You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

"இலங்கை அரசுக்கு எதிரான போராட்டங்களை கைவிடுங்கள்" மஹிந்த ராஜபக்ஷ

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு காணொளி வாயிலாக சிங்கள மொழியில் உரையாற்றினார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஆ. லட்சுமி காந்த் பாரதி

  1. நன்றி நேயர்களே!

    இன்றைய நேரலை பக்கம் இத்துடன் நிறைவடைகிறது. இதுவரை நடந்த நிகழ்வுகளின் முக்கிய துளிகள் இதோ.

    • யுக்ரேனில் உள்ள குடிமக்களின் பாதுகாப்புக்கும் அந்நாட்டில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை தடையின்றி வழங்குவதற்கும் இந்தியா முக்கியத்துவம் அளித்து வருவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடனான தமது காணொளி சந்திப்பின்போது இந்திய பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.
    • இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு காணொளி வாயிலாக சிங்கள மொழியில் உரையாற்றினார்.
    • பாகிஸ்தானின் 23வது பிரதமராக ஷாபாஸ் ஷெரீஃப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக 174 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
    • சென்னை எண்ணூரில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சுவாச நோய்கள் மிக அதிகமாக உள்ளதாக அறிவியல் ஆய்வில் தகவல்.
    • ரஷ்ய படையெடுப்பால், யுக்ரேனின் தெற்கு நகரமான மேரியோபோலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்
    • இலங்கையில் இருந்து நேற்று அதிகாலை இரண்டு கை குழந்தைகளுடன், ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த மேலும் 19 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடி வந்துள்ளனர்.
    • மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கு தேசிய அளவிலான நுழைவுத் தேர்வினை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனைக் கைவிடக் கோரி சட்டசபையில் தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
    • அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதற்கு எதிராக சசிகலா தொடர்த்த வழக்கு தள்ளுபடி.

    மேலதிகச் செய்திகளுக்குமுகப்புப் பக்கம்செல்லவும்.

    பிபிசி தமிழின் பேஃஸ்புக்,ட்விட்டர்,இன்ஸ்டாகிராம்,யூடியூப்பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் , இந்திய பிரதிநிதி யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு தொடர்பாக கருத்து

    ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற ஐ.நாவுக்கான இந்திாயவின் நிரந்தர பிரதிநிதி டி.எஸ். திருமூர்த்தி, "எந்தவொரு ஆயுத மோதல்கள் அல்லது ராணுவ மோதல் நடந்தாலும் அவற்றில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். யுக்ரேனில் இருந்து வெளிவரும் தகவல்களில் இருந்து, பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிக அளவில் அகதிகளாகவும் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்தவர்களாகவும் உள்ளனர்," என்று கூறியுள்ளார்.

    44 லட்சம் மக்கள் அண்டை நாடுகளுக்கு சென்றுவிட்டதாகவும், 71 லட்சம் மக்கள் யுக்ரேனுக்குள் இடம்பெயர்ந்துள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

    மேலும் இந்திய மாணவர்கள் உட்பட வெளிநாட்டு மாணவர்களையும் யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு பாதித்துள்ளது என்பதையும் மறந்து விடக்கூடாது.

    சுமா் 22500 இந்திய குடிமக்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கு இந்தியா உதவியது, அவர்களில் பெரும்பாலோர் யுக்ரேனில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்கள் என பிரதமர் மோதி தெரிவித்துள்ளார்.

  3. "யுக்ரேனின் புச்சாவ நகரில் அப்பாவி குடிமக்கள் கொல்லப்பட்டதை நாங்கள் கண்டித்தோம்"- பிரதமர் நரேந்திர மோதி

    இந்திய பிரதமர் நரேந்திர மோதி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோர் இன்று காணொளி காட்சி மூலம் சந்தித்து பேசினர்.

    "யுக்ரேன் மற்றும் பிற அண்டை நாடுகளுக்கு மருந்துகள் மற்றும் பிற நிவாரணப் பொருட்களை அனுப்பியுள்ளோம். யுக்ரேன் கோரிக்கையை ஏற்று, விரைவில் மற்றொரு முறையும் மருந்துப் பொருட்களை அனுப்ப உள்ளோம்."

    "யுக்ரேன் மற்றும் ரஷ்யா, இரு நாட்டு அதிபர்களுடனும் நான் பலமுறை தொலைபேசியில் பேசினேன்; அமைதிக்காக அவர்களிடம் வேண்டுகோள் விடுத்தேன். யுக்ரேனின் புச்சாவ நகரில் அப்பாவி குடிமக்கள் கொல்லப்பட்டதை நாங்கள் கண்டித்தோம் மற்றும் பாரபட்சமற்ற விசாரணையைக் கோரினோம்" என அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடனான காணொளியில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி பேசியுள்ளார்.

  4. “மருந்து வாங்க வருவோருக்கு, மரணச் சான்றிதழ் வாங்கும் நிலை” - மருத்துவ நெருக்கடியில் இலங்கை - களத்தில் பிபிசி தமிழ்

  5. இலங்கை நெருக்கடி: மஹிந்த ராஜபக்ஷ மெளனம் கலைந்தார் - காணொளி உரையின் 15 முக்கிய தகவல்கள்

    இலங்கை தற்போது எதிர்கொண்டு வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள இரவு, பகலாக உழைத்து வருவதாக அந்நாட்டுப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

    இந்த விவகாரத்தில் இதுவரை பொதுவெளியில் எந்த கருத்தையும் வெளியிடாமல் தவிர்த்து வந்த இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஏப்ரல் 11ஆம் தேதி இரவு 7.30 மணியளவில் பதிவு செய்யப்பட்ட காணொளியை தமது ஃபேஸ்புக் சமூக ஊடக பக்கம் வாயிலாகவும் ஊடகங்களிடம் பகிர்ந்துள்ளார். அதன் சில முக்கிய அம்சங்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம் முழுமையாக படிக்க இங்கே சொடுக்கவும்

  6. "இலங்கை மிகவும் இக்கட்டான சூழலில் உள்ளது"- மஹிந்த ராஜபக்

    இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு காணொளி வாயிலாக சிங்கள மொழியில் உரையாற்றினார்.

    அப்போது அவர், "தற்போது சாலையில் நடைபெற்றும் போராட்டத்தால் ஒவ்வொரு நொடியும் நாம் பல டாலர்களை இழக்கிறோம்.

    இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள துன்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடும் விலைவாசி உயர்வு, உணவு பொருட்கள், பெட்ரோல், டீசல் பற்றாக்குறை, பல மணி நேரம் மின்சார வினியோகம் தடை ஆகியவற்றால் தவித்து வரும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அரசுக்கு எதிரான போராட்டங்களை மக்கள் கைவிட வேண்டும் விவசாயிகளின் முன்னேற்றத்திற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்க உள்ளோம். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அரசு 24 மணி நேரமும் உழைத்து வருகிறது," என்று பேசினார்.

  7. CUET: தமிழ்நாட்டில் ஸ்டாலின் அரசு பொது நுழைவுத் தேர்வை எதிர்ப்பது ஏன்?

  8. நாடு கடத்தப்பட்டவர் இன்று பாகிஸ்தான் பிரதமராக தேர்வு - யார் இவர்?

  9. பீஸ்ட்: விஜய் அரசியலுக்கு வருவீர்களா? நெல்சன் கேள்விக்கு என்ன பதில் சொன்னார்?

    'பீஸ்ட்' திரைப்படத்திற்காக நடிகர் விஜய் பத்து வருடங்களுக்கு பிறகு தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்திருக்கிறார். பீஸ்ட் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸால் வெளியிடப்பட்ட அந்த பேட்டியில் பேசியிருக்கிறார் விஜய்.

  10. ஷாபாஸ் ஷெரீஃப் பாகிஸ்தான் பிரதமராக தேர்வு - யார் இவர்?

  11. வந்துகொண்டிருக்கும் செய்தி, பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷாபாஸ் ஷெரீஃப் தேர்வு

    பாகிஸ்தானின் 23வது பிரதமராக ஷாபாஸ் ஷெரீஃப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக 174 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

  12. சென்னை எண்ணூரில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சுவாச நோய்கள் மிக அதிகமாக உள்ளதாக அறிவியல் ஆய்வில் தகவல்

    சென்னை எண்ணூர் அனல் மின்நிலைய பகுதியை சுற்றி வசிக்கும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சுவாச நோய்கள் மிக அதிகமாக உள்ளதாக அறிவியல் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த அறிவியல் ஆய்வை சுத்தமான ஆற்றலுக்கான முன்னெடுப்பு (Healthy Energy Initiative, India) மற்றும் எஸ்ஆர்எம் பொது சுகாதார பள்ளி (SRM School of Public Health), எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் முதுகலை பொது சுகாதார மாணவர்கள் நடத்தியுள்ளனர்.

    எண்ணூர் பகுதியில் வசிக்கும் 5 வயதுக்குட்பட்ட 207 குழந்தைகளில் 63%க்கும் அதிகமானோர் ஆய்வுக்கு முந்தைய மாதத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சுவாச அறிகுறிகளை அனுபவித்ததாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்திய அரசின் 2019-2021 ஆம் ஆண்டுக்கான சென்னை மற்றும் திருவள்ளூருக்கான தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்புத் (NFHS) தரவுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆய்வில் குழந்தைகளிடையே சுவாச நோய்த் தொற்று கண்டறியப்பட்டிருப்பது மிக அதிகம். சென்னையைச் சேர்ந்த 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 1.0 சதவீதமும், திருவள்ளூரில் 3.9 சதவீதமும் சுவாச கோளாறு அறிகுறிகள் இருப்பதாக NFHS பதிவு செய்துள்ளது.

    எண்ணூர் பகுதியில் உள்ள குழந்தைகளிடையே 63% பாதிப்பு இருப்பதாக இந்த ஆய்வு பதிவு செய்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  13. சசிகலாவுக்கு எதிராக தீர்ப்பு: இனி அவருக்குள்ள வாய்ப்புகள் என்ன?

  14. இலங்கை தலைநகர் கொழும்பில் தொடரும் போராட்டம்

    இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், தலைநகர் கொழும்பில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் நடத்தி வரும் தொடர் போராட்டங்களில் இன்றும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு ஆளும் அரசுக்கு எதிராக முழக்கமிட்டு வருகின்றனர்.

  15. வந்துகொண்டிருக்கும் செய்தி, இலங்கை மக்களுக்கு இன்று உரையாற்றுகிறார் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

    இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு இன்று இரவு 7.30 மணியளவில் காணொளி வாயிலாக பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் நிலையில், ஆளும் அரசுக்கும் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த அமைச்சுப் பொறுப்புகளில் உள்ளவர்களுக்கு எதிராக மக்கள் நடத்தி வரும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன.

    ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலக வேண்டும் என்றும் பொதுமக்கள் இரவு, பகலாக போராடி வருகின்றனர். இந்த நிலையில், அமைச்சரவையில் சிறிய மாற்றம் செய்த ஜனாதிபதியின் நடவடிக்கை போராட்டக்குழுவினரை சமாதானப்படுத்தவில்லை.

    இத்தகைய சூழலில் பிரதமர் இன்று இரவு 7.30 மணியளவில் நாட்டு மக்களுக்கு உரையாற்றவிருக்கிறார்.

  16. யுக்ரேன் நகர் மேரியோபோலில் ஆயிரக்கணக்கானோர் பலியாகி இருக்கலாம் - வொலோடிமிர் ஸெலென்ஸ்கி

    ரஷ்ய படையெடுப்பால், யுக்ரேனின் தெற்கு நகரமான மேரியோபோலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கியை மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

    தென் கொரிய எம்பிகளுடன் நடந்த காணொளி சந்திப்பில் பேசிய யுக்ரேனிய அதிபர்: "மேரியோபோல் அழிக்கப்பட்டுள்ளது, பல்லாயிரக்கணக்கானோர் இறந்துள்ளனர், இருந்தபோதிலும், ரஷ்யர்கள் தங்கள் தாக்குதலை நிறுத்தவில்லை".

    ரஷ்யாவால் முற்றுகையிடப்பட்ட நகரத்திலிருந்து வெளியேறிய அகதிகள் அங்குள்ள நிலைமையை குறித்து விவரிக்கும் பொழுது, அவநம்பிக்கையான சூழல் நிலவுவதாக கூறியுள்ளனர்.

    மேலும் ஆழமற்ற கல்லறைகளில் புதைக்கப்பட்ட உடல்கள், செச்சென் போராளிகளால் சூறையாடுதல் மற்றும் பட்டினியால் வாடும் குடியிருப்பாளர்கள் தண்ணீருக்காக தங்குமிடங்களை விட்டு வெளியேறும்போது கொல்லப்படுகின்றனர் என்றும் கூறுகின்றனர்.

    பிபிசியால் யுக்ரேனிய அதிபரின் கூற்றை தன்னிச்சையாக சரிபார்க்க முடியவில்லை.

  17. இலங்கையில் இருந்து ஐந்து குடும்பங்களை சேர்ந்த 19 தமிழர்கள் அகதியாக தஞ்சம் கோரி தனுஷ்கோடி வருகை

    இலங்கையில் இருந்து நேற்று அதிகாலை இரண்டு கை குழந்தைகளுடன், ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த மேலும் 19 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடி வந்துள்ளனர்.

    திருகோணமலையை சேர்ந்த 10 பேரில் இரண்டு கை குழந்தைகளும் அடங்குவர். நேற்று இரவு ஒரு பைபர் படகில் மன்னாரில் இருந்து புறப்பட்டு, நேற்று அதிகாலை சுமார் 2 மணி அளவில் தனுஷ்கோடி அரிச்சல்முனை ஒன்றாம் மணல் திட்டில் வந்து இறங்கி உள்ளனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ராமேஸ்வரம் மெரைன் போலீசார் இலங்கை தமிழர்களை மீட்டு மண்டபம் மெரைன் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதே போல், மன்னாரில் இருந்து நேற்று இரவு யாழ்பாணம் மற்றும் மன்னாரை சேர்ந்த 9 பேர் ஒரு பைபர் படகில் மன்னாரில் இருந்து புறப்பட்டு, இன்று அதிகாலை தனுஷ்கோடி வந்து இறங்கி, பின்னர் அரசு பேருந்து மூலம் தானாக மண்டபம் அகதிகள் முகாமிற்கு சென்றனர்.

    இது குறித்து தகவலறிந்த மண்டபம் மெரைன் போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.

    இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக, அத்தியவாசிய பொருட்களின் விலை ஏற்றதால் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம் கோரி வந்தாக அவர்கள் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.

    விசாரணைக்கு பிறகு, 19 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்படுவார்கள் என மெரைன் போலீசார் கூறியுள்ளனர்.

  18. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்தது என்ன?

  19. ஜார்கண்ட் மாநிலத்தின் டியோகர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலம் ஒன்றில், ரோப்கார் ஒன்றோடு ஒன்று மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.