You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

போலீஸ் காவலில் மரணமடைந்த விக்னேஷின் உடலில் 13 காயங்கள்: பிரேதப் பரிசோதனை அறிக்கை

சென்னையில் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்ட நிலையில் உயிரிழந்த இளைஞர் விக்னேஷின் உடலில் 13 இடங்களில் காயங்கள் இருப்பதாக உடற்கூறு அறிக்கையில் தெரியவந்துள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஆ. லட்சுமி காந்த் பாரதி

  1. இலங்கை பெண் அகதி வீட்டில் இரவில் நுழைந்ததாக மெரைன் போலீஸ் தற்காலிக பணியிடை நீக்கம்

    இலங்கை பெண் அகதி வீட்டுக்குள் இரவில் நுழைந்த காவல்துறையை சேர்ந்த ஒருவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.

    இலங்கையில் இருந்து மார்ச் 22 ஆம் தேதி படகில் வந்த இளம்பெண் ஒருவர் உட்பட 6 பேர் தனுஷ்கோடி வந்தனர். அவர்கள் தற்போது மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கணவரை பிரிந்த அப்பெண் குழந்தைகளுடன் தங்கியுள்ளார்.

    அப்பெண்ணிடம் மெரைன் போலீஸ் அன்பு, கடந்த 2 நாட்களுக்கு முன் நள்ளிரவு மதுபோதையில் வீட்டுக்குள் புகுந்து அப்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்பெண் மறுத்ததையடுத்து அன்பு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

    இது குறித்து அப்பெண் மற்றும் அப்போது முகாமில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அளித்த புகாரின் அடிப்படையில் அன்புவிடம், மெரைன் ஏடிஎஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் விசாரித்தனர்.

    விசாரணை அறிக்கைபடி, மாவட்ட காவல் துறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட அன்புவை பணியிடை நீக்கம் செய்து ராமநாதபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் கார்த்திக் உத்தரவிட்டார்.

  2. பட்டாசு ஆலை வெடிவிபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

    சாத்தூர் அருகே உள்ள கத்தாளம்பட்டியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடிவிபத்தில் தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த பெரியகருப்பன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை சாத்தூர் அருகே கத்தாளம்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு தொழிற்சாலையில் சுமார் 15 அறைகள் உள்ளன.

    இங்கு வழக்கம்போல் இன்று காலை பட்டாசு ஆலை திறந்து இன்றைய பணிக்கு தேவையான மருந்துகளை கலக்கும் கலவை அறையில் தொழிலாளி பணியில் ஈடுபட்டுள்ளார்.

    அப்போது ஏற்பட்ட வெடி விபத்தில் ஒரு அறை முழுவதும் தரைமட்டமான நிலையில், இதில் சுந்தர குடும்பன்பட்டி பகுதியை சேர்ந்த சோலை விக்னேஷ் (26) என்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் அம்மாபட்டி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்தவரின் உடலை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து அம்மாபட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  3. பேரறிவாளன் வழக்கு - உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

    தன்னை விடுதலை செய்யுமாறு பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு இன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

    இந்த வழக்கு கடந்த வாரம் நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மாநில அமைச்சர்வையின் முடிவை ஏற்காமல் ஆளுநர் செயல்படுவது கூட்டாட்சியை தகர்ப்பது போன்றதாகும் என தெரிவித்தனர்.

    இந்நிலையில், இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ள நிலையில், தமிழக அரசு எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்யவுள்ளனர். தொடர்ந்து, மத்திய அரசும் இவ்வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கவுள்ளனர்.

  4. வணக்கம் நேயர்களே!

    நான் நந்தினி வெள்ளைச்சாமி. பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன். தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் நிகழ்வுகள், விளையாட்டு, சினிமா, அரசியல் உள்ளிட்ட பல்துறை செய்திகள் ஆகியவற்றை இந்த நேரலைப் பக்கத்தில் வழங்குகிறோம்.

    குறிப்பாக, யுக்ரேன் மற்றும் இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள். உங்கள் பகுதியின் சுவாரசியமான செய்திகளைப் பற்றிஎங்கள் டிவிட்டர் கணக்கின் மூலம் தகவல் அளியுங்கள்.

    நேற்றைய நேரலை பக்கத்தின் முக்கியமான செய்திகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்:

    • இலங்கை மக்களுக்கு உதவ திமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும். திமுக எம்.எல்.ஏக்கள் ஒரு மாத ஊதியத்தை அளிக்கிறார்கள் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
    • சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் உள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர்,தன்னை கொலை செய்ய திட்டமிடப்படுவதாக' நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
    • தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளஅனல் மின் நிலையத்தில் 210 மெகா வாட் உற்பத்தி செய்யும் 5 யூனிட்டுகள் உள்ளன. நிலக்கரி பற்றாக்குறையால் 4 யூனிடுகளில் 840 மெகாவாட் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
    • யுக்ரேனில் ரஷ்யப்படையினர் முற்றுகையிட்டுள்ள இரும்பு ஆலையில் ரஷ்யப்படைகள் மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளதாக, யுக்ரேன் தெரிவித்துள்ளது.
    • யுக்ரேனில் ரஷ்யப்படையினர் முற்றுகையிட்டுள்ள இரும்பு ஆலையில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இன்னும் சிக்கியுள்ளனர்.
    • தமிழ்நாட்டுக்கு செல்ல முயன்றதாக இலங்கை வவுனியாவை சேர்ந்த 4 பேர் யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • இஸ்லாமியர்கள் குறி வைக்கப்படுகிறார்கள். சவால்களையும் ஆபத்துகளையும் சந்திக்கின்றனர் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
    • ராஜஸ்தான் ஜோத்பூரில் ஜலோரி கேட் பகுதியில் நேற்று முன்தினம் இரவு இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு இணைய சேவையை துண்டித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
    • தூத்துக்குடியில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் கர்ப்பிணி உட்பட இருவர் உயிரிழந்தனர்.
    • இலங்கை மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில், தேவையான உதவிகளை செய்திட நன்கொடைகள் வழங்கிடுமாறு திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    • சென்னையில் படப்பிடிப்பு நடத்த நடிகர் அஜித்திடம் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கோரிக்கை விடுத்துள்ளார்.
    • இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாட்டு மீனவர்களை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார்.
    • சென்னை ராயப்பேட்டையில் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்கு சேர்ந்தவர் உயிரிழந்தார்.
    • பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முகக் கவசம் கட்டாயம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.