You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

யுக்ரேன் Vs ரஷ்யா: டொனியட்ஸ்க் ஏவுகணை தாக்குதலில் 20 பேர் பலி

இன்று காலையில் யுக்ரேனின் டொனியட்ஸ்க் பிரதேசத்தில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

நந்தினி வெள்ளைச்சாமி

  1. ஸ்லோவாக்கியாவில் தஞ்சம் புகுந்த யுக்ரேன் அகதிகள்: புகைப்படங்கள்

    பிப்ரவரி 24ஆம் தேதி முதல் யுக்ரேன் மீது ரஷ்யா முழுவீச்சிலான படையெடுப்பை நடத்திவரும் நிலையில், அந்த நாளிலிருந்து தற்போது வரை 20 லட்சத்திற்கும் அதிகமானோர் யுக்ரேனிலிருந்து பாதுகாப்புக்காக தப்பித்து, அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

    யுக்ரேன் மீதான ரஷ்ய போரின் 19வது நாளான இன்று, யுக்ரேன் அகதிகள் பலர் ஸ்லோவாக்கியாவில் உள்ள வெல்கே ஸ்லெமென்ஸை அடைந்துள்ளனர்.

    இது குறித்த சில புகைப்படங்கள்:

  2. ஆன்டனாவ் விமான ஆலை மீது பீரங்கி தாக்குதல்

    கீயவ்வின் வடக்கில் புறநகர் பகுதிகளில் ரஷ்ய படைகள் நடத்திவரும் பீரங்கி தாக்குதல் குறித்த மேலதிக தகவல்கள் வெளிவந்துள்ளன.

    இந்த தாக்குதலில் தீப்பிடித்தது ஆன்டனாவ் விமான நிலையம் அல்ல, ஆன்டனாவ் விமான ஆலை என, அந்நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    ஆன்டனாவ் விமான ஆலை, கீயவ்வில் இருந்து 10 கி.மீ தொலைவில் ஸ்வியடோஷின் விமான தளத்தில் அமைந்துள்ளது.

    இந்த விமான ஆலையிலிருந்து கரும்புகை வெளியேறுவது போன்ற சரிபார்க்கப்படாத காணொளிகள் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன.

    குண்டுவெடிப்பு நடந்த பகுதியில் அவசர சேவை பிரிவினர் மீட்புப்பணிகளை மேற்கொண்டு வருவதாக, அந்நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.

  3. 'வலிமை' அஜித் மீது உருவ கேலியா? பதில் கொடுத்த மேலாளர் - நடந்தது என்ன?

      • எழுதியவர், ச. ஆனந்தப்பிரியா
      • பதவி, பிபிசி தமிழுக்காக

    என் ரசிகர்கள், என்னை வெறுப்பவர்கள், நடுநிலையாக இருந்து விமர்சனம் தருபவர்கள் என அனைவரையும் நான் ஏற்று கொள்கிறேன் என நடிகர் அஜித்தின் அறிக்கையை அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தற்போது மறுபகிர்வு செய்துள்ளார். என்ன நடந்தது?

  4. மேக்கேதாட்டு அணை விவகாரம்: கர்நாடக அரசை கண்டித்து அமமுக ஆர்ப்பாட்டம்

    மேக்கேதாட்டு அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை கண்டித்து திருச்சியில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், விவசாயிகள் சங்க தலைவர்கள் அய்யாக்கண்ணு, பி.ஆர்.பாண்டியன், தீட்சிதர் பாலு, விவசாயிகள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    “மேக்கேதாட்டுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சி உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் அதிகாரத்தை பறிக்கும் பேராபத்து ஏற்பட்டுள்ளது.

    தமிழ்நாடு விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க அணை கட்டும் முயற்சிகளை மத்திய, மாநில அரசுகள் உடனே தடுத்து நிறுத்த வேண்டும்” என ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

  5. கீயவ் ஆன்டனாவ் விமான நிலையம் மீது ஷெல் தாக்குதல்: அதிகாரிகள் தகவல்

    யுக்ரேன் தலைநகர் கீயவ்வின் வடக்கில் அமைந்துள்ள ஆன்டனாவ் விமான நிலையத்தில் ரஷ்ய படைகள் ஷெல் தாக்குதல் நடத்தியதாக, உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஹோஸ்டோமெல் எனவும் அழைக்கப்படும் இந்த விமான நிலையம், யுக்ரேனின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச சரக்கு போக்குவரத்து மற்றும் முக்கியமான ராணுவ விமானத்தளமும் ஆகும்.

    இந்த விமான நிலையத்திலிருந்து கரும்புகை வெளியேறுவதுபோன்ற சரிபார்க்கப்படாத காணொலிகள் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன.

  6. யுக்ரேன் அகதிகளுக்கு உதவும் வட அயர்லாந்து தம்பதி

    போலந்து தலைநகரம் வார்சாவில் வட அயர்லாந்தை சேர்ந்த தம்பதி, உணவு, உடைகள், மருந்துகள் ஆகியவற்றை 31 லாரிகளில் யுக்ரேனுக்கு ஆபத்தான பயணம் மூலம் அனுப்பும் பணியை ஒருங்கிணைத்து வருகின்றனர்.

    போலந்து குழந்தைகளுக்காக தங்களின் தொண்டு நிறுவனம் மூலம் பல முகாம்களை நடத்திவரும் கோலின் மற்றும் ஜோன்னா தம்பதி, தற்போது யுக்ரேனுக்கு நிவாரண பொருட்களை அனுப்புகின்றனர்.

    “யுக்ரேனின் மையப் பகுதிகளுக்கு தங்கள் உயிரைப் பணயம் வைத்து இந்த லாரி ஓட்டுநர்கள் அங்கு செல்கின்றனர். அவர்களுக்கு உதவுவது மட்டுமே எங்களால் முடிந்தது,” என கோலின் தெரிவித்தார்.

    அவருடைய மனைவி, “இந்த போரால் ஆழ்ந்த வருத்தமுற்றிருக்கிறேன். ஆனால், அவர்களுக்கு எவ்வளவு உதவ முடியும் என்பதை நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறோம்” என தெரிவித்தார்.

  7. காலநிலை நெருக்கடியால் சென்னைக்கு வரப்போகும் ஆபத்து: ஐ.பி.சி.சி அறிக்கை தமிழக தலைநகரை எச்சரிப்பது ஏன்?

      • எழுதியவர், க. சுபகுணம்
      • பதவி, பிபிசி தமிழ்

    உலக மக்கள் தொகையில் பாதி பேர் காலநிலை நெருக்கடியால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வாழ்வதாக சர்வதேச காலநிலை மாற்றக் குழுவினுடைய சமீபத்திய அறிக்கை கூறுகிறது. உணவுப் பொருட்களின் விலை உயர்வு, வருமானம் குறைதல், ஊட்டச்சத்துக் குறைபாடு, காலநிலை தொடர்பான காரணங்களால் ஏற்படக்கூடிய உயிரிழப்பு போன்ற பல்வேறு காரணிகள் நிலைமையை மோசமாக்கி வருவதாக எச்சரிக்கிறது.

  8. காரைக்குடியில் கோயில் பக்தர்களுக்கு உதவி செய்த இஸ்லாமியர்

    காரைக்குடியில் முத்துமாரியம்மன் கோயில் விழாவுக்காக சென்ற பக்தர்களுக்கு பள்ளிவாசலில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் ஊற்றி உதவி செய்த இஸ்லாமியர்.

  9. யுக்ரேன் கீயவ் அடுக்குமாடி குடியிருப்பு தாக்குதலில் ஒருவர் பலி

    யுக்ரேன் தலைநகர் கீயவ் குடியிருப்பு கட்டிடத்தில் நடந்த குண்டு வெடிப்புத் தாக்குதலில், குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டதாகவும் மற்றும் மூன்று பேர் காயமடைந்துள்ளதாகவும் யுக்ரேனிய அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

    உள்ளூர் நேரப்படி இன்று காலை 07:40 மணியளவில் 2 உடல்கள் கண்டெடுக்கப் பட்டதாகவும் மற்றும் மூன்று பேர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் யுக்ரேனின் மாநில அவசர சேவை தெரிவித்துள்ளது.

  10. வணக்கம் நேயர்களே!

    நான் நந்தினி வெள்ளைச்சாமி. பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன். இதுவரை எம். மணிகண்டன் மற்றும் ஆ. லட்சுமி காந்த் பாரதி வழங்கிய நேரலை செய்திகளை இனி நான் வழங்கவிருக்கிறேன்.

    யுக்ரேனில் உள்ள பிபிசி செய்தியாளர்களிடம் மூலம் சமீபத்திய தகவல்கள் மற்றும் தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலக நாடுகளில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலை பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

  11. யுக்ரேன் தெற்கு துறைமுக நகரமான மேரியோபோலில் குண்டு வெடிப்பு

    யுக்ரேன் தெற்கு துறைமுக நகரமான மேரியோபோலில், ரஷ்ய குண்டு வெடிப்பு தாக்குதலால் பல உயரமான கட்டிடங்கள் தாக்கப்படும் காணொளி வெளியாகியுள்ளது. இது பிபிசியால் சுயாதீனமாக உறுதி செய்யப்பட்டது.

    ரஷ்ய ராணுவப் படைகளின் கடுமையான குண்டு வெடிப்பு தாக்குதல்கள் தொடர்ந்து வரக்கூடிய ஒரு சூழலில், இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை நடந்துள்ளது.

    கடந்த மார்ச் 2-ஆம் தேதி அன்று ரஷ்ய படைவீரர்கள் மேரியோபோல் நகரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதுவரை 2,187 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக யுக்ரேனிய அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

    ரஷ்ய கட்டுப்பாட்டுக்குள் வந்தததில் இருந்து, நகரத்தில் எஞ்சியிருக்கும் சுமார் 4,00,000 மக்கள் தண்ணீர், உணவு மற்றும் மருந்து கிடைக்காமல் தவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  12. யுக்ரேன் மக்களின் ஆதரவை பெற மேயரை கடத்துவதா?' - யுக்ரேன் அமைச்சர் விடும் அழைப்பு

  13. ரஷ்யா - சீனா: 'யுக்ரேனில் சண்டையிட சீனாவிடம் ஆயுதங்களைக் கோரும் ரஷ்யா' - ஊடகத் தகவல்

    யுக்ரேனில் போரை நடத்துவதற்காக சீனாவிடம் ராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை ரஷ்யா கோரி வருவதாக ஃபைனான்சியல் டைம்ஸ் மற்றும் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

    யுக்ரேன் போரில் பயன்படுத்தும் வகையில் ராணுவத் தளவாடங்களை சீனா வவங்க வேண்டும் என ரஷ்யா விரும்புவதாக பைனான்சியல் டைம்ஸ் செய்தி கூறுகிறது.

    பெயர் வெளியிட விரும்பாத அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி, படையெடுப்பு தொடங்கியதில் இருந்து ரஷ்யா சீன உபகரணங்களை கோரி வருவதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ரஷ்யா எந்த வகையான ராணுவத் தளவாடங்களை சீனாவிடம் கோருகிறது என்பதைக் குறிப்பிட அதிகாரிகள் மறுத்துவிட்டதாகவும் அந்தச் செய்தி கூறுகிறது.

  14. ரஷ்யா யுக்ரேன் நாடுகளுக்கும் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை

    ரஷ்யா யுக்ரேன் நாடுகளுக்கு இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ரஷ்யாவின் பேச்சுவார்த்தையாளரும், அதிபர் விளாதிமிர் புதின் செய்தித் தொடர்பாளருமான டிமிட்ரி பெஸ்கோவ், காணொளி அழைப்பு மூலம் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கூறினார்.

    யுக்ரேனின் பேச்சுவார்த்தையாளரும், அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கியின் ஆலோசகருமான மைகைலோ பொடோலியாக் ரஷ்யாவின் இந்த தகவலை உறுதிப்படுத்தினார்.

    சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட காணொளியில், பொடோலியாக், ரஷ்யா ஆக்கப்பூர்வமாக ஈடுபடத் தொடங்கியுள்ளதாகவும், "ரஷ்யா இப்போது தன்னைச் சுற்றி நடப்பதை போதுமான அளவு உணரத் தொடங்கியுள்ளது.

    ரஷ்யா, யுக்ரேனின் நிலைப்பாட்டையும் உணர்ந்துள்ளது. இது யுக்ரேன், போர்க்களங்களில், மற்றும் நாட்டின் நலன்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது", என்று கூறியுள்ளார்.

    யுக்ரேன் அதிபர், தனது தூதுக்குழு ஒவ்வொரு நாளும் ரஷ்ய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஞாயிற்றுக்கிழமை கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

  15. யுக்ரேனிய மேயர்களைக் கடத்தியதை கண்டித்த ஐரோப்பிய ஒன்றியம்

    யுக்ரேனின் தென்கிழக்கு நகரமான டினிப்ரோ நகர மேயரான யேவென் மட்வியேவ் என்பவரை, ஆயுதமேந்திய நபர்கள் கடத்திச் சென்றதாக யுக்ரேனிய அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

    அதேபோல் கடந்த வெள்ளிக்கிழமையன்று மெலிடோபோலின் மேயர் இவான் ஃபெடோரோவ் என சந்தேகிக்கப்படும் ஒரு நபர், ஒரு கட்டடத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்டதை காட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியானது.

    இது சம்பந்தமாக ட்விட்டரில், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கைக்கான உயர் பிரதிநிதி ஜோசப் பொரெல் ஃபோன்டெல்லெஸ் கூறியபோது, "மெலிடோபோல் மற்றும் டினிப்ரோருட்னே மேயர்களை, ரஷ்ய ஆயுதப் படைகள் கடத்தியதை ஐரோப்பிய ஒன்றியம் கடுமையாகக் கண்டிக்கிறது.

    இது யுக்ரேனில் உள்ள ஜனநாயக நிறுவனங்கள் மீதான மற்றொரு தாக்குதல் மற்றும் ஒரு இறையாண்மை கொண்ட நாட்டில் சட்டவிரோத மாற்று அரசாங்க கட்டமைப்புகளை நிறுவுவதற்கான முயற்சியாகும்"என்று கூறினார்.

  16. யுக்ரேன் கருங்கடல் கடற்கரையில் முற்றுகையிட்ட ரஷ்ய கடற்படை

    யுக்ரேனின் கருங்கடல் கடற்கரையில், ரஷ்ய கடற்படையினர் முற்றுகையிட்டு உள்ளனர். இதன் மூலம் யுக்ரேன் நாடு கடல்சார் வர்த்தகம் செய்ய முடியாமல் தடுக்கப்பட்டுள்ளது என்று பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தனது சமீபத்திய உளவுத்துறை அறிக்கையில் கூறியுள்ளது.

    மேலும் வரும் வாரங்களில் ரஷ்யப் படைகளால் சில கடல்வழி தாக்குதல்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் அது எச்சரித்துள்ளது. இதுபோன்ற ஒரு நடவடிக்கை ஏற்கனவே அசோவ் கடலில் நடந்துள்ளது என்று அதில் குறிப்பிட்டுள்ளனர்

  17. வணக்கம் நேயர்களே!

    நாங்கள் எம். மணிகண்டன் மற்றும் ஆ. லட்சுமி காந்த் பாரதி. பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம். யுக்ரேனில் உள்ள பிபிசி செய்தியாளர்களிடம் மூலம் சமீபத்திய தகவல்கள் மற்றும் தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலக நாடுகளில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலை பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.