சேலத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த பாஜக - விசிகவினர் மோதல்

அம்பேத்கர் பிறந்தநாள் விழாவையொட்டி சேலம் தொங்கும் பூங்கா எதிரே உள்ள அம்பேத்கர் சிலைக்கு இன்று அரசியல் கட்சியினர் உட்பட பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சிலைக்கு அருகே காவல்துறையினர் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. இந்த நிலையில், அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த பாஜகவினர் நீண்ட நேரம் காத்திருந்தனர்.
இதனிடையே, ஊர்வலமாக வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சிலைக்கு மாலை அணிவிக்க சென்றனர். நீண்டநேரம் காத்திருந்த நிலையில் திடீரென வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை காவல்துறையினர் அனுமதித்ததால், பாஜகவினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எதிரெதிர் முழக்கங்களை எழுப்பியதால் இருதரப்பினரிடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அஸ்தம்பட்டி பிரதான சாலையில் பாஜகவினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டது. இரு தரப்பினரையும் காவல்துறையினர் சமாதானப்படுத்தி அழைத்து தனித்தனியாக சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த அனுமதித்தனர்.














