தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக போராட்டம் - 89 பேர் மீது வழக்குப்பதிவு

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக, 89 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

நந்தினி வெள்ளைச்சாமி

  1. விசா இல்லாமல் தமிழகத்தில் சுற்றித் திரிந்த அமெரிக்க முதியவர்

    அமெரிக்க முதியவர்

    விசா இல்லாமல் தமிழகத்தில் சுற்றித் திரிந்த அமெரிக்க முதியவரை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    நெல்லை மாவட்டம் உவரி சுற்றுலா தளமாகும். இங்கு சுமார் 60 வயதுடைய வெளிநாட்டு முதியவர் ஒருவர், கடந்த 2 தினங்களாக சுற்றித் திரிவதாக பொதுமக்கள் உவரி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    இதனடிப்படையில், உவரி போலீசார் உவரி சோதனைச்சாவடியில் வைத்து அந்த வெளிநாட்டு முதியவரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் பெயர் வெரிட் என்ற ஸ்பெக்சட் என்பதும் அவர் அமெரிக்காவைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது.

    அமெரிக்க முதியவர்

    இவர் கடந்த மார்ச் மாதம் 10ம் தேதி சுற்றுலா விசாவில் டெல்லிக்கு வந்து பின் மும்பை வழியாக ஒவ்வொரு இடமாக சுற்றி பார்த்து விட்டு தமிழகம் வந்திருக்கிறார். தனது விசா காலம் மார்ச் 31ம் தேதி முடிவடைந்த நிலையில், அவர் தொடர்ந்து இன்று வரை ஒவ்வொரு சுற்றுலா தலமாக சுற்றி திரிந்தது தெரிய வந்தது.

    இந்நிலையில் உவரி போலீசார் அமெரிக்க தூதரகத்தை தொடர்பு கொண்டு முதியவரை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர்.

  2. ஆளுநருக்கு பாதுகாப்பான வேறு இடத்தை ஒதுக்க வேண்டும் - வன்னி அரசு

    “ஆளுநரை கிண்டி இல்லத்திலிருந்து வெளியேற்றி, பாதுகாப்பான வேறு இடத்தை ஒதுக்க வேண்டும்” - விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வன்னி அரசின் இந்த கருத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்பதை பிபிசி தமிழின் இந்த பதிவுக்கு சென்று தெரிவியுங்கள்:

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  3. மோசடி வழக்கு - அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜா நீதிமன்றத்தில் சரண்

    முன்னாள் அமைச்சர் சரோஜா

    மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜா ராசிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதுப்பாளையம் சாலையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கூட்டுறவு சங்க மேலாளர் குணசீலன். இவர் அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜாவின் அண்ணன் மருமகன். இவர் கடந்த செப்.30ம் தேதி ராசிபுரம் காவல்நிலையத்தில் சரோஜா மீது பண மோசடி செய்ததாக புகார் மனு அளித்தார்.

    அந்த புகாரில், "சத்துணவு திட்டத்துறையில் வேலை வாங்கித் தருவதாக 15 பேர் தன்னிடம் ரூ.76.50 லட்சம் பணம் அளித்தனர். அந்த தொகையை அமைச்சர் சரோஜாவிடம் வழங்கினேன். எனினும், அவர் வேலை எதுவும் வாங்கித் தரவில்லை" என குறிப்பிட்டிருந்தார். இதுதொடர்பாக நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு சரோஜா மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

    இதனைத் தொடர்ந்து சரோஜா தலைமறைவாகி விட்டதாக தகவல் வெளியானது. பின்னர் நாமக்கல் நீதிமன்றத்திலும் பின்னர் சென்னை உயர் நீதிமன்றத்திலும் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

    இதையடுத்து சரோஜா தரப்பில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், சரோஜா மீதும், அவருடைய கணவர் மீதும் மோசடி புகார் கூறிய குணசீலனுக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த ஜன.26ல் குணசீலன் உயிரிழந்தார். குணசீலன், ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு திமுகவில் இணைந்து செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு சரோஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிமன்றம், ராசிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீன் பெறும்படி உத்தரவிட்டது. இதன்பேரில் சரோஜா இன்று ராசிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் பிணைத் தொகை ரூ. 25 லட்சத்துடன் சரணடைந்தார்.

  4. கோடநாடு கொலை வழக்கு - சசிகலா ஆஜராக காவல்துறை சம்மன்

    சசிகலா

    பட மூலாதாரம், GETTY IMAGES

    கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக, சசிகலா ஆஜராக காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

    தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு இல்லத்தில் நிகழ்ந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கை நீலகிரி காவல்துறையின் சிறப்பு புலனாய்வு குழு ஐந்து தனிப் படைகளை அமைத்து விசாரணை நடத்தி வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக, சமீபத்தில் கோவையில் முன்னாள் அதிமுக எம்எல்ஏ ஆறுகுட்டி உள்ளிட்ட பலரிடம் மூன்று நாட்கள் தொடர் விசாரணை நடைபெற்றது. அதற்கு முன்பாக சசிகலாவின் உறவினர் விவேக்கிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தியிருந்தது.

    இந்நிலையில், சசிகலாவிடம் விசாரணைக்கு ஆஜராக காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. நாளை (ஏப். 21) காலை 10 மணிக்கு சென்னையில் உள்ள சசிகலாவின் இல்லத்தில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த இருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  5. தெர்மாகோலில் கடலுக்குள் சென்று மீன்பிடிக்கும் மீனவர்கள்

    டீசல் விலை உயர்வால் பெரிய சிக்கல் இல்லை; கட்டுமரமும் தேவையில்லை - தனியே தெர்மாகோலில் கடலுக்குள் சென்று மீன்பிடிக்கும் மீனவர்கள்

  6. மண்ணச்சநல்லூர் அரசு பொது மருத்துவமனையில் அழுகிய நிலையில் பெண் சடலம்

    அழுகிய நிலையில் பெண் சடலம்

    மண்ணச்சநல்லூர் அரசு பொது மருத்துவமனை அறுவை சிகிச்சை கூடத்தில் அழுகிய நிலையில் பெண் சடலம் கிடந்தது குறித்து காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர்.

    திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அரசு பொது மருத்துவமனையில் மேல்தளத்தில் அறுவை சிகிச்சைக்கூடம் உள்ளிட்ட பல்வேறு அறைகள் உள்ளன. இந்த அறுவை சிகிச்சை கூடத்தில் இருந்து பயங்கர துர்நாற்றம் வீசியுள்ளது.

    இதனைத்தொடர்ந்து மருத்துவமனை ஊழியர்கள் அங்கு சென்று திறந்து பார்த்த பொழுது அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்த அறுவை சிகிச்சைக் கூடத்தில் 50 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் கிடந்துள்ளது.

    இதுகுறித்து, மண்ணச்சநல்லூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார் அந்த பெண் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அரசு மருத்துவமனை அறுவை சிகிச்சைக்கூடத்தில் ஒரு பெண் சடலம் கிடப்பது கூட தெரியாமல், அழுகி போய் துர்நாற்றம் வீசும் அளவுக்கு இத்தனை நாட்கள் கிடந்தது எப்படி?

    இவ்வாறு மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும் அலட்சியமாக இருந்தது குறித்தும், யார் இதற்கு பொறுப்பு என்பது குறித்தும் மருத்துவ துறை சார்பில் விசாரணை நடைபெற்று வருகிறது.

  7. வந்துகொண்டிருக்கும் செய்தி, இலங்கை ஜனாதிபதி பதவி விலக தயார் - சபாநாயகர் கூறியதாக தகவல்

    கோட்டாபய ராஜபக்ச

    இலங்கை நாடாளுமன்றத்திலுள்ள கட்சித் தலைவர்கள் அனுமதி வழங்குவார்களாயின், ஜனாதிபதி பதவி விலக தயார் என, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, கட்சித் தலைவர் கூட்டத்தில் கூறியதாக, எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

    நாடாளுமன்ற அமர்வில் இன்று (ஏப். 20) கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, கட்சித் தலைவர்களை அழைக்குமாறும், தமது கட்சி அதற்கு அனுமதி வழங்குவதாகவும் அவர் கூறினார் .

  8. டெல்லியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி - நீட் விலக்கு மசோதா, பாதுகாப்பு குளறுபடி விவகாரமா?

  9. ஒரு தமிழரின் புதிய முயற்சி - தவிட்டை வைத்து இத்தனை பொருள் செய்ய முடியுமா?

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  10. காங்கிரஸ் கட்சியை திமுகவுக்கு அடமானம் வைத்துவிட்டார்களா? - அண்ணாமலை

    அண்ணாமலை

    காங்கிரஸ் கட்சியை திமுகவுக்கு அடமானம் வைத்துவிட்டார்களா என, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

    ஆளுநருக்கு எதிரான கருப்பு கொடி போராட்டம் குறித்து, இன்று கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "ஆளுநர் தமிழ்நாட்டுக்கு வரும்போது கண்ணை மூடிக்கொண்டு எதுவும் தெரியாமல் எதிர்த்தவர்களுள் ஒருவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி. ஆளுநர் தமிழ்நாட்டுக்கு வந்தார். கிட்டத்தட்ட 7-8 மாதங்களாக அவர் செயல்களை பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

    ஆளுநருக்கு எதிரான போராட்டத்தை கே.எஸ்.அழகிரி எப்படி நியாயப்படுத்துகிறார்? நெருக்கடி காலகட்டத்திற்கு பின் இந்திரா காந்தி முதல்முறையாக தமிழ்நாட்டுக்கு வரும்போது, அவரை கல் எடுத்து அடித்தது யார்? கருப்புக் கொடி காட்டியது யார்? இந்திரா காந்தியின் நெற்றியில் ரத்தம் வழிந்தபோது, 'பெண்களுக்கு மாதந்தோறும் ரத்தம் வருவது சகஜம்தானே' என கூறிய திமுக தலைவர் யார்? இந்த வார்த்தையை சொன்னது வேறு யாரும் அல்ல, அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி.

    வெட்கமே இல்லாமல் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணியில் இருக்கிறது. உங்களுடைய பெருந்தலைவிக்கு அவமானம் ஏற்படுத்திய திமுகவுடன் கூட்டணியில் இருக்கின்றனர். இந்திரா காந்திக்கு எதிரான இந்த சம்பவம் மதுரையில் நடைபெற்றது.

    தமிழ்நாடு ஆளுநருக்கும் இதே மாதிரி நடந்திருக்கும்போது, எப்படி கே.எஸ்.அழகிரியால் பேச முடிகிறது? அப்படியென்றால் காங்கிரஸ் கட்சியை திமுகவுக்கு அடமானம் வைத்துவிட்டார்களா? மொத்தமாக அடமானம் வைத்துவிட்டு வங்கி லாக்கரில் பூட்டிவிட்டார்களா?

    ஒரு தவறை தவறு என்று சொல்வது ஒரு தலைவருக்கு அழகு. இந்திரா காந்திக்கு நடந்த சம்பவத்தை எப்படி நியாயப்படுத்துகிறார்? அன்று நடந்ததுதானே இன்றும் நடந்திருக்கிறது. அப்போதைய திமுக தலைவர் கூறியதை ஆதரிக்கிறீர்களா என கே.எஸ்.அழகிரியிடம் கேளுங்கள்" என தெரிவித்தார்.

  11. பிரதமரை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் - இயக்குநர் பாக்யராஜ்

    பாக்யராஜ் - மோதி
  12. வந்துகொண்டிருக்கும் செய்தி, ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம் - சட்டப்பேரவையில் முதலமைச்சர் விளக்கம்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    படக்குறிப்பு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - கோப்புப்படம்

    ஆளுநருக்கு எதிரான கருப்பு கொடி போராட்டம் குறித்து, சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.

    நேற்று மயிலாடுதுறை மாவட்டத்தில் தருமபுரம் ஆதீனத்தை சந்தித்துவிட்டு திரும்பும்போது, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம் நடத்தப்பட்டது.

    இந்நிலையில், இன்று ஆளுநருக்கு எதிரான போராட்டத்தைக் கண்டித்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். முன்னதாக, ஆளுநர் காரின் மீது கருப்புக் கொடிகள் வீசப்பட்டதாகக் கூறி, சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.

    இந்நிலையில், ஆளுநருக்கு எதிரான போராட்டம் குறித்து சட்டப்பேரவையில் விளக்கம் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "நேரமில்லா நேரத்தில் கேள்வி எழுப்பிவிட்டு, அதற்கான பதிலை பொறுமையாக இருந்து கேட்காமல் அதிமுகவினர் வெளிநடப்பு செய்துள்ளனர். பதிலை கேட்டுவிட்டு வெளிநடப்பு செய்யட்டும், நான் வேண்டாம் என்று சொல்லவில்லை. அதுதான் மரபு.

    ஆளுநர் தருமபுரம் ஆதீனத்தை சந்திக்க திருக்கடையூர் கோயிலுக்கு சென்றுவிட்டு, அவர் வருகையின்போது நடைபெற்ற போராட்டம் குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, கூடுதல் டிஜிபி (சட்டம் - ஒழுங்கு) தெளிவான அறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆளுநரின் கான்வாய் மீது கற்கள், கொடிகள் வீசியதாக கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை.

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். பின்னர் கைது செய்து வாகனங்களில் ஏற்றினர். ஆளுநர் காரும் அவருடைய பாதுகாப்பு வாகனங்களும் பாதிக்கப்படவில்லை என டிஜிபி விளக்கமளித்துள்ளார்.

    ஆனால், 'இதுதான் நமக்கு சான்ஸ், இதை அரசியலுக்குப் பயன்படுத்த வேண்டும்' என்பது அரசியல் கட்சிகளுக்கு இருப்பது இயல்புதான். எப்போதும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்கள் சேர்ந்துதான் அறிக்கை வெளியிடுவார்கள். ஆனால், இந்த சம்பவத்திற்கான அறிக்கை தனித்தனியே வெளியாகின.

    அதிலே முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 'ஆளுநர் மீதான தாக்குதல் சம்பவத்திற்கு காவல்துறையை கையில் வைத்திருக்கக்கூடிய விடியா அரசின் முதலமைச்சர் என்ன பதில் சொல்லப் போகிறார்' என கேட்டுள்ளார்.

    அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், 'சம்பந்தப்பட்டவர்களை காவல்துறை உடனடியாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறியுள்ளார். இது நியாயமானது.

    போராட்டம் நடத்தியவர்கள் மீது உரிய வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சட்டப்பூர்வ நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றது. மத்திய மண்டல காவல்துறை ஐஜியின் தலைமையில் ஆளுநரின் பாதுகாப்புக்காக 6 எஸ்.பிக்கள் 6 கூடுதல் எஸ்.பிக்கள் 21 டிஎஸ்பிக்கள், 54 ஆய்வாளர்கள், 102 உதவி ஆய்வாளர்கள் 1,120 காவலர்கள் பயன்படுத்தப்பட்டு, அவருடைய பயணம் பாதுகாப்பாக இருந்தது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    ஆளுநருக்கு பாதுகாப்பு அளிப்பதில் இந்த அரசு எந்த சமரசமும் செய்யாது என உறுதியோடு கூறுகிறேன்" என தெரிவித்தார்.

  13. வந்துகொண்டிருக்கும் செய்தி, ஆளுநருக்கு எதிரான கருப்பு கொடி போராட்டம் - அதிமுக வெளிநடப்பு

    எடப்பாடி பழனிசாமி

    பட மூலாதாரம், FACEBOOK

    ஆளுநருக்கு எதிரான கருப்பு கொடி போராட்டத்தைக் கண்டித்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

    நேற்று மயிலாடுதுறை மாவட்டத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சென்றுவிட்டு திரும்பும்போது, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம் நடத்தப்பட்டது.

    இந்நிலையில், இன்று ஆளுநருக்கு எதிரான போராட்டத்தைக் கண்டித்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். முன்னதாக, ஆளுநர் காரின் மீது கருப்புக் கொடிகள் வீசப்பட்டதாகக் கூறி, சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.

    இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, "மயிலாடுதுறை மாவட்டத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான கலைக்கல்லூரியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆளுநர் கலந்துகொண்டு அங்கிருந்து காரில் சென்று கொண்டிருந்தபோது, வழியில் ஒரு சில அரசியல் கட்சிகள், அமைப்புகள் ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

    அச்சமயத்தில் ஆளுநர் கார் மனம்பந்தல் என்ற இடத்தைக் கடந்தபோது, ஆளுநர் கார் மீதும் பாதுகாப்புக்கு சென்ற அதிகாரிகள் கார் மீதும் கற்கள், கம்புகளை வீசியும் தாக்கியுள்ளனர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

    ஆளுநருக்கு எதிராக நூற்றுக்கணக்கானோர் கூடியிருந்தும், முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை எடுக்காமல் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு முன்னின்று காவல்துறையினர் பாதுகாப்பு அளித்தது மிகவும் வருந்தத்தக்கது, கண்டிக்கத்தக்கது. இச்சம்பவம் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது" என தெரிவித்தார்.

  14. வணக்கம் நேயர்களே

    நான் நந்தினி வெள்ளைச்சாமி. பிபிசி தமிழ் நேரலை பக்கத்திற்கு உங்களை வரவேற்கிறோம். இதுவரை விஷ்ணுப்ரியா ராஜசேகர் மற்றும் ஜோ மகேஸ்வரன் வழங்கிய நேரலை செய்திகளை இனி நான் வழங்கவிருக்கிறேன்.

    தமிழ்நாடு, இந்தியா, இலங்கை உள்ளிட்ட உலகளாவிய முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம். யுக்ரேன், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய, இந்தப் பக்கத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள்.

  15. கூவாகம் அழகிப் போட்டியில் முதலிடம் பிடித்த திருநங்கை மனம் திறந்து பேசியது என்ன?

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  16. உ.பி, டெல்லி உள்ளிட்ட 5 மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா

    கொரோனா

    பட மூலாதாரம், Getty Images

    உத்தரபிரதேசம், ஹரியானா, மகாராஷ்ட்டிரா, மிஸோராம் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

    இதையடுத்து கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்துமாறு அம்மாநில அரசுகளை மத்திய சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.

  17. இலங்கை நெருக்கடி: போலீஸ் சுட்டதில் ஒருவர் பலி, பலர் படுகாயம் - எங்கே நடந்தது?

    இலங்கை போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு

    பட மூலாதாரம், EPA

    இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார். 11 பேர் காயமடைந்துள்ளனர்.

    இலங்கையில் நாடு எதிர்கொண்டு வரும் மோசமான பொருளாதார நிலைமையை அரசு கையாளத் தவறியதாகக் கூறி ஏப்ரல் மாத தொடக்கத்தில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் வலுவடைந்தன. இந்த நிலையில், முதல் முறையாக துப்பாக்கி பிரயோகம் மூலம் போராட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் முற்பட்டுள்ளனர்.

    இது குறித்த விரிவான செய்திக்கு இங்கே சொடுக்கவும்

  18. வந்துகொண்டிருக்கும் செய்தி, இலங்கை பிரதமர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம்

    இலங்கை தங்காலை கால்டன் பகுதியில் உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டை முற்றுகையிட்டு, மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    கால்டன் சுற்றுவட்டப் பகுதியில் ஆரம்பமான போராட்டம், பிரதமரின் வீட்டை நோக்கி சென்றுள்ளது. இந்த பகுதியில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

  19. இலங்கையில் இருந்து குழந்தைகளுடன் தனியாக வந்த பெண் - தற்போது வரை 42 பேர் வருகை

    இலங்கை நெருக்கடி - தமிழர்கள் வருகை

    இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் குழந்தைகளுடன் தனியாக பெண் ஒருவர் படகில் தனுஷ்கோடிக்கு வந்துள்ளார்.

    இலங்கையின் கடுமையான பொருளாதார வீழ்ச்சியினால் மக்கள் உணவு, அத்தியாவசிய தேவைகளுக்காக சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இதனால், இலங்கையில் இருந்து தமிழர்கள் 39 பேர் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்து, மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், இன்று அதிகாலை நான்கு வயது சிறுவனுடன் தனி ஒரு பெண்ணாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மேலும் மூன்று பேர் தனுஷ்கோடி வந்துள்ளனர்.

    நேற்று இரவு மட்டக்களப்பு மாவட்டம் திமிலத்தீவு பகுதியை சேர்ந்த வாசினி, அவரது11 வயது மகள் மற்றும் 4 வயது மகன் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் புறப்பட்டு இன்று அதிகாலை சுமார் 3 மணி அளவில் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் இறங்கி உள்ளனர்.

    கடந்த மார்ச் 22ந்தேதி முதல் இன்றுவரை இலங்கையில் இருந்து 42இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக தமிழ்நாடு வந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தனுஷ்கோடி இலங்கைக்கு அருகே உள்ளதால் இலங்கைப் போரின்போது அகதிகளாக தனுஷ்கோடி வழியாக தமிழ்நாட்டுக்கு வந்த இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம்களில் தங்கியுள்ளனர்.

    இதேபோல் தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவுமற்றும் அத்தியாவசிய பொருட்களின் கடும்விலை ஏற்றம் மற்றும் தட்டுப்பாடுகாரணமாக இலங்கைதமிழர்கள் இந்தியாவுக்கு அகதிகளாகவரக்கூடும் என்பதால் சர்வதேசகடல் எல்லைபகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தவேண்டும் என கடலோர பாதுகாப்புகுழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  20. ஆப்கானிஸ்தான் பள்ளியில் குண்டுவெடிப்பு – 6 பேர் உயிரிழப்பு; 20 பேர் காயம்

    காபூல் குண்டு வெடிப்பு

    பட மூலாதாரம், Getty Images

    ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஆண்கள் பள்ளியில் நடைபெற்ற 2 குண்டு வெடிப்புகளில் தற்போது வரை 6 பேர் உயிரிழந்தனர். இருபதிற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    காபூல் நகரின் மேற்கு பகுதியில் ஷியா பிரிவினர் அதிகம் வசிக்கும் பகுதியில் உள்ள ரஹீம் ஷாகிட் உயர்நிலைப்பள்ளியில் இந்த குண்டு வெடிப்பு நடந்துள்ளது. அருகில் உள்ள தனிப்பயிற்சி மையத்தின் மீதும் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

    குண்டு வெடிப்பில் உயிரிழப்பு மற்றும் படுகாயமடைந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த தாக்குதல் சம்பவத்திற்கு தற்போது வரை எந்த அமைப்பும் பொறுபேற்கவில்லை. போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.