பல ஆண்டுகளாக போரை நடத்த யுக்ரேன் விரும்பவில்லை: ஸெலென்ஸ்கி

“நாங்கள் வாழ விரும்புகிறோம், எங்கள் மக்களை காப்பாற்ற விரும்புகிறோம்,” என ஸெலென்ஸ்கி கூறினார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

நந்தினி வெள்ளைச்சாமி

  1. நன்றி நேயர்களே...

    இன்றைய நேரலைப் பக்கம் இத்துடன் நிறைவடைகிறது. மீண்டும் புதிய நேரலை பக்கம் நாளை காலை தொடங்கும்.

    இன்று காலையில் இருந்து இன்றைய நேரலை பக்கத்தில் பதிவான முக்கிய செய்திகளை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.

    • வடகொரியா தடை செய்யப்பட்ட கண்டம்விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணையை, 2017ம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக சோதனை செய்ததாக, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் தெரிவித்துள்ளன.
    • யுக்ரேன் – ரஷ்யா போர் இன்றுடன் ஒரு மாதத்தை நிறைவு செய்துள்ள நிலையில், நேட்டோ அவசரகால உச்சி மாநாட்டுக்காக நேட்டோ நாடுகளின் தலைவர்கள் இன்று பிரஸ்ஸல்ஸில் கூடினர்.
    • யுக்ரேன் – ரஷ்யா போர் தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்காக, நேட்டோ அவசரகால உச்சி மாநாட்டுக்காக நேட்டோ நாடுகளின் தலைவர்கள் பிரஸ்ஸல்ஸில் கூடியுள்ளனர். நேட்டோ வரலாற்றில் இது மிக முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக கருதப்படுகிறது.
    • கிழக்கு ஐரோப்பா மற்றும் ஸ்லொவாக்கியா, ஹங்கேரி, பல்கேரியா, ரொமானியா உள்ளிட்ட நாடுகளில் இன்னும் ஆயிரக்கணக்கான படையினரை நிறுத்துவதற்கு இம்மாநாட்டில் ஒப்புதல் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • இந்த மாநாட்டில் காணொலி வாயிலாக பேசிய யுக்ரேன் அதிபர் வொலாடிமிர் ஸெலென்ஸ்கி யுக்ரேனியர்களின் தைரியத்தைப் பாராட்டிய அதே வேளையில், “எங்கள் வானத்தைக் காப்பாற்ற வேண்டும்” என மீண்டும் வலியுறுத்தினார். யுக்ரேன் வான் தளத்தை 'நோ ஃப்ளை சோன்'ஆக (வான் பரப்பில் விமானம் பறக்கத் தடை) அறிவிக்க வேண்டும் என்பதையே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
    • சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி விலகியுள்ளார். இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ரவீந்திர ஜடேஜா வழிநடத்துவார் என தோனி முடிவு செய்துள்ளதாக அந்த அணி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பிபிசிதமிழின்புதியநேரலைப்பக்கம்நாளைகாலைமீண்டும்தொடங்கும். மேலதிகச்செய்திகளுக்குமுகப்புபக்கம்செல்லவும்.

    பிபிசிதமிழின்பேஃஸ்புக்,ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப்பக்கங்கள்வாயிலாகவும்செய்திகளைஅறியலாம்.

  2. கொரோனா வைரசின் 'கவலைக்குரிய' திரிபுகள் குறித்த முக்கிய தகவல்கள்

  3. தடை செய்யப்பட்ட கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை நடத்திய வடகொரியா

    வடகொரியா ஏவுகணை சோதனை

    பட மூலாதாரம், GETTY IMAGES

    வடகொரியா தடை செய்யப்பட்ட கண்டம்விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணையை, 2017ம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக சோதனை செய்ததாக, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் தெரிவித்துள்ளன.

    இந்த ஏவுகணை 1,100 கி.மீ. தூரம் சென்று (684 மைல்கள்) ஒரு மணிநேரத்தில் ஜப்பான் கடலில் விழுந்ததாக ஜப்பான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அணு ஆயுதங்களை தாங்கி செல்லும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட இந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், அமெரிக்கா வரை சென்று தாக்கும் திறன் கொண்டவை.

    வடகொரியாவின் இந்த சோதனைக்கு அதன் அண்டை நாடுகள் மற்றும் அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.

  4. உடனடியாக போரை நிறுத்த வேண்டும் – புதினுக்கு நேட்டோ நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தல்

    யென்ஸ் ஸ்டோல்டென்பெர்க்

    பட மூலாதாரம், Nato

    யுக்ரேன் – ரஷ்யா போர் இன்றுடன் ஒரு மாதத்தை நிறைவு செய்துள்ள நிலையில், நேட்டோ அவசரகால உச்சி மாநாட்டுக்காக நேட்டோ நாடுகளின் தலைவர்கள் இன்று பிரஸ்ஸல்ஸில் கூடினர்.

    இம்மாநாட்டில் காணொளி காட்சி வாயிலாக பேசிய யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி, “யுக்ரேன் பல ஆண்டுகளாக போரை நடத்த விரும்பவில்லை. நாங்கள் வாழ விரும்புகிறோம், எங்கள் மக்களை காப்பாற்ற விரும்புகிறோம்,” என அவர் கூறினார்.

    மாநாடு நிறைவடைந்த நிலையில், நேட்டோ பொதுச் செயலாளர் யென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் செய்தியாளர்களை சந்தித்து, மாநாட்டில் விவாதிக்கப்பட்டது குறித்து எடுத்துரைத்தார்.

    அப்போது பேசிய யென்ஸ் ஸ்டோல்டென்பெர்க், யுக்ரேனில் ரஷ்யப் படையெடுப்பு, இந்த தலைமுறையில் நிகழ்ந்த பாதுகாப்பு மீதான மிகப்பெரிய அச்சுறுத்தல் என தெரிவித்தார்.

    தங்களின் சுதந்திரம் மற்றும் வருங்காலத்திற்காக யுக்ரேன் மக்கள் தைரியத்துடனும் உறுதியுடனும் சண்டையிட்டு வருகின்றனர் என அவர் தெரிவித்தார்.

    “நாங்கள் யுக்ரேன் மக்களுடன் துணைநிற்கிறோம்” என அவர் கூறினார்.

    இந்த மாநாட்டில் கிழக்கு ஐரோப்பாவில் தங்களின் பாதுகாப்பை வலுப்படுத்த நேட்டோ நாடுகள் ஒப்புதல் தெரிவித்துள்ளன.

    “நேட்டோ பாதுகாப்பு திட்டங்களை முடுக்கிவிட்டுள்ளோம். கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ படையின் 40,000 துருப்புகளை நிறுத்தியுள்ளோம்,” என, நேட்டோ நாடுகள் வெளியிட்ட கூட்டறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஸ்லொவாக்கியா, ஹங்கேரி, பல்கேரியா, ரொமானியா உள்ளிட்ட நாடுகளுக்கு நான்கு புதிய படைக்குழுக்கள் அனுப்பப்படும் என, யென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் முன்னதாக அறிவித்திருந்தார்.

    யுக்ரேனுக்கு உதவுவதற்கான அடுத்தகட்ட திட்டங்கள் குறித்தும் யென்ஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

    உயர் தயார்நிலையுடன் கூடிய அதிகளவிலான படைகள் கிழக்குப்பகுதியில் நிறுத்தப்படும் எனவும், வான் தளத்தில் அதிக ஜெட் விமானங்களும், கடல்வழி பாதுகாப்புக்காக, நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளிட்டவை நிறுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

    ராணுவ ஆயுதங்கள் அதிகரிப்பு மற்றும் சைபர் பாதுகாப்பு உள்ளிட்டவை பலப்படுத்தப்படும் எனவும், அணு ஆயுதங்கள் மற்றும் உயிரி ஆயுத அச்சுறுத்தல்களுக்கு எதிராக யுக்ரேன் தன்னை பாதுகாத்துக்கொள்ள நேட்டோ உதவும் எனவும் அவர் தெரிவித்தார்.

    நேட்டோ நாடுகளின் தலைவர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில், “உடனடியாக போரை நிறுத்த வேண்டும். யுக்ரேனிலிருந்து தங்கள் நாட்டு படையினரை திரும்பப்பெற வேண்டும்” என, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை வலியுறுத்தியுள்ளனர்.

  5. பல ஆண்டுகளாக போரை நடத்த யுக்ரேன் விரும்பவில்லை: ஸெலென்ஸ்கி

    வொலோடிமிர் ஸெலென்ஸ்கி

    இன்று பிரஸ்ஸல்ஸில் நடைபெற்று வரும் நேட்டோ அவசரகால உச்சி மாநாட்டில் யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி காணொளி காட்சி வாயிலாக பேசினார்.

    இந்த மாநாட்டில், “எங்கள் வானத்தைக் காப்பாற்ற வேண்டும்” என மீண்டும் ஸெலென்ஸ்கி வலியுறுத்தினார். யுக்ரேன் வான் தளத்தை 'நோ ஃப்ளை சோன்'ஆக (வான் பரப்பில் விமானம் பறக்கத் தடை) அறிவிக்க வேண்டும் என்பதையே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், பெரும் அழிவுகளையும், விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்களை ரஷ்யா பயன்படுத்தி வருவதை கண்கூடாக பார்த்துவருவதாக அவர் தெரிவித்தார்.

    ரஷ்யா தங்களிடம் உள்ள அனைத்து ஆயுதங்களையும் வரையறையின்றி பயன்படுத்திவருவதாகவும், குடியிருப்புகள், மருத்துவமனைகள் மற்றும் பாலங்களை ரஷ்யப்படைகள் இலக்கு வைப்பதாகவும் ஸெலென்ஸ்கி கூறினார்.

    இதுவரை யுக்ரேன் எந்தவொரு போர் விமானத்தையும் மற்ற நாடுகளிடமிருந்து பெறவில்லை என அவர் தெரிவித்தார். மேலும், தங்களுக்கு ராணுவ டாங்கிகளை வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். “எங்களுக்கு டாங்கிகளை வழங்குங்கள், எங்களுக்கு அதனை விற்பனை செய்யுங்கள்” என அவர் கூறினார். ஆனால், இதற்கு நேட்டோ நாடுகளிடமிருந்து தெளிவான பதில் இன்னும் கிடைக்கப்பெறவில்லை.

    “யுக்ரேன் பல ஆண்டுகளாக போரை நடத்த விரும்பவில்லை” என அவர் தெரிவித்தார். “நாங்கள் வாழ விரும்புகிறோம், எங்கள் மக்களை காப்பாற்ற விரும்புகிறோம்,” என அவர் கூறினார்.

    ஆனால்,தான் நேட்டோவை குற்றம்சாட்டவில்லை என அவர் கூறினார். “எங்களின் நகரங்களை அழிப்பது அவர்களின் (நேட்டோ) ஏவுகணைகள் அல்ல. எங்களுக்கு வெடிமருந்துகளை அதிகம் வழங்குவதன் மூலம், இனி ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க நேட்டோ நாடுகள் எங்களுக்கு உதவ வேண்டும்” என அவர் தெரிவித்தார்.

  6. விங்ஸ் இந்தியா 2022: ஹைதராபாத்தில் இன்று தொடக்கம்

    விமானப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் இந்திய தொழில் மற்றும் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபிக்கி) ஆகியவை இணைந்து ‘விங்ஸ் இந்தியா 2022’ எனும் ஆசியாவின் மிகப்பெரிய விமானப் போக்குவரத்து தொடர்பான நிகழ்ச்சி இன்று (மார்ச் 24) ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி மார்ச் 27 வரை நடைபெறுகிறது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  7. யுக்ரேனில் சமீபத்திய செய்தி என்ன?

    யுக்ரேன்

    பட மூலாதாரம், Ukrainian Navy

    இந்த நேரலைப் பக்கத்தில் இப்போதுதான் இணைந்தீர்களா? யுக்ரேன் – ரஷ்யா போரில் இன்று இதுவரை என்ன நடந்திருக்கிறது என்பதை இங்கே வழங்குகிறோம்.

    • யுக்ரேன் – ரஷ்யா போர் தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்காக, நேட்டோ அவசரகால உச்சி மாநாட்டுக்காக நேட்டோ நாடுகளின் தலைவர்கள் பிரஸ்ஸல்ஸில் கூடியுள்ளனர். நேட்டோ வரலாற்றில் இது மிக முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக கருதப்படுகிறது.
    • கிழக்கு ஐரோப்பா மற்றும் ஸ்லொவாக்கியா, ஹங்கேரி, பல்கேரியா, ரொமானியா உள்ளிட்ட நாடுகளில் இன்னும் ஆயிரக்கணக்கான படையினரை நிறுத்துவதற்கு இம்மாநாட்டில் ஒப்புதல் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • இந்த மாநாட்டில் காணொலி வாயிலாக பேசிய யுக்ரேன் அதிபர் வொலாடிமிர் ஸெலென்ஸ்கி யுக்ரேனியர்களின் தைரியத்தைப் பாராட்டிய அதே வேளையில், “எங்கள் வானத்தைக் காப்பாற்ற வேண்டும்” என மீண்டும் வலியுறுத்தினார். யுக்ரேன் வான் தளத்தை 'நோ ஃப்ளை சோன்'ஆக (வான் பரப்பில் விமானம் பறக்கத் தடை) அறிவிக்க வேண்டும் என்பதையே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
    • யுக்ரேனில் இன்று காலை ரஷ்யா பாஸ்பரஸ் வெடிகுண்டுகளை பயன்படுத்தி தாக்குதல் நிகழ்த்தியதாக ஸெலென்ஸ்கி குற்றம்சாட்டினார். ஆனால், அவருடைய இந்த குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை ஸெலென்ஸ்கி வழங்கவில்லை. மேலும், அத்தாக்குதல் எங்கு நிகழ்ந்தது என்பதையும் தெரிவிக்கவில்லை.
    • யுக்ரேனின் துறைமுக நகரமான பெர்டியான்ஸ்கில் ரஷ்ய கப்பலை அழித்ததாக, யுக்ரேன் கடற்படை தெரிவித்துள்ளது.
    • யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து வரும் நிலையில், ரஷ்யாவுக்கு எதிராக மேலும் பல தடைகளை பிரிட்டன் அரசாங்கம் விதித்துள்ளது. அதில், ரஷ்யாவை சேர்ந்த மேலும் 65 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு பிரிட்டன் தடை விதித்துள்ளது.
  8. யுக்ரேன் போர்: நேட்டோ என்றால் என்ன? ரஷ்யா அதை நம்ப மறுப்பது ஏன்?

    யுக்ரேன்

    பட மூலாதாரம், GETTY IMAGES

    நேட்டோ என்றால் என்ன?

    நேட்டோ என்பது வடக்கு அட்லான்டிக் ஒப்பந்த அமைப்பு. அமெரிக்கா, கனடா, பிரிட்டன், பிரான்ஸ் உள்பட 12 நாடுகள் சேர்ந்து 1949இல் இந்த ராணுவ கூட்டு அமைப்பை உருவாக்கின.

    இதில் உறுப்பினராக உள்ள எந்தவொரு நாடு மீது ஆயுத தாக்குதல் நடந்தால், அந்த நாட்டைக் காக்க மற்ற உறுப்பு நாடுகள் ஓரணியாக சேர இணங்க வேண்டும்.

    ஐரோப்பாவில் பனிப்போர் காலத்துக்குப் பிந்தைய ரஷ்ய விரிவாக்க அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் நோக்கத்தையே இந்த அமைப்பு குறிக்கோளாகக் கொண்டிருந்தது.

    1955இல் நேட்டோ கூட்டுப்படைக்கு எதிர்வினையாற்றும் வகையில் கிழக்கு ஐரோப்பிய கம்யூனிஸ்ட் நாடுகள் கூட்டணியுடன் ரஷ்யா வார்சா ஒப்பந்தத்தை ஏற்படுத்தி தனியாக ராணுவ கூட்டணியை அமைத்தது.

    வார்சா ஒப்பந்தத்தின்படி இணைந்த நேச நாடுகளில் பல 1991இல் சோவித் யூனியன் பிளவுபட்ட பிறகு ஒப்பந்தத்தில் இருந்து விலகி நேட்டோவில் உறுப்பினர்களாயின. இப்போது நேட்டோ அமைப்பில் 30 உறுப்பு நாடுகள் உள்ளன.

  9. 10 மாத கால திமுக ஆட்சியின் மீது பெண்களுக்கு நம்பிக்கை இல்லை - அண்ணாமலை

    அண்ணாமலை

    விருதுநகரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பட்டியலின பெண்ணுக்கு நீதி வேண்டி பாஜக சார்பில் இன்று விருதுநகர் எம்ஜிஆர் சிலை அருகில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

    இந்த போராட்டத்தின்போது பேசிய அண்ணாமலை, “திமுக ஆட்சி பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஆட்சியாக மாறி உள்ளது. ஒவ்வொரு நாளும் நாம் படிக்கின்ற செய்தி முந்தையநாள் செய்தியை விட கோரமாக உள்ளது.

    பாஜக அரசியல் செய்வதற்காக இங்கு கூடவில்லை. 22 வயதுஇளம்பெண் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக பேச இங்கு யாரும் இல்லை. அதனால் பாஜக களமிறங்கியது. உடனடியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தியாவில் எந்த பாலியல் வழக்கிலும் கிடைக்காத தண்டனை இந்த வழக்குக்கு கிடைக்கும் என அறிவித்துள்ளார். ஆனாலும் அடுத்தடுத்து பாலியல் குற்றங்கள் நடைபெறுகிறது. மக்களுக்கு திமுக ஆட்சியின் மீது நம்பிக்கை இல்லை.

    இரண்டு அமைச்சர்கள் இந்த மாவட்டத்தில் இருந்து கொண்டு காவல்துறையை நசுக்குகின்றனர். காவல் துறைக்கு சுதந்திரம் இல்லாதபோது 22 வயது இளம் பெண்ணுக்கு எப்படி காவல்துறை பாதுகாப்பு கொடுக்க முடியும்? தற்போது தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் தேவை நம்பிக்கை காவல்துறை மீது பெண்களுக்கு நம்பிக்கை வரவேண்டும். திமுகவினர் காவல்துறையை கட்டப்பஞ்சாயத்துக்கு பயன்படுத்துகிறார்கள்” என பேசினார்.

  10. பொடா வழக்கு: `சிறைக்குள் வசதிகளை அனுபவித்தாரா வைகோ?' - 5 கேள்விகளும் அதிர்ச்சி பதில்களும்

      • எழுதியவர், ஆ. விஜயானந்த்
      • பதவி, பிபிசி தமிழ்
    வைகோ

    பட மூலாதாரம், GETTY IMAGES

    "நான்தான் ம.தி.மு.கவின் அவைத் தலைவர். என்னை அவரால் ஒன்றும் செய்ய முடியாது. பொடா சட்டத்தில் அழகுசுந்தரமும் செவந்தியப்பனும் 19 மாதங்கள் சிறையில் இருந்தனர். சிறைக்குள் தனக்குத் தேவையான வசதிகளை வைகோ செய்து கொண்டார். வேலூர் சுப்ரமணியத்தைக் கேட்டால், `என்னென்ன வசதிகள் வெளியில் இருந்து வைகோவுக்கு கிடைத்தது?' எனச் சொல்வார். ஆனால், அவர்களை மோசம் என வைகோ சொல்கிறார். கட்சி தொடங்கியபோது, ஸ்டாலினை முன்னிறுத்துவதை எதிர்த்து, `வாரிசு அரசியல் கூடாது' என்றார். அதைத்தான் செவந்தியப்பனும் அழகு சுந்தரமும் கூறுகின்றனர்.

  11. பாஸ்பரஸ் வெடிகுண்டுகளை ரஷ்யா பயன்படுத்தியது: யுக்ரேன் அதிபர் குற்றச்சாட்டு

    பிரஸ்ஸல்ஸில் நேட்டோ அவசரகால உச்சி மாநாடு தற்போது நடைபெற்று வருகிறது. இதில், யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி காணொளி காட்சி வாயிலாக உரையாற்றி வருகிறார்.

    அவர் பேசுகையில், யுக்ரேனில் இன்று காலை ரஷ்யா பாஸ்பரஸ் வெடிகுண்டுகளை பயன்படுத்தி தாக்குதல் நிகழ்த்தியதாக குற்றம்சாட்டினார். “குழந்தைகள் மீண்டும் இறக்கின்றனர், மக்கள் இறக்கின்றனர்” என அவர் தெரிவித்தார்.

    ஆனால், அவருடைய இந்த குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை ஸெலென்ஸ்கி வழங்கவில்லை. மேலும், அத்தாக்குதல் எங்கு நிகழ்ந்தது என்பதையும் தெரிவிக்கவில்லை.

  12. மோசமான இருண்ட காலம் இது: யுக்ரேன் அதிபர்

    வொலோடிமிர் ஸெலென்ஸ்கி

    இன்று பிரஸ்ஸல்ஸில் நடைபெற்று வரும் அவசரகால உச்சி மாநாட்டில் யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி காணொளி காட்சி வாயிலாக பேசிவருகிறார்.

    “மேற்கு நாடுகளுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் சிக்கிக்கொண்டு, ஒரு நெருக்கடியான சூழலில்” யுக்ரேன் இருப்பதைப் போன்று தான் உணர்வதாக அவர் தெரிவித்தார்.

    யுக்ரேன் – ரஷ்யா போர் ஒரு மாதத்தை நிறைவுசெய்துள்ளதை குறிப்பிட்டுள்ள அவர், தங்கள் நாடு “துணிச்சலாக இதனை எதிர்கொண்டு வருவதாகவும், “அழிவின் மோசமான ‘இருண்ட’ மாதமாக இது இருந்தது” எனவும் அவர் தெரிவித்தார்.

    இந்த போரை யுக்ரேன் துணிச்சலுடன் எதிர்கொண்டு வருவதாகவும், ஆனால், “ஆயிரக்கணக்கானோரின் இறப்புகள், அழிக்கப்பட்ட நகரங்கள், சுமார் 1 கோடி மக்களின் இடம்பெயர்வு” ஆகியவற்றை இதற்கு விலையாகக் கொடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

  13. யுக்ரேனின் இஸும் நகரை கைப்பற்றியதாக ரஷ்யா அறிவிப்பு

    யுக்ரேன்

    பட மூலாதாரம், Volodymyr Matsokin/Reuters

    கிழக்கு யுக்ரேனின் கார்கீவில் உள்ள இஸும் நகரை கைப்பற்றிவிட்டதாக, ரஷ்யா தெரிவித்துள்ளது என, ரஷ்ய அரசு ஊடகமான ரோஸியா 24 நியூஸ் சேனல் தெரிவித்துள்ளது.

    “யுக்ரேனில் சிறப்பு ராணுவ நடவடிக்கையை ரஷ்ய ஆயுதப்படைகள் தொடர்ந்துவருகின்றன. மார்ச் 24 அன்று காலை, கார்கீவில் உள்ள இஸும் நகரை ரஷ்ய ராணுவம் தங்களின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது,” என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் இகோர் கோனஷென்கோவ் தெரிவித்துள்ளார்.

    ஆனால், அந்நகரில் சண்டை இன்னும் தொடர்ந்து வருவதாக, யுக்ரேன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    அமெரிக்க பாதுகாப்பு துறையின் பெயர் தெரிவிக்க விரும்பாத மூத்த அதிகாரி ஒருவர் இந்த வார ஆரம்பத்தில் கூறுகையில், கார்கீவின் தென் – கிழக்கில் உள்ள சிறிய நகரத்தில் எதிர் தாக்குதலை யுக்ரேன் ராணுவம் தொடங்கியுள்ளதாக தெரிவித்தார்.

    “யுக்ரேன் படையினரால் குறிப்பிடத்தகுந்த சண்டை அங்கு நடைபெற்று வருவதையும், அந்நகரை மீண்டும் தங்கள் வசமாக்க முயற்சிப்பதையும் நாங்கள் பார்த்துவருகிறோம்,” என அவர் தெரிவித்ததாக மேற்கோளிட்டு ஏஎப்பி செய்தி முகமை தெரிவித்துள்ளது.

    வடகிழக்கு மற்றும் தென்கிழக்கில் ரஷ்யப்படைகளை இணைக்க அனுமதிக்கும் கிழக்கு டான்பஸ் பிராந்தியத்திற்கு செல்வதற்கான முக்கியமான வழித்தடமாக இஸும் நகர் உள்ளது. கார்கீவின் மையப்பகுதியாக உள்ள இஸும் நகரில், சுமார் 50,000 பேர் வசித்துவருகின்றனர். அங்கு முக்கியமான ரயில்வே சந்திப்பு ஒன்றும் உள்ளது.

  14. மாணவர்களுக்கான காலை உணவு: கனிமொழி எம்பி கேள்விக்கு மத்திய கல்வித் துறை இணை அமைச்சர் பதில்

    கனிமொழி

    பட மூலாதாரம், GETTY IMAGES

    "மாணவர்களுக்கான தேசிய மதிய உணவுத் திட்டத்தில் காலை உணவு சேர்க்கப்படவில்லை" என மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் அன்னபூர்ணா தேவி, திமுக மக்களவை துணைத் தலைவர் கனிமொழி எம்பியின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

    "தேசிய மதிய உணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் 12 கோடி மாணவ மாணவிகளுக்கும் காலை உணவு வழங்குவதற்கு 4,000 கோடி ரூபாய் தேவைப்படும் என 2021-22ஆம் ஆண்டில் ஒன்றிய அரசு மதிப்பிட்டது. அதன்படி, மாணவ மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஏதேனும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதா?

    இந்த விவகாரம் குறித்து மத்திய அமைச்சரவை ஆய்வு செய்ததா?" என, மக்களவை திமுக துணைத் தலைவர் கனிமொழி எம்பி எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.

    இதற்கு மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் அன்னபூர்ணா தேவி பதிலளிக்கையில், "தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2013 இன் படி 1 முதல் எட்டாவது வரை படிக்கக்கூடிய அல்லது 6 முதல் 14 வயது இருக்கக்கூடிய அனைத்து உள்ளாட்சி, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் ஊட்டச்சத்துடன்சமைக்கப்பட்ட மதிய உணவு பெற தகுதியானவர்கள் ஆவர்.

    அரசு விடுமுறை நாட்கள் தவிர மற்ற வேலை நாட்களில் இந்த உணவு அவர்களுக்கு வழங்கப்படுகிறது. பிரதம மந்திரி போஷன் திட்டத்தின்படி தொடக்கப் பள்ளி குழந்தைகளுக்கு 12 கிராம் புரதத்தை உள்ளடக்கிய 450 கலோரிகள் உணவும், தொடக்கப்பள்ளிகளுக்கு அடுத்த நிலை குழந்தைகளுக்கு 20 கிராம் புரதம் உள்ளிட்ட 700 கலோரி உணவும் வழங்கப்படுகிறது.

    இந்த நிலையில், பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவு அளிப்பது குறித்த திட்டம் எதுவும் அரசிடம் இல்லை. அதேநேரம் சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் பால்,முட்டை, பழங்கள் போன்ற கூடுதல் ஊட்டச்சத்து பொருட்களை தங்களது சொந்த நிதியிலிருந்து வழங்கி வருகின்றன" என்று பதில் அளித்துள்ளார்.

  15. ரஷ்யாவுக்கு எதிராக மேலும் தடைகளை விதித்த பிரிட்டன்

    யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து வரும் நிலையில், ரஷ்யாவுக்கு எதிராக மேலும் பல தடைகளை பிரிட்டன் அரசாங்கம் விதித்துள்ளது. அதில், ரஷ்யாவை சேர்ந்த மேலும் 65 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு பிரிட்டன் தடை விதித்துள்ளது.

    ஏற்கெனவே ரஷ்ய அரசாங்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர், பணக்கார தொழிலதிபர்கள் ஆகியோருக்கு எதிராக பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தடை விதித்துள்ளன.

  16. மகேந்திர சிங் தோனி: இந்திய கிரிக்கெட்டை உச்சங்களுக்கு எடுத்து சென்ற தலைவனின் கதை

    மகேந்திர சிங் தோனி

    பட மூலாதாரம், GETTY IMAGES

    "தலைவன் பிறப்பதில்லை, காலமும் சூழலும் சிந்தனைகளுமே தலைவர்களை உருவாக்குகின்றன" என்ற தொடர் மகேந்திர சிங் தோனிக்குப் பொருந்தும்.

    தலைவர்களுக்கே உரிய தெளிவால் சாமானிய இந்தியர்களுக்கு சபலத்தை ஏற்படுத்தவல்ல மத்திய அரசுப் பணியை உதறிவிட்டு பேட்டை தூக்கிக் கொண்டு மைதானத்துக்கு ஓடினார். அந்த நொடியில் உருவாகத் தொடங்கினான் இந்திய கிரிக்கெட்டின் இரணியன்.

    வரலாறு எல்லா மனிதர்களையும் ஒரு வரியில் நினைவு கொள்ளும், சிலருக்கு பக்கங்களை வழங்கும், வெகு சிலருக்கு மட்டுமே அத்தியாயங்களை ஒதுக்கும். கிரிக்கெட் வரலாறு, தோனிக்கு அத்தியாயம் ஒதுக்கித் தந்தது. கிரிக்கெட் வரலாறு எம்.எஸ். தோனிக்கு முன் - பின் என்றானது.

  17. மகேந்திர சிங் தோனி குறித்த சுவாரஸ்ய தகவல்கள்

    மகேந்திர சிங் தோனி

    பட மூலாதாரம், JAN KRUGER-ICC / GETTY

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலக தோனி முடிவு செய்துள்ளார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், தோனி குறித்த சுவாரஸ்ய தகவல்கள் சிலவற்றை இங்கே வழங்குகிறோம்:

    1. அனைத்து ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் மகேந்திர சிங் தோனி. தோனியின் தலைமையின் கீழ் இந்திய அணி, 2007ல் ஐசிசி உலக டி20 போட்டி, 2011ல் கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் 2013ல் ஐசிசி சேம்பியன்ஸ் கோப்பை ஆகிய 3 போட்டிகளிலும் இந்தியா வென்றது.

    2. தோனிக்கு சிறு வயதில் முதலில் பிடித்தமான விளையாட்டு கால்பந்து. அவரது பள்ளி குழுவில் தோனி கோல் கீப்பராக இருந்தார். சென்னையின் எஃப்சி கால்பந்து அணியின் உரிமையாளர் தோனிதான். கால்பந்துக்கு பிறகு அவருக்கு பிடித்தமான விளையாட்டு பேட்மிண்டன்

    3. விளையாட்டை தாண்டி மோட்டர் ரேசிங் அவருக்கு பிடித்தமான ஒன்று. மஹி ரேசிங் குழு என்ற குழு ஒன்றை அவர் சொந்தமாக வாங்கியுள்ளார்.

    4. அவரது முடி அலங்காரத்திற்கு மிகவும் பெயர் போனவர் தோனி. ஒரு காலத்தில் நீண்ட முடி என்பது அவரது அடையாளமாக இருந்தது. பின்னர் அவர் பல முறை அவரது முடி அலங்காரத்தை மாற்றினார். பாலிவுட் நடிகர் ஜான் அபிரகாமின் தலைமுடி தோனிக்கு மிகவும் பிடிக்கும் என்று உங்களுக்கு தெரியுமா?

    5. 2011ல் இந்திய ராணுவத்தில் லெஃப்டினன்ட் கர்னலாக கெளரவிக்கப்பட்டார். இந்திய ராணுவத்தில் சேருவது அவரது சிறுவயது கனவு என்று தோனி பலமுறை கூறியிருக்கிறார்.

  18. வந்துகொண்டிருக்கும் செய்தி, நேட்டோ அவசரகால உச்சி மாநாடு தொடங்கியது

    நேட்டோ அவசரகால உச்சி மாநாடு

    யுக்ரேன் மீதான ரஷ்யப் படையெடுப்பு இன்றுடன் ஒரு மாதத்தை நிறைவு செய்துள்ள நிலையில், இதுதொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரஸ்ஸல்ஸில் நேட்டோ அவசரகால உச்சி மாநாட்டுக்காக நேட்டோ நாடுகளின் தலைவர்கள் கூடியுள்ளனர்.

    நேட்டோ நாடுகளின் தலைவர்கள் மாநாட்டுக்காக தற்போது கூடியுள்ள நிலையில், அவர்கள் அனைவரும் வழக்கமான “குழு புகைப்படம்” ஒன்றை எடுத்துக்கொண்டனர். யுக்ரேன் – ரஷ்யா போர் இரண்டாவது மாதத்தில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், இந்த மாநாடு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

  19. யுக்ரேன் Vs ரஷ்யா: "நான் சாக விரும்பவில்லை என கதறிய 5 வயது சிறுமி" - மேரியோபோல் பெண்ணின் கண்ணீர் சாட்சியம்

      • எழுதியவர், ஹுகோ பசிகா & ஒரிசியா கிமியாக்
      • பதவி, பிபிசி நியூஸ், வீவ், யுக்ரேன்
    யுக்ரேன்

    பட மூலாதாரம், bbc

    படக்குறிப்பு, மேரியோபோல் அரங்கம் தாக்குதலில் இருந்து உயிர் தப்பிய மரியா ரடியோநோவ்

    தனது நாய்களுக்காக வெளியில் உள்ள சமையலறையில் இருந்து சில மீன் துண்டுகளை வாங்கி வந்தார். ஆனால், அதன் பிறகுதான் குடிக்க தண்ணீர் இல்லை என்பதை உணர்ந்தார். அதனால், காலை பத்து மணியளவில், அவரது உடைமைகளுடன் நாய்களை கட்டிவிட்டு, தண்ணீர் வழங்கும் வரிசையில் நிற்க நுழைவாயிலுக்கு சென்றார்.

    அப்போதுதான், குண்டு வெடித்தது. சத்தம் பெரிய அளவில் கேட்டது. கண்ணாடி உடையும் சத்தம் கேட்டது.

    யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்களில் மிகவும் மோசமான பகுதியை மேரியோபோல் கண்டுள்ளது. அங்கு படையெடுத்த ரஷ்ய துருப்புகள் அந்த நகரத்தை சுற்றி வளைத்தன. அவர்கள் வான்வழியாகவும், நில வழியாகவும், சமீப காலமாக கடல் வழியாகவும் இடைவிடாமல் கிட்டத்தட்ட ஒரு மாத காலம் தாக்குதல்களை நடத்தினர். கிட்டதட்ட ஒரு லட்சம் பேர் இன்னும் சிக்கியுள்ளனர். அங்கு மின்சாரம் இல்லை; எரிவாயு இல்லை; தண்ணீர் இல்லை.

  20. வந்துகொண்டிருக்கும் செய்தி, சென்னை சூப்பர் கிங்ஸ்: கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி விலகல்

    தோனி

    பட மூலாதாரம், chennai super kings

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி விலகியுள்ளார். இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ரவீந்திர ஜடேஜா வழிநடத்துவார் என தோனி முடிவு செய்துள்ளதாக அந்த அணி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி விலகினாலும், அணியின் வீரராக இந்த சீசனிலும் அதற்கடுத்த சீசன்களிலும் அவர் தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு