இலங்கையில் அரசு எதிர்ப்பு போராட்டத்தில் களம் இறங்கிய இ.தொ.கா
இலங்கையில் ஆளும் அரசின் கூட்டணிக்கு ஆதரவான இலங்கை தொழிலாளர் கட்சியும் அரசுக்கு எதிரான போராட்ட களத்தில் இணைந்திருப்பது பரவலான கவனத்தை ஈர்த்திருக்கிறது. மலையகத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்றன.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
ஜோ மகேஸ்வரன்
'இந்தி ஒருபோதும் தேசிய மொழியாக இல்லை. இருக்கப்போவதும் இல்லை'- சித்தராமையா
இந்தியாவில் இந்தி தேசிய மொழி என்று இந்தி திரைப்பட நடிகர் அஜய் தேவ்கான் கருத்து தெரிவித்தார். இதற்கு கன்னட நடிகர் சுதீப் மறுப்பு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கர்நாடக முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் முத்த தலைவருமான சித்தராமையா இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அதில்“இந்தி ஒருபோதும் நமது தேசிய மொழியாக இருந்ததும் இல்லை; இருக்கப்போவதும் இல்லை" என்று இந்தி நடிகர் அஜய் தேவ்கனின் இந்தி மொழி பற்றிய கருத்துக்கு சித்தராமையா பதில் அளித்துள்ளார்.
தேரோடும் வீதிகளில் புதைவட மின் கம்பிகள் - தமிழ்நாடு மின் துறை அமைச்சர் தகவல்
பட மூலாதாரம், V.Senthilbalaji
இனி வரும் காலங்களில் தேரோட்ட வீதிகளில் உள்ள மின் இணைப்புகள் புதைவட மின் கம்பிகளாக மாற்றப்படும் என்று மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று அவர் கூறுகையில், ''திருவாரூர் உள்ளிட்ட 3 கோயில்களின் தேரோடும் வீதிகளில் மின் இணைப்பை புதைவடமாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது.
தேரோட்டம் நடைபெறும் கோயிலின் தேர் வீதிகளில் மின் இணைப்பு புதைவடத்தில் கொண்டு செல்லப்படும்.'' என்று செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராம திருவிழாவில், சப்பரத்தில். உயர் அழுத்த மின்சார கம்பி உரசி , ஏற்பட்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். இது குறித்து விசாரணை நடத்த வருவாய்த்துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
''இதுதான் கூட்டாட்சித் தத்துவமா ?'' தமிழ்நாடு நிதியமைச்சர் பழநிவேல் தியாகராஜன் கேள்வி
பட மூலாதாரம், P Thiaga Rajan /Twitter
பெட்ரோல், டீசல் மீதான வரியைக் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் குறைக்க வேண்டும் என்று பிரதமர் மோதி நேற்று கூறியிருந்தார். இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று விளக்கம் அளித்தார்.
அதைத் தொடர்ந்து நிதியமைச்சர் பிடிஆர் பழநிவேல் தியாகராஜன் பேசுகையில், ''பெட்ரோல், டீசல் விலை அதிகரித்தால், பண வீக்கம் ஏற்படும். பொருளாதாரத்தை, சாமானிய மக்களை பாதிக்கும். திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்துள்ளோம். ஒருபோதும் வாட் வரியை உயர்த்தியதில்லை.'' என்றார்.
மேலும், ''கடந்த 8 ஆண்டுகளில் பெட்ரோல் மீதான வரியை 3 மடங்கு, 200 சதவீதம் ஒன்றிய அரசு உயர்த்தியுள்ளது. டீசல் மீதான வரியை 7 மடங்கு உயர்த்தியுள்ளனர். தமிழ்நாடு அரசு 50 சதவீதம் தான் உயர்த்தியுள்ளது. ஆனால், ஒன்றிய அரசு 300 சதவீதம் உயர்த்தியுள்ளது.'' என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், '' மாநில அரசு வரியை குறைக்கவில்லை என்பது சரியல்ல. ஒன்றிய அரசு குறைப்பதற்கு முன்பாக தமிழ்நாடு அரசு விலையை குறைத்தது.'' என்றார்.
கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராக யார் செயல்படுவது ? என்று கேள்வி எழுப்பிய அவர், "ஒரு காலத்தில் ஒரு ரூபாய் வரி தமிழ்நாட்டிலிருந்து மத்திய அரசுக்குப் போனால், 60 பைசா திரும்ப வந்துகொண்டிருந்தது. இன்று 35 பைசாதான் திரும்பக் கிடைக்கிறது. இந்த 35 பைசாவையும் பல்வேறு திட்டங்களுக்காக செலவழிக்கச் சொல்கிறார்கள்.
இதுதான் கூட்டாட்சித் தத்துவமா?
மாநில அரசின் முழு நிதியில் செயல்படும் மருத்துவ கல்லூரியில் என் (ஒன்றிய அரசு) சட்டத்தின்படிதான் தேர்வு, சேர்க்கை நடத்த வேண்டும் என்பதுதான் கூட்டாட்சி தத்துவமா? யார் கூட்டாட்சித் தத்துவத்தை முறையாக பின்பற்றுகிறார்கள் என்று மக்கள் கேட்க வேண்டும்.'' என்றார்.
உதயநிதி ஸ்டாலின் வெற்றிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி: காரணம் என்ன?
பட மூலாதாரம், Udhay/Twitter
சென்னை, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப்பேரவை தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
தமிழ்நாட்டில் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் தி.மு.க சார்பாக போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றார். இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ம.க வேட்பாளர் கசாலியை விட 69,000 வாக்குகள் அதிகம் பெற்றார்.
இந்த வெற்றியை எதிர்த்து தேசிய மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிட்ட எம்.எல்.ரவி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு கடந்த பிப்ரவரி மாதம் விசாரணைக்கு வந்தபோது,
உதயநிதி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, 'மனுத்தாக்கல் செய்தபோது வைப்புத் தொகையை செலுத்தாததன் அடிப்படையில் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்' எனக் குறிப்பிட்டார்.
இதையடுத்து, வைப்புத் தொகை செலுத்தாமல் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை வாபஸ் பெற அனுமதி மறுத்ததுடன், உதயநிதிக்கு எதிரான வழக்கினையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
அதேநேரம், சேப்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த பிரேமலதா என்ற வாக்காளர், வேட்புமனுவில், தன் மீதான வழக்குகள் குறித்து தவறான தகவல்களை உதயநிதி தெரிவித்துள்ளதாக வழக்கு தொடர்ந்தார்.
இதனை நிராகரிக்குமாறு உதயநிதி தரப்பிலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பாரதிதாசன், 'தனக்கு எதிரான வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாத நிலையில், அந்த வழக்குகள் நீதிமன்றத்துக்கு வராத நிலையில், தன்மீதான 22 வழக்குகள் குறித்து உதயநிதி ஸ்டாலின் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்' எனத் தெரிவித்தார்.
மேலும், 'தேர்தல் வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு உரிய ஆதாரத்தை மனுதாரர் சமர்ப்பிக்கவில்லை' எனக் கூறி மனுவினை தள்ளுபடி செய்தார்.
ஸ்ரீரங்கம் கோயில் நாளை தேரோட்டம் : வழக்கத்தை விட கூடுதல் பாதுகாப்பு - மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள் ஆய்வு
பட மூலாதாரம், TN DIPR
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் தேர்த் திருவிழா நாளை நடைபெறுகிறது. இதையடுத்து, தேர் செல்லும் பாதைகளை மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் இன்று நேரில் ஆய்வு செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர்கள் மாரிமுத்து, செல்வராஜ் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சிவராசு செய்தியாளர்களிடம் கூறுகையில், "தஞ்சாவூர் கோயில் திருவிழாவில் விபத்து ஏற்பட்டதால், எந்தவிதமான சிறு அசம்பாவிதமும் நடந்து விடக்கூடாது என்பதற்காக ஸ்ரீரங்கத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதை நேரில் பார்வையிட்டுள்ளோம்.'' என்றார்.
' கொரோனா 4வது அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது மூன்றாவது அலை போல்தான் இருக்கும். ஆனால், பரவல் விகிதம் அதிகமாக இருக்கும். மக்கள் விழிப்புடன் பங்கேற்க வேண்டும். அனைவரும் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.'' என்று வலியுறுத்தினார்.
திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் கூறுகையில், ''கடந்த ஆண்டை விட கூடுதலாக 400 போலீசார் என ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மக்கள் பாதுகாப்பாக சுவாமி தரிசனம் செய்ய கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன'.'' என்றார்.
தொடர்ந்து இணைந்திருங்கள்
வணக்கம்.
நான் ஜோ மகேஸ்வரன். இதுவரை நந்தினி வெள்ளைச்சாமி வழங்கிய நேரலைப் பக்கத்தை இனி நான் தொகுத்து வழங்குகிறேன்.
தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.
குறிப்பாக, யுக்ரேன் மற்றும் இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.
வந்துகொண்டிருக்கும் செய்தி, பெட்ரோல், டீசல் விலை: பிரதமர் பேச்சு முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்று உள்ளது - முதல்வர் ஸ்டாலின்
பட மூலாதாரம், FACEBOOK/M.K.STALIN
பெட்ரோல், டீசல் விலை உயர்வு விவகாரத்தில், முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் பிரதமர் மோதி பேசியிருப்பதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோதி நேற்று "கடந்த நவம்பர் மாதம் பெட்ரோலியப் பொருள்கள் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்தது. மாநிலங்களையும் குறைக்கச் சொல்லி மத்திய அரசு கேட்டுக்கொண்டது.
ஆனால், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், கேரளம், ஜார்கண்ட், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் மதிப்புக் கூட்டு வரியை குறைத்து மக்களுக்கு ஆதாயம் செய்ய வேண்டும்" என பேசியிருந்தார்.
இந்நிலையில், இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று அளித்த விளக்கத்தில், "பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதற்கு ஒன்றிய அரசு எடுத்த முயற்சிகளுக்கு சில மாநிலங்கள் ஒத்துழைக்கவில்லை என்றும், இந்த பொருட்களின் மீது மாநில அரசு விதிக்கக்கூடிய வரிகளை மாநில அரசுகள் குறைக்காததன் காரணமாகத்தான் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை குறைக்க முடியவில்லை என்றும், பிரதமர் நேற்று குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்.
இதனை பற்றி நான் ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்று சொன்னால், முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல், அவர் இந்த கருத்தை எடுத்துச் சொல்லியிருக்கிறார்" என தெரிவித்தார்.
கொடநாடு வழக்கு - அதிமுக பிரமுகர் சஜீவனின் சகோதரரிடம் விசாரணை
பட மூலாதாரம், SIBI/Facebook
படக்குறிப்பு, சிபி
கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக, அதிமுக பிரமுகர் சஜீவனின் சகோதரர் சிபியிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு இல்லத்தில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை வழக்கை நீலகிரி காவல்துறையின் சிறப்புப் புலனாய்வு குழு விசாரித்து வருகிறது.
இந்த வழக்கின் விசாரணை தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சசிகலாவிடம் சென்னையிலும் முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி உள்ளிட்ட அதிமுக பிரமுகர்களிடம் கோவையிலும் பல கட்டமாக விசாரணை நடைபெற்றது.
கோவையில் கடந்த இரண்டு நாட்களாக அதிமுக பிரமுகர் சஜீவனிடம் கொடநாடு வழக்கு சம்பந்தமாக விசாரணை நடத்தப்பட்டது.
இன்று சஜீவனின் சகோதரர் சிபியிடம் மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
'நமது ஆட்சி' என முதல்வர் சொல்வது சட்டப்பேரவையில் பிரதிபலிக்க வேண்டும் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
பட மூலாதாரம், ANBIL MAHESH POYYAMOZHI
'நமது ஆட்சி' என முதல்வர் சொல்வது சட்டப்பேரவையிலும் பிரதிபலிக்க வேண்டும் என, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் அருகே உள்ள களிமேடு கிராமத்தில் நேற்று தேரோட்டத்தின்போது தேரில் உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து 2 சிறுவர்கள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
இந்நிலையில், இன்று சட்டப்பேரவையில் இச்சம்பவம் தொடர்பாக பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நேரில் சென்று ஆறுதல் கூறினார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு என்னென்ன சிகிச்சைகள் வழங்கவேண்டுமோ அதனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். நடந்ததற்கு காரணம் எதுவாக இருந்தாலும் அதனை உடனடியாக சரிசெய்ய எல்லா முயற்சிகளையும் எடுப்போம் என, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். உடனடியாக ஒருநபர் விசாரணை குழுவும் அமைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் அரசியல் பார்க்க வேண்டாம் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட கிராமத்தின் ஊராட்சி மன்ற தலைவர் அதிமுகவை சேர்ந்தவர், ஒன்றிய குழு கவுன்சிலர் பாஜகவை சார்ந்தவர், மாவட்ட கவுன்சிலர் திமுகவை சேர்ந்தவர். இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து நேற்று பணியாற்றினார்கள்.
"நமது ஆட்சி" என முதலமைச்சர் கூறுவது களத்தில் பிரதிபதிலிக்கிறது, சட்டப்பேரவையிலும் அது பிரதிபலிக்க வேண்டும் என வேண்டுகோளாக தெரிவிக்கிறேன்" என தெரிவித்தார்.
அனைத்து வர்த்தகங்களையும் ரஷ்யா ஆயுதமாக கருதுகிறது - யுக்ரேன் அதிபர்
பட மூலாதாரம், President's Office of Ukraine
யுக்ரேன் அதிபர் வொலொடிமிர் ஸெலென்ஸ்கி நேற்றிரவு ஆற்றிய உரையில் ஐரோப்பிய நாடுகளை அச்சுறுத்த எரிசக்தியை ஒரு ஆயுதமாக ரஷ்யா பயன்படுத்துவதாக தெரிவித்தார்.
போலாந்து மற்றும் பல்கேரியா ஆகிய நாடுகளுக்கு எரிவாயு விநியோகத்தை தடை செய்யும் ரஷ்யாவின் முடிவு, "ஐரோப்பாவில் உள்ள யாரும் ரஷ்யாவுடன் இயல்பான பொருளாதார ஒத்துழைப்பை பேண முடியாது" என்பதை உணர்த்துவதாக ஸெலென்ஸ்கி தெரிவித்தார்.
"எரிவாயுவை மட்டுமல்லாமல் எந்தவொரு வர்த்தகத்தையும் ரஷ்யா ஆயுதமாக கருதுகிறது. தன்னுடன் வர்த்தகம் புரியும் மற்ற பகுதிகளுக்கு எதிர்வினையாற்றும் தருணத்திற்காக ரஷ்யா காத்துக்கொண்டிருக்கிறது" என தெரிவித்தார்.
"ஒன்றிணைந்த ஐரோப்பாவை ரஷ்யா இலக்காக கருதுகிறது" என தெரிவித்த அவர், வர்த்தகத்திற்காக ரஷ்யாவைச் சார்ந்திருக்க முடியாது என்று ஐரோப்பிய கண்டத்தில் உள்ள அனைவரும் எந்தளவுக்கு விரைவில் ஒப்புக்கொள்கிறார்களோ, அந்தளவுக்கு விரைவில் ஸ்திரத்தன்மை ஏற்படும் என தெரிவித்தார்.
யுக்ரேனின் ஏற்றுமதிக்கான வரிகளை நிறுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒப்பந்தத்தையும் வரவேற்றுள்ள அவர், ரஷ்யா உலகளாவிய சந்தைகளில், குறிப்பாக உணவுப்பொருட்கள் சந்தையில் குழப்பத்தை உருவாக்க விரும்புகிறது என தெரிவித்தார்.
"யுக்ரேனிய ஏற்றுமதிகள் சந்தைகளை உறுதிப்படுத்தவும் நெருக்கடியின் போது நாட்டின் பொருளாதாரத்தை ஆதரிக்கவும் உதவும்" என்று அவர் கூறினார்.
சீனாவுக்காக இந்தியாவை எதிர்க்குமா ரஷ்யா?
கேரளாவில் இருந்து கழிவு மீன்களை ஏற்றி வந்த கண்டெய்னர் லாரிகள் சிறைபிடிப்பு
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் கேரளாவில் இருந்து கழிவு மீன்களை ஏற்றி வந்த கண்டெய்னர் லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
நேற்று நள்ளிரவு தக்கலை வழியாக நாகர்கோவில் நோக்கி வந்த கேரள பதிவெண் கொண்ட 2 கண்டெய்னர் லாரிகள் அதிக துர்நாற்றத்துடன் செல்வதை கண்ட அப்பகுதி பொதுமக்கள், அந்த இரண்டு லாரிகளையும் தடுத்து நிறுத்தி சிறைபிடித்து ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தக்கலை போலீசார், லாரி ஓட்டுநர் அஜிஸ் மற்றும் ராஜ் ஆகியோரிடம் விசாரணை நடத்தியதில் அந்த கண்டெய்னர் லாரிகள் இரண்டும் கேரள மாநிலம் கொல்லம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கழிவு மீன்களை ஏற்றிக்கொண்டு தூத்துக்குடி வாகைகுளம் பகுதிக்கு கொண்டு செல்வதற்காக வந்ததும் கழிவு மீன் என்பதால் வாகனத்தில் இருந்து கழிவுநீர் சாலையில் கொட்டி துர்நாற்றம் வீசுவதும் தெரியவந்தது.
இதனையடுத்து தக்கலை போலீசார் அந்த வாகனங்களின் மீது கழிவு மீன்களை ஏற்றி சட்ட விரோதமாக தமிழகத்தில் நுழைந்ததாக வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்து மீண்டும் கேரளாவுக்கு அனுப்பி வைத்தனர்.
சுங்கக்கட்டணம் கேட்டு லாரி பம்பரில் ஏறிய ஊழியர்: அப்படியே 10 கி.மீ. இயக்கிய ஓட்டுநர் - வைரலாகும் வீடியோ
பட மூலாதாரம், GETTY IMAGES
சுங்கக்கட்டணம் கேட்டு நிற்காத லாரி முன்பு தொற்றிச்சென்ற சுங்கச்சாவடி அலுவலரை, அப்படியே 10 கி.மீ லாரியை ஓட்டுநர் இயக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து, 'தினத்தந்தி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை நெருக்கடி: சுற்றுலாத் துறையின் நிலை என்ன? போராட்டங்களால் பலவீனமாகிறதா?
கட்டுரை தகவல்
எழுதியவர், எம். மணிகண்டன்
பதவி, பிபிசி தமிழ்
டாலர் கையிருப்பு குறைந்து, பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, விலைவாசி உயர்ந்துவிட்டதால், இலங்கையில் போராட்டங்கள் நடக்கின்றன. ஆனால் போராட்டங்கள் காரணமாகவே டாலர் வரத்து மேலும் குறையக்கூடும் என்ற அச்சமும் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சரிவடைந்திருப்பதே இதற்குக் காரணம்.
இலங்கையில் இருந்து மேலும் 2 இலங்கை தமிழர்கள் ராமேஸ்வரம் வந்துள்ளனர்.
இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி, உணவு பற்றாக்குறை, கடுமையான விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் இலங்கையில் உயிர் வாழ முடியாத இலங்கை தமிழர்கள், தமிழகம் நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், இன்று ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை அடுத்த புதுக்குடி கடற்கரையில் இலங்கையில் இருந்து படகு மூலம் இரண்டு பேர் வந்திருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, மெரைன் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது யாழ்ப்பாணம் மாவட்டம் குருநகர் பகுதியை சேர்ந்த சீலன் மற்றும் அருள்ராஜ் என இருவர் அகதிகளாக வந்திருப்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து அவர்கள் இருவரையும் மெரைன் போலீசார் தொண்டி மெரைன் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுவரை இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் 22ஆம் தேதி முதல் இன்று வரை 77 பேர் அகதிகளாக வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் விசாரணைக்கு பின் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வணக்கம் நேயர்களே!
நான் நந்தினி வெள்ளைச்சாமி. பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன்.
தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் நிகழ்வுகள், விளையாட்டு, சினிமா, அரசியல் உள்ளிட்ட பல்துறை செய்திகள் ஆகியவற்றை இந்த நேரலைப் பக்கத்தில் வழங்குகிறோம்.
குறிப்பாக, யுக்ரேன் மற்றும் இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.
நேற்றைய நேரலை பக்கத்திலிருந்து முக்கியமான செய்திகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்:
தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கியதில் இரண்டு சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
யாரோ இருவரால் மொத்த நாடும் பாதிக்கப்பட்டுள்ளது என, இலங்கையின் முன்னாள் அமைச்சரும், கிரிக்கெட் முன்னாள் கேப்டனுமான அர்ஜூன ரணதுங்க பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிபத்து ஏற்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் திருவிழா விபத்து குறித்தும் ஆராயவும் விபத்துகளை தடுக்கும் வழிகாட்டுதலை வழங்கவும் ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
பேரறிவாளன் விடுதலை: ''அமைச்சரவை முடிவிற்கு எதிராக ஆளுநர் செயல்பட்டால் கூட்டாட்சியைப் பாதிக்கும்' - உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டின் 17வது பறவைகள் சரணாலயமாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நஞ்சராயன் குளம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்தனர். அந்த கிராமத்திற்கு சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
இந்தியா முழுவதும் நீட் பயிற்சி என்ற பெயரில் , ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் கொள்ளை அடித்து வருகின்றனர் என்று முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தேசவிரோதம் தொடர்பான பிரிவு அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணாக உள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசு ஒரு வாரத்தில் பதில் தர உச்ச நீதிமன்றம் கேட்டுள்ளது.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகமோ, சூழ்ச்சியோ இல்லை. இயற்கையாகத் தான் இறந்திருப்பார் என்று சிவகங்கை எம்.பி கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா - யுக்ரேன் அதிபர்கள் ராஜீய ரீதியிலான பேச்சுவார்த்தைக்கு துருக்கி முயற்சி எடுத்தது. ஆனால், யுக்ரேன் போர் குறித்து எந்த உடன்பாடும் ஏற்படவில்லை என்று யுக்ரேன் அதிபரின் உதவியாளர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று மொத்தம் 1367 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பெட்ரோலியப் பொருட்கள் மீது "தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் மதிப்புக்கூட்டு வரியை குறைத்து மக்களுக்கு உதவ வேண்டும்" - பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் கேஸ் விநியோகம் ரத்து என்பது மிரட்டல் நடவடிக்கை என்று ஐரோப்பிய ஒன்றிய தலைவர் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் களிமேடு கிராமத்தை பார்வையிட்ட பின்னர் முதலமைச்சர் கூறுகையில், ' துயரத்திலும் அரசியல் செய்ய நினைக்கிறார்கள்'' என்று தெரிவித்துள்ளார்.