சென்னை, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப்பேரவை தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
தமிழ்நாட்டில் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் தி.மு.க சார்பாக போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றார். இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ம.க வேட்பாளர் கசாலியை விட 69,000 வாக்குகள் அதிகம் பெற்றார்.
இந்த வெற்றியை எதிர்த்து தேசிய மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிட்ட எம்.எல்.ரவி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு கடந்த பிப்ரவரி மாதம் விசாரணைக்கு வந்தபோது,
உதயநிதி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, 'மனுத்தாக்கல் செய்தபோது வைப்புத் தொகையை செலுத்தாததன் அடிப்படையில் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்' எனக் குறிப்பிட்டார்.
இதையடுத்து, வைப்புத் தொகை செலுத்தாமல் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை வாபஸ் பெற அனுமதி மறுத்ததுடன், உதயநிதிக்கு எதிரான வழக்கினையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
அதேநேரம், சேப்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த பிரேமலதா என்ற வாக்காளர், வேட்புமனுவில், தன் மீதான வழக்குகள் குறித்து தவறான தகவல்களை உதயநிதி தெரிவித்துள்ளதாக வழக்கு தொடர்ந்தார்.
இதனை நிராகரிக்குமாறு உதயநிதி தரப்பிலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பாரதிதாசன், 'தனக்கு எதிரான வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாத நிலையில், அந்த வழக்குகள் நீதிமன்றத்துக்கு வராத நிலையில், தன்மீதான 22 வழக்குகள் குறித்து உதயநிதி ஸ்டாலின் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்' எனத் தெரிவித்தார்.
மேலும், 'தேர்தல் வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு உரிய ஆதாரத்தை மனுதாரர் சமர்ப்பிக்கவில்லை' எனக் கூறி மனுவினை தள்ளுபடி செய்தார்.