யுக்ரேன் ரயில் நிலைய ஏவுகணைத் தாக்குதலில் குறைந்தது 50 பேர் பலி - ரஷ்யா பொறுப்பேற்க மறுப்பு

யுக்ரேன் கிழக்குப் பகுதியில் ரயில் நிலையம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் குறைந்தது 50 பேர் பலியாகினர். ஆனால், இந்த தாக்குதலை தாங்கள் நடத்தவில்லை என்கிறது ரஷ்யா.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

க. சுபகுணம்

  1. இந்தியா உதவியால், இலங்கையில் அதிகரிக்கும் பெட்ரோல் டீசல் விநியோகம்

    கடந்த 24 மணிநேரத்தில் 36,000 மெட்ரிக் டன் பெட்ரோல் மற்றும் 40,000 மெட்ரிக் டன் டீசல் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்திய உதவியின் கீழ் பல்வேறு வகையான எரிபொருட்களின் மொத்த விநியோகம் இப்போது 270,000 மெட்ரிக் டன் அதிகமாக உள்ளதாக கொழும்புவிலுள்ள இந்திய உயர் ஆணையம் தெரிவித்துள்ளது.

  2. இலங்கை பொருளாதார நெருக்கடி: கொட்டும் மழையில் போராடும் மாணவர்கள்

  3. இலங்கைக்கு உதவ இந்திய உயர் ஆணையம் முடிவு

    இந்தியா இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க முன்வந்துள்ளது. இது இந்தியாவின் மிக நெருங்கிய கடல்சார் அண்டை நாடு என்பதால், அதற்கான உதவிகளை வழங்க முன்வந்துள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர் ஆணையம் தெரிவித்துள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  4. "அதிமுகவின் திட்டங்களை அரசியல் காழ்ப்புணர்ச்சியால் முடக்குவது சரியல்ல" - ஓ.பி.எஸ்

    "அதிமுக அரசு கொண்டு வந்த மக்கள் நலத் திட்டங்களை, திமுக அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியால் முடக்குவது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தை ரத்த்ஹ செய்யும் முடிவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கைவிட வேண்டும்," என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    ஓ.பன்னீர் செல்வம்
  5. யுக்ரேன் படையெடுப்பில் இதுவரை நடந்தது என்ன?

    நீங்கள் இப்போது தான் எங்களுடன் இணைகிறீர்கள் என்றாலோ அல்லது இதுவரை நடந்தவற்றைச் சுருக்கமாக மீண்டுமொரு முறை கவனிக்க நினைத்தாலோ, இதுவரை நடந்தவற்றை இங்குத் தெரிந்துகொள்ளலாம்.

    யுக்ரேனில்

    • வடக்கு யுக்ரேனில் இருந்து ரஷ்ய படைகள்முழுமையாகப் பின்வாங்கியுள்ளனர் என்று பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. டான்பாஸில் சண்டையிட, அந்தப் படைப்பிரிவுகளில் சிலவற்றைக் கிழக்கு நோக்கி நகர்த்துகிறார்கள் என்றும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
    • புச்சாவில் காணப்பட்டதைவிட, மீண்டும் கைப்பற்றப்பட்ட போரோட்யங்கா நகரில் காணப்பட்ட அழிவு மோசமானது என்று யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி கூறியுள்ளார்.
    • பெலாரஸ் செல்லும் வழியில் கீயவின் வடமேற்கே உள்ள கிராமமான ஒபுகோவிச்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள யுக்ரேனிய குடிமக்களை ரஷ்ய படைகள் சுற்றி வளைத்து, அவர்களை மனித கேடயங்களாகப் பயன்படுத்தியதற்கான தெளிவான ஆதாரங்களை பிபிசி கண்டுபிடித்துள்ளது.
    • யுக்ரேனிய படைகள் சிறைபிடிக்கப்பட்ட ரஷ்ய ராணுவ வீரரை சுட்டுக் கொன்றதைக் காட்டும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. பிபிசி அதைச் சரிபார்க்கவும் பகுப்பாயவும் முயன்று வருகிறது.
    • கிழக்கு யுக்ரேனில் தீவிரமான சண்டையின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால், டினிப்ரோவின் மேயர் பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதானவர்களை மத்திய நகரப் பகுதியை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தியுள்ளார்.

    சர்வதேச அரசியல்

    • ஐநா வாக்கெடுப்பில் ரஷ்யா போர்க்குற்றம் செய்ததாகக் கூறப்படுவதால்,மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது. வாக்கெடுப்பில் 93 நாடுகள் அதற்கு ஆதரவாக வாக்களித்தன. ஆனால், பல நாடுகள் எதிராக வாக்களித்தன அல்லது வாக்களிக்காமல் இருந்தன.
    • யுக்ரேன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா பிரஸ்ஸல்ஸில் நடந்த நேட்டோ நாடுகள் கூட்டத்தில், ஆயுதங்களை அதிகமாக வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.

    பிபிசி நேரலையில் இணைந்தமைக்கு நன்றி. மேற்கொண்டு யுக்ரேன் படையெடுப்பு மற்றும் இந்தியா, இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளையும் உள்ளூர் செய்திகளையும் தெரிந்துகொள்ள தொடர்ந்து எங்களுடன் இணைந்திருங்கள்.

  6. படையெடுப்பால் ரஷ்யாவுக்கு அதிக இழப்புகள்: புதினின் செய்தித் தொடர்பாளர் கூறியது என்ன?

    ரஷ்யா தரப்பில் அதிக இழப்புகள்

    பட மூலாதாரம், Getty Images

    யுக்ரேன் படையெடுப்பு 44-வது நாளாகத் தொடர்ந்து வரும் நிலையில், “படைகளின் குறிப்பிடத்தக்க இழப்புகளை” ரஷ்யா ஒப்புக் கொண்டுள்ளது.

    அதிபரின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் பிரிட்டன் சேனலான ஸ்கை நியூஸிடம் இந்த உயிரிழப்புகள் “எங்களுக்குப் பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது” எனக் கூறியுள்ளார்.

    “வரவுள்ள நாட்களில்” ரஷ்யா அதன் போர் இலக்குகளை அடையும் என்று தான் நம்புவதாகவும் அவர் கூறினார்.

    ரஷ்யா கீயவில் இருந்து படைகளைப் பின்வாங்க வைத்து, தனது போரின் பெரும்பகுதி கவனத்தை கிழக்கு யுக்ரேனுக்கு மாற்றியுள்ளது. ஆனால், படையெடுப்பு முடிவடைவதற்கான அறிகுறிகள் தெரியவில்லை.

    ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கவுன்சிலில் இருந்து புதன்கிழமை ரஷ்யா வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து பெஸ்கோவ் இந்தக் கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

  7. கே.ஜி.எஃப் 3-ஆம் பாகம் வருமா? - விளக்கமளித்த நீல் பிரசாந்த்

    கே.ஜி.எஃப் 3-ஆம் பாகம் வருமா? - விளக்கமளித்த நீல் பிரசாந்த்

    பட மூலாதாரம், TWITTER @DREAMWARRIORPIC

    கடந்த 2018ம் ஆண்டு தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் 'கே.ஜி.எஃப்- சாப்டர்-1' படம் வெளியானது. பான் இந்தியா திரைப்படமாக வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை இந்த படம் பெற்றது.

    ராக்கி பாய் கதாப்பாத்திரத்தில் நடிகர் யஷ் இரண்டு வருடங்களுக்கு பின்பு அதன் இரண்டாம் பாகத்தோடு வருகிறார்.

    இந்த இரண்டாம் பாகத்தில் யஷ்ஷூடன் பிரகாஷ் ராஜ், இந்தி நடிகர் சஞ்சய் தத், ரவீனா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். முதல் பாகத்தின் நீட்சியாகவே இரண்டாம் பாகத்தின் கதையும் அமைந்திருக்கிறது.

    இந்த திரைப்படம் இந்த மாதம் 14ம் தேதி இந்தியா முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இந்தப் படத்தின் மூன்றாம் பாகம் வெளியாகுமா?

  8. சேலத்தில் காதலிப்பதாகக் கூறி சிறுமியிடம் பணம் பறித்த இளைஞர் கைது

    சேலத்தில் காதலிப்பதாகக் கூறி சிறுமியை ஆபாசமாக ஒளிப்படம் எடுத்து பணம் பறித்த நபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

    சின்னசேலம் எலவடை பகுதியைச் சேர்ந்த சசிகுமார் என்ற எம்.பி.ஏ பட்டதாரி இளைஞர், சேலம் குகை பகுதியைச் சேர்ந்த உறவினரான 15 வயது சிறுமியை காதலிப்பதாகக் கூறி, சில ஆபாச படங்களை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

    பின்னர் அந்த படங்களைக் காட்டி, அதைச் சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என அந்தச் சிறுமியை மிரட்டி 180,000 ரூபாய் பணம் பறித்துள்ளார்.

    ஒரு கட்டத்தில் குடும்பத்தினருக்கு இது தெரிய வந்ததைத் தொடர்ந்து, சசிகுமாரிடம் பஞ்சாயத்து பேசி பணத்தை மீட்டுள்ளனர்.

    காதலிப்பதாகக் கூறி சிறுமியிடம் பணம் பறித்த இளைஞர் கைது

    இருப்பினும், அதோடு நிற்காத சசிகுமார் சிறுமியை ரகசியமாகச் சந்தித்து ஒரு கைபேசியைக் கொடுத்து, அதன்மூலம் தொடர்பு கொண்டுள்ளார். அதில், சிறுமியின் அந்தரங்க படங்களை அனுப்பி அதை வெளியிடாமல் இருக்க அவசரமாக 50,000 ரூபாயைக் கொடுக்க வேண்டும் என மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

    இது குடும்பத்தினருக்குத் தெரியவரவே, அவர்கள் சேலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    அதன் அடிப்படையில் சசிகுமாரை கைது செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அவருடைய கைபேசி, மடிக்கணினி ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளனர்.

    சசிகுமார் மேலும் பல பெண்களிடம் இதுபோன்று பணம் பறித்துள்ளாரா என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

  9. வணக்கம் நேயர்களே!

    நான் க.சுபகுணம். பிபிசி தமிழின் நேரலை பக்கத்திற்கு உங்களை வரவேற்கிறேன்.

    யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு குறித்த செய்திகள், தமிழகம், இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகள், சினிமா, விளையாட்டு உள்ளிட்ட பல துறைகள் ஆகியவற்றில் நடக்கும் நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    உங்கள் பகுதியின் சுவாரசியமான செய்திகளைப் பற்றிஎங்கள் டிவிட்டர் கணக்கின் மூலம்தகவல் அளியுங்கள்.

  10. இலங்கை: மலையகத்தில் பெரும் போராட்டம்

    இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பதவி விலக வேண்டும் எனவும், அரசாங்கத்திற்கு எதிராகவும் மலையகத்தில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று நேற்று நடத்தப்பட்டடது.

    தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில், இந்த மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டது.

    தலவாக்கலை நகரிற்கு பல்வேறு பகுதிகளிலும் இருந்து பெருந்திரளான மக்கள் வருகைத் தந்து, எதிர்ப்பு கோஷங்களை எழுப்பியிருந்தனர்.

    இதையடுத்து, தலவாக்கலை நகரில் எதிர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

    தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர்களான பழனி திகாம்பரம், வேலுசாமி இராதாகிருஸ்ணன், மயில்வாகனம் உதயகுமார், வேலுகுமார் உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டிருந்தனர்.

    தமிழ் முற்போக்கு கூட்டணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் போராட்டத்திற்கு, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸவும் கலந்துக்கொண்டிருந்தார்.

  11. ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும் - அமித் ஷா

    "அலுவல் மொழியான 'இந்தியை' நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது" என அமித் ஷா தெரிவித்துள்ளார்.

  12. இரண்டு வயது சிறுவனுடன் தனுஷ்கோடி வந்த இலங்கை தமிழர்கள், பிரபுராவ் ஆனந்தன்

    இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அங்கு வசிக்கும்மக்கள் உணவு, அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    இதனால் இலங்கையில் இருந்துநான்கு குடும்பத்தை சேர்ந்த 16 தமிழர்கள் கடந்த மாதம் தமிழகத்திற்கு அகதிகாளாக வந்து மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கபட்டுள்ள நிலையில் இன்று அதிகாலை இரண்டரை வயது சிறுவனுடன் ஒரு குடும்பத்தை சேர்ந்த மேலும்நான்கு இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஸ்கோடி வந்துள்ளனர்.

    நேற்று இரவுமன்னார் மாவட்டம் முத்தரமித்தரை பகுதியை சேர்ந்த கிஷாந்தன் (34), ரஞ்சிதா (29), ஜெனீஸ்டிக்கா (10),மற்றும் இரண்டரை வயது சிறுவன் ஆகாஷ்என ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் ஒரு பைப்பர் படகில் புறப்பட்டு இன்று அதிகாலை சுமார் 2 மணி அளவில் தனுஷ்கோடி அரிசிசல்முனை கடற்கரையில்வந்து இறங்கி உள்ளனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ராமேஸ்வரம் மெரைன் போலீசார்இலங்கைத் தமிழர்களை மீட்டு மண்டபம் மெரைன் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

  13. இலங்கை, பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி: இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

    இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி ஆகியவை இந்தியாவை பாதிக்குமா?

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  14. “புச்சாவை காட்டிலும் போரோட்யங்காவில் நிலைமை மிக மோசமாகவுள்ளது”

    Ukraine

    பட மூலாதாரம், Getty images

    யுக்ரேனின் புச்சா நகரில் பொதுமக்கள் மோசமாக கொல்லப்பட்டிருப்பது குறித்து உலக நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது போரோட்யங்கா என்னும் பகுதியில் அதைவிட மோசமான கொலைகள் நடந்திருப்பதாக யுக்ரேன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

    முகநூல் மூலம் யுக்ரேனிய மக்களுக்கு உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.

    “புச்சாவை காட்டிலும் அங்கு நிலைமை மோசமாகவுள்ளது. ரஷ்ய ஆக்ரமிப்பாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்” என செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

    புச்சா மற்றும் போரோட்யங்கா ஆகிய இரண்டுமே யுக்ரேன் தலைநகர் கீயவின் புறநகர் பகுதிகள். கீயவை கைப்பற்ற அங்கு கடுமையான சண்டைகள் நடந்தன.

  15. வணக்கம் நேயர்களே!

    நேற்றைய பக்கக்திலிருந்து சில முக்கிய நிகழ்வுகள்:

    இன்றைய நேரலை பக்கத்திற்கு உங்களை வரவேற்கிறோம். நேற்றைய பக்கத்திலிருந்து சில முக்கிய நிகழ்வுகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

    • இலங்கையில் கடும் மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், முக்கிய தொழில்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
    • இலங்கை நாடாளுமன்றம் முன்பு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இலங்கைக்கு இந்திய உதவியின்கீழ் மொத்தமாக 2,70,000 மெட்ரிக் டன்னுக்கும் அதிகளவான எரிபொருள் வழங்கப்பட்டுள்ளது என, இந்திய உயர் ஆணையரகம் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
    • இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மை வேண்டும் என, நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அலி சாப்ரி தெரிவித்துள்ளார்.
    • தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு உதவிட வலியுறுத்தினார்.
    • எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 16 பேருக்கு சிறை காவலை நீட்டித்துள்ள இலங்கை நீதிபதி, தலா ரூ.2 கோடி செலுத்தி ஜாமீனில் வெளியே வரலாம் என உத்தரவிட்டுள்ளார்.
    • கீயவ் மற்றும் செர்னிஹிவ் பகுதிகளில் இருந்து ரஷ்யா வெளியேறும் நடவடிக்கை தற்போது நிறைவடைந்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    • யுக்ரேனிய படைகளின் எதிர்தாக்குதலில் இருந்து தங்களை காத்துக்கொள்ள வடக்கு யுக்ரேனில் உள்ள கிராம மக்களை மனித கேடயமாக ரஷ்யப்படையினர் பயன்படுத்தியதாக, பிபிசிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • ரஷ்ய படையினருக்கு எதிராக யுக்ரேன் படையினர் போர் குற்றங்களில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என, யுக்ரேன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
    • மருத்துவ படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட 7.5 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
    • ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யா இடை நீக்கம்.
    • பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது - உச்சநீதிமன்றம்