கீயவில் வீடுகள், ஷாப்பிங் மையங்களில் குண்டுவீசி தாக்குதல்: புகைப்படங்கள்

யுக்ரேன் தலைநகர் கீயவில் பெரும் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

நந்தினி வெள்ளைச்சாமி

  1. வந்துகொண்டிருக்கும் செய்தி, சீனாவில் 132 பயணிகளுடன் விமானம் நொறுங்கி விபத்து

    132 பேருடன் பயணித்த சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானம் குவாங்சி மாகாணத்தில் விபத்துக்குள்ளானதாக சீன அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

    உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் முழுமையாகத் தெரியவில்லை.

    மலைப்பாங்கான பகுதியில் போயிங் 737 ஜெட் விமானம் விபத்துக்குள்ளானதால், காடுகளில் தீ விபத்து ஏற்பட்டதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    MU5735 விமானம் குன்மிங்கில் இருந்து உள்ளூர் நேரப்படி பகல் 1:15க்கு (05:15 GMT) புறப்பட்டு குவாங்சோவுக்குச் சென்று கொண்டிருந்தது.

    விபத்து நடந்த பகுதிக்கு மீட்புக் குழுவினர் அனுப்பப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

    வுஜோ மாகாணத்தில் உள்ள டெங் கவுண்டி அருகே விமானம் விழுந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குவாங்சி என்பது தென் கிழக்குப் பகுதியில் உள்ள முக்கிய நகரானன குவாங்சோவின் அண்டை மாகாணமாகும்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  2. யுக்ரேனின் சமீபத்திய செய்தி என்ன?

    யுக்ரேன்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, மேரியோபோல் நகரத்தில் தொடர் தாக்குதல்: கோப்புப்படம்

    இந்த நேரலை பக்கத்தில் இப்போதுதான் இணைந்தீர்களா? யுக்ரேனில் ரஷ்ய படையெடுப்பின் 26வது நாளில் என்ன நடக்கிறது என்பதை இங்கே வழங்குகிறோம்.

    மேரியோபோல் நகரத்தில் சுமார் 3,00,000 மக்கள் சிக்கியுள்ளதாக நம்பப்படும் நிலையில், அந்நகர மக்கள் சரணடைந்தால், துறைமுகத்தைவிட்டு பாதுகாப்பான பாதையில் செல்லலாம் என, ரஷ்யா இறுதி எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால், அதனை ஏற்க யுக்ரேன் மறுத்துவிட்டது.

    ரஷ்யாவின் மனிதநேய உறுதிமொழிகளை நம்ப முடியாது என பிபிசியிடம் தெரிவித்த மேரியோபோல் நகர மேயர், யுக்ரேனிய படைகள் சண்டையை தொடரும் என உறுதியளித்தார்.

    ரஷ்யப் படைகளால் சுற்றி வளைக்கப்பட்டுள்ள மேரியோபோல் நகரம், தொடர் தாக்குதலால் அழிவுக்கு உள்ளாகியுள்ளது. “பூமியில் ஒரு நரகம்” என, அந்நகரத்தின் சூழலை மேரியோபோல் எம்.பி. ஒருவர் விவரித்துள்ளார். அங்கு உணவு மற்றும் மருந்துகளின் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது.

    யுக்ரேனின் மற்ற நகரங்களிலும் தாக்குதல் தொடர்ந்து வருகிறது. தலைநகர் கீயவில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததாக தெரிவித்துள்ள அதிகாரிகள், வீடுகள் மற்றும் ஷாப்பிங் மையங்கள் தாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

    யுக்ரேனின் வட-கிழக்கு பகுதியிலிருந்து தலைநகரை நோக்கி முன்னேறும் ரஷ்யப்படைகளின் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், படையினரின் பெரும்பகுதி கீயவிலிருந்து 15 மைல்கள் (24 கி.மீ) தொலைவில் இருப்பதாகவும், பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இதனிடையே, யுக்ரேனின் வட-கிழக்கு நகரமான சுமியில் உள்ள வேதி தொழிற்சாலை ஒன்றில், அமோனியா கசிவு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நகரமும் ரஷ்யப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. இந்த வாயு ஆபத்தானது என்பதால், அந்த தொழிற்சாலையின் மூன்று மைல்கள் தொலைவில் உள்ள மக்கள், அங்கிருந்து வெளியேற வேண்டும் என, அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

  3. விவசாய நிலங்கள் வழியாக உயர் மின் கோபுரம்: இழப்பீடு வழங்கக்கோரி விவசாயிகள் போராட்டம்

    விவசாயிகள் போராட்டம்

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த பாஞ்சரை கூட்டுச் சாலையில், விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைத்ததற்காக, விவசாயிகளுக்கு உரிய நஷ்டஈடு வழங்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் இரவு பகலாக நடைபெற்று வருகிறது.

    வேலூர் மாவட்டம், செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டம் வழியாக அரியலூர் மாவட்டம் வரை உயர் மின்கோபுர பாதையை மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனம் அமைக்கிறது. இது திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த பாஞ்சரை வழியாக செல்கிறது.

    பவர் கிரீட் நிறுவனம் மூலம் உயர் மின்அழுத்த கோபுரம் அமைக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களுக்கு உரிய இழப்பீடு கடந்த 3 வருடங்களாக வழங்காமல் உள்ளதாக கூறப்படுகிறது இதனால் பாஞ்சரைகூட்ரோட்டில் உரிய நஷ்டஈடு வழங்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்றுமுன்தினம் முதல் காத்திருப்பு போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள். இரவு நேரத்திலும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது

    இந்நிலையில், உயர்மின் கோபுரம் மீது விவசாய சங்க கொடியுடன் ஏறிய 5 பேர் விவசாயிகளுக்கு உரிய நஷ்டஈடு வழங்கக் கோரி முழக்கங்களை எழுப்பினர். பின்னர் அதிகாரிகள் சமரசம் செய்ததையடுத்து போராட்டத்தினர் உயர்மின் கோபுரம் மீதிருந்து இறங்கினர்.

    சந்தை மதிப்பில் 10 மடங்கு இழப்பீடு வழங்க வேண்டும்.செல்போன் டவர்களுக்கு வழங்குவதுபோல் உயர் மின்அழுத்த டவர்களுக்கும் மாத வாடகை வழங்க வேண்டும், பாதிக்கப்படும் வேளாண் பயிர்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும், எதிர்காலத்தில் உயர் மின்அழுத்த கம்பிகளை புதைவடம் வழியாக கொண்டு செல்ல வேண்டும்என்கின்ற கோரிக்கைகளை வலியுறுத்திவிவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

  4. மியூச்சுவல் ஃபண்ட்: மாதம் ரூ. 5,000 முதலீடு செய்தால் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ. 12 லட்சம் கிடைக்குமா?

      • எழுதியவர், ஐவிபி கார்த்திகேயன்
      • பதவி, பிபிசி தெலுங்கு சேவைக்காக
    மியூச்சுவல் ஃபண்ட்

    பட மூலாதாரம், GETTY IMAGES

    நாம் முதலீடு செய்ய முடிவு செய்யும் முறை எதுவாக இருந்தாலும், நமது நிதி இலக்குகளை அடையும் விதத்தில் நமது நிதித் திட்டமிடல் இருக்க வேண்டும். இருப்பினும், ஆபத்து இல்லாத முதலீட்டு முறைகள் எதுவும் இல்லை. எந்தவொரு முதலீட்டிலும், அதில் கூடவே இருக்கும் அபாயங்கள் தவிர, பல காரணிகளும் முதலீட்டின் மீதான வருவாயை பாதிக்கின்றன.

    கொரோனா போன்ற சுகாதார நெருக்கடியை சமாளிக்க சிறந்த முதலீட்டு வழி எது? யுக்ரேன்-ரஷ்யா போர் போன்ற எதிர்பாராத ஒன்று நடக்கும் போது நமது நிதி இலக்குகளை எவ்வாறு அடைவது?

  5. மேரியோபோல் நகரகத்தின் அவலம்: சாலைகளில் கிடக்கும் சடலங்கள்

      • எழுதியவர், ஹூகோ பசேகா
      • பதவி, பிபிசி செய்திகள், லூவிவ்
    யுக்ரேன்

    பட மூலாதாரம், bbc

    படக்குறிப்பு, மேரியோபோல் நகரத்தின் கட்டடம் ஒன்றில் நடைபெற்ற தாக்குதல்: கோப்புப்படம்

    “பூமியில் ஒரு நரகம்”. யுக்ரேனின் மேரியோபோல் நகரத்தைச் சேர்ந்த எம்.பி யாரோஸ்லாவ் ஸெலெஸ்னியாக் அங்கு நிலவும் சூழல் குறித்து இப்படித்தான் விவரித்தார்.

    மேரியோபோல் நகரம் ரஷ்ய படையினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இதனால், மனிதநேய உதவிகளை அங்கு சென்று சேர்ப்பதற்கான வழித்தடத்தை அமைப்பது தடுக்கப்பட்டுள்ளது.

    மின்சாரம், தண்ணீர், வெப்பமூட்டும் வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகளின்றி சுமார் 3,00,000 பேர் அந்நகரத்தில் சிக்கியுள்ளனர். உணவு மற்றும் மருந்துகளுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், இந்த நிலைமை மிகவும் மோசமடைந்து, மக்கள் பசி மற்றும் நோய்களால் பாதிக்கப்படும் நிலைமை ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.

    ரஷ்யப் படைகள் அந்நகரத்தில் தரைவழி, வான்வழி, கடல்வழி என மூன்று வழிகளிலும் இடைவிடாத தாக்குதலை தொடர்ந்து வருவதால், மக்கள் பெரும்பாலான நேரத்தை பதுங்கு குழிகளிலேயே கழிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அந்நகரம் முழுவதும் அழிக்கப்பட்டுள்ளதை புகைப்படங்கள் காட்டுகின்றன. அந்நகர மேயர் வாடிம் போய்ஷென்கோ, 80% குடியிருப்பு கட்டடங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன அல்லது அழிக்கப்பட்டுள்ளன எனவும், அவற்றில் மூன்றில் ஒரு பங்கு பழுதுபார்க்க முடியாத அளவுக்கு சேதமடைந்துள்ளதாக, கடந்த வாரம் என்னிடம் தெரிவித்தார்.

    இறந்தவர்களின் சடலங்களை பெறுவது மிகவும் ஆபத்தானது என்பதால், அவை சாலைகளில் விடப்படுள்ளன. இறுதியில் அச்சடலங்களை பெற முடிந்தாலும், அவை மொத்தம் மொத்தமாக புதைக்கப்படுகின்றன, இது மற்றுமொரு அச்சத்தின் அடையாளமாக உள்ளது.

    ரஷ்ய ராணுவ ஜெனரல் ஒருவரும், அந்நகரத்தில் ஏற்பட்டுள்ள மனிதநேய பேரழிவு குறித்து ஒப்புக்கொண்டுள்ளார். ஆச்சர்யத்திற்கு இடமின்றி, அவருடைய சொந்த படைகள் தான் இதற்கு காரணம் என்பதை அவர் ஒப்புக்கொள்ளவில்லை.

  6. வந்துகொண்டிருக்கும் செய்தி, கத்தார் ஏர்வேஸின் டெல்லி-தோஹா விமானம் கராச்சியில் அவசரமாக தரையிறக்கம்

    கத்தார் விமானம்

    பட மூலாதாரம், REUTERS/Valentyn Ogirenko

    டெல்லியில் இருந்து தோஹா செல்லும் கத்தார் ஏர்வேஸின் பயணிகள் விமானம் அவசரநிலை காரணங்களுக்காக கராச்சிக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.

    இந்த சம்பவம் திங்கள்கிழமை நடந்ததாக கத்தார் ஏர்வேஸை மேற்கோள் காட்டி பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    அந்த விமானத்தின் சரக்கு பகுதியில் இருந்து புகை வெளியேறியதற்கான அறிகுறிகள் தென்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு நடுவழியில் கராச்சியை நோக்கி விமானம் திருப்பி விடப்பட்டதாகவும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

    அந்த விமானம் கராச்சியில் பத்திரமாக தரையிறக்கப்பட்ட பிறகு பயணிகள் பாதுகாப்பாக இறக்கி விடப்பட்டதாக கத்தார் ஏர்வேஸ் செய்திக்குறிப்பு மூலம் தெரிவித்துள்ளது.

    இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு பயணிகளை தோஹாவுக்கு அழைத்துச் செல்ல மற்றொரு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நடந்த நிகழ்வுக்காக பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்காக கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.

  7. வந்துகொண்டிருக்கும் செய்தி, மேக்கேதாட்டு அணை விவகாரம்: தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித்தீர்மானம்

    கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு தடுப்பணை கட்டும் அம்மாநில அரசின் முயற்சிக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    இந்த தீர்மானத்தை தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தாக்கல் செய்து அது குறித்து பேசி வருகிறார்.

  8. யுக்ரேன் நெருக்கடி: மேரியுபோல் நகரில் தொடரும் ஷெல் தாக்குதல்கள்

    யுக்ரேனின் மேரியுபோல் நகரில் ரஷ்ய படையினர் தொடர்ந்து ஷெல் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அங்கு பொதுமக்கள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

    நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ளது மேரியுபோல் நகரம். இந்த நகரை ஏற்கெனவே ரஷ்ய படையினர் எல்லா திசைகளிலும் சுற்றி வளைத்து உள்ளே நுழைந்துள்ளனர். அங்கு கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து குண்டு வீச்சு சம்பவங்களும் தாக்குதல்களும் நடக்கின்றன. அங்கு ஏற்பட்டுள்ள பலத்த சேதத்தை செயற்கைக்கோள் படங்கள் உறுதிப்படுத்துகின்றன.

    அந்த மாவட்டத்தின் சேத அளவை காட்டுகிறது இந்த கணினி வரைகலை படம்.

    ரஷ்யா யுக்ரேன்

    பட மூலாதாரம்,

  9. வந்துகொண்டிருக்கும் செய்தி, ஆறுமுகசாமி ஆணையத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆஜர்

    தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க ஆளும் திமுக அரசு நியமித்துள்ள ஆறுமுகசாமி ஆணையத்தில் முன்னாள் முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆஜராகியுள்ளார்.

  10. அனானிமஸ் ஹேக்கர்கள்: புதினை பலவீனப்படுத்த முயலும் இவர்கள் யார்? இது சாத்தியமா?

    யுக்ரேன் ரஷ்யா

    பட மூலாதாரம்,

    அனானிமஸ் ஹேக்டிவிஸ்ட் கலெக்டிவ் (Anonymous hacktivist collective) என்ற குழுவில் இருப்பவர்கள் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் மீது 'சைபர் போர்' தொடுத்திருக்கிறார்கள்.

    யுக்ரேன் மீது ரஷ்யா படையெடுப்பு செய்ததற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த சைபர் போரை தொடங்கியிருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள்.

    இந்தக் குழுவின் கீழ் செயல்படும் பலருடனும், அவர்களின் நோக்கம், உத்தி மற்றும் திட்டம் குறித்து பிபிசி பேசியது.

    இது குறித்து விரிவாக படிக்க இங்கே சொடுக்கவும்.

  11. யுக்ரேன் நெருக்கடி: அமெரிக்காவின் எச்சரிக்கைக்குப் பிறகு சீனாவின் எதிர்வினை

    அமெரிக்காவுக்கான சீன தூதர்

    பட மூலாதாரம், Getty Images

    யுக்ரேனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு ஆயுதங்கள் அல்லது வெடிமருந்துகள் வழங்கி உதவி செய்ய மாட்டோம் என்று அமெரிக்காவுக்கான சீன தூதர் தெரிவித்துள்ளார்.

    அதே சமயம் இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வர சீனா அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்று அவர் கூறியிருக்கிறார்.

    முன்னதாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளிக்கிழமை பேசும்போது, யுக்ரேன் மீதான ஆக்கிரமிப்பு போரில் ரஷ்யாவுக்கு சீனா ஆயுத உபகரணங்களை வழங்கினால், அதன் "விளைவுகளை" அது எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று எச்சரித்திருந்தார்.

    இந்த நிலையில், அமெரிக்காவுக்கான சீன தூதர் குயின் கேங்கின் ஆற்றிய எதிர்வினையின்போது யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை விமர்சிப்பதை தவிர்த்தார். அதே சமயம், ரஷ்யாவிற்கு ஆயுதங்களை சீனா வழங்காது என்று அவர் கூறினார்.

    இந்த விவகாரத்தில் ரஷ்யாவுக்கு ஆயுதங்களை சீனா வழங்கும் என கடந்த வாரம் வெளியான செய்திகளை அவர் மறுத்தார். அமெரிக்க சேனலான சிபிஎஸ்ஸிடம் பேசிய கேங், மேற்கு நாடுகளின் பொதுவான எதிர்ப்பு இந்த விஷ்யத்தில் உதவாது.இப்போதைக்கு யுக்ரேன் நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வர தேவை "சிறந்த ராஜீய முயற்சியே" என்ரு தெரிவித்தார்.

  12. யுக்ரேனின் சமீபத்திய செய்தி என்ன?

    யுக்ரேன் ரஷ்யா போர்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, மேரியுபோல் நகரை விட்டு ஞாயிற்றுக்கிழமை வெளியேறும் பொதுமக்கள்

    நீங்கள் இப்போது எங்களுடன் இணைந்திருந்தால், யுக்ரேனின் அனைத்து சமீபத்திய முன்னேற்றங்களும் இங்கே உள்ளன:

    • மாஸ்கோ உள்ளூர் நேரப்படி அதிகாலை 5 மணி முதல் மாலை 4 மணிக்குள் மேரியோபோல் நகரில் உள்ள படைகள் சரணடைய ரஷ்யா விதித்த காலக்கெடுவை யுக்ரேன் நிராகரித்துள்ளது.

    • யுக்ரேனிய அதிகாரிகள் ஆயுதங்களைக் கீழே போட ஒப்புக்கொண்டால், மனிதாபிமான வெளியேற்ற பாதைகள் திறக்கப்படும் என்று ரஷ்யா முன்பு கூறியிருந்தது. இருப்பினும், யுக்ரேனியர்கள் ரஷ்யாவின் எச்சரிக்கையை புறக்கணித்து விட்டனர். அவர்கள் களத்தில் தொடர்ந்து போராடுவதாக உறுதியளித்துள்ளனர்.

    • 400 பேர் தங்கியிருந்த நகரில் உள்ள ஒரு கலைப் பள்ளியை ரஷ்யா தாக்கியதாக மேரியுபோல் அதிகாரிகள் முன்பு கூறிய நிலையில், தற்போதைய யுக்ரேனியர்களின் முடிவு வெளியாகியுள்ளது.

    • மேயர் விட்டலி கிளிட்ச்கோவின் கூற்றுப்படி, யுக்ரேனிய தலைநகர் கீயவில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதி மற்றும் வணிக மாவட்டத்தின் மீது கடுமையான ஷெல் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. அதில் குறைந்தது ஒருவர் பலியானார்.

    • யுக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் அந்நாட்டு ஆதரவைப் பெறும் நோக்குடன் பேசியுள்ளார்.

    • கடந்த ஞாயிற்றுக்கிழமை போர் மண்டலத்தில் சிக்கியிருந்த பொதுமக்கள் சுமார் ஏழாயிரம் பேர், மனிதாபிமான வெளியேற்ற பாதைகள் வழியாக வெளியேறியுள்ளதாக யுக்ரேனிய அதிகாரிகள் கூறுகின்றனர்.

  13. வணக்கம் நேயர்களே! பிபிசி தமிழ் நேரலை பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம்

    யுக்ரேனில் உள்ள பிபிசி செய்தியாளர்கள் மூலம் சமீபத்திய தகவல்கள் மற்றும் தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலக நாடுகளில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலை பக்கத்தில் தொகுத்து வழங்குவது பரணி தரன் மற்றும் நந்தினி வெள்ளைச்சாமி.

    உங்கள் பகுதியின் செய்திகளைப் பற்றி எங்கள் டிவிட்டர் கணக்கின் மூலம் தகவல் அளியுங்கள்.

    இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளின் சுருக்கம் இங்கே.

    • யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவில் இருந்து ஒளிபரப்பாகும் சிஎன்என் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புதினுடன் பேச தயாராக இருப்பதாக கூறியுள்ளார். இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர பேச்சுவார்த்தை ஒன்றே வழி என்று தான் நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
    • யுக்ரேனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு ஆயுதங்கள் அல்லது வெடிமருந்துகள் வழங்கி உதவி செய்ய மாட்டோம் என சீனா தெரிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்காவுக்கான சீன தூதர் பேசுகையில், யுக்ரேன், ரஷ்யா இடையே நிலவி வரும் நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வர சீனா அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்று கூறினார்.
    • ரஷ்யா மீதான பொருளாதார தடைகளை அமெரிக்கா இன்னும் நீட்டிக்கலாம் என்றும் அது ரஷ்ய பொருளாதாரத்தை மேலும் பாதிக்கும் என்றும் அமெரிக்க பாதுகாப்பு துணை ஆலோசகர் தலிப் சிங் தெரிவித்துள்ளார்.
    • நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நட்பு நாடுகளுடனான சந்திப்புகளைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரும் வெள்ளிக்கிழமை போலந்துக்கு செல்வார் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. போலந்து அதிபர் ஆண்ட்ரேஜ் டுடாவை வார்சாவில் அதிபர் பைடன் சந்தித்துப் பேசுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.