புதிய கொரோனா திரிபு XE: மும்பையில் உறுதி செய்யப்பட்டதா? - மாறுபட்ட தகவல்

புதிய கொரோனா திரிபு XE, மும்பையில் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அதுகுறித்து மாறுபட்ட தகவல் வெளியாகியுள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

நந்தினி வெள்ளைச்சாமி

  1. மேதா பட்கர் மீது அமலாக்கத்துறை வழக்கு: "நான் அவர்களை எதிர்ப்பதால் களங்கம் கற்பிக்கிறார்கள்"

  2. நன்றி நேயர்களே!

    இன்றைய நேரலை பக்கம் இத்துடன் நிறைவடைகிறது. இதுவரை நடந்த நிகழ்வுகளின் முக்கிய துளிகள் இதோ.

    • இலங்கையில் கடந்த 1-ஆம் தேதி அமலுக்கு வந்த அவசரநிலைச் சட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது
    • இந்தியாவில் பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி 22 யூட்யூப் சேனல்கள் தடை செய்யப்பட்டுள்ளன
    • யுக்ரேனுக்கு 100 மில்லியன் டாலர்களை நிதியுதவியாக அளித்திருக்கிறது அமெரிக்கா
    • யுக்ரேனின் புச்சா நகரில் நடந்த படுகொலைகளுக்கு ஐ.நா. அவையில் இந்தியா கண்டனம் தெரிவித்திருக்கிறது
    • இலங்கையில் எதிர்காலத்தில் கடுமையான உணவு பஞ்சம் ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுகின்றமை குறித்து அனுமானிக்க முடிவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவிக்கின்றார்.
    • மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரி வெளிநாடு சென்றுள்ளதாக தகவல்
    • யுக்ரேனின் புச்சா நகரில் குறைந்தது 320 பேர் ரஷ்யப்படையினரால் கொல்லப்பட்டிருக்கலாம் - மேயர்
    • கொரோனா புதிய திரிபு XE: மும்பையில் உறுதி செய்யப்பட்டதா? மாறுபட்ட தகவல்கள்
    • சொத்து வரி உயர்வை நாங்கள் மனமுவந்து செய்யவில்லை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    • புச்சா நகரில் 25 பெண்கள், சிறுமிகள் ரஷ்யப் படையினரால் வன்புணர்வு: யுக்ரேன் அதிகாரி புகார்

    நாளை வேறொரு நேரலைப் பக்கத்தில் சந்திப்போம். நன்றி.

    இந்த இரவு இனியதாகட்டும்.

  3. இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.15 கோடி மதிப்பிலான போதைப் பொருள் படகுடன் பறிமுதல்

    போதைப்பொருள் பறிமுதல்

    பட மூலாதாரம், Special arrangement

    இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.15 கோடி மதிப்பிலான போதைப் பொருள் படகுடன் பறிமுதல் செய்யப்பட்டது.

    தூத்துக்குடி அருகே முள்ளகாடு கடற்கரைப் பகுதியிலிருந்து இலங்கை வழியாக வளைகுடா நாட்டுக்கு கடத்த இருந்த ரூ.15 கோடி மதிப்பிலான 5 பாக்கெட்டுகளில் தடை செய்யப்பட்ட மெத்தாம்பேட்டமைன் (ஐஸ்) போதைப் பொருள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பைபர் படகுடன் தேசிய வருவாய் புலனாய்வுத் துறையினர் பறிமுதல் செய்து, தப்பியோடிய படகு ஓட்டியை தேடிவருகின்றனர்.

    தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் உள்ளிட்டவை கடல் வழியாக இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் சட்டவிரோதமாகக் கடத்தப்பட்டு வருகின்றன.

    மெரைன் போலீசார், க்யூ பிரிவு போலீசார், மத்திய வருவாய் புலனாய்வுப்பிரிவு அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டும், கடத்தப்படும் போதைப்பொருட்களை பறிமுதல் செய்தும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இருப்பினும், தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் கடத்தப்படுவது தொடர் கதையாக நடந்து வருகிறது.

    இந்த நிலையில், தூத்துக்குடி, முள்ளக்காடு கடற்கரையில் இருந்து படகின் மூலம் போதைப்பொருள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய்ப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில், முள்ளக்காடு கடற்கரையில் சோதனையிட்டனர். அதில், கரையில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு பைபர் படகில் 5 பாக்கெட்டுகளில் தடை செய்யப்பட்ட மெத்தாம்பேட்டமைன் போதைப் பொருள் இருப்பதை கண்டுபிடித்தனர்.

    நிறுத்தப்பட்டிருந்த பைபர் படகில் ஆட்கள் யாரும் இல்லை. 5 கிலோ 600 கிராம் எடையுடைய மெத்தாம்பேட்டமைன் பாக்கெட்டுகளையும், கடத்தலுக்குப் பயன்படுத்திய பைபர் படகினையும் பறிமுதல் செய்துள்ளனர். படகின் உரிமையாளர் மற்றும் கடத்தலில் ஈடுபட முயன்றவர்களை தேடி வருகின்றனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட மெத்தாம்பேட்டமைனின் சர்வதேச மதிப்பு ரூ.15 கோடி என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

  4. மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரி வெளிநாடு சென்றுள்ளதாக தகவல்

    மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரியும், முன்னாள் பிரதியமைச்சருமான நிருபமா ராஜபக்ஷ, வெளிநாடு சென்றுள்ளதாக, குடிவரவு குடியகல்வு திணைக்களத்தை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

    நிருபமா ராஜபக்ஷ நேற்றிரவு 10.25 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து எமிரேட்ஸ் விமானத்தின் மூலம் டுபாய் நோக்கிபயணித்துள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

    பண்டோரா வெளியிட்ட உலகளாவிய ரீதியில் மறைக்கப்பட்ட சொத்துக்கள் அடங்கிய ஆவணங்களில் நிருபமா ராஜபக்ஷவின் பெயரும் உள்ளடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  5. யுக்ரேனின் புச்சா நகரில் குறைந்தது 320 பேர் ரஷ்யப்படையினரால் கொல்லப்பட்டிருக்கலாம் - மேயர்

    யுக்ரேன் புச்சா கொலைகள்

    யுக்ரேனின் புச்சா நகரில் குறைந்தது 320 பேர் ரஷ்யப்படையினரால் கொல்லப்பட்டிருக்கலாம் என, அந்நகர மேயர் தெரிவித்துள்ளார்.

    அந்நகர மேயர் அனடோலி ஃபெடோருக் பிபிசியின் Newshour நிகழ்ச்சியில், தற்போது மீண்டும் யுக்ரேனின் கட்டுப்பாட்டில் உள்ள புச்சா நகரில் ரஷ்யப்படையினரின் போர் குற்றங்கள் குறித்து குற்றச்சாட்டு தெரிவித்தார்,

    அந்நகரம் ரஷ்யப்படையினரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தபோது, தான் ஒரு கட்டடத்தில் பதுங்கியிருந்ததாகவும் அங்கு நடந்த கொலைகளின் நேரடி சாட்சியமாக தான் இருந்ததாகவும் தெரிவித்தார்.

    "ரஷ்யப்படையினரால் குறைந்தது 320 அப்பாவி பொதுமக்கள் சுடப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என தற்போது தெரியவந்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் உயர்ந்து வருகிறது.

    அந்நகர மக்கள் கார் மூலம் அங்கிருந்து தப்பிக்க முயன்றபோது, அவர்கள் "கொடுமையான முறையில் சுடப்பட்டு" கொல்லப்பட்டதை தான் நேரில் பார்த்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

    "அவ்வாறு சுடப்பட்டவர்களுள் கர்ப்பிணியும் ஒருவர். அவரை சுட வேண்டாம் என, அப்பெண்ணின் கணவர் கதறினார். ஆனால், அவர்கள் அப்பெண்ணை கொடுமையான முறையில் சுட்டனர்," என தெரிவித்தார்.

    "இதன்பின், அப்பெண்ணை அவருடைய கணவர் சாலையோரத்தில் புதைத்தார். அவரின் உடலுக்கு மேலே சிலுவைக்கு பதிலாக தன்னுடைய காரின் நம்பர் பிளேட்டை வைத்தார்" என அவர் கூறினார்.

    சாலையில் கொல்லப்பட்ட மக்களின் உடல்கள் இருப்பது குறித்த புகைப்படங்கள் பற்றி பேசிய மேயர், "மக்களின் கைகள் கட்டப்பட்டிருந்தன, மரக்கட்டைகளை அடுக்கி வைத்திருந்தது போன்று, அவர்களின் உடல்கள் ஒருவரின் மேல் ஒருவராக அடுக்கப்பட்டிருந்தன" என விவரித்தார்.

    "அவ்வாறு ரஷ்யப்படையினரால் கொடுமைப்படுத்தப்பட்ட இளம்வயதினர் 5 பேர், அவர்களின் கைகள் முதுகுக்குப் பின்னே கட்டப்பட்டு, அவர்களின் தலையில் சுடப்பட்டனர்," என தெரிவித்தார்.

    இதனிடையே, புச்சா நகரில் தங்கள் படையினர் அத்தகைய கொடுமைகளை இழைக்கவில்லை என, ரஷ்யா மறுத்துள்ளது.

  6. விஜய் நடித்த 'பீஸ்ட்' படத்திற்கு ட்ரைலரை வைத்து தடை கோருவது ஏன்?

  7. வர்த்தக கண்காட்சி முடியும் வேளையில் துபாய் சென்றது ஏன்? - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்

    "வர்த்தக கண்காட்சி முடியும் வேளையில் துபாய் சென்றது ஏன்?" என்ற கேள்விக்கு சட்டப்பேரவையில் பதிலளித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "தமிழ்நாடு வாரம் மாத இறுதியில்தான் கடைபிடிக்கப்பட்டது. கண்காட்சியின் இறுதி வாரங்களில் தான் பெரிய முதலீட்டாளர்கள் கலந்துகொள்வார்கள்" என பதிலளித்தார்.

  8. கொரோனா புதிய திரிபு XE: மும்பையில் உறுதி செய்யப்பட்டதா? மாறுபட்ட தகவல்கள்

    கொரோனா வைரசின் புதிய திரிபான XE மும்பையில் உறுதி செய்யப்பட்டதாக செய்தி வெளியாகியிருந்த நிலையில், மும்பையில் உறுதி செய்யப்பட்டது XE திரிபே அல்ல என்று அதிகாரிகள் கூறியதாக ட்வீட் செய்துள்ளது ஏ.என்.ஐ. செய்தி முகமை.

    இந்தியாவில் முதல் முறையாக மும்பையில் ஒருவருக்கு இந்த திரிபு ஏற்பட்டதாக, மும்பை மாநகராட்சி கூறியதன் அடிப்படையில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

    இந்நிலையில் "தற்போதுள்ள ஆதாரங்களின் அடிப்படையில், அது XE திரிபு என்பது உறுதிப்படுத்தப்படவில்லை" என்று அதிகாரிகள் கூறியதாகத் தெரிவித்துள்ளது ஏ.என்.ஐ. முகமை.

    XE திரிபு என்று கூறப்பட்ட இந்த திரிபின் ஃபாஸ்ட்க்யூ ஃபைல்களை ஆராய்ந்த 'இன்சாகாக்' என்ற கொரோனா வல்லுநர்க் குழு (Indian SARS-CoV-2 Consortium on Genomics) கண்டறியப்பட்ட திரிபின் மரபணு உள்ளடக்கம் XE திரிபின் மரபணுத் தோற்றத்தை ஒத்திருக்கவில்லை என்று கூறியதாக அதிகாரிகள் தெரிவித்தார்கள் என்கிறது ஏ.என்.ஐ. ஆனால், இதைக் குறிப்பிட்ட அதிகாரிகள் யார் என்ற விவரம் ஏதும் அந்த முகமையால் தரப்படவில்லை.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  9. கோவையில் யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

    கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட காப்புக்காட்டுக்கு அருகில் பவானிசாகர் நீர்பிடிப்புப் பகுதியில் நவீன் குமார் என்பவர் இன்று யானை தாக்கியதில் உயிரிழந்தார்.

    மது அருந்துவதற்காக பவானிசாகர் நீர்பிடிப்புப் பகுதிக்கு சென்று மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் திரும்பி வரும்போதும், காட்டு யானை கீழே தள்ளி தலையில் மிதித்து தாக்கியதில், சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இதனிடையே, மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட நெல்லித்துறை காப்புக் காட்டில் சுமார் 13 - 15 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று இறந்து கிடந்துள்ளது. யானையின் உடலை வனத்துறையினர் கைப்பற்றியுள்ள நிலையில், நாளை உடற்கூறாய்வு நடைபெற உள்ளது.

    யானை உயிரிழப்பு

    பட மூலாதாரம், Coimbatore forest department

  10. சொத்து வரி உயர்வை நாங்கள் மனமுவந்து செய்யவில்லை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    "சொத்து வரி உயர்வை நாங்கள் மனமுவந்து செய்யவில்லை" என்ற தமிழ்நாடு முதலமைச்சரின் பேச்சை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள் என்பது குறித்து, கீழே உள்ள பிபிசி தமிழின் முகநூல் பதிவுக்கு சென்று தெரிவியுங்கள்:

  11. வீடு கட்டி தருவதாக நிதி மோசடி செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை

    நிதி மோசடி

    பட மூலாதாரம், EOW, Coimbatore Police

    படக்குறிப்பு, முத்துக்குமார்

    கோவை மாவட்டத்தில் வீடு கட்டி தருவதாக நிதி மோசடி செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    கோவை மாவட்டத்தைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் வீடு கட்டி தருவதாக ரூ. 95 லட்சம் முறைகேடு செய்த வழக்கில், அவருக்கு 10 வருட கடுங்காவல் தண்டனையும் ரூ.94.90 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

    முத்துக்குமார் கோவை லேண்ட் பேங்கர்ஸ் என்கிற நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். இதன் மூலம் வாடிக்கையாளர் மூன்றில் ஒரு பங்கு பணத்தை செலுத்தினால் மீதமுள்ள தொகையை வங்கி கடன் மூலம் பெற்று நிலத்துடன் வீடு கட்டி தருவதாக கூறி பணம் வசூல் செய்துள்ளார்.

    இதை நம்பி முத்துக்குமாரிடம் 73 பேர் மொத்தம் ரூ.95,55,300 செலுத்தியுள்ளனர். ஆனால், உறுதியளித்ததைப் போல வீட்டை முத்துக்குமார் ஒப்படைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து, அருணாசலம் என்பவர் அளித்துள்ள புகாரின் அடிப்படையில், பொருளாதார குற்றப்பிரிவினர் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர்.

    தற்போது அந்த வழக்கில் முத்துக்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற முறைகேடான திட்டங்களில் முதலீடு செய்யாமல் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என பொருளாதார குற்றப்பிரிவு அறிவுறுத்தியுள்ளது.

  12. புச்சா நகரில் 25 பெண்கள், சிறுமிகள் ரஷ்யப் படையினரால் வன்புணர்வு: யுக்ரேன் அதிகாரி புகார்

    யுக்ரேன் புச்சா நகர் கொலைகள்
    படக்குறிப்பு, லியூட்மிலா டெனிசோவா

    யுக்ரேனின் புச்சா நகரில் தாங்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாக, 25 பெண்கள் மற்றும் சிறுமிகள் கூறியுள்ளதாக, மூத்த யுக்ரேன் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

    யுக்ரேன் நாடாளுமன்ற மனித உரிமைகள் ஆணையர் லியூட்மிலா டெனிசோவா கூறுகையில், இதுதொடர்பான உதவி எண்ணுக்கு வந்த புகார்களில், 14 முதல் 24 வயதுக்குட்பட்ட குறைந்தது 25 பெண்கள் மற்றும் சிறுமிகள் ரஷ்யப்படையினரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாக கூறியதாக தெரிவித்துள்ளார்.

    "யுக்ரேன் மக்களுக்கு எதிராக இனப்படுகொலைகள்", ராணுவ குற்றங்கள் நிகழ்ந்ததற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாகவும், பெண்களை பாலியல் வன்புணர்வு செய்வது ரஷ்யப் படையினரின் "புதிய ஆயுதம்" எனவும் அவர் தெரிவித்தார்.

    மேலும் அவர் கூறுகையில், "மொத்தமாக 14-24 வயதுக்குட்பட்ட 25 பெண்கள் மற்றும் குழந்தைகள் ரஷ்யப்படையினரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    "கடந்த ஒரு மாதமாக இது நடைபெற்று வருகிறது. இந்த மோசமான குற்றங்கள் குறித்து நாங்கள் தொடர்ந்து ஆவணப்படுத்தி வருகிறோம், ஒவ்வொரு குற்றவாளிக்கும் தண்டனை கிடைக்கும்," என தெரிவித்தார்.

    புச்சா நகரில் இத்தகைய கொடுமைகளை இழைத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களை ரஷ்யா மறுத்துள்ளது.

  13. புதிய கல்விக் கொள்கைக்கான குழு: தமிழ்நாடு மாடலை உருவாக்குமா?

  14. பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை

    பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பத்தால் பாதிக்கப்படும் இலங்கை - ரஷ்ய படைகள் மீது போர்க் குற்றச்சாட்டை முன் வைக்கும் யுக்ரேன் அதிபர் - பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை

  15. ஆதிச்சநல்லூர் முதுமக்கள் தாழியில் நெல் உமிகள் கண்டெடுப்பு

    முதுமக்கள் தாழி - நெல் உமி

    ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் முதுமக்கள் தாழியில் நெல் உமிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

    ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக முதல்கட்டமாக ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் அகழாய்வு பணிகள் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி தொடர்ந்து 7 மாத காலமாக நடைபெற்று வருகிறது.

    இந்த அகழாய்வு பணியில் 3 பகுதிகளில் 32 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. அந்த குழிகளில் இருந்து, 2500 ஆண்டுகள் முதல் 3000 ஆண்டுகள் வரையிலான 62 மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

    மேலும், குடுவைகள், பானைகள், இரும்பு பொருட்கள், மணிகள் என ஏராளமான தொல்லியல் பொருட்கள் கிடைத்துள்ளன. கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் பெரிய முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டது.

    முதுமக்கள் தாழி - நெல் உமி

    அதனைச் சுற்றி 100க்கும் மேற்பட்ட கலையங்கள் மற்றும் பானைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதன் அருகே வாள் போன்ற இரும்பு பொருளும் கண்டுபிடிக்கப்பட்டது.மேலும் அந்த பெரிய முதுமக்கள் தாழியில் இருந்து நெல் உமிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

  16. வந்துகொண்டிருக்கும் செய்தி, புதிய கொரோனா திரிபான XE திரிபு - இந்தியாவில் முதன்முறையாக மும்பையில் ஒருவருக்கு உறுதி

    கொரோனா  XE திரிபு

    பட மூலாதாரம், Getty Images

    கொரோனாவின் புதிய திரிபான XE திரிபு, இந்தியாவில் முதன்முறையாக மும்பையில் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக, மும்பை மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவலின்படி, ஒருவருக்கு XE திரிபு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 228 பேருக்கு ஒமிக்ரான் திரிபு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    XE திரிபு உறுதி செய்யப்பட்ட நபருக்கு எவ்வித தீவிர அறிகுறிகளும் தென்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  17. இலங்கையை போன்ற நெருக்கடி நிலை இந்தியாவிலும் ஏற்படலாம் - விஜயகாந்த்

    நாட்டை முன்னேற்றும் பணிகளில் தற்போது முதலே ஈடுபடாவிட்டால் இலங்கையை போன்ற நெருக்கடி நிலை இந்தியாவிலும் ஏற்படலாம் என தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் அறிக்கை விடுத்துள்ளார்.

  18. யுக்ரேன் தேசியக் கொடியை முத்தமிட்ட போப் பிரான்சிஸ்

    யுக்ரேன் - போப் பிரான்சிஸ்

    பட மூலாதாரம், EPA

    யுக்ரேனின் புச்சா நகரில் நடைபெற்ற கொலைகளுக்கு போப் பிரான்சிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், யுக்ரேனின் தேசியக் கொடியை அவர் முத்தமிட்டுள்ளார்.

    "யுக்ரேனில் நடைபெறும் போர் தொடர்பான சமீபத்திய செய்திகள் நிம்மதியையும் நம்பிக்கையும் அளிப்பதற்கு பதிலாக, புச்சா நகரில் நடைபெற்ற படுகொலைகள் உள்ளிட்ட புதிய கொடுமைகளை ஏற்படுத்தியுள்ளது," என அவர் தெரிவித்ததாக, ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

    "பொதுமக்கள், பாதுகாப்பற்ற பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக கொடுமைகள் அதிகரித்துள்ளன" என அவர் தெரிவித்தார்.

    யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி, கடந்த செவ்வாய்கிழமை ஐநா பாதுகாப்பு கவுன்சிலில், இரண்டாம் உலகப் போருக்கு பிறகு கொடுமையான குற்றங்களை ரஷ்யப் படைகளை இழைத்துவருவதாக தெரிவித்திருந்தார். ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை ரஷ்ய அதிபர் மாளிகை மறுத்துள்ளது.

    போப் பிரான்சிஸ்

    பட மூலாதாரம், Reuters

    போப் பிரான்சிஸ் தனக்கு புச்சாவிலிருந்து கொண்டு வரப்பட்டதாகக் கூறிய யுக்ரேனின் தேசியக் கொடியை பார்வையாளர்களுக்காக விரித்துக்காட்டினார். அப்போது, பார்வையாளர்கள் கைதட்டினர்.

    இதையடுத்து, யுக்ரேனிலிருந்து செவ்வாய்கிழமை அங்கு அகதிகளாக வந்திருந்த குழந்தைகளை தன்னிடம் வருமாறு அழைத்தார்.

    "பாதுகாப்பான நிலத்தை அடைவதற்காக இக்குழந்தைகள் யுக்ரேனிலிருந்து இங்கு வந்துள்ளனர். நாம் அவர்களை மறக்கக்கூடாது. யுக்ரேன் மக்களை மறக்கக்கூடாது" என தெரிவித்தார். பின்னர் அக்குழந்தைகளுக்கு சாக்லேட் ஈஸ்டர் முட்டைகளை அன்பளிப்பாக வழங்கினார்.

  19. மத்திய பல்கலைக்கழகங்களுக்கு பொது நுழைவுத் தேர்வு - திரும்பப் பெற வலியுறுத்தி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

    மு.க.ஸ்டாலின்

    பட மூலாதாரம், FACEBOOK/M.K.STALIN

    அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களுக்கும் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வினைக் (CUET) கட்டாயமாக்கும் நடவடிக்கையை உடனடியாகத் திரும்பப் பெற்றிட வேண்டும் என வலியுறுத்தி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், 2022-2023 ஆம் கல்வியாண்டு முதல், பல்கலைக்கழக மானியக்குழுவின் நிதியுதவியுடன் இயங்கும் அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும், பல்வேறு படிப்புகளுக்கான சேர்க்கைகள் தேசிய தேர்வு முகமை நடத்தும் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு மூலம் மட்டுமே நடைபெறும் என்று பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளதையும், பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில், மாநிலப் பல்கலைக்கழகங்கள், தனியார் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் விரும்பினால் மாணவர்கள் சேர்க்கையை நடத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளதையும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

    நீட் தேர்வைப் போலவே இந்த பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வும், நாடு முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிக்கல்வி முறைகளை ஓரங்கட்டி, பள்ளிகளில் ஒட்டுமொத்த மேம்பாடு சார்ந்த நீண்ட காலக் கற்றல் முறைகளை வெகுவாகக் குறைத்து மதிப்பிட வழிவகுப்பதோடு, மாணவர்கள் தங்களது நுழைவுத் தேர்வு மதிப்பெண்களை அதிகரிக்க பயிற்சி மையங்களைச் சார்ந்திருக்கும் ஒரு சூழலை ஏற்படுத்திவிடும் என்பதில் ஐயமில்லை என்றும் முதலமைச்சர் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

    மாநில அரசுகளின் பங்கினையும், உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையில் பள்ளிக் கல்வி முறையின் முக்கியத்துவத்தையும் ஓரங்கட்ட முயற்சிக்கும் ஒன்றிய அரசின் தற்போதைய போக்கு மற்றொரு விரும்பத்தகாத நடவடிக்கை என்றே தாங்கள் கருதுவதாகக் குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மேற்குறிப்பிட்ட பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை உடனடியாக திரும்பப் பெற்றிட வேண்டுமென்று பிரதமரை கேட்டுக் கொண்டுள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  20. இலங்கை போராட்டப் பகுதியில் மர்ம மோட்டார் பைக்குகள்: ஆயுதம் ஏந்தி வந்த நபர்கள் யார்?