You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
போலீஸ் காவலில் மரணமடைந்த விக்னேஷின் உடலில் 13 காயங்கள்: பிரேதப் பரிசோதனை அறிக்கை
சென்னையில் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்ட நிலையில் உயிரிழந்த இளைஞர் விக்னேஷின் உடலில் 13 இடங்களில் காயங்கள் இருப்பதாக உடற்கூறு அறிக்கையில் தெரியவந்துள்ளது.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
ஆ. லட்சுமி காந்த் பாரதி
இன்றைய நேரலை நிறைவு பெறுகிறது
வணக்கம். இன்றைய நேரலை இத்துடன் நிறைவு பெறுகிறது. இதுவரை இணைந்திருந்தமைக்கு நன்றி.
இது வரையிலான முக்கிய செய்திகள்.
- உத்தர பிரதேச மாநிலம் லலித்பூரில் 13 வயது சிறுமியை நான்கு பேர் பாலியல் வல்லுறவு செய்ததாகவும், இதைத் தொடர்ந்து, புகார் அளிக்க காவல் நிலையத்துக்குச் சென்ற பாதிக்கப்பட்ட சிறுமியை காவல் நிலைய பொறுப்பு அதிகாரியும் பாலியல் வல்லுறவு செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
- விளையாட்டு செய்தியாளர் போரியா மஜும்தாருக்கு பிசிசிஐ இரண்டு ஆண்டுகள் தடை விதித்துள்ளது.
- இலங்கை மன்னாரில் இருந்து சட்டவிரோதமாக தமிழகத்திற்கு படகில் வர முயன்ற மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 12 பேர் மற்றும் படகோட்டிகள் இருவர் உட்பட 14 பேரை தாழ்வுபாடு கடற்பரப்பில் வைத்து இன்று அதிகாலை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
- மதுரை மருத்துவக் கல்லூரியின் டீனாக ரத்தினவேல் மீண்டும் நியமிக்கப்படுவதாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
- பேரறிவாளன் தன்னை விடுதலை செய்யகோரி, தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில். வழக்கு விசாரணை ஒரு வாரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- பாடப்புத்தகங்களில் ஒன்றிய அரசு என்று மாற்றம் செய்வதை தமிழக அரசு கைவிட வேண்டும் என, பாஜக தேசிய மகளிரணி செயலாளர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ வலியுறுத்தியுள்ளார்.
- இலங்கை பெண் அகதி வீட்டுக்குள் இரவில் நுழைந்த காவல்துறையை சேர்ந்த ஒருவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.
- சாத்தூர் அருகே உள்ள கத்தாளம்பட்டியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடிவிபத்தில் தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
- சென்னையில் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்ட நிலையில் உயிரிழந்த இளைஞர் விக்னேஷின் உடலில் 13 இடங்களில் காயங்கள் இருப்பதாக உடற்கூறு அறிக்கையில் தெரியவந்துள்ளது.
தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை குறிப்பாக, யுக்ரேன் மற்றும் இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய பிபிசி தமிழ் இணையதளம், முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் தொடர்ந்து இணைந்திருங்கள்.
'சரக் சப்த்' உறுதிமொழி: குழப்பம் ஏற்பட்டது ஏன்? கேள்வியும் பதிலும்
போலீஸ் காவலில் மரணமடைந்த விக்னேஷின் உடலில் 13 இடங்களில் காயங்கள்: பிரேதப் பரிசோதனை அறிக்கை, முரளிதரன் காசிவிஸ்வநாதன்
சென்னையில் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்ட நிலையில் உயிரிழந்த இளைஞர் விக்னேஷின் உடலில் 13 இடங்களில் காயங்கள் இருப்பதாக உடற்கூறு அறிக்கையில் தெரியவந்துள்ளது.
கடந்த ஏப்ரல் 18ஆம் தேதியன்று, சென்னை புரசைவாக்கத்தில் ஆட்டோவில் வந்த விக்னேஷ், சுரேஷ் ஆகிய இருவரும் காவல்துறையால் வழிமறிக்கப்பட்டு தலைமைச் செயலக காவல் நிலையத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
இதற்குப் பிறகு போலீஸ் காவலில் இருக்கும்போதே விக்னேஷ் மரணமடைந்தார். இந்த நிகழ்வில், விக்னேஷின் குடும்பத்தினர் கடுமையாக மிரட்டப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
ஏப்ரல் 21ஆம் தேதியன்று இந்த விவகாரம் குறித்து காவல் துறையின் மத்திய குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை விசாரிக்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த விவகாரத்தில் மிகத் தீவிரமான மனித உரிமை மீறல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்த நிலையில், காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டமைப்பு சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து, விக்னேஷின் உறவினர்கள், இந்த நிகழ்வோடு சம்பந்தப்பட்டவர்கள் அளித்த வாக்கு மூலங்களை வெளியிட்டது.
இந்த நிலையில், உயிரிழந்த விக்னேஷின் உடற்கூறி அறிக்கை தற்போது ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது. அடித்ததால் தலையில் ஏற்பட்ட காயம், இடது கண்ணிற்கு மேல் காயம், இடது கண்ணத்தில் காயம், வீக்கம், வலது கையின் முன் புறமும் பின் புறமும் பலத்த காயம், இடது தோள்பட்டையில் வீக்கம், இடது தோள்பட்டையில் காயம், பின்புறத்தில் பெரிய அளவில் தோல் உரிந்திருந்தது உள்ளிட்ட காயங்கள் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
இது தவிர, வலது தொடையில் பெரிய அளவில் வீக்கம் இருந்தது. அதனை எக்ஸ் ரே எடுத்துப் பார்த்தபோது, எலும்பு உடைந்திருப்பது தெரியவந்தது. இடது காலிலும் கடுமையாக அடிபட்டிருந்தோடு, வீக்கமும் தோல் சிவந்தும் காணப்பட்டதாக பிரேதப் பரிசோதனை அறிக்கை தெரிவிக்கிறது.
இதற்கிடையில், இன்று உயிரிழந்த விக்னேசை ஏற்றிவந்த ஆட்டோவின் ஓட்டுனர் பிரபு, தலைமைச் செயலக காவல் நிலைய ஆய்வாளர் செந்தில் ஆகியோரிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்தியது.
அலரிமாளிகைக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போலீஸ் வாகனங்கள் அகற்றப்பட்டன
மஹிந்த ராஜபக்சவின் அதிகாரபூர்வ இல்லமான அலரி மாளிகைக்கு முன்பாக நடத்தப்படும் போராட்டத்திற்கு தடை விதித்து போலீஸ் குறைக்கப்பட்ட நிலையில் அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போலீஸ் வாகனங்கள் தற்போது அகற்றப்பட்டன.
சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் இடையிலான போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த சென்னை அணி
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 49-வது போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் இடையிலான பெங்களூர் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது உள்ளது.
ஐபிஎல் தொடரில் சென்னை மற்றும் பெங்களூர் அணிகள், இதுவரை 29 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் சென்னை அணி 19 போட்டிகளிலும், பெங்களூர் அணி 9 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
மேலும், நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணி, 10 போட்டிகளில் விளையாடிய நிலையில், 5 போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் 5-ம் இடத்தில் உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் 3 போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் 9-ம் இடத்தில் உள்ளது.
இந்நிலையில் சென்னை அணி பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு தகுதிபெற இன்று நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெறுவது மிக முக்கியமானது.
அட்சய திரிதியை நாளில் ரூ.9,000 கோடி விற்பனை: தங்கத்தை வாங்கி குவித்த தமிழ்நாடு
உத்தர பிரதேசத்தில் புகார் கொடுக்க சென்ற சிறுமி மீது காவல் நிலையத்தில் பாலியல் வல்லுறவில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரி
உத்தர பிரதேச மாநிலம் லலித்பூரில் 13 வயது சிறுமியை நான்கு பேர் பாலியல் வல்லுறவு செய்ததாகவும், இதைத் தொடர்ந்து, புகார் அளிக்க காவல் நிலையத்துக்குச் சென்ற பாதிக்கப்பட்ட சிறுமியை காவல் நிலைய பொறுப்பு அதிகாரியும் பாலியல் வல்லுறவு செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
காவல்துறை அதிகாரிகளின் தகவலின்படி குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல் நிலைய பொறுப்பு அதிகாரி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏடிஜி பானு சங்கர் கூறுகையில், ஜான்சி டிஐஜி ஜோகேந்திர குமார் இந்த சம்பவத்தை விசாரித்து 24 மணி நேரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.
லக்னோவில், மாநில ஏடிஜி பிரசாந்த் குமார் கூறுகையில், ''டிஐஜி ஜோகேந்திர குமாருக்கு விசாரிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. வழக்கு முடியும் வரை லலித்பூரில் தங்கும்படி அவர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்,'' என்று கூறினார் என பிடிஜ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
பத்திரிக்கையாளர் போரியா மஜும்தாருக்கு பிசிசிஐ இரண்டு ஆண்டுகள் தடை, பின்னணி என்ன ?
விளையாட்டு செய்தியாளர் போரியா மஜும்தாருக்கு பிசிசிஐ இரண்டு ஆண்டுகள் தடை விதித்துள்ளது.
இந்திய அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனாக விளையாடிய விருத்திமான் சாஹாவை மிரட்டியதாக மஜும்தார் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. விருத்திமான் சாஹா, ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரராக விளையாடி வருகிறார்.
கடந்த மாதம் சமூக ஊடகங்களில் ஒரு ஸ்கிரீன் ஷாட்களை சாஹா பகிர்ந்துள்ளார். அதில், சாஹாவை ஒரு பத்திரிகையாளர் மிரட்டி இருப்பது தெரியவந்தது. அதன் பிறகு வீரேந்திர சேவாக், முன்னாள் இந்திய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உட்பட பல வீரர்கள் அந்த பத்திரிகையாளரின் பெயரை வெளியிடுமாறு சாஹாவை வலியுறுத்தினர்.
இந்த விவகாரத்தில் பிசிசிஐ கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரவி சாஸ்திரி கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து இந்த விவகாரத்தில் பிசிசிஐ தலையிட்டது. சாஹாவிடம் பிசிசிஐ கேள்வி எழுப்பிய போது அந்த பத்திரிக்கையாளர் மஜூம்தார் என்பதை குறிப்பிட்டார்.
இதனைத்தொடர்ந்து பிசிசிஐ மஜூம்தாருக்கு 2 ஆண்டுகள் தடை விதித்துள்ளது. பிசிசிஐ விதித்துள்ள தடையின் படி பிசிசிஐ நடத்தும் விளையாட்டு போட்டிகள் மற்றும் பிசிசிஐ-யின் பிற நிகழ்வுகளில் பங்கெடுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
எல்.ஐ.சி ஐ.பி.ஓ - இந்தியாவின் மிகப்பெரிய பங்கு விற்பனை அரசுக்கு கை கொடுக்குமா?
இனி ட்விட்டரை பயன்படுத்த கட்டணம் வசூலிக்கப்படுமா? - ஈலோன் மஸ்கின் பதிலை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
மஹிந்த ராஜபக்சவின் அதிகாரபூர்வ இல்லமான அலரி மாளிகைக்கு முன்பாக நடத்தப்படும் போராட்டத்திற்கு தடை.
இலங்கையிலிருந்து தமிழகம் வர முயன்ற 12 பேர் இலங்கை கடற்படையால் கைது
இலங்கை மன்னாரில் இருந்து சட்டவிரோதமாக தமிழகத்திற்கு படகில் வர முயன்ற மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 12 பேர் மற்றும் படகோட்டிகள் இருவர் உட்பட 14 பேரை தாழ்வுபாடு கடற்பரப்பில் வைத்து இன்று அதிகாலை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக திருகோணமலையை சேர்ந்த 7 சிறுவர்கள், 3 பெண்கள், 2 ஆண்கள் என 3 குடும்பத்தை சேர்ந்த 12 நபர்கள் மற்றும் மன்னாரை சேர்ந்த படகோட்டிகள் இருவர் ஒரு பைபர் படகில் தனுஷ்கோடி நோக்கி இன்று காலை வந்து கொண்டிருந்தபோது, மன்னார் மாவட்டம் தாழ்வுபாடு கடற்பரப்பில் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த இலங்கை கடற்படையினர் படகுடன் அவர்களை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 14 பேரும் முதல் கட்ட விசாரணைக்கு பின் மன்னார் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
மன்னார் காவல் நிலையத்தில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைக்கு பின் இரண்டு படகோட்டிகள் உள்ளிட்ட 14 பேரும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என மன்னார் போலீசார் தெரிவித்துள்ளனர்
மதுரை மருத்துவக் கல்லூரி டீன் மீண்டும் நியமனம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மதுரை மருத்துவக் கல்லூரியின் டீனாக ரத்தினவேல் மீண்டும் நியமிக்கப்படுவதாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
மதுரை மருத்துவக் கல்லூரியில் கடந்த சனிக்கிழமையன்று (ஏப்ரல் 30) முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியின்போது, மாணவர்கள் மருத்துவ உடை அணிந்த பின்னர் 'ஹிப்போக்ரடிக்' உறுதிமொழியை வாசிக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக சமஸ்கிருதத்தில் அமைந்த 'மகரிஷி சரக சபதம்' என்ற உறுதிமொழியை ஆங்கிலத்தில் எடுத்துக்கொண்டனர்.
இதுதொடர்பாக, தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநரகம் மூலம் மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் விளக்கம் கேட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதற்குப் பிறகு, மதுரை மருத்துவக் கல்லூரியின் டீன் ரத்தினவேல், அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க. கவன ஈர்ப்புத் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவந்தது. இதையடுத்து சட்டப்பேரவையில் பேசிய மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், முதல்வர் ரத்தினவேல் கோவிட் காலத்தில் மிகச் சிறப்பாக பணியாற்றியவர் என்றும் அவர் தன்னை நேரில் சந்தித்து விளக்கமளித்ததாகவும் அந்த விளக்கத்தின் அடிப்படையில் மீண்டும் அவர் மதுரை மருத்துவக் கல்லூரியின் டீனாக நியமிக்கப்படுவதாகவும் அறிவித்தார்.
இலங்கை கையிருப்பில் 50 மில்லியனுக்கும் குறைவான அமெரிக்க டாலர்களே உள்ளன: நிதியமைச்சர்
எல்ஐசி பங்குகளை வாங்குவது லாபமா, நஷ்டமா? முக்கியமான தகவல்கள்
வந்துகொண்டிருக்கும் செய்தி, பேரறிவாளன் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் ஒத்திவைப்பு
பேரறிவாளன் தன்னை விடுதலை செய்யகோரி, தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில். வழக்கு விசாரணை ஒரு வாரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் "குடியரசுத் தலைவரோ, ஆளுநரோ, என்ன அதிகாரம் இருந்தாலும், அரசியல் சாசனத்தை மீறி யாரும் செயல்பட முடியாது.
குடியரசுத் தலைவர், ஆளுநருக்கு எங்களால் உத்தரவிட முடியாது. ஆனால் இந்த வழக்கில் அரசியல் சாசன அடிப்படையில் தீர்ப்பை வழங்க முடியும் நீதிபதிகள்" என்று தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .
வந்துகொண்டிருக்கும் செய்தி, பேரறிவாளன் வழக்கில் உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு கேள்வி
தன்னை விடுதலை செய்யகோரி, பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் அமர்வு மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பினர்.
அதில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யும் அமைச்சரவை முடிவை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது ஏன்? என்று கேள்வி கேட்டுள்ளனர்.
பாடப்புத்தகங்களில் ஒன்றிய அரசு என மாற்றுவதை கைவிடுக - வானதி சீனிவாசன்
பாடப்புத்தகங்களில் ஒன்றிய அரசு என்று மாற்றம் செய்வதை தமிழக அரசு கைவிட வேண்டும் என, பாஜக தேசிய மகளிரணி செயலாளர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, வானதி சீனிவாசன் இன்று வெளியிட்ட அறிக்கையில், "திமுகவும், அதன் கூட்டணி கட்சி தலைவர்களும்,மத்திய அரசுக்கு 'ஒன்றிய அரசு' என்ற சொல்லையே பயன்படுத்தி வருகின்றனர். 'ரோஜா மலரை' எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் அது 'ரோஜா மலர்' தான். மத்திய அரசை எந்தப் பெயரில் அழைத்தாலும் அரசியலமைப்பு சட்டப்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் குறையப் போவதில்லை.
தங்களின் அரசியல் ஆதாயத்திற்காக, மக்களிடம் பிரிவினை சித்தாந்தத்தை விதைக்கும் உள்நோக்கத்துடன் பயன்படுத்தி வரும் 'ஒன்றிய அரசு' என்ற சொல்லாடலை, பாடப் புத்தகங்களிலும் கொண்டுவர தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக வந்திருக்கும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. பிஞ்சு மனதில் நஞ்சை விதைக்கும் இந்த செயல் கடும் கண்டனத்துக்குரியது.
அரசியலமைப்பு சட்டத்தின்படி, மத்திய அரசுக்கு இருக்கும் அதிகாரங்கள், பொறுப்புகள் பற்றி, தவறாக பள்ளிக் குழந்தைகளுக்கு சொல்லி கொடுப்பது என்பது, அவர்களின் மனதைக் கெடுக்கும் செயல். தங்களிடம் ஆட்சி அதிகாரம் இருக்கிறது என்பதற்காக, தாங்கள் என்ன நினைக்கிறார்களோ அவற்றையெல்லாம் செய்து வருகின்றனர். இது, திமுகவின் அரசியல் அதிகார ஆணவத்தையே காட்டுகிறது.
திமுக அரசாக, திமுகவின் பிரிவினை சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டவர்களுக்கான அரசாக மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கான அரசாக செயல்பட வேண்டும். பாடப்புத்தகங்களில் ஒன்றிய அரசு என்று மாற்றம் செய்வதை கைவிட வேண்டும்" என தெரிவித்துள்ளார்.