தமிழ்நாடு ஆளுநர் ரவி டெல்லி பயணம் - என்ன விஷயம்?

தமிழ்நாட்டில் தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக முறையிட அவர் தலைநகருக்கு வருகிறாரா என்பது இன்னும் தெளிவாகவில்லை.புதன்கிழமை பகல் 1.30 மணியளவில் டெல்லி வரும் ஆளுநர் வியாழக்கிழமை காலையில் மீண்டும் சென்னைக்கு திரும்ப திட்டமிட்டுள்ளார் என்று பிபிசி தமிழ் அறிந்துள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

நந்தினி வெள்ளைச்சாமி

  1. ஜல்லிக்கட்டு போராட்டம்: 23 பேர் விடுதலை - மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு

    ஜல்லிக்கட்டு போராட்டம்
    படக்குறிப்பு, ஜல்லிக்கட்டு போராட்டம் - கோப்புப்படம்

    ஜல்லிக்கட்டுக்கு அனுமதி தரக்கோரி மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கடந்த 2017-ஆம் ஆண்டு மதுரை தத்தனேரி ரயில் பாலத்தில் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட 23 பேரை விடுதலை செய்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    பீட்டா என்ற விலங்கு நல அமைப்பு கோரியதன் அடிப்படையில், கடந்த 2017-ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த மத்திய அரசு தடை விதித்திருந்தது. இதனை எதிர்த்து, தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன.

    மதுரையில் அலங்காநல்லூர், தமுக்கம் பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன. அப்போது, மதுரை தத்தனேரி எல்ஜசி ரயில்வே பாலத்தில் அமர்ந்து 300க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகர்கோவில் பயணிகள் ரயிலை மறித்துப் போராட்டம் நடத்தினர்.

    காவல்துறை தரப்பில் போராட்டத்தைக் கைவிடக்கோரி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன் காரணமாக நடைபெற்ற கலவரத்தில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி காவல்துறை 23 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களைக் கைது செய்தது.

    இது தொடர்பான வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட குற்றவியல் 4ஆவது நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

    இந்நிலையில், நீதிபதி நாகலட்சுமி முன்பாக வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது வழக்கில் தொடர்புடைய 23 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். இந்த வழக்கு கடந்த 5 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் 23 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

  2. வந்துகொண்டிருக்கும் செய்தி, நான் ஒன்றும் ரப்பர் ஸ்டாம்ப் ஆளுநர் கிடையாது: தமிழிசை செளந்தரராஜன்

    தமிழிசை செளந்தரராஜன்
    படக்குறிப்பு, தமிழிசை செளந்தரராஜன், தெலங்கானா மாநில ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர்

    சொன்ன இடத்தில் எல்லாம் கையெழுத்து போட நான் ஒன்றும் ரப்பர் ஸ்டாம்ப் ஆளுநர் அல்ல என்று தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

    தெலங்கானா மாநிலத்தில் ஆளும் கே. சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிர சமிதி தலைமையிலான அரசுக்கும் மாநில ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனுக்கும் இடையே இணக்கமற்ற சூழல் நிலவுகிறது.

    இந்த விவகாரத்தில் ஆளும் அரசு தரப்பு தமிழிசை மீது வெளிப்படையாக குற்றம்சாட்டி வரும் வேளையில், அரசியலமைப்பின்படி செயல்பட தான் முற்படும்போது அதை ஆளும் அரசில் உள்ளவர்கள் எதிர்ப்பதாக எதிர்வனையாற்றியிருக்கிறார் தமிழிசை செளந்தரராஜன்.

    இந்த நிலையில், சென்னையில் தனியார் நட்சத்திர விடுதியில் தெலங்கானா ஆளுநராக பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகளும் புதுச்சேரி துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்று ஓராண்டும் நிறைவு பெற்றதை முன்னிட்டு தமிழிசை செளந்தரராஜன் எழுதிய புத்தகம் வெளியீட்டு விழா நடைபெற்றது.

    அதில் தமிழிசை பேசும்போது, தெலங்கானா மாநிலத்தில் அவருக்கு நேர்ந்த சில கசப்பான அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அதன் விவரம்:

    ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர்கள், ஜனநாயக முறைப்படி அல்லாமல் ஆளுநர்கள் அவர்கள் நினைத்ததைத்தான் செய்ய வேண்டும் என நினைப்பது, ஜனநாயகமா சர்வாதிகாரமா எனக்குத் தெரியவில்லை.

    நான் தமிழ்நாட்டைப் பற்றி சொல்லவில்லை. தெலங்கானாவில் நடப்பதைப் பற்றி சொன்னேன். அந்த மாநிலத்தில் நான் எதிர்கொண்ட பிரச்னையே, மாநில அரசு பரிந்துரை செய்த ஒரு நபரை மேலவை உறுப்பினராக நியமிக்கவில்லை என்பதுதான்.

    நான் சொன்னால் கையெழுத்து போட வேண்டியதுதானே என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், நான் அப்படியெல்லாம் சொன்னால் கையெழுத்து போட நான் ஒன்றும் ரப்பர் ஸ்டாம்ப் ஆளுநர் கிடையாது. அரசு பரிந்துரை செய்த நபர் தொடர்பாக நானே சில குறைகளை கண்டறிந்தேன்.

    சேவை பிரிவின்கீழ் அந்த நபரை எம்எல்சி ஆக நியமிக்குமாறு கூறியதை என்னால் ஏற்க முடியாது என்று மாநில அரசிடம் தெரிவித்தேன்.

    அதுதான் அந்த மாநில அரசுக்கும் எனக்கும் இடையே நிலவும் பிரச்னைக்கு அடிப்படை காரணம். ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர்கள், சர்வாதிகாரமாக நடந்து கொண்டு தவறானமாக முன்னுதாரணமாகி விடக்கூடாது.

    நான் மீண்டும் சொல்கிறேன். தெலங்கானாவில் நடந்தவற்றைத்தான் நான் பேசுகிறேன். வேறு எதையும் பேசவில்லை.

    எனவே, கூட்டாஞ்சோறு போல, எல்லோரும் எந்த கட்சியோ, கூட்டணியோ எதுவாக இருந்தாலும் எல்லோரும் ஒன்றாக கூடுவோம். என்னைப் பொறுத்தவரை ஒரேயொரு கொள்கைதான்.

    அது புதுச்சேரி ஆக இருந்தாலும் தமிழ்நாடாக இருந்தாலும் மக்கள் பணி செய்வதே எனது வாழ்க்கை என்று தமிழிசை செளந்தரராஜன் கூறினார்.

  3. தென்னாப்பிரிக்காவில் எல்லோரும் கருப்பாக இருக்கிறார்கள் என்பதால் அவர்கள் திராவிடர்களா? - சீமான்

    "தென்னாப்பிரிக்காவில் எல்லோரும் கருப்பாக இருக்கிறார்கள் என்பதால் அவர்கள் திராவிடர்களா?" - இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் 'கருப்பு திராவிடன்' பதிவு குறித்து சீமான் கருத்து

    சீமான்
  4. ஜம்மு காஷ்மீரில் சாலை விபத்து - தமிழகத்தைச் சேர்ந்த சிஆர்பிஎஃப் வீரர் உயிரிழப்பு

    சிஆர்பிஎஃப் வீரர் உயிரிழப்பு

    பட மூலாதாரம், TN Police

    ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் சிஆர்பிஎஃப் படையினர் சென்ற பேருந்து மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்தார்.

    ஜம்மு காஷ்மீர், ஸ்ரீநகரில் ஏற்பட்ட சாலை விபத்தில் சிஆர்பிஎஃப் படையில் பணிபுரிந்துவந்த தமிழகத்தைச் சேர்ந்த எம்.என்.மணி என்பவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இவர் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ள அதிமஞ்சரைப்பேட்டையை சேர்ந்தவர்.

    தமிழக வீரர் எம்.என்.மணி உள்பட சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற பேருந்து மீது மற்றொரு லாரி மோதி விபத்துக்குள்ளானது. அதில் நிலை தடுமாறி அருகில் இருந்த பெட்ரோல் பங்க்கிற்குள் லாரி புகுந்து விபத்துக்குள்ளாகியது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.

    ஸ்ரீநகரில் ஹைடர்போரா என்ற இடத்தில் ஏற்பட்ட இந்த சாலை விபத்தில் 2 வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் 7 வீரர்கள் சிறு காயங்கள் அடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  5. கூவாகம் அழகிப் போட்டியில் வென்ற மெஹந்தி: "பெற்றோர்கள் கைவிடாமல் எங்களை ஏற்க வேண்டும்"

    மிஸ் கூவாகம்

    விழுப்புரத்தில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான மிஸ் கூவாகம் அழகிப்போட்டியில் சென்னையை சேர்ந்த திருநங்கை முதலிடத்தையும், திருச்சியை சேர்ந்த திருநங்கை இரண்டாம் இடத்தையும், சேலத்தை சேர்ந்த திருநங்கை மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

  6. இந்தி மொழியை கட்டாயப் பாடமாக்கும் சர்ச்சை: வடகிழக்கு மாநிலங்களில் எதிர்ப்பு எப்படி உள்ளது?

  7. தமிழ்நாட்டில் தலித் ஊராட்சித் தலைவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது ஏன்? - கள ஆய்வு

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் பட்டியலின மற்றும் பழங்குடியின ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு மாற்று சமூகத்தினரால் தொடர்ந்து இடையூறுகள் ஏற்படுத்தப்படுவதாகப் புகார் எழுந்தது குறித்து பிபிசி தமிழ் நடத்திய கள ஆய்வு:

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  8. புதிதாக பிறந்த ஆண் குழந்தை உயிரிழப்பு - கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு ஆறுதல் கூறும் ரசிகர்கள்

    கிறிஸ்டியானோ ரொனால்டோ

    பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு புதிதாக பிறந்த ஆண் குழந்தை உயிரிழந்துவிட்டதாக, அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள அவருடைய ரசிகர்கள், ரொனால்டோவுக்கும் அவருடைய மனைவிக்கும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    போர்ச்சுகல் சர்வதேச அணி மற்றும் பிரீமியர் லீகின் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆவார். இவர் கடந்த அக்டோபர் மாதம் தனக்கும் தன் மனைவி ஜார்ஜினா ரோட்ரிக்ஸ்சுக்கும் இரட்டை குழந்தைகள் பிறக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் அறிவித்திருந்தார்.

    இரட்டை குழந்தைகளில் ஒன்று ஆண் குழந்தை மற்றொன்று பெண் குழந்தை.

    இந்நிலையில், புதிதாக பிறந்த ஆண் குழந்தை இறந்துவிட்டதாக, அவர் ட்விட்டரில் அறிவித்துள்ளார். அப்பதிவில், "எங்களுடைய ஆண் குழந்தை இறந்து விட்டது என்பதை ஆழ்ந்த வருத்தத்துடனும் வேதனையுடனும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    எந்த ஒரு பெற்றோருக்கும் இதுவொரு பெரிய வலியை ஏற்படுத்தக்கூடியதாகும். எங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருப்பது மட்டுமே எங்களுக்கு இந்த நேரத்தில் சிறு ஆறுதலையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது.

    எங்களுக்காக அக்கறையுடன் பணியாற்றிய அனைத்து மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

    நாங்கள் இந்த சமயத்தில் மனதளவில் உடைந்து உள்ளோம்.

    இந்த நேரத்தில் எங்களுக்கு பிரைவசி தாருங்கள் என பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

    மேலும், அவருடைய இறந்த ஆண் குழந்தையை குறிப்பிட்டு, "நீ எங்கள் தேவதை. எங்களுடைய அன்பு உனக்கு எப்போதும் உள்ளது" என தெரிவித்துள்ளார்.

  9. இலங்கைக்கு அதிக கடன்களை வழங்கியது யார்? பொருளாதார நெருக்கடி பற்றி 7 வரைபடங்களில் எளிய விளக்கம்

  10. ஆப்கானிஸ்தான்: காபுல் பள்ளியில் குண்டுவெடிப்புகள் - பலர் உயிரிழந்திருக்கலாம் என தகவல்

    ஆப்கானிஸ்தான்

    பட மூலாதாரம், Reuters

    படக்குறிப்பு, பிரதிநிதித்துவப் படம்

    ஆப்கானிஸ்தானின் மேற்கு காபுலில் இன்று, ஏப். 19 அன்று, உயர்நிலைப்பள்ளி ஒன்றில் மூன்று குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததாகவும் இதில் பலர் உயிரிழந்திருக்கலாம் எனவும், ஆப்கன் பாதுகாப்பு மற்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக, ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

    இப்பகுதிக்கு அருகாமையில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர், மத மற்றும் இன சிறுபான்மையினரான ஷியா ஹசாரா சமூகத்தைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள், சன்னி தீவிரவாத குழுக்களால் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாவர்களாவர்.

    "உயர்நிலைப்பள்ளியில் மூன்று குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. ஷியா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இதில் உயிரிழந்துள்ளனர்" என, காபுல் கமாண்டரின் செய்தித்தொடர்பாளர் காலித் ஸத்ரான் தெரிவித்துள்ளார்.

    இந்த தாக்குதலில் குறைந்தது 4 பேர் உயிரிழந்திருக்கலாம் எனவும், 14 பேர் காயமடைந்திருக்கலாம் எனவும், பெயர் தெரிவிக்க விரும்பாத மருத்துவமனை ஒன்றின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர் தெரிவித்துள்ளதாக, ராய்ட்டர்ஸ் முகமை தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு இன்னும் எந்த தீவிரவாத குழுவும் பொறுப்பேற்கவில்லை.

    இதனிடையே, அப்துல் ரஹீம் ஷாஹித் உயர்நிலைப் பள்ளிக்கு அருகில் இத்தாக்குதல் நடைபெற்றுள்ளதாக தெரிவித்துள்ள ஏ.பி. செய்தி முகமை, இத்தாக்குதலில் 7 குழந்தைகள் வரை காயமடைந்திருக்கலாம் என தெரிவித்துள்ளது.

  11. வணக்கம் நேயர்களே

    நான் நந்தினி வெள்ளைச்சாமி. பிபிசி தமிழ் நேரலை பக்கத்திற்கு உங்களை வரவேற்கிறோம். இதுவரை அ.தா.பாலசுப்ரமணியன் மற்றும் ஜோ மகேஸ்வரன் வழங்கிய நேரலை செய்திகளை இனி நான் வழங்கவிருக்கிறேன்.

    தமிழ்நாடு, இந்தியா, இலங்கை உள்ளிட்ட உலகளாவிய முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம். குறிப்பாக, யுக்ரேன் மற்றும் இலங்கையில் இருந்து இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.

  12. மதநிந்தனை புகார்: பாகிஸ்தானில் இலங்கையைச் சேர்ந்தவர் கொல்லப்பட்ட வழக்கு - 6 பேருக்கு மரண தண்டனை

    பாகிஸ்தானில் இலங்கை நபர் படுகொலை வழக்கு தீர்ப்பு

    பட மூலாதாரம், EPA

    பாகிஸ்தானில் கடந்த டிசம்பர் மாதம் மத நிந்தனை செய்ததாக பரவிய தகவலையடுத்து, ஏற்பட்ட கும்பல் வன்முறையில் இலங்கையைச் சேர்ந்த பிரியந்த தியவதனகே (48) என்பவர் கொல்லப்பட்டார்.

    சியால்கோட் நகரில் உள்ள தொழிற்சாலையில் மேலாளராக பணியாற்றிய அவர் வன்முறைக் கும்பலால் தாக்கப்பட்டு, உயிரிழந்தார். பின்னர் சடலத்தை தீ வைத்து எரித்தனர். இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் "அவமானகரமான தினம்" என்று குறிப்பிட்டார்.

    இந்த வழக்கில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட 88 பேரில் 6 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஒன்பது பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு 2 முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    முகமது நபியின் பெயர் கொண்ட சுவரொட்டியை தியவதனகே கிழித்து, மத நிந்தனை செய்ததாக வதந்தி பரவியது. ஆனால், சக ஊழியர்கள் இதை மறுத்தனர். அவர் கட்டட தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தார் என்று தெரிவித்தனர்.

  13. தருமபுரம் ஆதீனத்திற்கு சென்ற ஆளுநருக்கு எதிர்ப்பு - கருப்புக் கொடியை வீசி ஆர்ப்பாட்டம்

    ஆளுநருக்கு எதிராக மன்னம்பந்தலில் போராட்டம்
    படக்குறிப்பு, ஆளுநருக்கு எதிராக மன்னம்பந்தலில் போராட்டம்

    மயிலாடுதுறை அருகே தருமபுரம் ஆதினத்திற்கு ஆளுநர் சென்ற போது பாதுகாப்பு வாகனங்கள் மீது போராட்டக்காரர்கள் கருப்புக் கொடியை வீசி எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள புகழ்பெற்ற அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி வழிபட்டார். அங்கிருந்து புறப்பட்டு தருமபுரம் ஆதீனத்திற்கு ஆளுநர் சென்றார்.

    அப்போது மன்னம்பந்தல் ஏ.வி.சி கல்லூரி அருகே பல்வேறு அமைப்பினர், ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு, போராட்டக்காரர்களை தடுப்புகள் கொண்டு தடுத்து நிறுத்தினர். போராட்டக்காரர்கள், கருப்புக் கொடியை ஏந்தியபடி ஆளுநருக்கு எதிரான வாசகங்களைக் கொண்ட, பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டனர்.

    ஆளுநர் வாகனம் அப்பகுதியை கடந்து செல்லும் போது போராட்டக்காரர்கள் ஆவேசமாக முழக்கமிட்டனர். தொடர்ந்து ஆளுநரின் பாதுகாப்பு வாகனங்கள் மீது போராட்டக்காரர்கள் வைத்திருந்த கருப்புக் கொடியையும், பதாதைகளை வீசினர்.

    இதையடுத்து, காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

    எதிர்ப்புகளுக்கு இடையே தருமபுர ஆதீனம் சென்ற ஆளுநருக்கு பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம் தலைமையில் அக்கட்சியினர் வரவேற்பளித்தனர்.

    தருமபுரம் ஆதீன வாசலில் கவர்னருக்கு பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து தருமபுர ஆதீனத்தின் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளிடம் ஆளுநர் ஆசி பெற்றார்.

    இதையடுத்து தருமபுர ஆதீனத்தில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை ஆளுநர் திறந்து வைத்தார். கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆதீனகர்த்தர் மற்றும் கவர்னர் பங்கேற்று பேசினார்கள். தொடர்ந்து, தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற உள்ள புஷ்கர விழாவில் பங்கேற்பதற்கான யாத்திரையை ஆளுநர் துவக்கி வைத்தார்.

    ஆளுநர் ஆர்.என்.ரவி
  14. வணக்கம் இன்றைய நேரலைப் பக்கத்திற்கு வரவேற்கிறோம்.

    தமிழ்நாடு, இந்தியா, இலங்கை உள்ளிட்ட உலகளாவிய முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம். நேரலைப் பக்கத்தை தொகுத்து வழங்குவது ஜோ மகேஸ்வரன்.

    குறிப்பாக, யுக்ரேன் மற்றும் இலங்கையில் இருந்து இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.

    நேற்றைய முக்கிய நிகழ்வுகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

    • இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றம் மற்றும் தட்டுபாடு நிலவுகிறது.
    • லக்கிம்பூர் வன்முறை வழக்கில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவிற்கு வழங்கப்பட்ட பிணையை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
    • ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் எனக்கும் தனிப்பட்ட விரோதம் ஏதுமில்லை என்றும் தனிப்பட்ட முறையில் அவர் பழகுவதற்கு இனியவர் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
    • மேகாலயாவில் நடந்த கார் விபத்தில், தமிழ்நாட்டை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் உயிரிழந்தார்.
    • இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் புதிய அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.
    • மத்திய அமைச்சர் எல். முருகன் தேவையில்லாமல், திமுகவை வீண் வம்புக்கு இழுக்க வேண்டாம் என, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி தெரிவித்துள்ளார்.
    • டெல்லி ஜஹாங்கிர்புரி வன்முறை தொடர்பாக இதுவரை 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • பன்னாட்டு நிறுவனமான ஆம்வே நிறுவனத்தின் 757 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது.
    • ஸ்வீடனில் குர்ஆன் பிரதிகளை எரிக்கும் தீவிர வலதுசாரி குழுவின் திட்டங்களால் கோபமடைந்த மக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட வன்முறை தொடர்பாக 40க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • இந்திய ராணுவ தலைமை தளபதியாக லெப்டிணன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டேவை நியமித்து இந்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக ஏ.என்.ஐ. செய்தி முகமை தெரிவித்துள்ளது.
    • சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 84வது பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற நிலையில் தமிழ்நாடு அமைச்சர்கள் பங்கேற்கவில்லை.
    • இளையராஜாவின் கருத்து குறித்து யாரும் கருத்து சொல்ல வேண்டாம் என, திமுகவினருக்கு அக்கட்சியின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளதாக, அக்கட்சி இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.
    • யுக்ரேனின் லூவிவ் நகரில் இன்று காலை ரஷ்யப்படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது என, லூவிவ் பிராந்திய தலைவர் மக்ஸிம் கோஸிட்ஸ்கி தெரிவித்துள்ளார்.