ஏழு பேர் விடுதலை: குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பிய கோப்பு - தமிழ்நாடு அரசு புதிய தகவல்

எழுவர் விடுதலை தொடர்பான கோப்புகளை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

நந்தினி வெள்ளைச்சாமி

  1. நன்றி நேயர்களே

    இன்றைய நேரலை இத்துடன் முடிவடைகிறது.

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்குமுகப்பு பக்கம்செல்லவும்.

    பிபிசி தமிழின்பேஃஸ்புக்,ட்விட்டர்,இன்ஸ்டாகிராம்,யூடியூப்பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

    இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்:

    • யுக்ரேனின் மேரியோபோலை கைப்பற்றியதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
    • யுக்ரேனின் மேரியுபோலில் உள்ள அசோவ்ஸ்டாலை விட்டு பொதுமக்களும் காயம் அடைந்தவர்களும் வெளியேற மனிதாபிமான பாதை அமைக்க வேண்டும் என்று ரஷ்யாவிடம் யுக்ரேன் துணை பிரதமர் ஐரினா வெரேஷ்சுக் கோரிக்கை விடுத்துள்ளார்.
    • பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.
    • சர்வதேச நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளில் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கைக்கு பக்கபலமாக இருப்பதாக இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்திருக்கிறார்.
    • ஆப்கானிஸ்தானில் இன்று நான்கு குண்டுவெடிப்புகளில் டஜன் கணக்கிலானோர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் உள்ளூர் அதிகாரிகள் மற்றும் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
    • டெல்லி ஜஹாங்கிர்புரியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற விதிக்கப்பட்ட தடை மறு உத்தரவு வரும் வரை தொடரும் என்று உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.
    • கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் வி.கே.சசிகலாவிடம் மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
    • எழுவர் விடுதலை தொடர்பான கோப்புகளை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
    • சென்னை ஐஐடியில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • சென்னைக்கு அருகே பிரம்மாண்ட விளையாட்டு நகரம் அமைக்கப்படும் என, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
  2. தொடர்ச்சியாக மின்துண்டிப்பு - மின்வாரிய அலுவலகத்தில் தகராறில் ஈடுபட்ட கும்பல்

    மின்வாரிய அலுவலகம்

    திருவள்ளூர் அருகே முன்னறிவிப்பின்றி பல இடங்களில் பல மணி நேரம் தொடர்ச்சியாக மின்சாரம் துண்டிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இந்நிலையில், திருவள்ளூர் அடுத்த மணவாள நகர் பகுதியைச் சேர்ந்த ஒரு சிலர் மின்வாரிய அலுவலகத்தில் புகுந்து தொடர் மின்வெட்டுக்கான உரிய காரணம் கேட்டு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    அப்போது அங்கே இருந்த கணினி, மின்விசிறி, நாற்காலி, மேஜைகளை அடித்து நொறுக்கியதோடு, மின்வாரிய பணியாளர் குப்பன் என்பவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. காயமடைந்த பணியாளரை சக ஊழியர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    இதுதொடர்பாக குப்பன் கொடுத்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு நேரில் வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து, தகராறில் ஈடுபட்ட ஐந்து பேர் கொண்ட கும்பலை தேடி வருகிறார்கள்.

  3. சிவகங்கை மாவட்டத்தில் கணவர் இறந்த சோகம் தாளாமல் ஒரு மணிநேரத்தில் மனைவியும் உயிரிழப்பு

    கணவர் - மனைவி உயிரிழப்பு
    படக்குறிப்பு, சக்திவேல் - சரஸ்வதி

    சிவகங்கை மாவட்டத்தில் கணவர் இறந்த சோகம் தாளாமல் ஒரு மணிநேரத்தில் மனைவியும் உயிரிழந்தார்.

    சிவகங்கை மாவட்டம் சோலை நகரை சேர்ந்தவர் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் சக்திவேல். இவருடைய மனைவி சரஸ்வதி. இத்தம்பதியினருக்கு 3 மகன்கள் உள்ள நிலையில், அவர்கள் திருமணமாகி வெளியூரில் வசிப்பதால் தம்பதியினர் இருவரும் தனியாக வசித்து வந்தனர்.

    இந்நிலையில், சக்திவேல் வயது மூப்பின் காரணமாக திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு இன்று உயிரிழந்தார். இதனையடுத்து, உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில், அருகில் உள்ளவர்களும் உறவினர்களும் வரத் தொடங்கிய நிலையில், சோகத்தில் இருந்த மனைவி சரஸ்வதி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

  4. ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு - டஜன் கணக்கிலானோர் உயிரிழப்பு

    ஆப்கானிஸ்தான்

    பட மூலாதாரம், ANADOLU AGENCY VIA GETTY IMAGES

    படக்குறிப்பு, மசார்-இ-ஷெரிப் நகரில் உள்ள ஷியா மசூதி

    ஆப்கானிஸ்தானில் இன்று நான்கு குண்டுவெடிப்புகளில் டஜன் கணக்கிலானோர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் உள்ளூர் அதிகாரிகள் மற்றும் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    மசார்-இ-ஷெரிப் நகரில் உள்ள ஷியா மசூதியில் முதல் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 31 பேர் கொல்லப்பட்டதாகவும், 87 பேர் காயமடைந்ததாகவும் சுகாதார அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

    இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள ஐ.எஸ். அமைப்பு, ஷியா மசூதி வழிபாட்டாளர்களால் நிரம்பியிருந்தபோது, ​​​​பை ஒன்றில் இருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாகக் கூறியுள்ளது.

    ஐ.எஸ் முன்னாள் தலைவர் மற்றும் செய்தித் தொடர்பாளரின் மரணங்களுக்கு "பழிவாங்கும்" உலகளாவிய பிரச்சாரத்தின் ஒரு பகுதி என இந்த தாக்குதல் குறித்து ஐ.எஸ். தெரிவித்துள்ளது.

    மற்ற மூன்று குண்டுவெடிப்புகள் குறித்து ஐ.எஸ். அமைப்பு கூறவில்லை, மேலும், அந்த குண்டுவெடிப்புகளுடன் ஐ.எஸ். அமைப்புக்கு தொடர்பு உள்ளதா என்பதும் தெளிவாக தெரியவில்லை.

    இரண்டாவது குண்டுவெடிப்பானது, குண்டூஸ் பகுதியில் உள்ள காவல்நிலையம் அருகே வாகனம் ஒன்று வெடித்ததன் மூலம் நிகழ்ந்தது. இதில், 4 பேர் உயிரிழந்தனர், 18 பேர் காயமடைந்தனர் என, காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  5. கடனில் சிக்கித் தவிக்கும் இந்திய மாநிலங்கள் 'மினி இலங்கை' ஆக மாறும் ஆபத்தா?

  6. இலங்கையின் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் பிபிசி தமிழ் நேரலை

    இலங்கையின் தற்போதைய நிலவரம் குறித்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும் இலங்கையின் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவுடன் பேட்டி. நேரலை.

  7. காயம் காரணமாக சிஎஸ்கே அணியிலிருந்து ஆடம் மில்னே விலகல்

    காயம் காரணமாக சிஎஸ்கே அணியிலிருந்து ஆடம் மில்னே விலகியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக 19 வயதான பந்து வீச்சாளர் மதீஷா பதிரானா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் - ஆடம் ஆல்னே
  8. தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 5 யூனிட்களிலும் மின் உற்பத்தி

    தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 5 யூனிட்களிலும் தற்போது மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

    தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 80 ஆயிரம் டன் நிலக்கரி கையிருப்பு உள்ளது. சூரிய மின்சக்தி உற்பத்தி அதிகரிப்பின் காரணமாக, பகல் நேரங்களில் குறைந்த அளவு மின் உற்பத்தியும், மாலை நேரங்களில் முழுவீச்சில் மின் உற்பத்தியும் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இன்று காலையில் 3 யூனிட்களில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு, 2 யூனிட்களில் தலா 210 மெகாவாட் வீதம் 420 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

    இந்நிலையில், இன்று மாலையில் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 5 யூனிட்களிலும் தலா 210 மெகாவாட் வீதம் மொத்தம் 500 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது என, தூத்துக்குடி அனல்மின் நிலைய தலைமைப் பொறியாளர் கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார்.

  9. மாமல்லபுர கடற்கரையில் ஒதுங்கிய பழங்காலத்து கற்சிற்பங்கள்

    மாமல்லபுரம்

    மாமல்லபுரத்தில் கடற்கரையில் ஒதுங்கிய பழங்காலத்து கற்சிற்பங்களை சுற்றுலா பயணிகள் கண்டுவியந்தனர்.

    செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கடற்கரை கோயிலுக்கு வடக்கு பகுதியில் கடலோரத்தில் இன்று மாலை கடல் உள்வாங்கியது. அப்போது பழங்காலத்து கோயில் கற்கலசம், தூண்கள், செங்கற்கள் போன்றவை கடற்கரையில் ஒதுங்கின.

    இதுகுறித்து, மாமல்லபுரம் தொல்லியல்துறை அலுவலகத்தில் கேட்டபோது, "7-ம் நூற்றான்டில் மாமல்லபுரத்தை ஆட்சி செய்த மன்னர் பராங்குசன் 7 கோயில்கள் கட்டியதாகவும் அதில் ஒன்று 108 திவ்யதேசங்களில் 63வது திவ்யதேசமான ஸ்தலசயன பெருமாள் கோயில் எனவும், 6 கோயில்கள் கடலில் மூழ்கியதாகவும் கூறப்படுகிறது.

    தற்போது இந்த கலசங்கள், தூண்கள், செங்கற்களை பார்க்கும்போது சுற்றுச்சுவர் கட்டடம் போன்றும் தெரிகிறது. கோயிலை பாதுகாக்க போடப்பட்ட சேதமடைந்த கற்கள் போன்றும் தெரிகிறது.

    கடற்கரையில் தற்போது ஒதுங்கி இருப்பது பழங்கால கோயில்தான் என உறுதியாக இப்போது கூறமுடியாது. தொல்பொருள் ஆய்வாளர்கள் மற்றும் சென்னை பல்கலைக்கழகத்தில் இருந்து கட்டடக்கலை பேராசிரியர் கொண்ட ஆய்வுக்குழுவினர் வந்து கலசத்தை ஆய்வு செய்த பின்னர் கோயிலா? சுற்றுச்சுவரா? என தெரியவரும்" என தெரிவித்ததார்.

  10. சென்னை ஐஐடியில் 12 பேருக்கு கொரோனா - முகக்கவசம் அணிய ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

    ராதாகிருஷ்ணன்

    பட மூலாதாரம், FACEBOOK

    சென்னை ஐஐடியில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதையடுத்து, இன்று சென்னை ஐஐடியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரடியாக ஆய்வு செய்தார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "முகக்கவசம் கட்டாயம் இல்லை என தமிழ்நாடு அரசு எப்போதும் கருத்து வெளியிடவே இல்லை. ஆனால், அவ்வாறு தமிழ்நாடு அரசு சொன்னதாக தவறான புரிதல் இருக்கிறது.

    பொது இடங்களுக்கு செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். யாருக்காவது கொரோனா அறிகுறிகள் இருந்தால் அவர்களை பரிசோதிக்க அறிவுறுத்தியிருக்கிறோம்.

    பரிசோதனைகளை குறைக்கக் கூடாது என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். மாவட்ட ஆட்சியர்களுக்கும் 6 அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறோம். பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம், தடுப்பூசி செலுத்துதல் உள்ளிட்ட அறிவுரைகளை வழங்கியிருக்கிறோம். ஆர்.டி-பி.சி.ஆர் பரிசோதனைகளை அதிகரிக்க வலியுறுத்தியிருக்கிறோம்.

    சென்னை ஐஐடியில் 12 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது படிப்படியாக உயரும் நிலை உள்ளது. இந்த எண்ணிக்கை படிப்படியாக 50-ஐ தாண்டுவதற்கு கூட வாய்ப்புள்ளது. பதற்றப்பட வேண்டிய செய்தி அல்ல இது.

    முகக்கவசம் அணியாமல் இருப்பது, கைகளை கழுவாமல் இருப்பதுதான் கவலைக்குரியது. இது தொடர்ந்தால் டெல்லி போன்ற நிலைமை தமிழ்நாட்டிலும் ஏற்படும்" என தெரிவித்தார்.

  11. கடும் விலையேற்றம், உணவுக்கு தட்டுப்பாடு – யுக்ரேன் போரால் ஏற்பட போகும் பேரழிவு

  12. வரலாறு: ஹிட்லரை ஏமாற்றி தோற்கடித்த பேய்ப் படையும், தந்திரக் கலைஞர்களும்

      • எழுதியவர், மேத்யூ வில்சன்
      • பதவி, பிபிசி கல்சர்
    ஹிட்லர் வரலாறு

    பட மூலாதாரம், GETTY IMAGES

    வரலாற்றில் ஆர்வமுள்ளவரா நீங்கள்? அப்படியென்றால், ஹிட்லரை ஏமாற்றி தோற்கடித்த பேய்ப் படையும், தந்திரக் கலைஞர்களும் குறித்த இந்த சுவாரஸ்ய கட்டுரையை படியுங்கள்.

    இரண்டு உலகப் போர்களிலும் மாயத் தோற்றங்களை உருவாக்க கலைஞர்கள் பயன்படுத்தப்பட்டனர். நேச நாடுகளை வெற்றிக்கு இட்டுச் செல்ல உதவிய "ஏமாற்று வேலைகளில்" ஒரு உருமறைப்புப் பிரிவும், 'பேய்ப் படையும்' பயன்படுத்தப்பட்டன.

  13. போரிஸ் ஜான்சன் - மோதி சந்திப்பு: ஏன் இரு நாடுகளிலும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது?

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  14. எழுவர் விடுதலை: குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பிய கோப்பு - தமிழ்நாடு அரசு புதிய தகவல்

    எழுவர் விடுதலை

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஏழு பேர் விடுதலை தொடர்பாக ஆளுநரின் ஒப்புதலுக்குக் காத்திருக்காமல் விடுதலை செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதுதொடர்பான கோப்புகளை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் சிறைத்தண்டனை கைதிகளாக உள்ள பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய ஏழு பேரை விடுதலை செய்வது தொடர்பாக, கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாடு அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது. இந்தத் தீர்மானத்தை ஆளுநரின் ஒப்புதலுக்கும் அனுப்பி வைத்தது.

    இதன்பேரில் ஆளுநர் எந்த முடிவும் எடுக்காததால், சிறையில் தன்னை சட்டவிரோதமாக அடைத்துள்ளதாக, தன்னை விடுதலை செய்ய வேண்டும் எனக்கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி மனுத்தாக்கல் செய்திருந்தார். இதே கோரிக்கையை வலியுறுத்தி ரவிச்சந்திரனும் மனுத்தாக்கல் செய்தார்.

    கடந்த மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டதால் இரு வாரங்களுக்கு இந்த வழக்கு தள்ளிவைக்கப்பட்டது.

    இந்தநிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, எழுவர் விடுதலை தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் தேதி குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்துள்ளதாக தமிழ்நாடு அரசின் அட்வகேட் ஜெனரல் தெரிவித்தார்.

    தமிழ்நாடு அரசுத் தரப்பு வழக்கறிஞர், "ஏழு பேர் விடுதலை தொடர்பான கோப்புகள் அனைத்தும் ஜனவரி 27 ஆம் தேதி குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டுவிட்டது" என்றார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நளினி தரப்பு வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், "ஏழு பேரின் மரண தண்டனை என்பது உச்ச நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது. அரசு தன்னை விடுதலை செய்வதற்கு முடிவெடுத்த நிலையில் அதற்கு வாய்ப்பு வழங்காமல் சிறையில் சட்டவிரோதமாக சிறையில் வைத்திருக்கிறது. நளினி மீது தடா பிரிவின்கீழ் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துவிட்டதால் அமைச்சரவை தீர்மானம் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு முழு அதிகாரம் உள்ளது. குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டியதில்லை" எனத் தெரிவித்தார்.

    இதையடுத்து, "தடா சட்டப் பிரிவுகளின்கீழ் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் இருந்து நளினி விடுதலை செய்யப்பட்டுள்ளாரா?" என நளினி தரப்பு வரும் 25 ஆம் தேதி விளக்கமளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

  15. உணவகங்களில் அதிகம் வழங்கப்படும் பாஸா மீன்: சாப்பிட்டால் ஆபத்தா?

  16. கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு: சசிகலாவிடம் தனிப்படை போலீசார் விசாரணை

    சசிகலா

    பட மூலாதாரம், GETTY IMAGES

    கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் வி.கே.சசிகலாவிடம் மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

    இந்த வழக்கு தொடர்பாக, சயான், வாளையார் மனோஜ், ஜிதின் ஜாய், பிஜின், தீபு, சதீசன், சந்தோஷ்சாமி உள்பட பத்து பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது வரையில் 103 பேருக்கும் மேல் விசாரணை நடைபெற்றுள்ளது. தொடர்ந்து கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் உள்பட சிலரிடம் விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு கோவை கவுண்டம்பாளையம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ வி.சி.ஆறுக்குட்டியிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். அவரிடம் ஓட்டுநர் கனகராஜ் குறித்தும் கொள்ளைச் சம்பவம் குறித்தும் சுமார் 5 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது.

    இதன்தொடர்ச்சியாக, சென்னையில் வைத்து வி.கே.சசிகலாவிடம் மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். சென்னை தியாகராய நகரில் சசிகலா வசித்து வரும் வீட்டில் வைத்து இந்த விசாரணை நடைபெற்றுள்ளது.

    அப்போது, கோடநாட்டில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான விலையுயர்ந்த பொருள்கள் குறித்தும் காணாமல் போன பொருள்கள் குறித்தும் பல்வேறு கேள்விகளை எழுப்பியதாகக் கூறப்படுகிறது. மேலும், எஸ்டேட் பணியாளர்கள், அவர்களின் செயல்பாடுகள், கொள்ளைச் சம்பவத்துக்கான காரணங்கள் குறித்த கேள்விகளுக்கும் அவர் பதில் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

    இதுதொடர்பாக, காவல்துறை தரப்பில் இருந்தோ சசிகலா தரப்பில் இருந்தோ அதிகாரபூர்வ தகவல்கள் வெளிவரவில்லை.

  17. இலங்கை ஈஸ்டர் தாக்குதல்: 3 ஆண்டுகளுக்கு பிறகு என்ன நிலைமை?

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  18. சென்னைக்கு அருகே பிரம்மாண்ட விளையாட்டு நகரம் அமைக்கப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    பட மூலாதாரம், FACEBOOK/M.K.STALIN

    சென்னைக்கு அருகே பிரம்மாண்ட விளையாட்டு நகரம் அமைக்கப்படும் என, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    சட்டப்பேரவையில் இன்று விதி எண்: 110-ன்கீழ் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு துறை தொடர்பான பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

    அப்போது பேசிய முதலமைச்சர், "தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், ஒலிம்பிக் உள்ளிட்ட பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் மற்ற சர்வதேச அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றிவாகை சூட ஏதுவாக, பல்வேறு விளையாட்டுகளுக்காக உலகதரத்திலான விளையாட்டு கட்டமைப்புகளை ஏற்படுத்த சென்னைக்கு அருகே பிரம்மாண்டமான விளையாட்டு நகரம், 'மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி' அமைக்க அனைத்து விதமான நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.

    இதன்மூலம் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள், சர்வதேச தரத்திலான பயிற்சிகளை மேற்கொண்டு, வெற்றிவாகையை சூடுவார்கள்.

    ஒலிம்பிக் போன்ற பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வெல்லும் வாய்ப்புகளை ஏற்படுத்த தமிழ்நாட்டின் நான்கு மண்டலங்களில் தலா 1 வீதம் 4 ஒலிம்பிக் அகாடமிகள் அமைக்க அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.

    மாநிலம் முழுவதிலும் விளையாட்டு பயிற்சிகள் மற்றும் அதற்கான வசதிகளை ஏற்படுத்தவிருக்கிறோம்" என தெரிவித்தார்.

  19. உண்மையை ஒருபோதும் சிறைவைக்க முடியாது - ராகுல் காந்தி

    "உண்மையை ஒருபோதும் சிறைவைக்க முடியாது" என்று ராகுல் காந்தி ட்வீட். ஆர்.எஸ்.எஸ். குறித்து ட்விட்டரில் பதிவிட்ட குஜராத் எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானி கைது செய்யப்பட்டதைக் குறிப்பிட்டு ராகுல் காந்தி பதிவு

    ராகுல் காந்தி
  20. கோவை மாநகராட்சிக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ்

    குப்பை கிடங்கு

    பட மூலாதாரம், Bbc

    கோவை மாவட்டம் வெள்ளலூரில் மாநகராட்சியின் குப்பை கிடங்கு இயங்கி வருகிறது. இங்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு பணியில் ஈடுபட்டிருந்த சிவகாமி என்பவர் உயிரிழந்தார்.

    இந்த நிலையில், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை என புகார் எழுந்தது.

    இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக பெறப்பட்டுள்ள புகாருக்கு கோவை மாநகராட்சி 15 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    இந்த நோட்டீஸ் மீது உரிய காலத்தில் பதில் அளிக்கவில்லை என்றால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நேரில் ஆஜராக உத்தரவிடுவோம் எனவும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தெரிவித்துள்ளது.