஐந்து கடைகளுக்கு உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006-இன் கீழ் பிரிவு 55 நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

    மேலும், மாவட்ட நியமன அலுவலர் கூறுகையில், "ஷவர்மா விற்பனை செய்யும் கடைகள் அன்றைய தினம் மீதமாகும் கோழி இறைச்சியை கண்டிப்பாக குளிர்சாதன பெட்டியில் வைக்கக்கூடாது. ஆய்வின்போது அவ்வாறு குளிர்சாதன பெட்டியில் கோழி இறைச்சியோ வேறு கெட்டுப்போன உணவுப்பொருளோ கண்டறியப்பட்டால் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006-இன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.

  8. இலங்கையில் அரசாங்கத்திற்கு எதிராக இன்று முழு அடைப்பு: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு - நேரலை

  9. கல்லூரி பேருந்து மரத்தில் மோதி விபத்து - 18 மாணவிகள் காயம்

    கல்லூரி பேருந்து விபத்து

    சாத்தூர் அருகே கல்லூரி பேருந்து மரத்தில் மோதியதில் 18 மாணவிகள் காயமடைந்தனர்.

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சடையம்பட்டியில் செய்லபட்டு வரும் தனியார் கல்லூரி, அங்கு பயிலும் மாணவிகளை சங்கரன்கோவிலில் இருந்து சாத்தூருக்கு கல்லூரி பேருந்தில் ஏற்றிக்கொண்டு கல்லூரி நோக்கி இன்று காலை 8.30 மணியளவில் ஓ.மேட்டுபட்டி அருகே வந்துகொண்டிருந்தது.

    அப்போது, பேருந்து ஓட்டுநர் கணபதியின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் மோதியதில் பேருந்தில் இருந்த கல்லூரி மாணவிகள் 18 பேர் பலத்த காயமடைந்தனர்.

    காயமடைந்த கல்லூரி மாணவிகள் சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து சாத்தூர் தாலுகா காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  10. பொதுத் தேர்வுகள் நடைபெறும் சமயத்தில் மின்வெட்டு ஏற்படாமல் நடவடிக்கை - ஓபிஎஸ் வலியுறுத்தல்

    ஓ.பன்னீர்செல்வம்

    பட மூலாதாரம், GETTY IMAGES

    பொதுத் தேர்வுகள் நடைபெறுகின்ற மே மற்றும் ஜூன் மாதங்களில் மின்வெட்டு ஏற்படாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

    இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட அறிக்கையில், "அனைத்து இடங்களிலும் மின்வெட்டு ஏற்படாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    தமிழ்நாட்டில் நேற்று தொடங்கிய பிளஸ் 2 பொதுத்தேர்வின் போது, தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் உள்ள அரசர் மேல்நிலைப் பள்ளியில் மின் தடை ஏற்பட்டு, பின்னர் அரை மணிநேரத்தில் சரி செய்யப்பட்டதாகவும், வட சென்னை மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதாகவும் செய்திகள் வருகின்றன.

    இரவு நேரங்களில் மின் வெட்டு ஏற்பட்டால் மாணவ, மாணவிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாவதுடன் அவர்களுடைய கவனமும் சிதறக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.

    இதன் காரணமாக, மின்வெட்டு ஏற்பட்ட பகுதிகளில் உள்ள மாணவ, மாணவிகளின் மதிப்பெண்கள் குறைந்துவிட்டன என்ற நிலை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய கடமையும் பொறுப்பும் இந்த அரசுக்கு உள்ளது.

    எனவே முதலமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு பொதுத் தேர்வுகள் நடைபெறுகின்ற மே மற்றும் ஜூன் மாதங்களில், தேர்வு மையங்களில் மட்டுமல்லாமல் அனைத்து இடங்களிலும் மின்வெட்டு ஏற்படாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  11. திருவண்ணாமலை சிறையில் இறந்த பழங்குடி மலைக்குறவர் இனத்தை சேர்ந்த தங்கமணி உடலில் எலும்பு முறிவு, காயம்: உடற்கூராய்வு

    உயிரிழந்த தங்கமணி
    படக்குறிப்பு, உயிரிழந்த தங்கமணி

    திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம் தட்டாரணை கிராமத்தை சேர்ந்த பழங்குடி மலைக்குறவர் சமூகத்தை சேர்ந்த கே.தங்கமணி என்பவர் சிறையில் மரணமடைந்த விவகாரத்தில் அவரது இறப்புக்கான காரணங்கள் உடல்கூராய்வில் விவரிக்கப்பட்டுள்ளது.

  12. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3,545 பேருக்கு கொரோனா தொற்று

    இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3,545 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போதுவரை 19,688 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  13. இலங்கையில் இன்று நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம்

    இலங்கை பொருளாதார நெருக்கடி

    இலங்கை அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை வெளியேறுமாறும் கோரி இன்றுநாடு தழுவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகின்றது.

    இதன்படி, நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளும் இன்றைய தினம் மூடப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

    அத்துடன், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விசேட பிரமுகர்களுக்கான வளாகத்தின் பணிகள் இன்றைய தினம் முதல் மறுஅறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

    மேலும், நாடு முழுவதும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் நேற்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.

    நாடு தழுவிய ரீதியில் இன்றைய தினம் முன்னெடுக்கப்படும் வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தாம் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாக சங்கத்தின் தலைவர் கெமுணு விஜேரத்ன தெரிவித்தார்.

    நேற்றிரவு முதல் ரயில் சேவைகளிலும் பாதிப்பு ஏற்பட்டிருந்தன. அத்துடன், நாட்டில் டீசலுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக, பெரும்பாலும் எதிர்வரும் 12ம் தேதி வரை பேருந்து சேவையை முன்னெடுக்க முடியாத நிலைமை ஏற்படும் எனவும் அவர் கூறுகின்றார்.

    அத்துடன், இன்றைய தினம் நாட்டின் பெரும்பாலான பகுதிகளிலுள்ள வர்த்தக நிலையங்கள், வணிக நிறுவனங்கள், வங்கிகளின் நடவடிக்கைகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

  14. வணக்கம் நேயர்களே!

    நான் நந்தினி வெள்ளைச்சாமி. பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன். தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் நிகழ்வுகள், விளையாட்டு, சினிமா, அரசியல் உள்ளிட்ட பல்துறை செய்திகள் ஆகியவற்றை இந்த நேரலைப் பக்கத்தில் வழங்குகிறோம்.

    குறிப்பாக, யுக்ரேன் மற்றும் இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள். உங்கள் பகுதியின் சுவாரசியமான செய்திகளைப் பற்றிஎங்கள் டிவிட்டர் கணக்கின் மூலம் தகவல் அளியுங்கள்.

    நேற்றைய நேரலை பக்கத்தின் முக்கியமான செய்திகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்:

    • தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பேருந்துகளில் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என்று போக்குவரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவித்துள்ளார்.
    • தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்கள் எளிதாக ஆங்கிலம் படிக்க, பேச, புரிந்து கொள்ள பள்ளிக்கல்வித்துறை மற்றும் கூகுள் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன.
    • இலங்கையில் எரிபொருளுக்கு மீண்டும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
    • தருமபுரம் ஆதினம் பட்டினப்பிரவேசம் நிகழ்வில் பல்லக்கில் தூக்கிச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மதுரை, தருமபுரம் ஆதீனங்கள் நேற்று நேரில் சந்தித்து பேசினர்.
    • ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • அழுத்தங்களுக்கு அடிபணிந்து பதவி விலகப் போவதில்லை என, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
    • ஆவடி அருகே அசோக் நிரஞ்சன் நகரில் தனியார் அடுக்கு மாடியில் குடியிருப்பில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது, விஷ வாயு தாக்கி தொழிலாளி உயிரிழந்தார்.
    • திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர் பாண்டியன் என்பவர் மரத்தில் ஏறி போராட்டம் செய்தார். மனைவியை போலீசார் திட்டியதாக குற்றம்சாட்டியுள்ளார்.
    • தமிழ்நாடு அரசு எங்கள் மேல் வைத்துள்ள நம்பிக்கை இன்னும் சிறப்பாக பணியாற்றுவதற்கான உத்வேகத்தை அளிப்பதாக,மதுரை அரசு மருத்துவகல்லூரி முதல்வராக மீண்டும் பொறுப்பேற்ற ரத்தினவேலு தெரிவித்துள்ளார்.
    • மேற்கு சம்பரனிலிருந்து 3,000 கி.மீ. தொலைவுக்கு நடைபயணத்தைத் தொடங்க உள்ளதாக தேர்தல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
    • கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 6வது நபராக குற்றம்சாட்ட்ப்பட்டுள்ள பிஜின் குட்டியின் சகோதரர் மோசஸிடம் கோவை காவலர் தேர்வு பள்ளியில் வைத்து விசாரணை நடைபெற்றது.
    • தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. மே 31-ம் தேதி வரை நடைபெறும் தேர்வை 26.5 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.
    • இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவும் தமிழ்நாடு அரசுக்கும் முதலமைச்சருக்கும் நன்றி தெரிவித்து ராஜபக்ஷ கடிதம் எழுதியுள்ளார்.