சூயஸ் திட்டம் தொடரும் - கோவை மாநகராட்சி அறிவிப்பு

சூயஸ் திட்டம் தொடரும் என, கோவை மாநகராட்சி பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

நந்தினி வெள்ளைச்சாமி

  1. நன்றி நேயர்களே!

    இன்றைய நேரலை பக்கம் இத்துடன் நிறைவடைகிறது. இதுவரை நடந்த நிகழ்வுகளின் முக்கிய துளிகள் இதோ...

    • இந்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக, ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
    • யுக்ரேனில் ரஷ்யப் படையெடுப்பிலிருந்து 40 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தப்பித்து அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.
    • யுக்ரேன் - ரஷ்யா இருநாட்டு பிரதிநிதிகளுடன் நேற்று துருக்கியில் நடைபெற்ற பேச்சுவார்த்தை குறித்து இன்று ஊடகங்களிடம் பேசிய ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என தெரிவித்தார்.
    • "கேஜ்ரிவாலை கொலை செய்ய பாஜக திட்டமிடுவதாக" ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது.
    • யுக்ரேனின் துறைமுக நகரமான மிக்கோலைவ் நகரத்தில் உள்ள அரசு கட்டடத்தில் (ஆளுநர் அலுவலகம்) நடந்த ரஷ்யத் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்ததாகவும் சுமார் 30 பேர் காயமடைந்ததாகவும், யுக்ரேன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    • கிழக்கு யுக்ரேனில் உள்ள ரஷ்யப்படைகள் லுஹான்ஸ்க் பகுதியில் உள்ள லிசிசான்ஸ்க் நகரத்தில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் ஷெல் தாக்குதலை நடத்தியதாக, யுக்ரேன் செய்தி முகமையான இண்டர்ஃபேக்ஸ் தெரிவித்துள்ளது.
    • சூயஸ் திட்டம் தொடரும் என, கோவை மாநகராட்சி பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி அரையிறுதியில் 157 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றுள்ளது.
    • யுக்ரேன் தலைநகர் கீயவில் இன்று காலை குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன.
    • பாகிஸ்தானில் ஆளும் அரசுக்கு அளித்துவந்த ஆதரவை கூட்டணிக் கட்சி விலக்கிக்கொண்டது என ஏஎன்ஐ செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

    சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

    • ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
    • டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
    • இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
    • யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்
  2. கிறிஸ்துவர் என்பதால் கோயில் நிகழ்வில் வாய்ப்பு மறுப்பு - நடனக் கலைஞர் சௌமியா

    சௌமியா சுகுமாறன்

    பட மூலாதாரம், ANI

    படக்குறிப்பு, சௌமியா சுகுமாறன்

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கூடல்மாணிக்கம் ஆலயத் திருவிழாவில் நடக்கவிருந்த தனது நடன நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக நடனக் கலைஞர் சௌமியா சுகுமாறன் தெரிவித்துள்ளார் என்கிறது ஏ.என்.ஐ. செய்தி முகமை.

    "அவர்கள் கேட்டபோது, நான் ஒரு கிறிஸ்தவர் என்று சொன்னேன். அதற்கு, இந்து-அல்லாதவர்கள் இங்கு பங்குபெற முடியாது என்று பதிலளித்தனர்."

    மேலும், "என் தந்தை இந்துவாக இருந்து, திருமணத்துக்குப் பின் கிறிஸ்தவராக மாறியவர் என்றும் கூட பதிலளித்தேன். ஆனால் அவர்களோ, கோயிலுக்குவெளியே இந்த நிகழ்ச்சி நடக்கிறது என்றால் ஒரு பிரச்னையுமில்லை. ஆனால், இது கோயிலுக்குள் நடக்கிறது என்றுதான் மீண்டும் பதிலளித்தனர்."

    "கலைக்கு மதம் இல்லை. கலைஞர்கள் வெவ்வேறு மதத்துக்குட்பட்டவர்களாக இருந்தாலும், கலை இங்கு குறிப்பிட்ட பக்திப் பாடல்களைப் பயன்படுத்திதான் நிகழ்த்தப்படுகிறது. நான் கிறிஸ்தவ சமூகத்தாலும் இந்து பக்திப்பாடல்களுக்கு ஆடுவதால் நான் சர்ச்சுகளில் இருந்தும் தடுக்கப்பட்டேன்" என்றும் தெரிவித்துள்ளார்.

  3. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உரை ஒத்திவைப்பு

    இம்ரான் கான்

    பட மூலாதாரம், ANI

    படக்குறிப்பு, இம்ரான் கான்

    பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான் கான் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று மாலை நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதாக பிரதமர் இம்ரான்கான் தெரிவித்திருந்தார்.

    ஆனால், தற்போது அந்த உரை தள்ளிவைக்கப்படுவதாக பாகிஸ்தான் செனட்டர் ஃபைசல் ஜாவேத் கான் அறிவித்துள்ளதாக ஏ என் ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

  4. கல்லூரி மாணவி தற்கொலை: குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டியதாக குற்றச்சாட்டு

    கல்லூரி மாணவி தற்கொலை

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண் அவர். அரசு கல்லூரியில் படித்து வந்தார். மாணவியின் 5 வயதில் அவருடைய தந்தை உயிரிழந்து விட்டார். தாயார் அரவணைப்பில் வளர்ந்து வந்தார்.

    இன்று(புதன்கிழமை) அதிகாலை மாட்டுக்கொட்டகையில் இறந்த நிலையில் காணப்பட்டார். காலையில் எழுந்தும் அவரது தாய் இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் இதுகுறித்து சிதம்பரம் அண்ணாமலைநகர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு சென்று மாணவியின் சடலதை உடற் கூறாய்வு பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்தனர். மேலும் மாணவி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்தார்.

    அதில், ''ரொம்ப நாள் வாழ ஆசை, ஆனால் கடவுள் என்னை வாழ விடவில்லை'' என எழுதியுள்ளார்.

  5. யுக்ரேனில் சமீபத்திய செய்தி என்ன?

    யுக்ரேன் - ரஷ்யா

    பட மூலாதாரம், Getty Images

    இந்த நேரலைப் பக்கத்தில் இப்போதுதான் இணைந்தீர்களா? யுக்ரேனில் இன்று இதுவரை என்ன நடந்திருக்கிறது என்பதை இங்கே வழங்குகிறோம்:

    • யுக்ரேன் - ரஷ்யா இருநாட்டு பிரதிநிதிகளுடன் நேற்று துருக்கியில் நடைபெற்ற பேச்சுவார்த்தை குறித்து இன்று ஊடகங்களிடம் பேசிய ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என தெரிவித்தார்.
    • யுக்ரேன் தலைநகர் கீயவ் மற்றும் செரீனிஹிவ் நகரங்களை சுற்றியுள்ள பகுதிகளில் ராணுவ நடவடிக்கையை குறைத்துக்கொள்வதாக ரஷ்யா பேச்சுவார்த்தைக்குப் பின் தெரிவித்திருந்தது.
    • யுக்ரேனில் ரஷ்யப் படையெடுப்பிலிருந்து 40 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தப்பித்து அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.
    • யுக்ரேனின் துறைமுக நகரமான மிக்கோலைவ் நகரத்தில் உள்ள அரசு கட்டடத்தில் (ஆளுநர் அலுவலகம்) நடந்த ரஷ்யத் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்ததாகவும் சுமார் 30 பேர் காயமடைந்ததாகவும், யுக்ரேன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    • கிழக்கு யுக்ரேனில் உள்ள ரஷ்யப்படைகள் லுஹான்ஸ்க் பகுதியில் உள்ள லிசிசான்ஸ்க் நகரத்தில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் ஷெல் தாக்குதலை நடத்தியதாக, யுக்ரேன் செய்தி முகமையான இண்டர்ஃபேக்ஸ் தெரிவித்துள்ளது.
    • யுக்ரேன் தலைநகர் கீயவில் இன்று காலை குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன.
    • யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி நாளை (வியாழக்கிழமை) ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் காணொளி காட்சி வாயிலாக உரையாற்ற உள்ளதாக, ஆஸ்திரேலிய வேலைவாய்ப்பு துறை அமைச்சர் ஸ்டூவர்ட் ராபர்ட் தெரிவித்துள்ளார்.
    • "சொல்லும் அனைத்தையும் நம்புபவர்கள் அல்ல யுக்ரேனியர்கள்" என, யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
  6. இந்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு - அமைச்சரவை ஒப்புதல்

    பணம்

    பட மூலாதாரம், GETTY IMAGES

    இந்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக, ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. ஏற்கெனவே 31% அகவிலைப்படி பெற்று வந்த இந்திய அரசு ஊழியர்கள், இனி 34 சதவீத அகவிலைப்படியை பெறுவார்கள்.

    பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்திய அரசின் 7வது ஊதியக்குழு பரிந்துரையை ஏற்று, இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதனால், இந்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.9,544 கோடி செலவினம் ஏற்படும் எனவும், இதன்மூலம், 47.68 லட்சம் ஊழியர்களும், 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  7. இலங்கை பொருளாதார நெருக்கடி: தமிழர்கள் வருகை தொடருமா? மன்னாரிலிருந்து கள ஆய்வு

      • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
      • பதவி, பிபிசி தமிழ்
    இலங்கை பொருளாதார நெருக்கடி

    இலங்கையில் பொருளாதார நெருக்கடியால், கைக் குழந்தையுடன் தமிழ்நாட்டை வந்தடைந்த கஜேந்திரன் மேரிகிளாரா என்ற இளம் தம்பதியைப் பொறுத்தவரை பொருளாதாரக் காரணங்களே அவர்களை இந்த நிலையை நோக்கித் தள்ளியுள்ளன.

    வறுமையே அவர்களை இந்த நிலைக்குத் தள்ளியது என்கிறார் மேரியின் தந்தையான சந்திரகுமார் கொன்ராட்.

    "நான் செருப்பு வாங்கிவந்தால் எவ்வளவு என்று கேட்பார். நான் 1200 ரூபாய் என்று சொல்வேன். இந்தியாவில் இதெல்லாம் 150 ரூபாய்க்குக் கிடைக்கும் என்பார். அதேபோல, பால் மாவு விலையையும் ஒப்பிடுவார். இந்தியாவில் விலை குறைவு என்பார். என்ன செய்வது, வேலை பார்த்து சமாளித்துதான் ஆக வேண்டும் என்பேன். ஆனால், வறுமை அவர்களைத் துரத்த, வாழ வழியின்றி அவர்கள் வெளியேறிவிட்டனர்" என்கிறார் சந்திரகுமார் கொன்ராட்.

  8. யுக்ரேனிலிருந்து சுமார் 40 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தப்பித்துள்ளனர் - ஐநா

    யுக்ரேன்

    பட மூலாதாரம், Getty Images

    யுக்ரேனில் ரஷ்யப் படையெடுப்பிலிருந்து 40 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தப்பித்து அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.

    பிப்ரவரி 24ஆம் தேதி படையெடுப்பு தொடங்கியதிலிருந்து இன்றுவரை சுமார் 40,19,287 யுக்ரேன் மக்கள் அந்நாட்டிலிருந்து வெளியேறி வெளிநாட்டில் தஞ்சம் புகுந்துள்ளதாக ஐநா அகதிகள் முகமை கூறியுள்ளது.

    23 லட்சத்திற்கும் அதிகமான யுக்ரேன் மக்கள், தற்போது போலாந்து நாட்டில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர்.

  9. பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை - ரஷ்யா

    ரஷ்ய அதிபர் புதின்

    பட மூலாதாரம், REUTERS

    படக்குறிப்பு, ரஷ்ய அதிபர் புதின்

    யுக்ரேன் - ரஷ்யா இருநாட்டு பிரதிநிதிகளுடன் நேற்று துருக்கியில் நடைபெற்ற பேச்சுவார்த்தை குறித்து இன்று ஊடகங்களிடம் பேசிய ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என தெரிவித்தார்.

    பேச்சுவார்த்தைக்குப் பின், யுக்ரேன் தலைநகர் கீயவ் மற்றும் செரீனிஹிவ் நகரங்களை சுற்றியுள்ள பகுதிகளில் ராணுவ நடவடிக்கையை குறைத்துக்கொள்வதாக ரஷ்யா தெரிவித்திருந்தது. தாங்கள் "நடுநிலை" வகிப்பது குறித்து யோசிப்பதாக, யுக்ரேன் தெரிவித்திருந்தது.

    "யுக்ரேன் தாம் முன்மொழிவதை எழுத்துப்பூர்வமாக குறிப்பிட்டு வடிவமைக்கத் தொடங்கியுள்ளது. ஆனால் இதுவரை அவ்வாறு எங்களால் (ரஷ்யா) செய்ய முடியவில்லை" என டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்தார்.

    "அதனால், தற்போதைக்கு எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை, உறுதியான எதனையும் பேச்சுவார்த்தையில் எட்டவில்லை" என அவர் கூறியதாக, இண்டர்ஃபேக்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

  10. வந்துகொண்டிருக்கும் செய்தி, "கேஜ்ரிவாலை கொலை செய்ய பாஜக திட்டம்" - ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

    அரவிந்த் கேஜ்ரிவால்

    பட மூலாதாரம், HINDUSTAN TIMES / GETTY

    டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கேஜ்ரிவால் வீட்டின் முன்பு பாஜகவினர் இன்று திடீரென திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் கேஜ்ரிவால் வீட்டின் முன்பு இருந்த தடுப்புக்களை உடைத்ததாகவும், சிசிடிவி கேமராக்களையும் உடைத்ததாகவும் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்ததாக, ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, ஏஎன்ஐ செய்தி முகமைக்கு டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா அளித்த பேட்டியில், "பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி மற்றும் பாஜகவின் தோல்வி காரணமாக, அரவிந்த் கேஜ்ரிவாலை பாஜக கொலை செய்ய முயற்சிக்கிறது. கேஜ்ரிவால் இல்லத்திற்கு பாஜக குண்டர்கள் காவல்துறையால் வேண்டுமென்றே அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்கள் முதல்வர் இல்லத்தின் முன்பு இருந்த சிசிடிவி கேமராக்களையும் காவல் தடுப்புக்களையும் உடைத்துள்ளனர்.

    கேஜ்ரிவாலை தோற்கடிக்க பாஜகவால் முடியவில்லை என்பதால், அவரை கொலை செய்ய பாஜக முயற்சிக்கிறது. இன்று நடந்த சம்பவம், முதல்வரை கொலை செய்ய பாஜகவால் திட்டமிட்டு நடத்தப்பட்டது" என தெரிவித்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    அதேபோன்று, ஆம் ஆத்மி தலைவர்களில் ஒருவரான ராகவ் சத்தா கூறுகையில், "மக்களாட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரின் வீட்டை பாஜகவினர் இன்று தாக்கியுள்ளனர். இந்த தாக்குதல் கேஜ்ரிவால் மீது மட்டும் நிகழ்ந்தது அல்ல, நேர்மையான அரசாங்கத்தை விரும்பும் இந்த நாட்டு மக்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல். பொதுமக்கள் சேவை மற்றும் தேசப்பற்று மூலம் இதற்கான பதிலை ஆம் ஆத்மி தரும்" என தெரிவித்தார்.

    'காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படத்தை அரவிந்த் கேஜ்ரிவால் தொடர்ந்து விமர்சித்து வந்த நிலையில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

  11. மிக்கோலைவ் ஆளுநர் அலுவலக தாக்குதல் - 12 பேர் உயிரிழந்ததாக யுக்ரேன் தகவல்

    யுக்ரேன்

    பட மூலாதாரம், Reuters

    யுக்ரேனின் துறைமுக நகரமான மிக்கோலைவ் நகரத்தில் உள்ள அரசு கட்டடத்தில் (ஆளுநர் அலுவலகம்) நடந்த ரஷ்யத் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்ததாகவும் சுமார் 30 பேர் காயமடைந்ததாகவும், யுக்ரேன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக, மிக்கோலைவ் மேயர் ஒலெக்சாண்டர் சென்கேவிச் பிபிசியிடம் கூறுகையில், தாக்குதலுக்குள்ளான கட்டடத்திற்குள் ராணுவத்தினர் யாரும் இல்லை எனவும், "அலுவலக காவலர்கள் மட்டுமே இருந்தனர். மற்ற அனைவரும் அலுவலக பணியாளர்கள்" என தெரிவித்தனர்.

    மாகாண ஆளுநர் விடாலி கிம்-ஐ ரஷ்யப்படைகள் இலக்கு வைக்க முயற்சித்திருக்கலாம் எனக்கூறிய சென்கேவிச், தாக்குதல் நடைபெற்ற போது விடாலி கிம் அங்கு இல்லை எனவும் தெரிவித்தார்.

    "விடாலி கிம்மின் ஊடக செயல்பாடுகள் ரஷ்யப்படையினருக்கு தொந்தரவாக இருந்திருக்கலாம். எனவே, அவர் மீது தாக்குதல் நிகழ்த்த நினைத்திருக்கலாம்" என அவர் தெரிவித்துள்ளார்.

  12. லுஹான்ஸ்க்கில் உள்ள நகரமொன்றில் ரஷ்யப்படைகள் தாக்குதல் - அதிகாரிகள்

    யுக்ரேன் - ரஷ்யா

    பட மூலாதாரம், Luhansk OVA

    கிழக்கு யுக்ரேனில் உள்ள ரஷ்யப்படைகள் லுஹான்ஸ்க் பகுதியில் உள்ள லிசிசான்ஸ்க் நகரத்தில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் ஷெல் தாக்குதலை நடத்தியதாக, யுக்ரேன் செய்தி முகமையான இண்டர்ஃபேக்ஸ் தெரிவித்துள்ளது.

    லுஹான்ஸ்க் பிராந்திய ராணுவ தலைமைப் பொறுப்பில் உள்ள செர்ஹி ஹைடாய் தன் டெலிகிராம் பக்கத்தில், உள்ளூர் நேரம் காலை 6:30 மணியளவில் ஷெல் தாக்குதல் தொடங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

    "அங்குள்ள உயரமான கட்டடங்கள் குறிப்பிடத்தக்க அளவில் சேதமடைந்துள்ளன" எனவும், "உயிரிழப்புகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன" எனவும் அவர் தெரிவித்தார்.

    "எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர், எத்தனை பேர் காயமடைந்துள்ளனர் என்பது குறித்து கணக்கிடப்பட்டு வருகிறது. இடிபாடுகள் அதிகளவில் உள்ளன" என அவர் தெரிவித்துள்ளனர்.

  13. இலங்கையில் நிலவும் பொருளியல் நெருக்கடி 2 ஆண்டுகளில் இந்தியாவுக்கு வரும் - சீமான்

    இலங்கை பொருளாதார நெருக்கடி

    இலங்கையில் நிலவும் பொருளியல் நெருக்கடி அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவுக்கும் நிகழும் என்று தெரிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

    திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஒவ்வொரு தேர்தலின் போதும் 5,000 கோடி வரை செலவு செய்கிறார்கள், 6,500 கோடி முதலீடு கொண்டு வந்ததாக கூறுகிறார்கள். இது பெரியவர்கள் விளையாட்டு, இதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    கப்பலில் வந்தவர்களை விரட்டிவிட்டு வானூர்தியில் வருகிறவர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கிறார்கள் - லுலு மார்க்கெட் முழுவதும் வட இந்தியவர்கள் தான் வேலை செய்ய போகிறார்கள். அரசியலையும் வட இந்தியர்களே தீர்மானிப்பார்கள். இது முற்றிலும் பேராபத்தை நோக்கி செல்லும்.

    நீட் விலக்கு தொடர்பாக குடியரசு தலைவரை முதல்வர் சந்திக்க வேண்டும். ‘உங்களில் ஒருவன்’ என்கிற புத்தகத்தை முதல்வர் எழுதி தென் மாநிலங்களில் உள்ள பல மாநில முதல்வர்களை அழைத்து வெளியிட்டார். அதேபோல, எல்லோரையும் அழைத்து மாநில சட்டப்பேரவையில் தீர்மானத்தை நிறைவேற்றி நீட் தேர்வுக்கு எதிரான மாநாடு ஒன்றை முதல்வர் நடத்தலாம்.

    இலங்கையில் இப்போது பொருளாதார நெருக்கடியால், இரண்டு ஆப்பிள் 450 ரூபாய் என்றால் அதே நிலை இங்கும் வரும். ஏனென்றால் நாம் ஏற்றுக் கொண்டுள்ள பொருளாதாரக் கொள்கை அப்படி உள்ளது” என தெரிவித்தார்.

  14. தமிழகத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிப்பது சரியாக இருக்காது - தமிழிசை

    தமிழிசை சவுந்தரராஜன்

    தமிழகத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவிக்க விரும்பவில்லை என, திருச்சி விமான நிலையத்தில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

    தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி பொறுப்பு துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் இன்று காலை விமானம் மூலம் சென்னையில் இருந்து திருச்சி வந்தார். அங்கு அவருக்கு பாஜக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து கார் மூலம் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் நடக்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக சென்றார்.

    முன்னதாக ஆளுநர் தமிழிசை திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "கொரானா இன்னும் முழுமையாக போகவில்லை. பல நாடுகளில் சில இடங்களில் நோய்த்தொற்று அதிகரிக்க ஆரம்பித்து விட்டது. அதனால் யாரும் அஜாக்கிரதையாக இல்லாமல், முகக்கவசம் அணிதல், தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். நான்காவது அலை வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

    12 முதல் 14 வரை உள்ள குழந்தைகள் இருக்கக்கூடிய வீடுகளில் தடுப்பூசி செலுத்த வலியுறுத்த வேண்டும். எல்லோரும் முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.

    நீட் தேர்வு ரத்துக்காக, தமிழக முதல்வர் - குடியரசு தலைவர் சந்திப்பு குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை. இன்னொரு ஆளுநர் அதிகாரத்திற்குட்ட தமிழகத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவிப்பது சரியாக இருக்காது" என தெரிவித்தார்

  15. சூயஸ் திட்டம் தொடரும் - கோவை மாநகராட்சி அறிவிப்பு

    சூயஸ் திட்டம்

    சூயஸ் திட்டம் தொடரும் என, கோவை மாநகராட்சி பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கோவை மாநகராட்சியின் முதல் பட்ஜெட் கூட்டம் இன்று நடைபெற்றது. கோவை மாநகராட்சி மேயர் கல்பனா பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

    அதில், ’2022 - 2023 நிதியாண்டில் வருவாய் மற்றும் மூலதன வரவுகள் மொத்தம் ரூ.2,317.97 கோடி எனவும், வருவாய் மற்றும் மூலதன செலவுகள் ரூ.2,337.28 கோடி எனவும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. 2022 - 2023-ம் ஆண்டில் நிகரப் பற்றாக்குறை ரூ.19.31 கோடி ஆகும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த பட்ஜெட்டில் நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் பாதாள சாக்கடை பணிகளுக்காக அதிகபட்சமாக ரூ.883 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும், சூயஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட 24*7 குடிநீர் வழங்கும் திட்டமும் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில், "தற்போது 76வது வார்டு ஜெயராம் நகர் என்கிற பகுதியில் 1,240 வீட்டு இணைப்புகளுக்கு இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், மற்ற பகுதிகளிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும். இத்திட்டம் 2025ம் வருடம் முழுமையடையப்பெற்று பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட திமுகவின் கூட்டணி கட்சிகள் சூயஸ் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனத் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்த நிலையில், அந்தத் திட்டம் தொடரும் என மாநகராட்சி பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மயூரா ஜெயக்குமார், "இந்த திட்டம் சூயஸ் நிறுவனத்திடம் இருக்கக்கூடாது என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு. இதனை திமுகவிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம்" என்றார்.

    இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பத்மநாபன், "எங்கள் நிலைப்பாட்டில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. மாநகராட்சியின் இந்த திட்டம் தனியார்வசம் இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். இதனைத் தொடர்ந்து எதிர்ப்போம். எங்கள் கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் இது தொடர்பாக விவாதத்தின்போது பேசுவார்கள்" என்றார்.

  16. உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட் - இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா

    ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணி

    பட மூலாதாரம், Getty Images

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி அரையிறுதியில் 157 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றுள்ளது.

    இதனால், ஆஸ்திரேலிய அணி 7வது முறையாக உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடுகிறது.

    நாளை நடைபெறும் தென்னாப்பிரிக்கா - இங்கிலாந்து இடையிலான மற்றொரு அரையிறுதியில் வெல்லும் அணி, ஆஸ்திரேலியாவை எதிர்த்து வரும் ஏப்ரல் 3ம் தேதி இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும்.

  17. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை மீனவரை கைது செய்த இந்திய கடலோர காவல் படை

    இலங்கை மீனவர் கைது

    எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை மீனவர் ஒருவரை இந்தியக் கடலோர காவல் படை கைது செய்தது.

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை படகுத்துறைமுகத்தில் இருந்து 14 நாட்டிக்கல் மைல் தொலைவில் கப்பலில் சென்று கடலோரப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காரைக்காலைச் சேர்ந்த இந்திய கடலோர பாதுகாப்புப் படையினர் ஒரு பைபர் படகை ஆய்வு செய்தனர்.

    அப்போது அந்த படகு இலங்கை நாட்டைச் சேர்ந்த படகு என்றும் அதில் வந்தவர் இலங்கை யாழ்ப்பாண மாவட்டம், வல்வெட்டித்துறை, ஆதிகோவிலடி பகுதியைச் சேர்ந்த சாந்தரூபன் (வயது 30) என்றும் தெரியவந்தது. இதையடுத்து, இந்திய எல்லையில் தடையை மீறி மீன் பிடித்ததாக, இந்திய கடலோர காவல் படையினர் படகை கைப்பற்றி மீனவரை கைது செய்தனர்.

    கைது செய்த மீனவரையும் கைப்பற்றிய படகையும் நாகை மாவட்டம் வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும ஆய்வாளர் செல்வராசுவிடம் ஒப்படைத்தனர்.

    படகையும், இலங்கை மீனவரையும் அழைத்து வர இன்று மதியம் 2. 20 மணிக்கு கோடியக்கரை படகு துறைமுகத்திலிருந்து பைபர் படகு கடலோர பாதுகாப்புப் படை கப்பலை நோக்கி புறப்பட்டது. மீனவரையும் மீன்பிடி படகையும் கடலோர காவல் குழும ஆய்வாளரிடம் இந்திய கடலோர காவல் படையினர் நடுக்கடலில் ஒப்படைத்தனர்.

    இருப்பினும் இலங்கை மீனவரின் படகில் கடல் நீர் நிறைந்து படகின் பெரும்பகுதி கடலுக்குள் மூழ்கிய நிலையில் இருந்ததால் படகை எடுத்து வருவதில் தாமதம் ஏற்பட்டது. அதன் பிறகு மற்றொரு பைபர் படகு கோடியக்கரை துறைமுகத்திலிருந்து சென்று இலங்கை மீனவரின் படகை இழுத்துக்கொண்டு ஆறுகாட்டுத்துறை படகு துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இலங்கை மீனவர் மட்டும் கோடியக்கரை படகு துறைமுகத்திற்கு இரவு அழைத்துவரப்பட்டார்.

    அழைத்து வரப்பட்ட இலங்கை மீனவர் சாந்தரூபனை சுங்கத்துறை கடலோர பாதுகாப்பு குழும காவல் போலீஸார் கடலோர காவல்படை அதிகாரிகள் மற்றும் மாநில உளவுத்துறை போலீசார் விசாரணை நடத்தினர்.

  18. யுக்ரேன் தலைநகர் கீயவில் குண்டுவெடிப்புகள்

    யுக்ரேன்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, கிழக்கு கீயவில் யுக்ரேன் படைகள் (மார்ச் 28)

    யுக்ரேன் தலைநகர் கீயவில் இன்று காலை குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன.

    கீயவில் வான்வழி தாக்குதல் எச்சரிக்கை சைரன்கள் ஒலியுடன் இன்றைய நாள் தொடங்கியதாகவும், அதைத்தொடர்ந்து பெரும் குண்டுவெடிப்புகள் புறநகர் பகுதிகளில் நிகழ்ந்ததாகவும், அதனை கீயவின் மையப்பகுதியில் உள்ள தான் உணர்ந்ததாகவும், பிபிசி நிருபர் லைஸ் டூசெட் தெரிவித்துள்ளார்.

    மேலும், "கீயவில் துப்பாக்கிசூடு சத்தமும் கேட்டது" என, அங்குள்ள மற்றொரு நிருபர் ஜெரிமி போவென் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியது ரஷ்ய தரப்பா அல்லது யுக்ரேன் தரப்பா அல்லது இரண்டுமா என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை என, அவர் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக, நேற்று நடந்த இருநாட்டு பேச்சுவார்த்தையில் தலைநகர் கீயவை சுற்றியுள்ள பகுதிகளில் ராணுவ நடவடிக்கையை குறைப்பதாக ரஷ்யா தெரிவித்திருந்தது. ரஷ்யாவின் இந்த கூற்று எச்சரிக்கையுடன் அணுகப்பட வேண்டும் என, மேற்கு நாடுகளின் தலைவர்கள் தெரிவித்திருந்தனர்.

  19. புதுச்சேரி சட்டப்பேரவையில் இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல்

    புதுச்சேரி சட்டப்பேரவை

    புதுச்சேரி சட்டப்பேரவையில் இடைக்கால நிதிநிலை அறிக்கையை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார்.

    புதுச்சேரி 15வது சட்டப்பேரவையின் இரண்டாவது கூட்டத் தொடரில் ஐந்து மாத செலவினங்களுக்கு 3,613 கோடி ரூபாய்க்கு ஒப்புதல் பெறப்பட்டு, இடைக்கால நிதிநிலை அறிக்கை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும், முழு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யாததை கண்டித்து எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.

    புதுச்சேரியில் 15வது சட்டப்பேரவையின் இரண்டாவது கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி 23ஆம் தேதியன்று நடைபெற்றது. இதையடுத்து, இன்று தொடங்கிய இரண்டாவது கூட்டத்தொடரின் இரண்டாவது பகுதியாக காலை 9.30 மணிக்குச் சட்டப்பேரவை கூடியது. சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியதும், முதல்வர் ரங்கசாமி 2021-2022 ஆண்டுக்கான கூடுதல் செலவின மதிப்பீடுகளை முன்மொழிந்தார்.

    இதையடுத்து, இடைக்கால நிதிநிலை அறிக்கையை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார். இந்த நிதிநிலை அறிக்கையில் ரூபாய் 3,613 கோடிக்கு ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை ஐந்து மாதங்களுக்கான அரசு கூடுதல் செலவினங்களுக்காக கூட்டப்பட்டது.

    புதுச்சேரி சட்டப்பேரவை - எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

    கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக புதுச்சேரியில் மார்ச் மாதம் இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வந்தது. இம்முறை முழு நிதிநிலை அறிக்கை தாக்கலாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கூடுதல் நிதி தர முதல்வர் மத்திய அரசை கேட்டிருந்தார். இந்த சூழலில், முழு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படாததைக்கண்டித்து திமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதையடுத்து, திமுக, காங்கிரஸ் மற்றும் சுயேச்சை உறுப்பினர்கள் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

  20. நாளை ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார் ஸெலென்ஸ்கி

    வொலோடிமிர் ஸெலென்ஸ்கி

    பட மூலாதாரம், Getty Images

    யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி நாளை (வியாழக்கிழமை) ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் காணொளி காட்சி வாயிலாக உரையாற்ற உள்ளதாக, ஆஸ்திரேலிய வேலைவாய்ப்பு துறை அமைச்சர் ஸ்டூவர்ட் ராபர்ட் தெரிவித்துள்ளார்.

    "போருக்கான எந்தவித காரணமும் இல்லாமல் யுக்ரேன் மீது படையெடுப்பை தொடங்கிய ரஷ்யாவுக்கு எதிராக அசாத்திய தைரியத்தையும் உறுதியையும் யுக்ரேன் வெளிப்படுத்துகிறது," என அவர் தெரிவித்துள்ளார்.

    யுக்ரேனுக்கு 65 மில்லியன் டாலர் மதிப்பிலான மனிதநேய உதவிகளை ஆஸ்திரேலியா வழங்கியுள்ளது. மேலும், 91 மில்லியன் டாலர் மதிப்பிலான பாதுகாப்பு சாதனங்களை வழங்குவதாகவும் உறுதியளித்துள்ள ஆஸ்திரேலியா, "யுக்ரேனுக்கான ராணுவ உதவி, உடனடி தேவையாகவும் தொடர்ந்து நீடிக்கக்கூடியதாகவும் உள்ளது," என தெரிவித்துள்ளது.

    ஐ.நா., மற்றும் அமெரிக்க நாடாளுமன்றம் முதல் ஜப்பான் நாடாளுமன்றம் வரையில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரசியல் தலைவர்களின் கூட்டங்களில் யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கி தொடர்ந்து உரையாற்றி வருகிறார்.

    பல்வேறு நாடுகளின் நாடாளுமன்றங்களில் அவருடைய பேச்சுக்கு அனைவரும் எழுந்து நின்று பாராட்டு தெரிவிக்கின்றனர். அவருடைய பேச்சு, மேற்கு நாடுகள் உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் யுக்ரேனுக்கான ஆதரவை திரட்டும் "தகவல் போர்" என விவரிக்கப்படுகிறது.

    "யுக்ரேனின் ஆத்மாவை பிரதிபலிப்பது எப்படி என அவருக்கு தெரிந்திருக்கிறது. அவருடைய பேச்சு மட்டுமல்ல, அவர் எப்படி தோன்றுகிறார், அவருடைய பின்னணி தோற்றம், எங்கு பேசுகிறார் என்பதிலும் அவை பிரதிபலிக்கிறது," என, நிபுணர் ஒருவர் பிபிசியிடம் சமீபத்தில் தெரிவித்தார்.

    யுக்ரேனிய அதிபரின் வார்த்தை ஜால உத்தி மேற்கு நாடுகளை எந்த அளவுக்கு ஈர்க்கிறது என்பது குறித்து விரிவாக படிக்க இங்கே சொடுக்குங்கள்: