பிரதமர் மோதியுடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
பிரதமர் நரேந்திர மோதியை இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்.
டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகமான அண்ணா - கலைஞர் அறிவாலயத்தை நாளை மறுநாள் (ஏப். 2) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்க உள்ளார். இதற்காக நேற்றிரவு ஸ்டாலின் டெல்லி வருகை தந்தார். அவரை திமுக தலைவர்கள் வரவேற்றனர்.
இந்நிலையில், இன்று காலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை மக்களவை திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் திமுக எம்.பிக்கள் சந்தித்தனர். இதையடுத்து, மு.க.ஸ்டாலின் நாடாளுமன்ற வளாகத்திற்கு சென்றார். அப்போது, திமுக எம்.பிக்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, கனிமொழி, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, ஸ்டாலினை சந்தித்தார். அப்போது, "உங்களுக்கு 'வணக்கம்' சொல்லத்தான் வந்தேன். உங்கள் கட்சி அலுவலக திறப்பு விழாவில் நாம் சந்திப்போம்" என சோனியா காந்தி கூறியதாக, ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
இதையடுத்து, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். அப்போது, அலுவலக திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை முதல்வர் வழங்கியதாகவும், நீட் தேர்வு ரத்து, மழை, வெள்ளம் தொடர்பான நிவாரண நிதி நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் என்பது உட்பட தமிழகம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை மு.க.ஸ்டாலின் பிரதமரிடம் வலியுறுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதன் பின்னர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை இன்று மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளார்.