கக்கூஸ் பட ஒளிப்பதிவாளர் இப்போது என்ன செய்கிறார் ?

பட மூலாதாரம், PALANI KUMAR/FACEBOOK
- எழுதியவர், ஆ. லட்சுமி காந்த் பாரதி
- பதவி, பிபிசி தமிழ்
- பிரசுரிக்கப்பட்டது
ஆவண புகைப்படம் மூலம் மக்கள் பிரச்சனைகளைப் பேசும் பல கலைஞர்கள் உண்டு. ஆனால், மக்களிடமே கேமராவைக் கொடுத்து, அவர்களது பிரச்சனைகளை கேமரா மொழியில் அவர்களே பேசுவதற்குப் பயிற்சி கொடுத்து, அவர்களையே கலைஞர்களாக மாற்றும் கலைஞர்கள் அரிதானவர்கள்.
பேசப்படாத சமூகங்களை பேசுவது வேறு. பேசப்படாத சமூகங்களையே பேச வைப்பது வேறு. சென்னையைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் பழனிக்குமார் இரண்டாவது வகைப் பணியை மேற்கொண்டு வருகிறார். 'கக்கூஸ்' ஆவணப்படத்தின் கேமரா கலைஞரான இவரது சொந்த ஆவண புகைப்படங்களும், சுற்றுச்சூழல் உள்ளிட்ட பிரச்னைகளை வெளிக்கொண்டு வருவதில் பங்காற்றுகின்றன. இவரது பின்னணி என்ன? இதோ அவரோடு ஒரு நேர்க்காணல்...
ஆவண புகைப்பட கலைஞர் ஆனது எப்படி ?ஆரம்பத்தில் மக்கள் சார்ந்த வாழ்வியல் மற்றும் அவர்கள் சந்திக்கக்கூடிய பிரச்னைகளை புகைப்படம் எடுப்பது உண்டு. அதன் தொடர்ச்சியாக 'கக்கூஸ்' என்ற ஆவணப்படத்தில் ஒளிப்பதிவாளராக இருந்தேன். பிறகு தமிழ்நாட்டில் நடக்கக்கூடிய முக்கிய பிரச்னை மற்றும் போராட்டங்கள் உள்ளிட்டவைகளை ஆவண புகைப்படம் செய்தேன். தற்போது வரை அதை தொடர்கிறேன்.

பட மூலாதாரம், PALANI KUMAR
உங்களுக்கும் கேமராவுக்குமான தொடர்பு எங்கு தொடங்கியது ?2014இல் எனக்கு கிடைத்த உதவித்தொகை மூலமாகவே முதலில் 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரு கேமராவை வாங்கினேன். அங்கு தொடங்கியது கேமராவுக்கும் எனக்குமான தொடர்பு. அந்த கேமரா என் கைக்கு வந்ததுக்கு பிறகு தான் பல்வேறு மாற்றங்கள் வந்தன. சாமானியர்கள் கையில் கேமரா வருவது அவ்வளவு சுலபம் இல்லை. அது ஒரு போராட்டம். அப்படியான போராட்டத்தை கடந்து தான் வந்தேன்.
சமீபத்தில் சென்னை சார்ந்த சுற்றுச்சூழல் பிரச்னையை மையப்படுத்தி நீங்கள் எடுத்த ஆவண புகைப்படத்தை எடுப்பதற்கான பின்னணி என்ன ?கடந்த இரண்டு வருடமாக வடசென்னை பகுதியில் உள்ள எண்ணூர் முதல் பழவேற்காடு வரையிலான பயணத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன். குறிப்பாக அங்குள்ள சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை மையப்படுத்தி ஆவணப்படத்தை எடுத்து வருகிறேன். அதே பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஈடுபடும் 'வெட்டிவேர் கலெக்டிவ்' என்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழுவினர், ஒரு முயற்சியை முன்னெடுக்க என்னை அணுகினார்கள். அது என்ன முயற்சி என்றால், வடசென்னை பகுதியில் உள்ள மாணவர்கள் சிலருக்கு புகைப்பட பயிற்சி கொடுத்து, அதன் மூலம் வடசென்னையில் மக்கள் சந்திக்கக்கூடிய அன்றாட சுற்றுச்சூழல் பிரச்னை முதல் அவர்கள் வாழ்வாதாரம் வரை எப்படி உள்ளது என்ற ஆவணப் புகைப்படம் எடுக்க வைக்கும் பணி அது.

பட மூலாதாரம், PALANI KUMAR
இந்த முயற்சி எனக்கு மிக வித்தியாசமான அனுபவத்தை கொடுத்தது. காரணம், நான் பயிற்சி அளித்த மாணவர்கள் அதே பகுதியில் பிறந்து வளர்ந்தவர்கள். என்னை விட அவர்களுக்கு அந்த பகுதியை பற்றி நன்றாகவே தெரியும். இதன் மூலம் அந்தப் பகுதியில் உள்ள மக்களின் வாழ்வு நிலை மற்றும் அந்தப் பகுதியில் சந்திக்கக்கூடிய அன்றாட பிரச்னைகளை மிக தீவிரமாக புகைப்படம் மூலம் அவர்களால் வெளிப்படுத்த முடிந்தது என்பதை நான் உணர்ந்தேன்.
இந்த முயற்சியை முன்னெடுக்கும் போது அந்த மாணவர்களுக்கு என்ன மாதிரியான பயிற்சியை அளித்தீர்கள்? என்னைப் பொருத்தவரை கேமரா சம்பந்தப்பட்ட டெக்னிக்கல் விஷயங்கள் சொல்லித் தருவதை விட ஒரு புகைப்படத்தை எடுப்பதற்கு அதை எப்படி பார்க்க வேண்டும் என்ற பார்வையே முக்கியமானது. கேமரா டெக்னிக்கல் விஷயங்களை நாளடைவில் எல்லோராலும் பழகிக் கொள்ள முடியும். அதனால் ஒரு புகைப்படத்தை எடுப்பதற்கு முன்பு அதை எப்படி எடுக்க வேண்டும், அதை எப்படி பார்க்க வேண்டும் என்ற பயிற்சியை அந்த மாணவர்களுக்கு நான் கொடுத்தேன். ஒரு புகைப்படத்தை எடுத்து, அதற்கு பிறகு அந்தப் புகைப்படம் புகைப்பட கலைஞன் எடுத்தது என்று சொல்வதை விட, அந்த புகைப்படத்தில் இருக்கக்கூடிய மக்களின் வாழ்வியல் அல்லது பிரச்னை சார்ந்த விஷயங்களை அனுபவித்து எப்படி அதை புகைப்படத்தில் வெளிக்கொண்டு வந்திருக்கிறார் என்பதை காட்ட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.பயிற்சி பெற்ற மாணவர்கள் எடுத்த புகைப்படத்தை பயன்படுத்தி ஒரு புகைப்பட கண்காட்சி வைத்தோம். அது அனைவராலும் வரவேற்கப்பட்டது. மேலும் அந்தப் பயிற்சியின் விளைவாக அந்த பயிற்சி பெற்ற மாணவர்களில் ஒருவர் தற்போது ஒரு பத்திரிக்கையில் பயிற்சி செய்தியாளராக உள்ளார். இதேபோல் மற்ற சில மாணவர்களுக்கு வேறு சில வாய்ப்புகளும் கிடைத்துள்ளன.

பட மூலாதாரம், PALANI KUMAR / Instagaram
உங்களுடைய அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன ?தற்போது நாகப்பட்டின மீனவர்களுக்கு புகைப்பட பயிற்சி கொடுத்து வருகிறேன். இதன் மூலம் அவர்கள் வாழ்வியலில் இருக்கும் பிரச்னை மற்றும் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்ட புகைப்படங்களை அவர்கள் எடுக்க உள்ளார்கள். மேலும், என்னை பொறுத்த வரை அடுத்தக்கட்ட நடவடிக்கை என்பது நான் இப்போது செய்து கொண்டிருக்கக்கூடிய ஆவணப் படங்கள் மூலமான ஆவணப்படுத்துதலை தொடர்வதே. ஏனென்றால், ஒரு ஆவண புகைப்படத்தை எடுப்பதன் மூலம் அந்த புகைப்படத்தை மையப்படுத்தி இருக்கக்கூடிய பிரச்னை, வெறும் புகைப்படத்தை எடுப்பதனால் மட்டும் தீராது. அந்தப் பிரச்னைக்கு சமூகம் சார்ந்த பல்வேறு தொடர்பும் உண்டு. தொடர்ச்சியாக ஒரு விஷயத்தை செய்வதன் மூலமே சமூகத்தில் இருக்கக்கூடிய பிரச்னைகளை களைய முடியும். உதாரணமாக நான் துப்புரவு பணியாளர்கள் சம்பந்தப்பட்ட ஆவண புகைப்படத்திற்கான வேலையை எப்போதோ தொடங்கினேன். தற்போதும் அது தொடர்கிறது. அவர்கள் பிரச்னை தீரும் வரை இப்படியான முன்னெடுப்பு எடுக்க வேண்டியது அவசியம் என கருதுகிறேன்.

பட மூலாதாரம், PALANI KUMAR
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்
































