You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல்

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

நந்தினி வெள்ளைச்சாமி

  1. பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருது - நிகழ்ச்சி ஏற்பாடுகள்

  2. யுக்ரேனிய அகதிகளை இலக்கு வைக்கும் பாலியல் தொழில் குழுக்கள் - புதிய ஆபத்து

      • எழுதியவர், கட்யா அட்லெர்
      • பதவி, ஐரோப்பா ஆசிரியர்

    "மனித வேட்டையாளர்களுக்கும் ஆள் கடத்தல்காரர்களுக்கும் யுக்ரேனில் நடக்கும் போர் ஒரு சோகம் அல்ல. இதுவொரு வாய்ப்பு. பெண்கள் மற்றும் குழந்தைகளே அவர்களுடைய இலக்குகள்," என்று ட்விட்டரில் எச்சரித்துள்ளார் ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ கூட்டரெஷ்.

    யுக்ரேன் மற்றும் அண்டை நாடுகளில் அமைதி காலத்தில் கடத்தல் வட்டங்கள் பிரபலமாக உள்ளன. வியாபாரத்தை அதிகரிக்க போர்க்காலம் அவர்களுக்குச் சரியான வாய்ப்பாகும்.

    லுப்லினில் உள்ள மனித உரிமைகள் அமைப்பான ஹோமோ ஃபேபரின் ஒருங்கிணைப்பாளரான கரோலினா வியர்ஸ்பின்ஸ்கா, குழந்தைகள் பெரும் கவலையாக இருப்பதாக என்னிடம் கூறினார்.

    யுக்ரேனில் இருந்து பல இளைஞர்கள் துணைக்கு யாருமின்றி பயணம் செய்து கொண்டிருந்தனர். போலந்து மற்றும் பிற எல்லை பகுதிகளில், குறிப்பாக போரின் தொடக்கத்தில், குழந்தைகள் காணாமல் போனார்கள். அவர்களுடைய தற்போதைய இருப்பிடம் தெரியவில்லை.

  3. வந்துகொண்டிருக்கும் செய்தி, யுக்ரேனியர்களை வெளியேற்றும் திட்டம் இன்று கிடையாது - துணை பிரதமர்

    யுக்ரேனில் இருந்து பொதுமக்களை வெளியேற்றும் திட்டம் திங்கட்கிழமை செயல்படுத்தப்படாது என்று அந்நாட்டின் துணை பிரதமர் ஐரினா வெரேஷ்சுக் தெரிவித்துள்ளார்.

    உளவுத்துறை தகவல்களின்படி மக்கள் வெளியேற்றப் பாதைகளில் ரஷ்ய ஆக்கிரமிப்புப் படைகள் சில ஆத்திரமூட்டல் செயல்களில் ஈடுபடலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் இன்றைய வெளியேற்ற நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன என்று துணை பிரதமர் ஐரினா வெரேஷ்சுக் கூறியுள்ளார்.

    மேரியுபோல், சுமி மற்றும் தலைநகர் கீயவுக்கு வெளியே உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களில் இருந்து பாதுகாப்பான மக்கள் வெளியேற்ற பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த பகுதிகள் தற்போது ரஷ்ய படைகளால் சூழப்பட்டுள்ளன. ஏற்கெனவே ரஷ்ய ஷெல் தாக்குதல்கள் காரணமாக முற்றுகையிடப்பட்ட நகரங்களில் உள்ள மக்களை வெளியேற்றும் முயற்சிகள் தடைபட்டுள்ளன. இந்த நிலையில், திங்கட்கிழமை நிறுத்தப்பட்டுள்ள மக்கள் வெளியேற்ற முயற்சி அங்குள்ள நகரங்களில் எஞ்சியுள்ளவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

  4. "அழிவின் விளிம்பில் மேரியோபோல்": மக்கள் அனைவரும் வெளியேற நகர மேயர் வலியுறுத்தல்

    யுக்ரேனின் முக்கிய துறைமுக நகரமான மேரியோபோல் அழிவின் விளிம்பில் சிக்கியுள்ளதாகவும், அங்குள்ள அனைவரும் வெளியேற வேண்டும் எனவும், அந்நகர மேயர் வாடிம் போய்சென்கோ தெரிவித்துள்ளார்.

    இன்றுவரை (திங்கள்கிழமை) சுமார் 1,60,000 பேர் மின்சாரம் இன்றி அந்நகரத்தில் சிக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அங்குள்ள மக்களை வெளியேற்ற 26 பேருந்துகள் தயார்நிலையில் இருப்பதாகவும், ஆனால், அவர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு ரஷ்ய படைகள் சம்மதிக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்."ரஷ்யா எங்களுடன் விளையாடுகிறது," என அவர் கூறியுள்ளார்.

    மேரியோபோல் நகரத்தை ரஷ்யப்படைகள் சுற்றிவளைத்துள்ளன, தண்ணீர், உணவு மற்றும் மருந்துகள் பற்றாக்குறையுடன் மக்கள் அங்கு சிக்கியுள்ளனர்.

    பாதிப்படைந்த மேரியோபோல் நகரத்திற்கு இன்னும் எந்த உதவிகளும் செய்ய முடியவில்லை என்று மனிதாபிமான உதவிகளை வழங்கும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் கூறியிருந்ததை முன்னதாக தெரிவித்திருந்தோம். அங்குள்ள மக்களின் பாதுகாப்பான வெளியேற்றத்திற்கு ரஷ்யா மற்றும் யுக்ரேன் இரண்டு நாடுகளுடைய ஒத்துழைப்பும் தேவை.

    யுக்ரேனில் பொதுமக்களை இலக்கு வைக்கவில்லை என, ரஷ்யா தொடர்ந்து மறுத்துவருகிறது. அங்கு சிக்கியுள்ள மக்களுக்கான பாதுகாப்பு வழித்தடங்களை அமைப்பதில் தொடர் தோல்வி கண்டுள்ளதாக யுக்ரேன் மீது ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.

  5. யானையின் மன அழுத்தத்தை போக்க நீச்சல் குளம்

  6. பிரபல ரவுடி கௌரி சங்கர் வெட்டி கொலை: டிஎஸ்பி தலைமையில் 3 தனிப்படை

    திருச்சி மாவட்டத்தில் பிரபல ரவுடி கௌரி சங்கரை 7 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்தது. அவர்களை பிடிக்க டிஎஸ்பி தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட எஸ்.பி தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் நரியன் தெருவை சேர்ந்த சீனிவாசன் என்பவரின் மகன் கௌரி சங்கர் (35). இவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் மண்ணச்சநல்லூர், ஸ்ரீரங்கம் ஆகிய காவல் நிலையங்களில் உள்ளன. பிரபல ரவுடி குணா சுந்தரபாண்டியின் நெருங்கிய நண்பர் ஆவார். கௌரிசங்கர் மண்ணச்சநல்லூர் அருகே வெங்கங்குடி பகுதியில் உள்ள இவருக்கு சொந்தமான தேங்காய் நார் உரிக்கும் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தார். அப்போது மாலை ஆறு மணி அளவில் சமயபுரம் புதுத்தெருவைச் சேர்ந்த கார்த்திக் உள்ளிட்ட 7 பேர் கொண்ட கும்பல், கௌரி சங்கரை தொடர்புகொண்டு பிறந்தநாள் விழா ஆசீர்வாதம் வாங்க வேண்டும் என தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளனர்.

    பிறந்த நாள் விழாவை கார்த்தி, சித்தார்த்தன் உள்ளிட்ட 7 பேர் கொண்ட கும்பல் தேங்காய்நார் தொழிற்சாலைக்கு சென்று கௌரிசங்கருடன் சேர்ந்து மது அருந்திவிட்டு ஆசீர்வாதம் வாங்குவது போல் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கௌரிசங்கரை சரமாரியாக வெட்டி கொலை செய்த பின்னர், வைத்திருந்த பூ மாலையை அவர் மீது போட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.இதுகுறித்து, மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்தில் கௌரி சங்கரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கொலை தொடர்பாக சமயபுரம் கார்த்தி, கிளியநல்லூர் சித்தார்த்தன், மகாளிகுடி கிராமத்தைச் சேர்ந்த சந்திரன் உள்ளிட்டோரை பிடித்து மண்ணச்சநல்லூர் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.மேலும், பிரபல ரவுடி குணா, சுந்தரபாண்டி அவர்களின் கூட்டாளி பிரவீன், நேற்று கொலை செய்யப்பட்டு இறந்த நாள். அதே நாளில் அவருடைய நண்பர் கௌரிசங்கரை கொலை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.சம்பவ இடத்தில் காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் மற்றும் காவல் துனை கண்காணிப்பாளர் செந்தில்குமார், மண்ணச்சநல்லூர் ஆய்வாளர் ரமேஷ் நேரில் சென்று விசாரித்து வருகின்றனர்.இந்த கொலை தொடர்பாக சம்பவ இடத்திற்கு வந்த திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கொலை தொடர்பாக 7 பேரை சந்தேகத்திற்கிடமாக விசாரணை செய்து வருகிறோம். மேலும் கொலையாளிகளை பிடிப்பதற்காக ஜீயபுரம் டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையில் சோமரசம்பேட்டை, மண்ணச்சநல்லூர், சமயபுரம் ஆகிய மூன்று காவல் ஆய்வாளர்கள் கொண்ட 3 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடி வருகிறோம்" என கூறினார்.

  7. ஆஸ்கர்: வில் ஸ்மித் கிறிஸ் ராக்கை மேடையில் அறைந்தது ஏன்?

    நிகழ்ச்சியின் போது வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட்டை கிறிஸ் ராக் கேலி செய்து பேசினார். அந்த நகைச்சுவையைக் கேட்ட வில் ஸ்மித், மேடையில் ஏறி கிறிஸ் ராக்கை அறைந்தார்.

    ஜடா பிங்கெட்டின் குட்டையான முடி குறித்து கருத்து தெரிவித்து மேடையில் பேசினார்.

    ஜி.ஐ ஜேன் 2. படத்தில் கதாநாயகி தனது தலையை மொட்டையடித்தபடி நடித்திருப்பார். அந்த கதாபாத்திரத்துடன் ஜடாவை ஒப்பிட்டு கிறிஸ் ராக் கிண்டல் செய்து பேசியபோது, பார்வையாளர்கள் வரிசையில் சிரிப்பலை எழுந்தது.

    அவர்களில் ஒருவராக வில் ஸ்மித் அருகே அமர்ந்திருந்த ஜடாவின் கண்கள் திடீரென மாற்றம் அடைந்தது. அது கிறிஸ் ராக்கின் கருத்தை அவர் ரசிக்கவில்லை என்பது போல உணர்த்தியது.

    இந்த நிலையில், திடீரென்று மேடைக்கு வில் ஸ்மித் ஏறியபோது தன்னை பாராட்ட அவர் வருவதாகவே கிறிஸ் ராக் கருதி பேசினார். ஆனால், மேடையில் அவர் அருகே சென்றதும் ஓங்கி அறை விட்டு விட்டு மீண்டும் பார்வையாளர் பகுதியில் தனது மனைவியுடன் வில் ஸ்மித் அமர்ந்தார். அப்போது வில் ஸ்மித் பற்றி கிறிஸ் ராக் பேசியபோது, தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி எனது மனைவியை பற்றி உன்னுடைய வாயால் எதையும் பேசாதே என்று உரக்க குரல் கொடுத்தார் வில் ஸ்மித்.

  8. வந்துகொண்டிருக்கும் செய்தி, சென்னையில் தனியார் பள்ளி வேன் மோதி 2-ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு

    சென்னை ஆழ்வார் திருநகரில் உள்ள தனியார் பள்ளியொன்றில் 2-ம் வகுப்பு படித்து வந்த மாணவர் தீட்சித், இன்று காலை அப்பள்ளிக்கு சொந்தமான வேனில் பள்ளிக்கு வந்துள்ளார். பின்னர் பள்ளிக்குள் சென்ற தீட்சித், தான் வேனில் மறந்து வைத்துவிட்டு வந்த பொருள் ஒன்றை எடுக்க வேன் நோக்கி வந்துள்ளார்.

    அப்போது, வேனை 'பார்க்கிங்' செய்வதற்காக, வேன் ஓட்டுநர் பூங்காவனம் வேனை 'ரிவர்ஸ்' செய்ததாக கூறப்படுகிறது. அப்போது வேனை நோக்கி வந்த மாணவர் தீட்சித் வேனில் மோதி படுகாயமடைந்தார். தீட்சித்தை அருகிலுள்ள மருத்துவமனைக்கு பள்ளி நிர்வாகத்தினர் அழைத்துச்சென்றுள்ளனர். ஆனால், மாணவர் தீட்சித் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

    இச்சம்பவம் குறித்து ஓட்டுநர் பூங்காவனத்திடம் விசாரணை செய்துவருகின்றனர். பள்ளியில் மாவட்ட கல்வி அதிகாரியும் விசாரணை நடத்தி வருகின்றார். பள்ளிக்குள் சென்ற மாணவர் மீண்டும் வெளியில் வருவதை யாரும் கவனிக்கவில்லையா, வேன் ஓட்டுநரின் கவனக்குறைவால் நிகழ்ந்ததா என்பது போன்ற பாதுகாப்பு குறித்த கேள்விகள் இச்சம்பவத்தையொட்டி எழுந்துள்ளன. இதைத்தொடர்ந்து, அப்பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

  9. "மேரியோபோல் நகருக்கு உதவி செய்ய முடியவில்லை"

    ரஷ்யா, யுக்ரேன் ஆகிய நாடுகளிடம் இருந்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதால், பாதிப்படைந்த மேரியோபோல் நகரத்திற்கு இன்னும் எந்த உதவுகளும் செய்ய முடியவில்லை என்று மனிதாபிமான உதவிகளை வழங்கும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. "இரு நாடுகளும் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும். அவர்கள் இதற்கான பாதைகளையும், மக்களை மீட்பதற்கான தேவையான நேரத்தையும் பொதுவெளியில் தெரிவிக்க வேண்டும். தற்போது அங்கு செல்ல எங்களுக்கு எந்த குழுவும் இல்லை", என்று பிபிசியிடம் சர்வதேச செஞ்சிலுவை சங்க செய்தி தொடர்பாளர் மாட் மொரிஸ் தெரிவித்துள்ளார். மேலும், அங்கிருந்து மக்கள் வெளியேறுவதற்கு அனுமதிக்கபட வேண்டும் என்றும், வலுக்கட்டாயமாக வெளியேற்றபடக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார். மேரியோபோல் நகரில் உள்ள பலரும் பல வாரங்களாக உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவ வசதிகள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

  10. யுக்ரேனில் சமீபத்திய செய்தி என்ன?

    இந்த நேரலைப் பக்கத்தில் இப்போதுதான் இணைகிறீர்களா? யுக்ரேனில் இன்று இதுவரை என்ன நடந்திருக்கிறது என்பதை இங்கே வழங்குகிறோம்.

    • யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி, ரஷ்யா உடனான தமது நாட்டின் அடுத்த சுற்று அமைதிப் பேச்சுக்களில் யுக்ரேனிய இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு தான் தனது முன்னுரிமை என்று கூறியுள்ளார்.
    • யுக்ரேனும் ரஷ்யாவும் இந்த வாரம் துருக்கியில் நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. அதில் நடுநிலை தன்மையை ஏற்றுக்கொள்வது பற்றி விவாதிக்க தயாராக இருப்பதாக ஸெலென்ஸ்கி கூறியுள்ளார்.
    • தொடர்ச்சியாக ஷெல் தாக்குதல் மற்றும் உணவு, தண்ணீர் பற்றாக்குறைக்கு உள்ளாகியுள்ள மேரியோபோல் நகரத்தில் சிக்கியுள்ள 1,70,000 பேரை மீட்க பிரான்ஸ், கிரீஸ், துருக்கி ஆகிய நாடுகள் வலியுறுத்திவருகின்றன.
    • யுக்ரேன் தலைநகர் கீயவில் உள்ள பள்ளிகள் இன்று முதல் இணையவழியில் வகுப்புகளை தொடங்கவுள்ளன.
    • ரஷ்யப்படைகளின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள செர்னோபில் அணுமின் நிலைய பகுதியில் தீ பிடித்துள்ளதாக, யுக்ரேன் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
    • ரஷ்ய அதிபர் புதின் "ஆட்சியில் தொடர்ந்து நீடித்திருக்க முடியாது" என கூறியிருந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அக்கருத்திலிருந்து பின்வாங்கியுள்ளார். ரஷ்யாவில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு வலியுறுத்துகிறீர்களா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு "இல்லை" என பதிலளித்தார்.
    • யுக்ரேனில் இதுவரை சுமார் 1,100 பேர் உயிரிழந்ததாகவும், 1 கோடிக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளதாகவும், ஐநா தெரிவித்துள்ளது.
  11. வணக்கம் நேயர்களே!

    நான் நந்தினி வெள்ளைச்சாமி. பிபிசி தமிழ் நேரலைக்கு வரவேற்கிறோம். இதுவரை பரணி தரன் மற்றும் எம்.ஆர்.ஷோபனா வழங்கிய நேரலை செய்திகளை இனி நான் வழங்கவிருக்கிறேன்.

    யுக்ரேனில் உள்ள பிபிசி செய்தியாளர்கள் வழங்கும் சமீபத்திய தகவல்கள் மற்றும் தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலக நாடுகளில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலை பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

  12. இலங்கையில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்

    இலங்கைக்கு அரசுமுறைப் பயணமாக சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், அந்நாட்டின் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவை சந்தித்துப் பேசியுள்ளார்.

    இருவரும் சந்தித்து கலந்துரையாடும் படத்தை தமது ட்விட்டர் பக்கத்தில் ஜெய்சங்கர் பகிர்ந்துள்ளார்.

    பொருளாதார நிலை மற்றும் இந்தியாவின் ஆதரவான செயல்பாடு குறித்து பசிலுடன் ஆலோசனை நடத்தியதாக ஜெய்சங்கர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

  13. ரஷ்ய படைகளின் நிலை மாறவில்லை: பிரிட்டன் பாதுகாப்புத்துறை

    யுக்ரேனின் சமீபத்திய நிலைமை குறித்த தனது சமீபத்திய தகவல்களை பிரிட்டன் பாதுகாப்புத்துறை வழங்கியுள்ளது. அதன் விவரம்:

    கடந்த 24 மணி நேரத்தில் யுக்ரேனிய பிராந்தியத்தில் உள்ள ரஷ்ய படைகளின் நிலைகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் இல்லை.

    ரஷ்ய ராணுவத்துக்கு எதிரான யுக்ரேனிய தரப்பு உத்வேகம் மற்றும் மன உறுதியின்மை, யுக்ரேனியர்களின் ஆக்ரோஷமான சண்டைகள் ஆகியவற்றுடன் தளவாட பற்றாக்குறையை ரஷ்யா எதிர்கொண்டு வருகிறது.

    மேரியுபோல் நகருக்கு அருகே ரஷ்யா அதிக இடங்களை ஆக்கிரமித்துள்ளது. அங்கு ரஷ்யா துறைமுகத்தை கைப்பற்ற முயற்சிக்கும் போது கடுமையான சண்டை நடந்து வருகிறது " என்று பாதுகாப்புத்துறை கூறியுள்ளது.

  14. கே.வி பள்ளிகளில் கட்டாய சமஸ்கிருதத்தை எதிர்க்கும் திமுக - பாஜக என்ன சொல்கிறது?

    இந்திய கல்வித்துறையின் மத்திய பாடத்திட்டத்தின் கீழ் இயங்கி வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சமஸ்கிருத மொழி கட்டாய பாடமாக வைக்கப்பட்டதற்கு திமுக எம்.பி கனிமொழி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    `மாநில அரசின் கட்டாய தமிழ்மொழிச் சட்டம் என்பது கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா ஆகிய சிறப்புப் பள்ளிகளுக்குப் பொருந்தாது.

    இருப்பினும், அந்தந்த மாநிலங்களில் உள்ள மொழியை கற்றுக் கொடுப்பதுதான் சிறந்தது'' என்கின்றனர் கல்வியாளர்கள்.

    இது குறித்து விரிவாக படிக்க

  15. வந்துகொண்டிருக்கும் செய்தி, ஆஸ்கார் விருது 2021: 'கிங் ரிச்சர்டுக்காக' சிறந்த நடிகருக்கான விருதை வென்ற வில் ஸ்மித்

    கிங் ரிச்சர்ட் படத்திற்காக வில் ஸ்மித்துக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த படத்தில், டென்னிஸ் நட்சத்திரம் செரீனா மற்றும் வீனஸ் வில்லியம்ஸின் தந்தை கிங் ரிச்சர்ட் ஆக அவர் நடித்துள்ளார். விருது பெற்றபோது உணர்ச்சிபூர்வமாக பேசிய வில் ஸ்மித் கிறிஸ் ராக்கை மேடையில் தாக்கியதற்காக மன்னிப்பு கேட்டார்.

    விருது வழங்கும் விழாவில் நடந்த இந்த சம்பவத்திற்கு அவர் வருத்தம் தெரிவித்தார்.

    "நான் அகாடமியிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். விருதுக்கு முன்மொழியப்பட்ட அனைத்து சக கலைஞர்களிடமும் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்," என்று வில் ஸ்மித் கூறினார்.

    நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக், நடிகர் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட் ஸ்மித்தைப் பற்றி கேலி செய்தார். இதையடுத்து விழா பகுதியிலேயே கிறிஸ் ராக்கை வில் ஸ்மித் கன்னத்தில் அறைந்த நிகழ்வு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

  16. வந்துகொண்டிருக்கும் செய்தி, ஆஸ்கர் விருதுகள் - ஆறு விருதுகளை குவித்த திரைப்படம் எது?

    அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் 94வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.

    இதுவரை வழங்கப்பட்ட விருதுகளில், சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த பின்னணி இசை, சிறந்த சவுண்ட் ஆகிய பிரிவுகளில், 'டுன்' என்ற திரைப்படம் விருதுகளை குவித்துள்ளன. சிறந்த அனிமேஷன் படமாக, டிஸ்னி தயாரித்த 'என்காண்டோ' (Encanto) திரைப்படம் தேர்வாகியுள்ளது.

    விருதுக்கு தேர்வானவர்கள் பற்றி முழுமையாக அறிய

  17. இன்றைய நேரலைக்கு வரவேற்கிறோம்

    பிபிசி தமிழ் நேரலை பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம். இன்றைய உலகம், இந்திய நிகழ்வுகளை இந்த பக்கத்தில் உங்களுக்கு வழங்குகிறோம். இதுவரை நடந்த சில நிகழ்வுகள் இதோ.

    • யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி, ரஷ்யா உடனான தமது நாட்டின் அடுத்த சுற்று அமைதிப் பேச்சுக்களில் யுக்ரேனிய இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு தான் தனது முன்னுரிமை என்று கூறியுள்ளார்.
    • யுக்ரேனும் ரஷ்யாவும் இந்த வாரம் துருக்கியில் நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. அதில் நடுநிலை தன்மையை ஏற்றுக்கொள்வது பற்றி விவாதிக்க தயாராக இருப்பதாக ஸெலென்ஸ்கி கூறியுள்ளார்.
    • ரஷ்யாவில் ஆட்சி மாற்றத்துக்கு அழைப்பு விடுப்பீர்களா என்று எழுப்பிய கேள்விக்கு அத்தகைய எண்ணம் இல்லை என்று கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.
    • யுக்ரேனின் கீயவ் பிராந்தியத்தில் ரஷ்ய படையினர் கடுமையான உயிர் சேதத்தை சந்தித்துள்ளதால் தமது படையினரை ரஷ்யா திரும்ப வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக யுக்ரேனிய ராணுவ தலைமைத் தளபதி கூறியுள்ளார். ஏற்கெனவே பெலாரூஸ், ரஷ்யாவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள தமது அதிரடிப்படையினரை ரஷ்யா திரும்பப் பெற்றுள்ளது.
    • ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவில் ஹாலிவுட் நட்சத்திரங்கள் சிலர் யுக்ரேனில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான கொடியை தங்களுடைய ஆடைகளில் பொருத்தியவாறு தோன்றினர்.
    • இந்திய அரசுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் நடத்தும் இரண்டு நாட்கள் வேலைநிறுத்த போராட்டம் இன்று காலை தொடங்கியது. தமிழகத்தில் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    • சிஐடியு, ஐஎன்டியுசி., எச்எம்எஸ், ஏஐடியுசி, எல்பிஎஃப் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் இணைந்த அகில இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு இந்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த போராட்டத்துக்கு நெடுஞ்சாலைகள், போக்குவரத்து, மின்சாரம் போன்ற துறைகளின் தொழிலாளர்கள் சங்கங்களும் ஆதரவு தெரிவித்து உள்ளன.