நாளொன்றுக்கு 72,000 மெட்ரிக் டன் நிலக்கரி வழங்குவதை உறுதி செய்திடுக - பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

பட மூலாதாரம், FACEBOOK/M.K.STALIN
தமிழகத்தில் தடையில்லா மின் விநியோகத்தைப் பராமரித்திட, எரிபொருள் வழங்கல் ஒப்பந்தத்தின்படி, பாரதீப் மற்றும் விசாகப்பட்டினம் துறைமுகங்களில் நாளொன்றுக்கு 72,000 மெட்ரிக் டன் நிலக்கரி வழங்குவதை உறுதி செய்திட நிலக்கரி அமைச்சகத்திற்கு உத்தரவிடுமாறு கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், தமிழ்நாட்டின் தொழிற்சாலைகளுக்கு 72,000 மெட்ரிக் டன் நிலக்கரி தேவைப்படும் நிலையில், தற்போது தினசரி நிலக்கரி வரத்து 50,000 மெட்ரிக் டன்கள் அளவுக்கு மட்டுமே உள்ளது என்று முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரயில்களில் ரேக்குகளின் பற்றாக்குறை காரணமாக, நிலக்கரி துறைமுகங்களுக்குக் கொண்டு செல்லப்படுவதில்லை என்று தமக்குத் தெரிய வந்துள்ளதாகவும், இதன் விளைவாக, தமிழகத்தில் மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி இருப்பு கவலை கொள்ளத்தக்க அளவுக்கு எட்டியுள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பாரதீப் மற்றும் விசாகப்பட்டினம் துறைமுகங்களுக்கு 72,000 மெட்ரிக் டன் நிலக்கரியை எடுத்துச் செல்ல 22 ரயில்வே ரேக்குகள் தேவைப்படுகின்றன என்றும், இருப்பினும், ஒரு நாளைக்கு சராசரியாக 14 ரேக்குகள் மட்டுமே தற்போது ரயில்வேயால் வழங்கப்படுகின்றன என்றும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், உள்நாட்டு நிலக்கரிப் பற்றாக்குறை காரணமாக, அதிக விலை கொடுத்து நிலக்கரியை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, பாரதீப் மற்றும் விசாகப்பட்டினம் துறைமுகங்களில், எரிபொருள் வழங்கல் ஒப்பந்தத்தின்படி, நாளொன்றுக்கு 72,000 மெட்ரிக் டன் நிலக்கரி வழங்குவதை உறுதி செய்திட நிலக்கரி அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும் என அவர் கோரியுள்ளார்.








